You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு குறையும் வாய்ப்புகள் - கூட்டணி அறிவிக்காத கட்சிகளின் நிலை என்ன?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணிகள் இறுதியாகிவரும் நிலையில், அ.தி.மு.கவில் இணைய விரும்புகிறார் ஓ. பன்னீர்செல்வம். பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் பிரிவும் தே.மு.தி.கவும் இதுவரை முடிவுகளை அறிவிக்கவில்லை. இவர்களுக்கான வாய்ப்புகள் என்ன?
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிகளை இறுதிசெய்து வருகின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க. (அன்புமணி ராமதாஸ்), அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இணைந்துவிட்டன. தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சிக்குள் கூட்டணி தொடர்பாக அவ்வப்போது சலசலப்புகள் எழுந்தாலும் தற்போதுவரை ஏற்கனவே இருந்த நிலையிலேயே தொடர்ந்து வருகிறது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்தே நிற்கின்றன.
இந்த நிலையில், மூன்று முக்கிய அரசியல் சக்திகள் மீது பார்வைகள் திரும்பியிருக்கின்றன. அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தை நடத்திவரும் ஓ. பன்னீர்செல்வம் அ.தி.மு.கவில் இணைய விரும்புவதை வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். மற்றொரு பக்கம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரு பிரிவுக்கு தலைமைதாங்கும் டாக்டர் ராமதாசும் தே.மு.தி.கவும் இதுவரை தங்கள் முடிவுகளைத் தெரிவிக்கவில்லை.
திகைப்பில் ஓ. பன்னீர்செல்வம்
மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சராக இருந்த ஜெ. ஜெயலலிதா மறைந்து சில நாட்களுக்குப் பிறகு அவருடைய நெருங்கிய தோழி வி.கே. சசிகலாவால் முதல்வர் பதவியிலிருந்து விலக வற்புறுத்தப்பட்டபோது ராஜினாமா செய்தார். இருந்தபோதும் அந்த முடிவுக்கு எதிராக 'தர்ம யுத்தத்தில்' ஈடுபட்டார். இதற்குப் பிறகு, அ.தி.மு.கவிலிருந்து வி.கே. சசிகலா தரப்பும் டிடிவி தினகரனும் ஒதுக்கிவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்து ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுவந்தார்.
2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கட்சி தோல்வியடைந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, அ.தி.மு.கவுக்கு ஒற்றைத் தலைமையே இருக்க வேண்டும் என்ற விவகாரத்தை முன்வைத்தார். இதையடுத்து ஏற்பட்ட பிரச்சனையில் 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், பி.எச். மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். கட்சியின் உரிமை தொடர்பாக நீதிமன்றங்களிலும் தேர்தல் ஆணையத்திலும் பின்னடைவுகளைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், தற்போது அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற அமைப்பை நடத்திவருகிறார்.
கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார். அதில் கணிசமான வாக்குகளைப் பெற்று தோல்வியையே சந்தித்தார்.
தொடர்ந்து பா.ஜ.க. கூட்டணியில் நீடித்துவந்த ஓ.பன்னீர்செல்வம், 2025ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதியில் தமிழ்நாட்டிற்குப் பிரதமர் நரேந்திர மோதி வந்தபோது, அவரை வாழ்த்தவும் வழியனுப்பவும் அனுமதி கோரி கடிதம் எழுதினார். ஆனால், அவ்வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் ஒவ்வொருவராக வெவ்வேறு கட்சிகளுக்குச் செல்ல ஆரம்பித்தனர். அவருடன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஆர். வைத்திலிங்கம், பி.எச். மனோஜ் பாண்டியன் ஆகியோர் தி.மு.கவிற்கும் ஜே.சி.டி. பிரபாகரன் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் சென்றுவிட்டனர். அவருடைய தீவிர ஆதரவாளராக இருந்த பழனி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான ஏ. சுப்புரத்தினமும் தி.மு.கவில் இணைந்துவிட்டார்.
இந்த நிலையில், ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோதி கூட்டணிக் கட்சியினருடன் கலந்துகொண்ட மதுராந்தகம் கூட்டத்திற்கு முன்பாக ஓ. பன்னீர்செல்வம் கூட்டணியில் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படியேதும் நடக்கவில்லை.
இப்படிப் பலவகையிலும் தனித்துவிடப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் தனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வியாழக்கிழமையன்று (ஜனவரி 29) தேனி மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். அந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம் தேர்தல் கூட்டணி குறித்து குழப்பமான சமிக்ஞைகளையே வெளியிட்டார்.
ஒரு கட்டத்தில் அ.தி.மு.கவில் தான் இணைய விரும்புவதாகவும் அதற்கு எடப்பாடி கே. பழனிச்சாமி தயாரா என்றும் கேள்வியெழுப்பினார். "எதிரும் புதிருமாக இருந்த டி.டி.வி. தினகரனும் எடப்பாடி கே. பழனிச்சாமியும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். அவர்கள் நினைத்தால், அதாவது டி.டி.வி. தினகரன் நினைத்தால் எங்களை இணைக்க எடப்பாடியிடம் வலியுறுத்த வேண்டும். அது நடந்தால் அ.தி.மு.க. வெற்றிபெறும்" என்று குறிப்பிட்டார்.
இந்தத் தேர்தலில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு போட்டியிடுகிறதா என செய்தியாளர்கள் கேட்டபோது, "தேர்தலில் போட்டியிடுவதற்காக இதைத் துவங்கவில்லை. கழகத்தை மீட்டெடுக்க சட்டப் போராட்டம் நீதி மன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது" என்றார்.
அப்படியானால், தேர்தலில் போட்டியிடவில்லையா எனக் கேட்டபோது, "தவறான தகவல்களைத் திணிக்காதீர்கள்" என்றவர், அ.தி.மு.கவுடன் "ஒன்றுசேர நான் ரெடி. எடப்பாடி கே. பழனிச்சாமி ரெடியா" என்று கேள்வியெழுப்பினார். ஆனால், சேலம் மாவட்டம் ஓமலூரில் பேசிய எடப்பாடி கே. பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வத்தை மீண்டும் அ.தி.மு.கவில் சேர்ப்பதற்கு வாய்ப்பேயில்லை எனத் தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் முன்புள்ள வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன.
ஓ. பன்னீர்செல்வம் தரப்பு கூறுவது என்ன?
அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் நாஞ்சில் கோலப்பனிடம் கேட்டபோது, எடப்பாடி கே. பழனிச்சாமி முதல்வராக வேண்டுமென்று நினைத்தால், எங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.
"எடப்பாடி கே. பழனிச்சாமி தான் மீண்டும் முதல்வராக வேண்டுமென நினைத்தால் ஓ. பி.எஸ்ஸை ஒருங்கிணைப்பாளராக இணைத்துக்கொள்ள வேண்டும். அந்தக் கூட்டணிக்கு வர வேண்டுமென டிடிவி தினகரன் அழைப்பு விடுத்தார். அதற்காக அப்படி ஒரு பதிலை ஓ.பி.எஸ். தெரிவித்தார். இந்த பதிலை சீரியஸாகவும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது கேலியாகவும் எடுத்துக்கொள்ளலாம். அ.தி.மு.கவை மீட்கும் சட்டப்போராட்டத்தில் நாங்கள்தான் வெற்றிபெறுவோம்" என்கிறார் அவர்.
ஆனால், ஓ. பன்னீர்செல்வத்திற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன்.
"ஓ. பன்னீர்செல்வம் முழுக்க முழுக்க பா.ஜ.கவை நம்பியே இருந்தார். அ.தி.மு.கவைப் பொறுத்தவரை ஓ.பி.எஸ்ஸை கட்சிக்குள் சேர்க்க விரும்பவில்லை. தனிக் கட்சி துவங்கி கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என்கிறது. ஆனால், ஓ. பன்னீர்செல்வம் தனிக் கட்சி துவங்க விரும்பவில்லை. அதனால்தான் இன்று வெட்கத்தைவிட்டு என்னைக் கட்சியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், எடப்பாடி கே. பழனிச்சாமி உடனடியாக அதனை மறுத்துவிட்டார். இப்போது ஓ. பன்னீர்செல்வம் தி.மு.கவுடன் கூட்டணி வைக்கலாம். ஆனால், அப்படிச் செய்தால் அவருடைய அரசியல் எதிர்காலமே முடிந்துவிடும்" என்கிறார் அவர்.
ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளரும் மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான கோபாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, "தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் தெரியவரும். இந்தத் தருணத்தில் வேறு எதுவும் சொல்ல இயலாது" என்று மட்டும் தெரிவித்தார்.
தே.மு.தி.க.: கூட்டணி குறித்து அறிவிக்க மீண்டும் ஒரு தேதி
பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.கவைப் பொறுத்தவரை இப்போதுவரை எந்தக் கூட்டணியில் இடம்பெறப் போகிறோம் என்பதை வெளியிடவில்லை. 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியிலும் 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியிலும் 2019ஆம் ஆண்டு அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியிலும் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.கவுடனும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுடனும் இணைந்து தேர்தல்களைச் சந்தித்தது. இந்தத் தேர்தல்கள் எதிலும் அந்தக் கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.
ஆனால், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.கவின் வேட்பாளர் விஜய பிரபாகரன், மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது அக்கட்சிக்கு நம்பிக்கை அளித்தது. ஆகவேதான், இந்தத் தேர்தலில் மிகக் கவனமுடன் காய்களை நகர்த்த ஆரம்பித்தது தே.மு.தி.க.
அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் சம தூரத்தில் வைத்திருந்த பிரேமலதா விஜயகாந்த், ஜனவரி மாதம் கடலூர் மாவட்டம் வேப்பூரில் மக்கள் உரிமை மீட்பு மாநாடு என்ற பெயரில் மாநாடு ஒன்றை அறிவித்தார். அந்த மாநாட்டில் யாருடன் கூட்டணி என்பது தெரிவிக்கப்படும் என்று தொடர்ந்து பேசிவந்தார். இதனால், பெரும் ஆர்வத்துடன் அங்கே தே.மு.தி.க. தொண்டர்கள் கூடினர். ஆனால், அந்த மாநாட்டில் யாருடன் கூட்டணணி என்பதை பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கவில்லை.
"மற்ற கட்சிகள் ஏதும் கூட்டணியை அறிவிக்காத நிலையில் தாங்கள் மட்டும் ஏன் அறிவிக்க வேண்டும்?" என்று பேசிய பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி குறித்து பிறகு அறிவிக்கப்படும் என்றார். இதனால், அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளிடமும் தே.மு.தி.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்ற பேச்சுகள் எழுந்தன.
இதற்குப் பிறகு, பிரதமர் மோதியின் மதுராந்தகம் கூட்டத்திற்கு முன்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியுன் தே.மு.தி.க. கூட்டணியை இறுதிசெய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை என்பதால், அந்தக் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றவில்லை.
தற்போது 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுவரும் பிரேமலதா விஜயகாந்த், தென்காசி மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் ஜனவரி 29ஆம் தேதி பேசும்போது, "கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ள நிலையில் சரியான நேரத்தில், சரியான கூட்டணி அமைத்து, கூட்டணி தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும்" என்று மட்டும் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், தே.மு.தி.க. இரு திராவிடக் கட்சிகளுடனும் பேசி வருவதாகச் சொல்கிறார் குபேந்திரன்.
"தே.மு.தி.கவைப் பொறுத்தவரை அ.தி.மு.க. கூட்டணியில் 18 இடங்களையும் ஒரு மாநிலங்களவை இடத்தையும் கேட்கிறது. ஆனால், அ.தி.மு.க. பத்து தொகுதிகளை மட்டுமே கொடுப்போம், மாநிலங்களவை இடம் குறித்து இப்போது ஏதும் சொல்ல முடியாது என்கிறார்கள். தி.மு.கவில் 6 இடங்களையும் ஒரு மாநிலங்களவை இடத்தையும் எதிர்பார்க்கிறது. ஆனால், அங்கும் 6 சட்டமன்ற இடங்களைத் தரலாமே தவிர, மாநிலங்களவை இடம் குறித்து ஏதும் சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டார்கள். மேலும் இரு கட்சிகளும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் செலவை மட்டுமே தங்களால் பார்த்துக்கொள்ள முடியும் என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்" என்கிறார் அவர்.
இருந்தபோதும், வியாழக்கிழமையன்று சில ஊடகங்களில் தே.மு.தி.க., தி.மு.கவுடன் கூட்டணியை இறுதிசெய்துவிட்டதாக செய்திகள் வெளியாயின.
"ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்வார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. 'உள்ளம் தேடி இல்லம் நாடி' சுற்றுப் பயணம் பிப்ரவரி இரண்டாம் தேதியன்று முடிவுக்கு வருகிறது. மூன்றாம் தேதியன்று கூட்டணி யாருடன் என்பது அறிவிக்கப்படும்" என பிபிசியிடம் தெரிவித்தார் தே.மு.தி.கவின் தலைமை நிலையச் செயலர் ப. பார்த்தசாரதி.
பொதுவாக, ஒரு கட்சி இன்னொரு கட்சியுடன் கூட்டணி அமைக்கும்போது, எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைகிறதோ, அந்தக் கட்சியின் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு, இரு கட்சிகளும் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ தானே கூட்டணி அறிவிப்பை வெளியிடும். பிப்ரவரி 3ஆம் தேதி அப்படி ஏதும் சந்திப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த பார்த்தசாரதி, "முதலில் நாங்கள் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை அறிவிப்போம். அதற்குப் பிறகு ஒரு குழு அமைத்து சம்பந்தப்பட்ட கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும்" என்றார்.
டாக்டர் ராமதாஸ்: குறைந்துவரும் வாய்ப்புகள்
பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாகப் பிளந்து, அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பிரிவு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துவிட்ட நிலையில், தானும் ஒரு வலுவான கூட்டணியில் இணைந்து தன் பலத்தைக் காட்ட வேண்டுமென நினைக்கிறார் டாக்டர் ராமதாஸ். ஆனால், அது அவ்வளவு எளிதானதாக இல்லை. அவருடைய பிரிவு தி.மு.கவுடன் கூட்டணி அமைக்கலாம் என பேச்சுகள் அடிபட்டன.
ஆனால், தி.மு.க. கூட்டணியில் நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் கூட்டணியில் இடம்பெறப் போவதில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டது. அதனை மறுத்து தி.மு.கவும் வெளிப்படையாக ஏதும் சொல்லவில்லை. இந்த நிலையில், தி.மு.க. அரசை விமர்சித்து அறிக்கைகளை வெளியிட ஆரம்பித்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ். ஆகவே, தி.மு.க. கூட்டணியில் அவருக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டனவா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
தி.மு.க. கூட்டணியில் டாக்டர் ராமதாஸ் இடம்பெறாமல் போவதற்கு வேறு காரணங்களும் இருக்கின்றன என்கிறார் குபேந்திரன்.
"தி.மு.க. கூட்டணியில் 10 இடங்களை எதிர்பார்த்தார் ராமதாஸ். ஆனால், 3 இடங்களுக்கு மேல் தருவதற்கு அவர்கள் தயாராக இல்லை. மேலும், வி.சி.கவை வேறு சமாதானப்படுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டனர். இந்த நிலையில், டாக்டர் ராமதாஸிற்கு இருக்கும் மற்றொரு வாய்ப்பு, தமிழக வெற்றிக் கழகம்தான். பா.ஜ.க. நினைத்தால் அ.தி.மு.க. கூட்டணியில்கூட இணைக்க முடியும்" என்கிறார் குபேந்திரன்.
யாருடன் கூட்டணி என்பது ஒரு வாரத்திற்குள் தெளிவாகிவிடும் என்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் (டாக்டர் ராமதாஸ்) இணை பொதுச் செயலாளரும் சேலம் மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஆர். அருள்.
"இப்போது ஏதும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம். எல்லா இடங்களிலும் அன்புமணி ராமதாஸ் முட்டுக்கட்டை போடுகிறார். இருந்தபோதும் தமிழ்நாட்டின் நலன் சார்ந்து முடிவெடுப்போம். இன்னும் ஒரு வார காலத்திற்குள் யாருடன் கூட்டணி என்பது தெளிவாகிவிடும்" என்கிறார் ஆர். அருள்.
முக்கியமான அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் அறிக்கைக்கான குழுக்களை அமைத்து பணிகளில் இறங்கிவிட்ட நிலையில், இந்த மூன்று பேருக்கும் வரவிருக்கும் இரு வாரங்கள் மிக முக்கியமானதாக இருக்கும். இவர்களைப் பொறுத்தவரை வரவிருக்கும் தேர்தல், மற்றுமொரு சட்டமன்றத் தேர்தல் அல்ல. அவர்களது எதிர்கால அரசியல் இருப்பைத் தீர்மானிக்கக்கூடிய முக்கியமான தேர்தல் என்பதுதான் அதற்குக் காரணம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு