You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அஜித் பவார் பயணித்த விமானத்தின் 'கருப்புப் பெட்டி' கிடைத்தது
காலமான மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த விமானத்தின் 'கருப்புப் பெட்டி' மீட்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் 'X' தளத்தில் வெளியிட்ட பதிவில், "பாராமதி அருகே நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான விமான விபத்துக்குப் பிறகு, தேவையான அனைத்து மீட்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகளும் உடனடியாக செயல்படுத்தப்பட்டன. முழுமையான, வெளிப்படையான மற்றும் காலதாமதமில்லா விசாரணையை உறுதி செய்வதே எங்களின் முன்னுரிமை" என்று தெரிவித்துள்ளது.
"டெல்லியைச் சேர்ந்த விமான விபத்து விசாரணை பணியகத்தைச் (ஏஏஐபி) சார்ந்த மூன்று அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவும், மும்பை பிராந்திய அலுவலகத்தைச் சேர்ந்த டிஜிசிஏ-வின் மூன்று அதிகாரிகள் கொண்ட மற்றொரு குழுவும் ஜனவரி 28 அன்று விபத்து நடந்த இடத்தை சென்றடைந்தனர். அதே நாளில் ஏஏஐபி-இன் தலைமை இயக்குநரும் விபத்து இடத்திற்கு வந்தடைந்தார்."
"நிறுவப்பட்ட நிலையான செயல்முறை விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் படி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் விசாரணையை முடிப்பதில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதியாக உள்ளது. ஏஏஐபி விதிகள், 2025-ன் விதி 5 மற்றும் 11-ன் கீழ் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை தெரிய வந்தது என்ன?
மகாராஷ்டிராவில் புதன் கிழமை நேரிட்ட விமான விபத்தில் அந்த மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் காலமானார். அவருக்கு வயது 66.
விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்ததை சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (டிஜிசிஏ) உறுதிப்படுத்தியுள்ளது. டிஜிசிஏ தகவலின்படி, அந்த சிறிய ரக விமானத்தில் அஜித் பவார், அவரது தனி உதவியாளர், ஒரு பாதுகாவலர் மற்றும் இரண்டு விமானிகள் என மொத்தம் 5 பேர் பயணம் செய்தனர்.
மகாராஷ்டிராவில் எதிர்வரும் மாவட்ட ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து சமிதி தேர்தல்களுக்காகப் பிரசாரம் செய்ய அஜித் பவார் பாராமதியில் நான்கு பொதுக்கூட்டங்களில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். அதற்காக, அவர் மும்பையிலிருந்து விமானம் மூலம் பாராமதிக்குச் சென்று கொண்டிருந்தார்.
பாராமதியில் விமானம் தரையிறங்க முயன்ற போது விமான நிலைய ஓடுபாதை அருகே விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது. இந்த விபத்து காலை 8:48 மணிக்கு நிகழ்ந்தது.
இந்த விமானம் VTSSK, LJ45 XR வகையைச் சேர்ந்த சிறிய ரக விமானம் ஆகும்.
லியர்ஜெட்-45 XR (LJ45 XR) என்பது ஒரு நடுத்தர விமானமாகும். கனடாவைச் சேர்ந்த பம்பார்டியர் என்ற விமானத் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த லியர்ஜெட் விமானம், பல வாடகை விமான நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது. இது இரண்டு ஹனிவெல் TFE731-20AR/BR டர்போஃபேன் என்ஜின்களால் இயக்கப்படுகிறது.
இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் சுமார் 8 பேர் பயணிக்க முடியும். இது சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை அதிக வேகத்தில் பயணிக்கக் கூடிய ஒரு விமானமாக அறியப்படுகிறது.
பாராமதியில் விபத்துக்குள்ளான லியர்ஜெட் 45 XR விமானம் 2010ஆம் ஆண்டு முதல் சேவையில் இருந்துள்ளது.
'மேடே' அழைப்பு விடுக்கப்படவில்லை
மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்ட விமான விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் வரிசையை கோடிட்டுக் காட்டும் ஓர் அறிக்கையை அரசாங்கம் புதன்கிழமை வெளியிட்டது.
விமானியின் முதல் தரையிறங்கும் முயற்சி தோல்வியடைந்த பிறகு, காலை 8:43 மணிக்கு விமானம் ஓடுபாதை 11 இல் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. இருப்பினும், தரையிறங்கும் அனுமதியைப் பெற்ற பிறகு விமானியால் எந்த மறுபரிசீலனையும் வழங்கப்படவில்லை.
சரியாக ஒரு நிமிடம் கழித்து, காலை 8:44 மணிக்கு, ஓடுபாதைக்கு அருகில் தீப்பிழம்புகள் ஏற்பட்டதை விமான போக்குவரத்து கட்டுப்பாடு (ATC) கவனித்தது.
முழு சம்பவத்திலும் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், விபத்துக்கு முன் 'மேடே' (Mayday - விமான பயணங்களின்போது விடுக்கப்படும் அவசரகால அழைப்பு) அழைப்பு விடுக்கப்படவில்லை அல்லது எந்த வகையான அவசர அல்லது நெருக்கடி தகவலும் ATC-க்கு வழங்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வு பணியகம் (AAIB) விசாரித்துவருவதாக தெரிவித்துள்ளது.
தலைவர்கள் இரங்கல்
அஜித் பவார் மறைவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
"பாராமதியில் ஏற்பட்ட விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் உட்பட பலரும் உயிரிழந்திருப்பது மிகவும் துயரமானது. அஜித் பவாரின் எதிர்பாராத மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு. மகாராஷ்டிராவின் வளர்ச்சியில் குறிப்பாக கூட்டுறவுத் துறையின் வளர்ச்சியில் அவரின் சிறப்பான பங்களிப்புக்காக நினைவு கூறப்படுவார். அவரின் குடும்பம், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் இந்த இழப்பை தாங்கிக் கொள்வதற்கான சக்தியை கடவுள் வழங்கட்டும்," என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"பாராமதியில் ஏற்பட்ட விபத்தால் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த விபத்தில் தங்களின் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துக்கத்தில் இருந்து மீண்டு வர அவர்களுக்கு சக்தி கிடைக்கட்டும் என பிரார்த்திக்கிறேன்," என பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஜித் பவாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அஜித் பவாரின் மறைவு என் இதயத்தை மிகவும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார் அமித் ஷா.
"கடந்த 35 ஆண்டுகளாக மகாராஷ்டிராவின் அனைத்து பிரிவுகளின் நலனுக்காகவும் அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட விதத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நாங்கள் எப்போது சந்தித்துக் கொண்டாலும் மகாராஷ்டிர மக்களின் நலனுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்னைகள் பற்றி நீண்ட விவாதங்களில் ஈடுபடுவார். அவரின் மறைவு என்டிஏ குடும்பத்திற்கு மட்டுமல்ல, எனக்குமே தனிப்பட்ட முறையில் இழப்பு," என தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
விமான விபத்தில் அஜித் பவார் மறைந்த செய்தி மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே தெரிவித்துள்ளார்.
"நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கை கொண்டவரின் எதிர்பாராத மரணம் இது. இந்த கடினமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் துயரத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. பவார் குடும்பத்திற்கும் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
"மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் மற்றும் அவருடன் பயணித்தவர்கள் விமான விபத்தில் உயிரிழந்துள்ளது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த துக்கமான நேரத்தில் மகாராஷ்டிர மக்களுடன் நான் நிற்கிறேன். இந்த சோகமான நேரத்தில் பவார் குடும்பத்திற்கும் அவரின் அன்பிற்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர துணை முதல்வர் மற்றும் மற்றவர்கள் விமான விபத்தில் மறைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"இந்த துயரத்தின் அளவு தாங்க முடியாதது. சரத் பவார் மற்றும் சுப்ரியா சூலேவுக்கும் இந்த துயரமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அஜித் பவாரின் அரசியல் பின்னணி
அஜித் பவார், மகாராஷ்டிராவின் தேவ்லாலி எனும் சிறிய ஊரில் 1959-ஆம் ஆண்டு பிறந்தார், 1982ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார்.
முதலில் சர்க்கரை ஆலைகளின் கூட்டுறவு உறுப்பினர், கூட்டுறவு வங்கியின் தலைவர் போன்ற பதவிகளில் இருந்தவர், 1991-ஆம் ஆண்டு பாராமதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஆனால் அதை அவரது சித்தப்பா சரத் பவாருக்காக விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது.
இதைத்தொடர்ந்து, அவர் அப்பகுதியின் அரசியலில் முக்கியமானவராக உருவெடுத்தார்.
1991-ஆம் ஆண்டிலிருந்து 2019-ஆம் ஆண்டுவரை, பாராமதி தொகுதியில் போட்டியிட்டு ஏழுமுறை தொடர்ந்து வென்றார். கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கும் மேலாக பாராமதி தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார்.
அவரது அரசியல் பயணத்தை கூர்ந்து கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர் உத்தவ் பட்சல்கரின் கருத்துப்படி, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் அப்பகுதியில் அரசியல் செய்துவந்த காலத்தில், அஜித் பவார் கட்சிக்குள் இளைஞர்களைக் கொண்டுவந்தார்.
சித்தப்பா சரத் பவாருக்காக எம்.பி பதவியை விட்டுக்கொடுத்தபின் அஜித் பவார் தன் கவனத்தை மாநில அரசியல் பக்கம் திருப்பி ஆர்வமாக ஈடுபடத் துவங்கினார்.
1991ஆம் ஆண்டு வேளாண் துறைக்கான இணை அமைச்சராக இருந்தார்.
அதன்பின் பாபர் மசூதி இடிக்கப்பட்டபின் மும்பையில் பெரும் கலவரங்கள் வெடித்தன. அதைச் சமாளிக்க, அனுபவசாலியான சரத் பவாரை முதல்வராக்கினார் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ்.
உடனடியாக பதவியேற்ற சரத் பவார், அஜித் பவாரை மின்சாரத் துறை அமைச்சராக்கினார்.
அதன்பின், 1995-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தோற்று, சிவசேனா-பா.ஜ.க கூட்டணி வென்றது. சரத் பவர் மீண்டும் எம்.பி ஆனார். அஜித் பவாரோ மாநில அரசியலிலேயே தங்கிவிட்டார்.
இந்நிலையில் அவர் மகாராஷ்டிராவில் காங்கிரஸின் செல்வாக்கினை மேம்படுத்தி, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார். தான் சரத் பவாரின் அரசியல் வாரிசு என்ற நிலையை உருவாக்கினார், என்று தனது கட்டுரை ஒன்றில் மூத்த பத்திரிகையாளர் கிரண் தாரே கூறுகிறார்.
அதன்பின் 1999-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் நீர்வளத்துறை அமைச்சரானார்.
2004ஆம் ஆண்டு, காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இணைந்து தேர்தலில் வென்றன. காங்கிரசுக்கு 69 தொகுதிகளும், தேசியவாத காங்கிரசுக்கு 71 தொகுதிகளும் கிடைத்தன. ஆனால் கூட்டணிக் கணக்குகளைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் பதவியை காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்தார் சரத் பவார். அப்படிச் செய்திருக்காவிட்டால், அப்போது அஜித் பவார் முதல்வராகியிருக்கக் கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
2023-ஆம் ஆண்டு அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தனது ஆதரவாளர்களுடன் மகாராஷ்டிராவில் முதலமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைந்து, துணை முதல்வராகப் பதவியும் ஏற்றார்.
கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக பதவியேற்க, அஜித் பவார் துணை முதல்வராக தொடர்ந்தார்.
அஜித் பவரின் அரசியல் வாழ்வில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் பஞ்சம் இல்லை. 1999ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை அணைகள் கட்டுவதில் ஊழல் செய்ததாகவும், 2005ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டுவரை கூட்டுறவு வங்கிகளில் கடன் மோசடி குற்றச்சாட்டும் அவர் மீது எழுந்தது.
சுப்ரியா சூலே - அஜித் பவார் போட்டி
2006-ஆம் ஆண்டு, சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலே அரசியலில் நுழைந்தார், ராஜ்ய சபா உறுப்பினரானார்.
அப்போது, அஜித் பவாருக்கும் சுப்ரியாவுக்கும் பெரிய அளவில் போட்டி இல்லை, என்கிறார் அபய் தேஷ்பாண்டே. "ஆனால் சுப்ரியா சூலே தேசியவாதியாக அறியப்பட்டு, அவரது தலைமை பரவலாக வெளியே தெரிந்தது. அஜித் பவாரின் செல்வாக்கும் கட்சிக்குள் வளர்ந்ததால் அவர்களிடையே போட்டியும் வளர்ந்தது," என்கிறார்.
2009-ஆம் ஆண்டு, சுப்ரியா சூலேவுக்கு, பாராமதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இது அஜித் பவாரின் செல்வாக்கு மிக்க பகுதி.
ஆனால் அஜித் பவாரும் சுப்ரியா சூலேவும் தங்களுக்கிடையே போட்டி இல்லை என்று கூறிவந்திருக்கின்றனர்.
என்ன வகை விமானம்?
அஜித் பவார் பயணித்த விமானம் லியர்ஜெட்-45 XR (LJ45 XR - Learjet-45 XR), வணிக ஜெட் விமானமாகவோ அல்லது சார்ட்டர் விமானங்களுக்காகவோ பயன்படுத்தப்படும் நடுத்தர அளவிலான விமானமாகும்.
கனடா நாட்டை சேர்ந்த விமான நிறுவனமான பாம்பார்டியரால் (Bombardier) தயாரிக்கப்பட்ட லியர்ஜெட் விமானம், பல சார்ட்டர் நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது.
இந்த விமானம் இரண்டு ஹனிவெல் TFE731-20AR/BR டர்போஃபேன் எஞ்சின்களால் இயக்கப்படுகிறது மற்றும் ஒரே நேரத்தில் சுமார் எட்டு பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.
பத்திரிகை தகவல் பணியகத்தின்படி (PIB), பாராமதியில் விபத்துக்குள்ளான லியர்ஜெட்-45 XR விமானம் 2010 இல் தயாரிக்கப்பட்டது, அதாவது அது சுமார் பதினாறு ஆண்டுகள் பழமையானது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு