'ரூ 300 கூலி, குடிசை வீடு'- பத்மஸ்ரீ பெறப்போகும் பழங்குடியின ஓவியர் குடும்பத்தின் நிலை என்ன?

''அவர் இருக்கும்போது, அவரை படம் வரைவதை விட்டுவிட்டு வேறு வேலைக்குப் போகச் சொல்வேன். அவர் என்றைக்காவது இந்த ஓவியம் நம்மைக் காப்பாற்றும் என்று சொல்வார். அதேபோல, அவர் இறந்த பின்பு அவருடைய ஓவியங்களுக்கு இப்போது பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் கையால் இதை வாங்கியிருந்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்போம். ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் பெரும் வேதனையாகவும் இருக்கிறது!''

பிபிசி தமிழிடம் இப்படி தன் உணர்வைப் பகிர்ந்தார் பழங்குடியினப் பெண் சுசீலா. அவருடைய கணவர் கிருஷ்ணன், நீலகிரியின் ஆலு குறும்பர் பழங்குடியின வாழ்வியல் முறையை 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல ஆயிரம் ஓவியங்களில் பதிவு செய்த ஓவியர். அவர் இறந்து 10 மாதங்களுக்குப் பின்பு, பத்மஸ்ரீ விருதை அவருக்கு அறிவித்திருக்கிறது மத்திய அரசு.

கணவர் இறந்துவிட்ட நிலையில், நீலகிரியில் அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த பழங்குடியின கிராமத்தைக் காலி செய்துவிட்டு, தற்போது கோவை மாவட்டம் கல்லாறு மலையடிவாரப்பகுதிக்கு அருகிலுள்ள புளியமரத்துார் என்ற கிராமத்திற்கு குழந்தைகளுடன் குடிபெயர்ந்துள்ளார் சுசீலா.

அங்குள்ள ஒரு பாக்குத்தோட்டத்தில் உள்ள சிறிய குடிசை வீட்டில் தனது தாய், தந்தையுடன் சேர்ந்து குடியிருப்பதுடன் தோட்ட வேலையையும் பார்த்து வருகிறார் சுசீலா. பணம் கட்ட முடியாததால் மூத்த மகள் கல்லூரி செல்லாமல் வீட்டில் இருக்கும் நிலையில், மற்ற 3 குழந்தைகளும் பழங்குடியின அரசு உண்டு உறைவிடப்பள்ளிகளில் தங்கி படித்து வருகின்றனர்.

ஷார்ட் வீடியோ

இயற்கை பொருட்களில் வண்ணங்கள்

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

இறந்தவர்கள் 16 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதில், ஆலு குறும்பர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஓவியரான கிருஷ்ணனும் ஒருவர்.

கடந்த ஆண்டு, குன்னுாரில் ஓவியம் வரைந்து கொண்டிருந்தபோதே, மாரடைப்பால் இறந்துபோன கிட்டா என்கிற கிருஷ்ணன் (வயது 52) பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் வெள்ளரிகோம்பை என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலு குறும்பர் பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறையை தனது ஓவியங்களில் பதிவு செய்து வந்தார்.

'ஆலம் விழுது, புல் மூலம் வரைந்தோம்'

கிருஷ்ணனுடன் இணைந்து 27 ஆண்டுகளாக பழங்குடியின வாழ்வியல் ஓவியங்களைப் பதிவு செய்து வந்துள்ள ஆலு குறும்பர் பழங்குடியின ஓவியர் பாலசுப்பிரமணியம், தாங்களிருவரும் முழுக்க முழுக்க இயற்கையான பொருட்களைக் கொண்டே பாறை ஓவியங்களை வரைந்து வந்ததாகக் கூறுகிறார்.

தானும் கிருஷ்ணனும் தங்கள் சமுதாயத்தின் வாழ்வியல் முறைகளையே தொடர்ந்து ஓவியங்களில் பதிவு செய்துள்ளதாகக் பாலசுப்பிரமணியம் கூறுகிறார்.

சமீபத்தில் டெல்லியில் நடந்த கண்காட்சியில் இவருடைய ஓவியத்தைப் பார்த்த பிரதமர் மோதி பாராட்டியிருந்தார்.

பிபிசி தமிழிடம் பேசிய பாலசுப்பிரமணியம், ''நானும் கிருஷ்ணனும் இணைந்து இயற்கையான பாறை ஓவியங்களை நிறைய வரைந்துள்ளோம். எங்கள் சமூகத்தின் வாழ்வியல் முறையை விளக்கும் 56 விதமான கதைகளை நாங்கள் ஓவியங்களாகத் தீட்டியுள்ளோம். முதலில் ஆலம் விழுது அல்லது புல் வைத்தே ஓவியங்களை வரைந்து வந்தோம். பின்பு பிரஷ் வைத்து வரையப் பழகினோம்.'' என்றார்.

''முதலில் பாறை மற்றும் சுவர்களில் வரைந்துவந்த எங்களை துணி, பேனர், காகிதங்களில் வரையச் சொன்னார்கள். அதில் இயற்கையாக நாங்கள் தயாரிக்கும் வண்ணங்களை வைத்து வரைந்து பார்த்தோம். அது அழியாமல் இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. நன்றாக இருந்ததால் இப்போது வரையிலும் இயற்கை வண்ணங்களால்தான் படம் வரைகிறோம். கிருஷ்ணன் பாறைகளில் வரைந்துள்ள கும்பதேவா வழிபாட்டு ஓவியம் காலத்தால் அழியாத அற்புதமான ஓவியம்.'' என்று பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

குறும்பர் பழங்குடியினத்தில் ஒரு பிரிவினராகக் கருதப்படும் ஆலு குறும்பர் பழங்குடியின மக்கள், தற்போது சுமார் 1,200 பேர் மட்டுமே இருப்பதாகச் சொல்கிறார் பாலசுப்பிரமணியம்.

அடர்ந்த வனப்பகுதிக்குள் இருக்கும் கும்பதேவர் கோவிலுக்கு விரதம் இருந்து வழிபட்டு வரும் முறை இப்போது குறைந்து விட்டதாகக் கூறும் பாலசுப்பிரமணியம், கிருஷ்ணன் அதை வரலாறாக தனது ஓவியங்களில் பதிவு செய்துள்ளார் என்கிறார்.

ஆலு குறும்பர் பழங்குடியினத்தின் குடியிருப்பு, வழிபாடு, வேட்டையாடும் முறை, சமைப்பது, சாப்பிடுவது, பண்டிகை, திருமணம் போன்ற சடங்குகள் என வாழ்வியல் முறைகள் அனைத்தையும் கிருஷ்ணனும், பாலசுப்பிரமணியமும் தங்கள் ஓவியங்களால் உலக அரங்குக்கு எடுத்துச் சென்றதாகச் சொல்கிறார் ஆலு குறும்பர் பழங்குடியின செயற்பாட்டாளரான திருமூர்த்தி.

கிருஷ்ணன், பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பழங்குடியின ஓவியர்கள் வரைந்த பல ஓவியங்கள், டெல்லி, சென்னை, திருச்சூர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

இதுவரை கண்காட்சிக்காக 10 முறை டெல்லிக்கும், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் சென்று வந்ததாகக் கூறுகிறார் பாலசுப்பிரமணியம். கிருஷ்ணனும் 14 முறை ஓவியக் கண்காட்சிக்காக டெல்லி சென்று வந்ததாகக் கூறுகிறார் அவரின் மனைவி சுசீலா.

கிருஷ்ணன் இயற்கை வண்ணங்களைத் தயாரித்த முறையையும் அவர் விளக்கினார்.

''கரிமரத்தின் பட்டையை எடுத்து அரைத்துப் பொடியாக்கி, அதிலிருந்து கருப்பு வண்ணம் எடுப்பார். வேங்கை மரத்திலிருந்து பால் எடுத்து, அதனுடன் வெவ்வேறு இயற்கையான பொருட்களைச் சேர்த்து 7 வண்ணங்களைத் தயார் செய்வார். காட்டுக்குள் வளரும் கிடா (செடி) இலையை அரைத்து அதிலிருந்து பச்சை வண்ணத்தை எடுத்துக் கொள்வார். ஆலமர விழுதிலிருந்துதான் பிரஷ் தயாரிப்பார்.'' என்றார் சுசீலா.

குடிபெயர்ந்த குடும்பம்

கிருஷ்ணன் அவருடைய தாத்தா காலத்திலிருந்தே, அவரிடம் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டு, முதலில் பாறை மற்றும் சுவர்களில் மட்டுமே அதிகமாக வரைந்து கொண்டிருந்ததாகச் சொல்கிறார் சுசீலா.

துணி, காகித பலகைகள் மற்றும் பேனர்களில் அவர் வரைந்த ஓவியங்களை தன்னார்வ அமைப்பினர் வாங்கி, விற்பனை செய்வதையும், கண்காட்சிகளில் வைத்ததையும் அவர் விளக்கினார்.

''ஓர் ஓவியம் வரைந்தால் அளவைப் பொருத்து 300, 500, 800 ரூபாய் கிடைக்கும். பெரிய சுவர்களில் வரைந்தால் 3 ஆயிரம் ரூபாய் வரை கொடுப்பார்கள். கலாம், வாஜ்பாய், ஸ்டாலின் என பலரிடம் நேரடியாக பாராட்டுச்சான்று பெற்றிருக்கிறார். ஆனால், எங்களுக்குப் பெரிதாக வருமானம் வந்ததில்லை. அதனால் அவரை நான் வேறு வேலைக்குப் போகச் சொல்லிக் கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தேன்.'' என்கிறார் சுசீலா.

''ஆனால், என்றைக்காவது ஒரு நாள் தன்னுடைய ஓவியங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று அவர் உறுதியாகச் சொல்லிக்கொண்டிருந்தார். இப்போது அவர் இறந்தபின்பு அந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. அவர் இருக்கும்போது இது கிடைத்திருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டிருப்போம்.''

'மருத்துவராக்க விரும்பினார்'

கிருஷ்ணனின் சொந்த ஊரான வெள்ளரிக்கோம்பை அடர்ந்த வனத்துக்கு நடுவில் உள்ளது. கிருஷ்ணன் இருந்த வரையிலும் அங்கு அவரின் குடும்பம் இருந்துள்ளது.

''அவர் இறந்தபிறகு நான் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கே வேலைக்குப் போனால் இரவு 6 மணிக்கு மேல்தான் திரும்ப முடியும். ஆனால், யானை, சிறுத்தை, காட்டுமாடு, கரடி தொல்லை அதிகம். எங்கள் வீட்டையும் இரண்டு முறை யானை இடித்தும் விட்டது. அவர் இல்லாமல் அங்கே குடியிருக்க அச்சமாக இருந்ததால், எனது அம்மா, அப்பா இருக்கும் இந்த ஊருக்குக் குடிபெயர்ந்துவிட்டோம்.'' என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் சுசீலா.

புளியமரத்தூரில் உள்ள பாக்குத்தோப்பு ஒன்றில் உள்ள மிகச்சிறிய குடிசை வீட்டில்தான், சுசீலா வசிக்கிறார். சுசீலா பாக்கு பொறுக்கும் வேலை பார்க்கிறார். அதற்கு ஒரு நாள் கூலியாக 300 ரூபாய் வழங்கப்படுகிறது.

கிருஷ்ணன்–சுசீலா தம்பதியினருக்கு வாசுகி , ராகுல், கீதா, கீர்த்திகா என 4 குழந்தைகள் உள்ளனர். இவர்களில் வாசுகி, பிளஸ் 2 படித்து முடித்துவிட்டு தற்போது வீட்டில் இருக்கிறார்.

கடந்த ஆண்டில் வாசுகிக்கு பிளஸ் 2 தேர்வு நெருங்கிய நிலையில், கிருஷ்ணன் உயிரிழந்தார்.

அதனால் இந்த ஆண்டில் உதகையிலுள்ள தனியார் பாரா மெடிக்கல் கல்லூரியில் பார்மஸி டிப்ளமா படிப்பதற்காகச் சேர்த்துள்ளார். இதற்கு கல்விக்கட்டணம் செலுத்துவதாகக் கூறிய ஒருவர், பின்பு கைவிட்டதால் பணம் செலுத்த முடியாமல் 2 மாதங்களில் கல்லுாரியிலிருந்து நின்றுவிட்டார்.

தனது தந்தை தன்னை மருத்துவராக்க வேண்டுமென்று விரும்பியதாகச் சொல்கிறார் வாசுகி.

பிபிசி தமிழிடம் பேசிய வாசுகி, ''அப்பா இருந்திருந்தால் என்னை மருத்துவராக்க முயற்சி செய்திருப்பாரா, அதில் வெற்றி கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், இப்போது டி.ஃபார்ம் கூட என்னால் படிக்க முடியவில்லை. எனக்கு எம்.பி.பி.எஸ். கிடைக்காவிட்டாலும் பி.ஃபார்ம் அல்லது பி.எஸ்.சி. நர்சிங் படிக்க ஆசையாக உள்ளது. அரசு கல்லூரியில் இடம் கிடைத்தால் கண்டிப்பாக படிப்பேன்.''என்றார்.

சுசீலா குடியிருக்கும் வீட்டுக்கு பிபிசி தமிழ் நேரில் சென்றது. பாக்குத்தோப்பு ஒன்றில் இருக்கும் மிகச்சிறிய குடிசை வீட்டில் தாய், தந்தை, குழந்தைகளுடன் வசிக்கிறார் சுசீலா.

கிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது பெற்ற செய்தியை அறிவதற்கு, அவர்கள் வீட்டில் தொலைக்காட்சியும் இல்லை.

டெல்லியிலிருந்து உள்துறை அமைச்சகத்திலிருந்து பேசுவதாகக் கூறி, ஒருவர் இவர்களிடம் அலைபேசியில் தொடர்புகொண்டு, கிருஷ்ணன் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக விபரம் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களைச் சேர்ந்த பலரும் இவர்களைத் தொடர்புகொண்டபோதுதான் அந்த தகவல் இவர்களுக்குத் தெரியவந்துள்ளது.

பாரம்பரிய ஓவியருக்கான தேசிய அங்கீகாரம்

''எங்களை இந்த வீட்டில் குடியிருக்கவும் வேண்டாம் என்று தோட்டக்காரர்கள் சொல்கிறார்கள். வெளியில் சென்றால் 5 ஆயிரம், 6 ஆயிரம் ரூபாய் வாடகை கேட்கிறார்கள். அதைக்கொடுக்க வசதியில்லை. அதனால் எங்களுக்கு குடியிருக்க ஒரு வீடு வேண்டும். நான் 5 ஆம் வகுப்புதான் படித்திருக்கிறேன். சத்துணவு சமையலர் வேலை அல்லது ஒரு கடை வைப்பதற்கு நிதியுதவி தரவேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைக்கிறோம். எங்கள் குழந்தைகளையும் படிக்க வைக்க அரசுகள் உதவ வேண்டும்.'' என்றார் சுசீலா.

பத்மஸ்ரீ விருதுக்கு கிருஷ்ணன் தேர்வு பெற்றிருந்தாலும் அவருடைய ஓவியங்கள் என்று எதுவுமே வீட்டில் இல்லை.

அவருடைய ஓவியத்தை பலரும் எடுத்துக்கொடுத்து பிரிண்ட் செய்து கொடுத்த சில பழைய புகைப்படங்களும், அவர் அரசுகளிடமும், ஆளுமைகளிடமும் வாங்கிய சான்றிதழ்களும், வெளிநாட்டினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் தந்துள்ள பாராட்டுக் கடிதங்களும் வீட்டில் உள்ளன.

கடந்த ஆண்டு மார்ச் 10 ஆம் தேதியன்று இரவு, குன்னூரில் படம் வரைந்து கொண்டிருந்தபோது, கிருஷ்ணன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அப்போது அவர் பாதி வரைந்து வைத்திருந்த மலையும் மரங்களும் சேர்ந்த ஓர் ஓவியத்தை மட்டும் பத்திரமாக வைத்துள்ளார் சுசீலா.

அந்த ஓவியத்தை தன் மடியில் வைத்தபடி, கண்ணீருடன் பேசிய சுசீலா, ''எங்கள் வீட்டில் மின்சாரமும் இல்லாதபோது, இரவெல்லாம் மண்ணெண்ணெய் விளக்கை வைத்துக்கொண்டு விடியவிடிய கண் விழித்துப் படம் வரைவார். அவர் விருப்பப்படியே ஓவியம் வரையும்போதே இறந்து விட்டார். இதை கண்காட்சியில் வைக்க பலரும் கேட்டார்கள். ஆனால், இதுதான் எங்களிடம் அவர் நினைவாக இருக்கும் ஒரே பொக்கிஷம் என்பதால் தரமறுத்துவிட்டேன்.''

கிருஷ்ணனுக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், மற்ற பாரம்பரிய ஓவியர்களையும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் இத்தகைய பழங்குடியின ஓவியங்கள் பெரிதும் அங்கீகாரப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறும் ஓவியர் ஜீவானந்தன், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பழங்குடியின ஓவியருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது ஒரு நல்ல துவக்கம் என்கிறார்.

''தமிழகத்தில் பெரும்பாலும் வசதி படைத்த, பெரிய மருத்துவர்கள், நடிகர்கள் போன்றவர்களுக்குதான் இந்த விருது கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த முறை, எங்களைப் போன்ற பாரம்பரியமான, எளிய கலைஞர்களுக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.'' என்றார் ஜீவானந்தன்.

ஓவியர் ஜீவானந்தன், 'திரைச்சீலை' என்ற நுாலுக்காக மத்திய அரசின் தேசிய விருது பெற்றவர்.

''தமிழகத்தில் ஓவியக்கல்லுாரியில் படித்தவர்கள்தான் ஓவியர்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர். என்னையே யாரும் ஓவியராக ஏற்றுக்கொள்வதில்லை. இந்த முறை எங்களைப் போன்ற எளிய கலைஞருக்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பது நல்ல மாற்றம். அதிலும் பழங்குடியின ஓவியர் ஒருவருக்கு அவர் இறந்த பின்னும் இந்த அங்கீகாரம் தரப்பட்டிருப்பதில் பெருமகிழ்ச்சி!''

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு