இந்தியாவில் கிடைத்த 'சக்கரவியூக' அமைப்புக்கும் ரோமானிய பேரரசுக்கும் என்ன தொடர்பு?

    • எழுதியவர், மயூரேஷ் கொன்னூர்
    • பதவி, பிபிசி மராத்தி

சில ஆண்டுகளுக்கு முன்பு சோலாப்பூரில் பறவை ஆர்வலர்கள் குழு ஒன்று, மஞ்சள் நிறப் புற்களுக்கு இடையே வழக்கத்திற்கு மாறாக ஏதோ ஒன்று வித்தியாசமாகத் தெரிவதை கவனித்தனர்.

சோலாப்பூரிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் போராமணி கிராமத்திற்கு அருகில் மால்டோக் (Great Indian Bustard) பறவைகளுக்கான காப்பகம் உள்ளது. அங்கிருந்து பார்வை எட்டும் வரை நீண்டிருந்த புல்வெளி நிலத்தில் அவர்கள் அதைக் கண்டனர்.

"அது கற்களால் ஆன ஒரு அமைப்பு. 2022 வாக்கில் என்னிடம் ட்ரோன் (Drone) வந்தது. அதன் மூலம் ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டது. அது ஏதோ சக்ரவடிவில் இருந்தது. அது என்னவென்று எங்களுக்குப் புரியவில்லை. அந்தப் புகைப்படத்தை எங்களுக்குத் தெரிந்த ஆய்வாளர்களுக்கு அனுப்பினோம், பின்னர் நாங்கள் அதைப் பற்றி கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தோம்," என்று இந்தப் பகுதியில் இயற்கை பாதுகாப்புப் பணிகளைச் செய்து வரும் பாரத் சேடா கூறுகிறார்.

அந்தப் புகைப்படம் இறுதியில் கோலாப்பூரைச் சேர்ந்த சச்சின் பாட்டீலைச் சென்றடைந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, 2025 டிசம்பர் இரண்டாவது வாரத்தில், பாட்டீல் போராமணியின் இந்த நிலப்பகுதியை வந்தடைந்தார்.

அப்போது அவர் கண்டதை அவராலேயே சில காலம் நம்ப முடியவில்லை. ஆனால் இறுதியில் உண்மை வெளிப்பட்டது. அது இந்தியாவில் இதுவரை கண்டறியப்பட்டதிலேயே மிகப்பெரிய 'சக்ரவியூகம்'.

மையத்தில் தொடங்கி ஒன்றன்பின் ஒன்றாகப் பெரிதாகிக் கொண்டே சென்ற கற்களால் ஆன 15 வளையங்கள் அங்கு இருந்தன. தொல்லியல் துறையில் இது 'லாபிரிந்த்' (புதிர்ப் பாதை) என்று அழைக்கப்படுகிறது.

புனேவில் தொல்லியல் துறை ஆய்வுக்குப் புகழ்பெற்ற டெக்கான் கல்லூரியில் பிஎச்.டி செய்து வரும் சச்சின் பாட்டீல், 2018 முதல் இதுவரை மேற்கு மகாராஷ்டிராவில் இதுபோன்ற 11 லாபிரிந்த்களைக் கண்டறிந்துள்ளார்.

சச்சின் பாட்டீல் எங்களுடன் மீண்டும் போராமணி நிலப்பகுதிக்கு வந்தார். அப்போது, "நான் இங்கு முதல்முறை வந்தபோது, இது ஒரு லாபிரிந்த்தா அல்லது வேறெதுவுமா என்று எனக்கே தெரியாதவகையில் அங்கு நிறைய புற்கள் வளர்ந்திருந்தன," என்று அவர் நினைவுகூர்ந்தார்.

"ஆனால் புற்களைச் சுத்தம் செய்தபிறகு எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில், 15 சுற்றுகள் கொண்ட பாரம்பரிய வகை லாபிரிந்த்தை இந்தியாவில் முதல்முறையாக நான் பார்த்துக் கொண்டிருந்தேன்," என்று பாட்டீல் கூறினார்.

இது மிக முக்கியமான ஒரு தொல்லியல் நிகழ்வாகும். மேலோட்டமாகப் பார்த்தால் இது பல வளையங்களைக் கொண்ட ஒரு கற்கள் அமைப்பாகத் தோன்றும்.

ஆனால், இந்த அமைப்பு கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில், பல்வேறு கலாச்சாரங்களில் காணப்படும் ஒரு பொதுவான அமைப்பாகும். இந்த அமைப்பு இன்றும் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு முன்னால் பல புதிர்களைச் சுமந்து நிற்கிறது.

சக்ரவியூகம் (லாபிரிந்த்) என்றால் என்ன? அதை யார் உருவாக்கினார்கள்?

சுமார் 50 அடி விட்டம் கொண்ட சோலாப்பூர் அருகிலுள்ள போராமணியின் இந்த லாபிரிந்த், இந்தியாவில் கண்டறியப்பட்டவற்றிலேயே மிகப்பெரிய வட்ட வடிவ லாபிரிந்த் அல்லது சக்ரவியூகம் ஆகும்.

இதுவரை மகாராஷ்டிராவில் போராமணி உட்பட 12 இடங்களிலும், நாடு முழுவதும் சுமார் 70 சக்ரவியூகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சச்சின் பாட்டீல் கூறுகிறார்.

தமிழ்நாட்டில் கெடிமேடு என்ற இடத்தில் 56 அடி அகலமுள்ள ஒரு லாபிரிந்த் கண்டறியப்பட்டுள்ளது, ஆனால் அது செவ்வக வடிவிலானது. இருப்பினும், உலகெங்கிலும் கண்டறியப்படும் பெரும்பாலான லாபிரிந்த்கள் வட்ட வடிவிலேயே உள்ளன.

ஆனால் அவை உண்மையில் என்ன? எளிதாகப் பார்த்தால், அவை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட பல வளையங்கள் அல்லது வடிவியல் வடிவங்களின் அமைப்பாகும். சில கற்களால் உருவாக்கப்பட்டவை, சில இடங்களில் பாறைகள் மற்றும் சுவர்களில் செதுக்கப்பட்டும் உள்ளன.

பல இடங்களில் கோயில்கள் அல்லது கதீட்ரல் (Cathedral) போன்ற வழிபாட்டுத் தலங்களில் செதுக்கப்பட்டதாகவோ அல்லது சித்திரங்களாகவோ இவை காணப்படுகின்றன.

"அடிப்படையாக அதன் அமைப்பே அத்தகையது, ஒரு லாபிரிந்த்தில் எப்போதும் ஒரே ஒரு பாதைதான் இருக்கும். அது மிக வெளியேயுள்ள சுற்றிலிருந்து தொடங்கி மையப்புள்ளி வரை வரும் அல்லது இறுதி வரை செல்லும்."

"உலகில் எங்கு கண்டறியப்பட்டாலும், கிட்டத்தட்ட ஒவ்வொரு முறையும் அவற்றின் வடிவமைப்பு ஒரே மாதிரியாகவே இருக்கிறது, அது ஏன்? என்பது இன்றும் புதிராகவே உள்ளது," என்று பிரிட்டனிலிருந்து எங்களிடம் பேசிய ஜெஃப் சவார்ட் கூறினார்.

ஜெஃப் சவார்ட் கடந்த ஐந்து தசாப்தங்களாக உலகெங்கிலும் உள்ள லாபிரிந்த்களை ஆய்வு செய்து வருகிறார். அவர் 'செர்ட்ரோயியா' (Caerdroia) என்ற பெயரில் லாபிரிந்த்கள் மற்றும் அதன் மீதான ஆராய்ச்சிகளுக்காகவே பிரத்யேகமாக ஒரு இதழைத் தொகுத்து வெளியிட்டு வருகிறார்.

அதுமட்டுமின்றி 'லாபிரிந்தோஸ்' (Labyrinthos) என்ற ஆன்லைன் ஆவணக் காப்பகத்தையும் அவர் நடத்தி வருகிறார். அங்கு இந்த விஷயம் தொடர்பாகச் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் குறிப்புகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் உள்ளன.

உலகின் மூலை முடுக்கெல்லாம் உள்ள பல கலாச்சாரங்களில், வரலாற்றின் பல்வேறு காலக்கட்டங்களில் லாபிரிந்த்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று ஜெஃப் கூறுகிறார். அவற்றைப் பற்றிய பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்க வேண்டியுள்ளது.

அவற்றை யார் உருவாக்கினார்கள்? அவை அனைத்தும் ஒரே மாதிரியான வடிவமைப்பில் எங்கும் எப்படி உள்ளன? அவற்றை உருவாக்குவதன் நோக்கம் என்ன? என அடுக்கடுக்கான கேள்விகள் உள்ளன.

"அவை உலகம் முழுவதும் காணப்படுகின்றன - அரிசோனா, ஐஸ்லாந்து, ஆர்க்டிக் ரஷ்யா, ஐரோப்பா முழுவதும், வட ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா வரை காணப்படுகின்றன.

குறிப்பாக இந்தியா அல்லது இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இந்தோனீசியாவின் சுமத்ரா மற்றும் ஜாவா போன்ற இடங்கள் வரை இவை பரவியுள்ளன.

இந்த சக்ரவியூகங்கள் அல்லது லாபிரிந்த்கள் எங்கு கண்டறியப்பட்டாலும், அவை அனைத்தின் அமைப்பும் ஒரே மாதிரியாகவே இருப்பது ஒரு பெரும் புதிராகும்," என்று ஜெஃப் கூறுகிறார்.

இந்தியா உட்பட உலகெங்கிலும் காணப்படும் லாபிரிந்த்கள்

சக்ரவியூகம் அல்லது லாபிரிந்த் என்ற இந்த அமைப்பு பல நூற்றாண்டுகளாக பல்வேறு கலாசாரங்களில் காணப்பட்டு வருகிறது.

அவற்றுடன் அந்தந்தப் பகுதிகளில் பல்வேறு புராணக்கதைகள் அல்லது தொன்மங்களும் இணைந்துள்ளன. அந்த கதைகள் இன்றும் சொல்லப்படுகின்றன.

"இத்தகைய அமைப்புகளை உருவாக்குவதன் நோக்கம் என்ன? இதற்கு ஒரே ஒரு பதில் கிடைக்கவில்லை. ஏனெனில் வெவ்வேறு கலாச்சாரங்களில் அவற்றின் பயன்பாடு வெவ்வேறு விதமாக உள்ளது," என்று ஜெஃப் கூறுகிறார்.

"உதாரணமாக, அமெரிக்காவின் தென்மேற்கிலுள்ள அரிசோனாவில், ஒரு புனித மலையின் சிகரத்திற்குச் செல்லும் பாதையில் இது பயன்படுத்தப்பட்டுள்ளது, அங்கு உள்ளூர் பழங்குடியினத் தலைவர் வசித்து வந்தார். அந்த மலை உச்சிக்குச் செல்லும் பாதை மிகவும் வளைந்து நெளிந்து செல்லும் வகையில் இருந்ததால், யாராலும் அவரைத் துரத்திக் கொண்டு அவர் வீட்டிற்குச் செல்ல முடியாது."

"ஆப்கானிஸ்தானில் ஒரு அரண்மனையைச் சுற்றியுள்ள கோட்டைச் சுவரில் இத்தகைய சக்ரவியூகம் உள்ளது. இலங்கையில் ஒரு நகரத்தின் பாதுகாப்புச் சுவர் வடிவமைப்பாக இது உள்ளது. எனவே, இதுபோன்ற பல கதைகள் உள்ளன, அவற்றில் பல பொதுவான விஷயங்களும் உள்ளன. ஆனால் லாபிரிந்த்தைப் பயன்படுத்துவதற்குப் பின்னால் ஒரு குறிப்பிட்ட காரணம் மட்டுமே இல்லை," என்று ஜெஃப் மேலும் கூறுகிறார்.

ஜெஃப்பின் கருத்துப்படி, லாபிரிந்த்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எங்கும் காணப்பட்டாலும், மிக சமீபத்தில்தான் அவற்றின் தேடல் மற்றும் ஆராய்ச்சி தொடங்கப்பட்டது. இந்தியாவிலும் சமீபகாலமாக ஆய்வாளர்களை இது ஈர்க்கத் தொடங்கியுள்ளது, அவர்கள் அதைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.

"கர்நாடகாவின் விஜயப்பூரில் இது போன்ற ஒரு அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. கோவாவில் உஸாலி மால் என்ற இடத்தில் கற்களில் செதுக்கப்பட்ட லாபிரிந்த்தைக் காணலாம், இது பாறைச் செதுக்கல்களின் தொகுப்பில் உள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் மேல் கோதாவரி மாவட்டத்தில் பாறை ஓவியங்களில் லாபிரிந்த் கிடைத்துள்ளது. அசோகர் காலத்துத் தூண்களில் லாபிரிந்த்கள் கிடைத்துள்ளன. மேற்கு வங்காளத்தில் லாபிரிந்த்தை 'யம்துவார்' (எமனின் வாசல்) என்று அழைக்கிறார்கள். அதாவது முக்திக்கான வழி."

"இத்தகைய லாபிரிந்த்களை நாம் வட இந்தியாவிலும் காணலாம். இதுவரை தென்னிந்தியாவில்தான் அதிகப்படியான லாபிரிந்த்கள் பதிவாகியுள்ளன. தென்னிந்தியாவில் சுமார் 30 முதல் 35 லாபிரிந்த்கள் உள்ளன," என்று ஆய்வாளர் சச்சின் பாட்டீல் கூறுகிறார்.

இந்தியாவிலும் மற்ற இடங்களிலும் சில இடங்களில் இவை உள்ளூர் தெய்வக் கதைகளுடனும் இணைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் இதுவரை முக்கியமாக மேற்கு மகாராஷ்டிராவின் மலைப்பகுதிகளில் 12 லாபிரிந்த்கள் பதிவாகியுள்ளன.

போராமணியின் 'சக்ரவியூகம்'

சோலாப்பூர் அருகிலுள்ள மால்டோக் காப்பகத்தை ஒட்டிய போராமணி நிலப்பகுதிக்குச் சென்றால், பார்வை எட்டும் வரை சமவெளியாகவே இருக்கும்.

மஞ்சள் நிறப் புற்களுக்கு இடையே கருவேல மரங்களும் மற்ற சிறு செடிகளும் உள்ளன. இந்தப் புல்வெளியில் பல ஒற்றையடிப் பாதைகள் வடிவமைக்கப்பட்ட வடிவங்களில் செல்கின்றன.

இவை மிகவும் பழைய பாதைகளாக இருக்கலாம். ஏனெனில் நாங்கள் அங்கு இருந்தபோது, நாடோடிக் குழுக்கள் குதிரைகளுடன் தூரத்திலிருந்து நடந்து வந்து எதிர் திசையில் சென்றனர்.

இந்த நிலப்பகுதியில்தான் 15 வளையங்களைக் கொண்ட இந்தச் சக்ரவியூகம் கண்டறியப்பட்டது. இது புற்களுக்குள் மறைந்திருந்தது. ஆனால் இப்போது அது என்ன என்பது தெரிந்த பிறகு, உள்ளூர் செய்தித்தாள்களில் செய்திகள் வந்ததைத் தொடர்ந்து, இந்த இடத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

"இது சந்தேகத்திற்கு இடமின்றி, இந்தியாவில் இன்று அறியப்பட்ட மிகப்பெரிய சக்ரவியூகம் ஆகும். 15 பொதுமைய வட்டங்களின் அமைப்பால், இது நிச்சயமாக மிகவும் சிக்கலான உதாரணங்களில் ஒன்றாகும்.

தற்செயலாக இருக்கலாம், ஆனால் இந்த அமைப்பானது ஐரோப்பாவின் வடக்கே உள்ள ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஆர்க்டிக் ரஷ்யாவில் காணப்படும் அமைப்புகளைப் போலவே அச்சு அசலாக உள்ளது. இருப்பினும் அவற்றுக்கிடையே எந்தத் தொடர்பும் இல்லை என்பது உறுதி," என்று ஜெஃப் சவார்ட் கூறுகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்த அமைப்புகளைத் தொல்லியல் ரீதியாக ஆய்வு செய்து வரும் சச்சின் பாட்டீல் மற்றும் புனே டெக்கான் கல்லூரியின் பேராசிரியர் பி.டி. சாப்ளே ஆகியோருடன் நாங்கள் இந்த இடத்தைப் பார்வையிட்டோம்.

இந்த நிலப்பகுதியில் கற்களின் அமைப்பு கண்டறியப்பட்டதன் முக்கியத்துவம் அவர்களுக்குத் தெரியும், ஆனால் அது அவர்களுக்கு ஒரு பெரிய வியப்பாகத் தெரியவில்லை. ஏனெனில் மேற்கு மகாராஷ்டிராவின் மலைப்பகுதிகளில் இத்தகைய 12 அமைப்புகளை அவர்கள் ஏற்கனவே கண்டறிந்துள்ளனர்.

இவை அனைத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க வணிகப் பாதைகள் சென்ற இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன.

எனவே இந்தியாவின் மேற்கு கடற்கரை வழியாக, குறிப்பாக ரோமானிய மற்றும் கிரேக்கப் பேரரசுகளுடன் நடந்த வர்த்தகம், இந்த லாபிரிந்த் என்ற கருத்து இந்தியாவிற்குப் பயணம் செய்ததற்குக் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

2000 ஆண்டுகளுக்கு முந்தைய வர்த்தகத்துடன் தொடர்பா?

ஜெஃப் சவார்ட்டின் கருத்துப்படி, இந்தியாவின் இந்த வடிவமைப்பிற்கான தனித்துவமான குறிப்புகள் காணப்படுகின்றன. இந்த கருத்தின் தோற்றம் எங்கு நடந்தது, அது உள்ளூர் ரீதியானதா அல்லது இந்த எண்ணம் பயணம் செய்து எங்கும் பரவியதா என்பதற்கான காரணங்களைத் தொல்லியல் சான்றுகள் மூலம் தேட வேண்டியுள்ளது.

"இந்தியாவிலுள்ள லாபிரிந்த்கள் குறித்து உலக அளவில் பெரும் ஆர்வம் உள்ளது. அவை இந்தியா முழுவதும் பரவலாகக் காணப்படுகின்றன. ஆனால் பெரிய கேள்வி என்னவென்றால், லாபிரிந்த்கள் இந்தியாவிற்கு எப்படி வந்தன என்பதுதான். இந்திய வரலாற்றுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே இதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன."

"உதாரணமாக, லாபிரிந்த் அமைப்பு என்பது மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'சக்ரவியூகம்' என்ற போர் வியூகமாகவும் இருந்தது. அதே மாதிரியான வரைபடம் பின்னாளில் இந்த லாபிரிந்த்களிலும் காணப்படுகிறது, இவை குறிப்பாக இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் கண்டறியப்படுகின்றன. ஆனால் மூலக் கேள்வி என்னவென்றால், இது எப்படி நடந்தது?" என்று ஜெஃப் கூறினார்.

"2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கம் மற்றும் ரோமானியப் பேரரசுகளிலிருந்து, குறிப்பாக இந்தியாவின் மேற்கு கடற்கரையில் பெருமளவிலான வர்த்தகம் நடந்தது என்பது நமக்குத் தெரியும்.

ரோமானியர்களுக்கு லாபிரிந்த்கள் பற்றி அனைத்தும் தெரிந்திருந்தது. அவர்களின் பாரம்பரியங்களில் அது ஒரு பிரபலமான கதையாக இருந்தது. அதுமட்டுமின்றி, அவர்களிடம் சிறிய நாணயங்களும் புழக்கத்தில் இருந்தன."

"உதாரணமாக, பேரரசர் அகஸ்டஸ் பல்வேறு வகையான புராணக் கதைகளைக் கொண்ட நாணய வரிசையை வெளியிட்டார். அவற்றில் ஒன்றில் லாபிரிந்த் இருந்தது. அந்த நாணயங்களின் பின்புறம், இந்தியாவில் காணப்படும் சக்ரவியூகங்களைப் போலவே அதே அமைப்பைக் கொண்ட சித்திரம் உள்ளது. அந்த நாணயங்களில் சில இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்று கற்பனை செய்வது பெரிய ஆச்சரியமான விஷயமாக இருக்காது," என்று ஜெஃப் விரிவாகக் கூறுகிறார்.

ரோமானியப் பேரரசுடன் இந்தியாவில், அதிலும் குறிப்பாக மகாராஷ்டிராவில் சாதவாகனர்கள் போன்ற அன்றைய ஆட்சியாளர்களுக்கு வர்த்தகத் தொடர்பு இருந்தது என்பது இதுவரை செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலம் தெளிவாகியுள்ளது.

அக்காலத்து வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தகப் பாதைகள் எவை என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

"தொல்லியல் சான்றுகளைப் பற்றி கேட்டால், இப்போது தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள 'தகர்', அதாவது இன்றைய 'தேர்' என்ற இடத்தில் ரோமானியப் பேரரசுடன் வர்த்தகம் நடந்ததற்கான ஆதாரங்கள் மிகத் தெளிவாகக் கிடைத்துள்ளன," என்று கர்கே கூறுகிறார். போராமணியின் லாபிரிந்த்திலிருந்து இன்றைய 'தேர்' சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கி.பி. முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் நடைமுறையில் இருந்த இந்த வணிகப் பாதைகளைப் பற்றி கர்கே கூறுகையில், "இன்றைய நாலாசோப்ராவில் சோப்ரா என்ற துறைமுகம் இருந்தது. அது 'சூப்பரக' என்ற பெயரில் பிரபலமாக இருந்தது. கொங்கண் கடற்கரையில் பல துறைமுகங்கள் இருந்தன. அங்கிருந்து நாணேகாட் ஒரு கடக்கும் புள்ளியாக இருந்தது."

"சோப்ரா-கல்யாணிலிருந்து வந்த பிறகு நாணேகாட் வழியாக நாம் மலைப்பகுதியிலுள்ள ஜூன்னருக்கு வருகிறோம். ஜூன்னரும் ரோமானிய வர்த்தகத்துடன் தொடர்புடைய ஒரு இடமாகும். அதேபோல் நாசிக் வழியாகப் பைத்தான் அல்லது பிரதிஷ்டான் நோக்கிச் செல்வார்கள்."

"மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து தென்னிந்தியாவில் நடந்த வர்த்தகம் அனைத்தும் நாலாசோப்ரா என்ற ஒரு துறைமுகம் வழியாக மட்டும் நடக்கவில்லை. அதில் ராஜாப்பூர் துறைமுகத்தின் குறிப்புகளும் வருகின்றன."

"பின்னர் ராஜாப்பூர் துறைமுகத்திலிருந்து அணுஸ்குரா காட் மற்றும் அங்கிருந்து கோலாப்பூர். கோலாப்பூரில் கிரேக்கக் கடல் தெய்வமான பொசைடன் (Poseidon) சிலையே கண்டறியப்பட்டுள்ளது. அங்கிருந்து மிராஜ், பண்டரிபுரம் மற்றும் தேர் என்று அந்தப் பயணம் அமைந்திருக்கலாம்," என்று சச்சின் பாட்டீல் கருத்துத் தெரிவித்தார்.

"இந்த வணிகர்கள் கடல் வழியாக வரும்போது, சகியாத்ரி மலையின் உயரமான பகுதிகளைக் கண்டு குழப்பமடைவார்கள். நாங்கள் முதலில் கண்டறிந்த 11 லாபிரிந்த்கள் சாங்லி மற்றும் கோலாப்பூர் மாவட்டங்களில் இத்தகைய பார்வைக்கு மறைவாக உள்ள இடங்களில்தான் அமைந்துள்ளன."

"நேராகப் பார்த்தால் எதுவும் சரியாகத் தெரியாது. ஒருபுறம் மிக உயரமான பகுதி இருக்கும் அல்லது மற்றொரு பக்கம் தாழ்வான நிலப்பகுதி இருக்கும். எனவே, குழப்பம் ஏற்படும் இடங்களில் லாபிரிந்த்கள் உள்ளன," அதாவது திசையைக் காட்டுவதற்காக வணிகப் பாதைகளில் இந்த வளையங்கள் இருந்திருக்கலாம் என்று பேராசிரியர் பி.டி. சாப்ளே கருதுகிறார்.

எனவே, போராமணியின் இந்த இந்தியாவின் மிகப்பெரிய லாபிரிந்த்தின் காலம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்கலாம் என்று சச்சின் பாட்டீல் மதிப்பிடுகிறார்.

"பாரம்பரிய வடிவத்தைக் கருத்தில் கொண்டால், அதை முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டோடு தொடர்புபடுத்த முடியும். அப்போது தக்காணத்தில் சாதவாகனர்களின் காலம் நிலவியது. ரோமானிய வணிகர்கள் அக்காலத்தில் வர்த்தகத்திற்காகப் பெருமளவில் இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்தனர்."

"எனவே, ரோமானிய கலாச்சாரம், கிரீட் தீவின் நாணயம் மற்றும் சாதவாகனர் காலத்து வணிகத் தொடர்புகள் ஆகியவற்றுடன்தான் இது அதிக நெருக்கத்தைக் கொண்டுள்ளது. பொதுவாகச் சொன்னால் இப்போதிலிருந்து 2000 ஆண்டுகள், அதாவது முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது," என்று பாட்டீல் கூறுகிறார்.

ஆனால் நிச்சயமாக, போராமணி மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள அனைத்து லாபிரிந்த்களும் பல மர்மமான கேள்விகளுக்கான விடைகளைத் தங்களுக்குள் வைத்துள்ளன.

இவற்றை உண்மையில் யார் உருவாக்கினார்கள்? உலகெங்கிலும் உள்ள அனைத்து கலாச்சாரங்களிலும் அவை எப்படி ஒரே மாதிரியாக உள்ளன? இந்த எண்ணம் எவ்வாறு பயணம் செய்தது? அதற்குப் பின்னால் உள்ள காரணம் ஒன்றா அல்லது வெவ்வேறா? போன்ற பல கேள்விகள் உள்ளன.

இந்தக் கேள்விகளுக்கான விடைகளுக்குத் தொல்லியல் ரீதியான மேலதிக ஆராய்ச்சிகளைத் தவிர வேறு வழியில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு