பலன் கொடுக்காத ஷிவம் துபே அதிரடி: இந்தியா மேற்கொண்ட 3 சோதனை முயற்சிகளின் முடிவு என்ன?

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழ்

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறது இந்திய அணி.

முதலில் விளையாடிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்தது. ஓப்பனர்கள் டிம் செய்ஃபர்ட் (62 ரன்கள்), டெவன் கான்வே (44 ரன்கள்) ஆகியோர் கொடுத்த நல்ல தொடக்கமும், டேரில் மிம்ட்செலின் அதிரடி ஃபினிஷிங்காலும் (18 பந்துகளில் 39 ரன்கள்) அந்த அணி அந்த ஸ்கோரை எட்டியது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அடுத்து விளையாடிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தது. ஆல்ரவுண்டர் ஷிவம் துபே மட்டுமே ஓரளவு போராடி 65 ரன்கள் எடுத்தார். அவர் இந்தப் போட்டியில் 15 பந்துகளிலேயே அரைசதம் கடந்தார். இது, சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியர் ஒருவர் அடித்த மூன்றாவது அதிவேக அரைசதம். துபேவுக்கு ரிங்கு சிங் தவிர்த்து யாரும் பெரிதாக ஒத்துழைப்பு கொடுக்காததால், இந்தியா 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

முதல் மூன்று போட்டிகளையும் வென்று ஏற்கெனவே இந்தத் தொடரைக் கைப்பற்றி விட்டதால் இந்தப் போட்டியில் சில சோதனை முயற்சிகளை இந்திய அணி பரிசோதித்துப் பார்த்தது. அவற்றுள் எந்த முடிவுகள் கைகொடுத்தன? எவை கைகொடுக்காமல் போயின?

ஒரு பேட்டர் குறைவு

டாஸின் போதே இந்திய அணி சோதனை முயற்சிகளை மேற்கொள்கிறது என்பதை சொல்லாமல் சொன்னார் கேப்டன் சூர்யகுமார் யாதவ். இஷான் கிஷன் சிறு காயத்தால் அவதிப்படுவதால், அவருக்குப் பதில் அர்ஷ்தீப் சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறினார் அவர். ஒரு பேட்டருக்குப் பதிலாக, ஒரு முழுநேர பௌலரைக் களமிறக்கியது இந்திய அணி.

டி20 போட்டிகளில், கடினமான சூழ்நிலைகளில் கூட அதிரடி அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது இந்திய அணி. 7 பேட்டர்களுடன், எட்டாவதாக அக்‌ஷர் பட்டேல் அல்லது ஹர்ஷித் ராணா என பேட்டிங் செய்யக்கூடிய வீரர் ஒருவர் என்றுதான் இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி ஆடியிருந்தது. இப்படி பெரிய பேட்டிங் ஆர்டர் இருக்கும்போது, அது அதிரடியாக ஆடுவதற்கான நம்பிக்கையை பேட்டர்களுக்குக் கொடுத்தது. சூழ்நிலை பற்றிய குழப்பங்கள் இல்லாமல் அவர்கள் அதைக் கையாண்டார்கள்.

ஏற்கெனவே தொடரை வென்றுவிட்டதாலும், உலகக் கோப்பைக்கு தயாராகவேண்டும் என்பதாலும், அந்த கூடுதல் நம்பிக்கை இல்லாத சூழ்நிலையை தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக்கொண்டு சோதித்துப் பார்க்க நினைத்திருக்கிறது அணி நிர்வாகம். அதனால், அர்ஷ்தீப்பைக் கொண்டுவந்து ஒரு பேட்டரைக் குறைத்திருக்கிறார்கள்.

போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதை உறுதி செய்தார். "நாங்கள் வேண்டுமென்றே ஒரு பேட்டர் குறைவாக விளையாடினோம். ஐந்து பௌலர்களோடு விளையாடி எங்களுக்கு சவால் ஏற்படுத்தவேண்டும் என்று நினைத்தோம். இரண்டு, மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகு 180-200 என்ற இலக்கை எப்படி சேஸ் செய்கிறோம் என்று பார்க்க நினைத்தோம்" என்று அவர் கூறினார்.

ஆனால், இந்தியா ஏற்படுத்திக்கொண்ட சவாலை இந்தப் போட்டியில் அவர்களால் வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை. ஒரு பேட்டர் குறைவாக இருந்த போட்டியில் டாப் ஆர்டர் சீக்கிரமாக அவுட் ஆகிவிட்டபோது, மிடில் ஆர்டர் மீது சற்று கூடுதல் நெருக்கடி ஏற்படுகிறது. நேற்றைய சூழ்நிலையில் அது மிடில் ஓவர்களில் ரன் ரேட்டையும் பாதித்தது. சாம்சன் அவுட் ஆனதற்கும், ரிங்கு சிங் அவுட் ஆனதற்கும் இடைப்பட்ட 3.5 ஓவர்களில் இந்தியா 27 ரன்கள் தான் எடுத்திருந்தது. ஏனெனில், ரன் சேர்ப்பதை விட விக்கெட் வீழ்ச்சியில் கவனம் அதிகம் செலுத்தவேண்டியிருந்தது.

அதுமட்டுமல்லாமல் ஒரு பெரிய சேஸின்போது ஹர்ஷித் ராணா 11வது ஓவரிலேயே களமிறங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நன்றாக ஆடிக்கொண்டிருந்த துபேவும் 15வது ஓவரிலேயே அவுட்டாக, ஒரு 200+ சேஸின் கடைசி 5 ஓவர்களில் இந்தியாவின் முன்னணி பேட்டர்கள் யாரும் களத்தில் இருக்கவில்லை.

ஒரு பேட்டர் குறைவாக இருந்தது 'விக்கெட் வீழ்ச்சி' பற்றி கவலைப்படாமல் ஆடிய இந்தியாவின் அணுகுமுறையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதை இந்தப் போட்டியில் காண முடிந்தது.

இந்தப் போட்டி பற்றி கிரிக்பஸ் நிகழ்ச்சியில் பேசிய வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, "(இந்தத் தொடரின்) முதல் போட்டியில் ஆடிய இந்திய அணி சரியான அணி என்று நினைக்கிறேன். பும்ரா, அர்ஷ்தீப், வருண் மற்றும் 8 பேட்டர்கள் ஆடுவது சரியாக இருக்கும்" என்று கூறினார்.

விக்கெட் வீழ்ச்சியைத் தடுக்கும் இன்னொரு வீரர்

பொதுவாகவே விரைவாக டாப் ஆர்டர் விக்கெட்டுகள் விழும்போது, விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து அணிக்கு நிலைத்தன்மையை கொடுக்கும் வகையில் ஆடவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அந்த ரோலை குறிப்பிட்ட சில வீரர்கள் சரியாகச் செய்வார்கள். இந்திய அணிக்கு, விராட் கோலி அவர் இருந்த வரை அந்த வேலையைப் பார்த்துக்கொண்டார். இந்த அணியில் அக்‌ஷர் பட்டேல் அப்படியான சூழ்நிலைகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டுவந்தார். இந்தப் போட்டியில் அவர் இல்லாததால், ரிங்கு சிங் கையில் அந்த வேலை கொடுக்கப்பட்டது.

2 ஓவர்கள் முடிவில் இந்தியா 9/2 என்ற நிலையில் இருந்தபோது களமிறங்கினார் ரிங்கு சிங். மிகவும் நிதானமாகத் தொடங்கிய அவர், சரியான பந்துகள் கிடைக்கும்போது பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களும் அடித்தார். ஆனால், எந்தவித ரிஸ்க்கும் எடுக்காமல், அடிக்கக்கூடிய வகையில் வந்த பந்துகளை மட்டுமே டார்கெட் செய்தார்.

நன்கு அதிரடி காட்டி ஆட்டத்தை முடிக்கக்கூடியவர் என்பதால் ரிங்கு சிங் பெரும்பாலும் ஃபினிஷராகவே கருதப்படுகிறார். பல போட்டிகளில் அவர் தாமதமாகவே களமிறக்கவும் படுவார். ஆனால், அவரால் நிலையான ஆட்டத்தையும் கொடுக்க முடியும். ஏற்கெனவே ஒருசில முறை அந்த வேலையை செய்திருந்தாலும், இந்தப் போட்டியில் அதை மீண்டும் காட்டியிருக்கிறார் அவர்.

அதுமட்டுமல்லாமல், ஷிவம் துபே இந்தப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஃபோக்ஸ், ஹென்றி போன்றவர்களின் பந்துவீச்சிலும் பவுண்டரிகள் அடித்திருப்பதால், அவரை ஃபினிஷராகப் பயன்படுத்துவதற்கு அது அணியை ஊக்குவிக்கும் என்றும், அதனால் ரிங்கு சிங்கின் 'ரோல்' சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவது அணிக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கருதப்படுகிறது.

ஆல் ரவுண்டர்கள் பயன்படுத்தப்படவில்லை

அதிக ஆல்ரவுண்டர்களைக் களமிறக்குவதன் மூலம் நிறைய பௌலிங் ஆப்ஷன்கள் இந்திய அணிக்கு எப்போதுமே இருந்தது. கேப்டன் சூர்யாவும் அவற்றை பயன்படுத்திக்கொண்டிருந்தார். ஆனால், இந்தப் போட்டியில் 5 முழுநேர பௌலர்களைக் களமிறக்கியதால், அவர்களை மட்டுமே பயன்படுத்தும் நோக்கில் அவர் செயல்பட்டார்.

முதல் 3 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே இருவரும் இணைந்து 14 ஓவர்கள் பந்துவீசியிருந்தார்கள். அதில் அவர்கள் 7 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தார்கள். ஆனால், இந்தப் போட்டியில் அவர்களுக்கு ஒரு ஓவர் கூடக் கொடுக்கப்படவில்லை.

"உலகக் கோப்பையில் ஆடும் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்று நினைத்தோம்" என்று போட்டிக்குப் பின் சொல்லியிருந்தார் சூர்யா. ஒருவேளை உலகக் கோப்பைக்குள் வாஷிங்டன் சுந்தர் காயத்திலிருந்து மீளாதபட்சத்தில் அவருடைய இடத்தில் ரவி பிஷ்னாயை சோதித்துப் பார்க்கவேண்டும் என்பதால் அவர்கள் ஐந்து பௌலர்களை மட்டுமே பயன்படுத்தியிருக்கலாம்.

ஆனால், நியூசிலாந்து பௌலர்கள் பிஷ்னாய் வீசிய 4 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்துவிட்டார்கள். அதுமட்டுமல்லாமல், ஹர்திக் மற்றும் துபே ஆகியோரின் பார்ட்னர்ஷிப்பை உடைக்கும் தன்மையையும் இந்தியா இந்தப் போட்டியில் பயன்படுத்தவில்லை. குறிப்பாக பவர்பிளேவில் ஹர்திக் நல்ல தாக்கம் ஏற்படுத்திக்கொண்டிருந்த நிலையில், அவரை அங்கு பயன்படுத்தாமலேயே விட்டார் சூர்யா. நியூசிலாந்தின் முதல் விக்கெட் ஜோடியும் 8.2 ஓவர்களிலேயே 100 ரன்கள் எடுத்து இந்தியாவைப் பின்தங்கவைத்துவிட்டது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி20 போட்டி சனிக்கிழமை நடக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு