You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அஜித் பவாரின் மரணம் மகாராஷ்டிர அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
- எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
- பதவி, பிபிசி செய்தியாளர்
மகாராஷ்டிர மாநிலத் துணை முதல்வர் அஜித் பவார் புதன்கிழமை நடந்த ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார்.
66 வயதான அஜித் பவாரின் விமானம் மகாராஷ்டிராவின் பாராமதியில் தரையிறங்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. விமானத்தில் இருந்த ஐந்து பேரும் உயிரிழந்தனர்.
அஜித் பவார் ஜூலை 2023-ல் தனது சித்தப்பா சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் கிளர்ச்சி செய்தார்.
2023 ஜூலை 2-ஆம் தேதி அவர் தனது கட்சியின் மற்ற எட்டு மக்கள் பிரதிநிதிகளுடன் மகாராஷ்டிர அரசில் இணைந்தார். அப்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசாங்கத்தில் அஜித் பவார் துணை முதல்வராக்கப்பட்டார்.
ஜூலை 1-ஆம் தேதி வரை அவர் மகாராஷ்டிர சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். பவார் இறுதியாக பாஜக முகாமிற்குச் சென்றடைந்தார். அஜித் பவார் இதற்கான முயற்சியை 2019 முதலே செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
சரத் பவாருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து ஏக்நாத் ஷிண்டே அரசாங்கத்தில் இணைந்த தனது முடிவு குறித்து அஜித் பவார் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில் இந்தியா முன்னேறி வருகிறது. எனவே பாஜகவுடன் சில கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக அரசாங்கத்துடன் கைகோர்க்க என்சிபி முடிவு செய்துள்ளது" என்றார்.
அஜித் பவாரின் இந்த நிலைப்பாடு சரத் பவாருக்கு அரசியல் ரீதியான பின்னடைவு மட்டுமல்லாமல், உணர்ச்சிரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியது.
அப்போது சரத் பவார் இந்த கட்சித் தாவலுக்குப் பிரதமர் மோதியே காரணம் என்று குற்றம் சாட்டினார், அவரே இதன் முக்கிய சூத்திரதாரி என்றும் கூறினார்.
"நான் மாநில மக்களிடம் செல்வேன், பிரதமர் மோதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இதையெல்லாம் செய்கிறார் என்று அவர்களிடம் சொல்வேன்" என்று அவர் கூறியிருந்தார்.
2023 ஜூலை 3-ஆம் தேதி முதல் சரத் பவார் மகாராஷ்டிராவில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். ஜூலை 3-ஆம் தேதி சரத் பவார் சதாரா மாவட்டத்திலுள்ள காராட் நகரைச் சென்றடைந்தார், இது அவரது வழிகாட்டியான யஷ்வந்த்ராவ் சவானின் சொந்த ஊராகும்.
சவானின் சமாதியில் அஞ்சலி செலுத்திய பிறகு, கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவேன் என்று அவர் கூறினார்.
2024 தேர்தலில் என்ன நடந்தது?
'கட்சியின் பெயரும் சின்னமும் அஜித் பவார் தரப்பிற்கு கிடைக்குமா?' என்று கேட்கப்பட்டபோது, சரத் பவார் கூறுகையில், "நான் பல தேர்தல்களை வெவ்வேறு சின்னங்களிலும் நான்கு வெவ்வேறு கட்சிகளின் பெயர்களிலும் சந்தித்துள்ளேன். அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. நான் நீதிமன்றம் செல்லமாட்டேன். மக்களிடம் செல்வேன். மகாராஷ்டிர மக்கள் மீது, குறிப்பாக இளைஞர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது" என்றார்.
நவம்பர் 2024-ல் மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது, அதில் அஜித் பவார் தனது சித்தப்பாவையே மிஞ்சினார். இருப்பினும், ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த மக்களவைத் தேர்தலில் அஜித் பவாரின் என்சிபி-க்கு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி கிடைத்தது.
அப்போது மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக தலைமையிலான 'மகாயுதி' கூட்டணியின் பலவீனமானவராக அஜித் பவார் கருதப்பட்டார்.
ஆனால் சட்டப்பேரவைத் தேர்தலில் அஜித் பவார் மிகவும் வலிமையானவராக உருவெடுத்தார். அவர் 41 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கைப்பற்றினார் மற்றும் தனது சித்தப்பாவின் குழுவான என்சிபி (எஸ்பி)-ஐ கிட்டத்தட்ட அழித்துவிட்டார், அக்குழு 10 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.
அஜித் பவார் டிசம்பர் 5, 2024 அன்று புது சாதனையாக ஆறாவது முறையாக மகாராஷ்டிராவின் துணை முதல்வராகப் பதவியேற்றார்.
இருப்பினும், அஜித் பவார் நீண்ட காலமாகத் தன்னை ஓரங்கட்டப்பட்டவராகவே உணர்ந்து வந்தார். குறிப்பாக முதல்வர் ஆக வேண்டும் என்ற அவரது விருப்பம் தொடர்பாக இவ்வாறு உணர்ந்தார்.
2004 முதலே அஜித் பவார், தனது சித்தப்பா இந்தப் பதவிக்குத் தன்னை அநியாயமாகப் புறக்கணித்ததாக நம்பி வந்ததாகக் கூறப்படுகிறது.
மீண்டும் மீண்டும் ஓரங்கட்டப்பட்டதால் ஏற்பட்ட விரக்தி இறுதியில் கிளர்ச்சியாக மாறியது, அப்போது அவர் பாஜகவுடன் கைகோர்த்து கடந்த ஆண்டு மீண்டும் துணை முதல்வர் பதவியைப் பெற்றார்.
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகத்தில் இதழியல் பேராசிரியராக இருந்த ஜெயதேவ் டோலே கூறுகையில், அஜித் பவாரின் மனதில் தான் முதலமைச்சர் ஆகவில்லை என்ற ஏக்கம் எப்போதும் இருந்து வந்தது என்கிறார்.
ஜெயதேவ் டோலே கூறுகையில், "2004-ல் அஜித் பவார் முதலமைச்சர் ஆவதற்கான வாய்ப்பு வந்தது, ஆனால் அது நடக்கவில்லை. அஜித் பவாருக்கும் சரத் பவாருக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடு என்னவென்றால், சரத் பவார் மிகவும் படித்த தலைவர், ஆனால் அஜித் பவார் ஒரு நிர்வாகியாக சிறந்தவர்" என்றார்.
அஜித் பவாரின் ஒரு ஏக்கம்
அஜித் மற்றும் அவருடன் இணைந்த என்சிபி-யின் மற்ற மூன்று தலைவர்களான பிரஃபுல் படேல், சகன் புஜ்பால் மற்றும் ஹசன் முஷ்ரிப் ஆகியோர் அமலாக்கத்துறை (ED) விசாரணையின் கீழ் இருந்தபோது பாஜக முகாமிற்கு வந்தனர்.
ஜெயதேவ் டோலே கூறுகையில், சரத் பவாரின் நிழலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கழித்த பிறகு, தனது சித்தப்பா தனது பாதையில் தடையாக இருப்பதாக அவர் உணர்ந்தார் என்கிறார்.
என்சிபி கட்சி 1999-ல் உருவாக்கப்பட்டது. அது தொடங்கப்பட்ட 25 ஆண்டுகளில், 2004 சட்டப்பேரவைத் தேர்தலில்தான் என்சிபி தனது மிகச் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியது. அப்போது அது 71 இடங்களை வென்றது, காங்கிரஸ் 69 இடங்களை மட்டும் வென்றது.
அஜித் பவார் முதலமைச்சராவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. ஆனால் ஒரு வார காலக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, காங்கிரஸின் விலாஸ்ராவ் தேஷ்முக்கிற்கு முதலமைச்சர் பதவி கிடைத்தது மற்றும் என்சிபியின் ஆர்.ஆர். பாட்டீல் துணை முதல்வராகப் பதவியேற்றார்.
ஜெயதேவ் டோலே கூறுகையில், "அப்போதும் அஜித்திற்கு பெரும்பாலான என்சிபி எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்தது. அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் மத்திய அமைச்சராக இருந்த பவார், தன்னிடம் இருந்து முதலமைச்சர் பதவியைப் பறித்துக் கொண்டதாக அவர் நம்பினார். ஒருவேளை பவார் மாநில அரசியலில் தனது கட்டுப்பாட்டை இழக்க விரும்பவில்லை போலும்."
"குடும்ப உறவுகளும் பவார் மற்றும் அஜித்தின் உறவை மேலும் கசப்பாக்கின. தனது சகோதரரின் மகனை அரசியல் வாரிசாக முன்னிறுத்திய பிறகு, சரத் பவார் 2005-ல் தனது மகளை அரசியலில் இறக்கினார். மாநிலங்களவை உறுப்பினராக சுப்ரியா சுலே ஆரம்பத்தில் மாநில அரசியலில் இருந்து விலகியிருந்தார், ஆனால் பின்னர் என்சிபியின் மகாராஷ்டிர விவகாரங்களில் அவரது தலையீட்டை அஜித் கவனிக்காமலிருப்பது கடினமாகிவிட்டது."
டோலே கூறுகையில், "2009 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு என்சிபி இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டபோது, அஜித் துணை முதல்வராகப் பெரும் முயற்சி செய்தார், ஆனால் பவாரும் பிரஃபுல் படேலும் சகன் புஜ்பாலை முன்னிறுத்தினர். கோபமடைந்த அஜித் பொதுவாழ்வில் இருந்து விலகினார், பின்னர் இதே காலத்தில்தான் பாஜக தன்னை முதன்முதலில் தொடர்பு கொண்டு, தனது அப்போதைய கூட்டாளியான சிவசேனாவுடன் இணைந்து பவாரை விட்டு விலகி வருமாறு கூறியதாக அவர் ஒப்புக்கொண்டார்."
2010-ல் ஆதர்ஷ் வீட்டுவசதி சங்க ஊழலில் பெயர் வந்த பிறகு அசோக் சவானை நீக்கிவிட்டு பிருத்விராஜ் சவானை காங்கிரஸ் முதலமைச்சராக்கிய போது, அஜித் அவரது துணை முதல்வரானார்.
இருப்பினும் அஜித் அதிருப்தியிலேயே இருந்தார். மகாராஷ்டிராவின் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் (1999 முதல் 2009 வரை) நிதி ஆதாயத்திற்காகத் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாக பாஜக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து 2012-ல் அவர் ராஜினாமா செய்தார்.
அஜித் பவார் மரணத்தின் தாக்கம்
பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் மகாராஷ்டிர ஜில்லா பரிஷத் பஞ்சாயத்து சமிதி தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதற்கான பிரச்சாரத்திற்காகத்தான் அஜித் பவார் பாராமதிக்குச் சென்று கொண்டிருந்தார்.
அங்கு அவர் பொதுக்கூட்டத்திலும் உரையாற்ற இருந்தார். என்சிபி-யின் முழுப் பொறுப்பும் அஜித் பவாரின் மேல்தான் இருந்தது. சரத் பவார் அரசியல் ரீதியாக மிகவும் பலவீனமாக இருக்கும் நேரத்தில் அஜித் பவாரின் மரணம் நிகழ்ந்துள்ளது.
ஜெயதேவ் டோலே கூறுகையில், "ஜில்லா பரிஷத் தேர்தலில் அஜித் பவார் தனது சித்தப்பாவுடன் இணைந்து போட்டியிட இருந்தார். இப்போது முழு அனுதாபமும் சரத் பவார் பக்கம் செல்லும் எனத் தோன்றுகிறது. பாஜகவின் எழுச்சிக்குப் பிறகு மகாராஷ்டிராவில் மராத்தா தலைவர்களின் அந்தஸ்து குறைந்துள்ளது, இதை மாநிலத்திலுள்ள அனைவரும் உணர்ந்துள்ளனர்."
"விவசாயம், கல்வி மற்றும் வங்கித் துறைகளில் மராத்தா சமூகத்தின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. சரத் பவார் மீது இப்போது மராத்தா சமூகத்தின் அனுதாபம் வரும். கிராமப்புற மகாராஷ்டிராவின் பொருளாதார அமைப்பில் இன்னும் மராத்தா சமூகத்தின் பிடி உள்ளது, பாஜகவின் வருகையால் தங்கள் பிடி தளர்ந்து வருவதாக அவர்கள் இப்போது உணர்கிறார்கள்."
தேவேந்திர பட்னாவிஸின் அரசாங்கத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் அஜித் பவார் தலைமையிலான என்சிபியும் உள்ளன. 288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பாஜக 2024 தேர்தலில் 132 இடங்களை வென்றது.
அதாவது பெரும்பான்மைக்கு 12 இடங்கள் குறைவாக உள்ளன. இந்த அரசுடன் சிவசேனாவின் 57 எம்.எல்.ஏ-க்களும், என்சிபி-யின் 41 எம்.எல்.ஏ-க்களும் உள்ளனர். அஜித் பவாரின் மரணத்திற்குப் பிறகு என்சிபி இந்த அரசாங்கத்திலிருந்து விலகினாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது.
ஆனால் ஜெயதேவ் டோலே கூறுகையில், அரசு ஆட்சியில் நீடித்தாலும், பாதிப்பு வேறு விதமாக இருக்கும் என்கிறார். அவர் கூறுகையில், "அஜித் பவாரின் மரணத்திற்குப் பிறகு மராத்தா சமூகம் தங்களுக்கு இப்போது யார் இருக்கிறார்கள் என்று சிந்திக்கும். சரத் பவார் தனது அரசியல் வாழ்வின் அந்திமக் காலத்தில் இருக்கிறார். ஒட்டுமொத்த மராத்தா பிரிவினரும் இப்போது தாங்கள் எந்தப் பக்கம் திரும்ப வேண்டும் என்று சிந்திப்பார்கள்."
'தி இந்து' நாளிதழின் மகாராஷ்டிரா பணியகத் தலைவர் வினயா தேஷ்பாண்டே கூறுகையில், மகாராஷ்டிர அரசியலில் இந்துத்துவா செல்வாக்கு அதிகரித்து வரும் சூழலிலும் அஜித் பவார் தனது வலிமையைத் தக்கவைத்திருந்தார், இது ஒரு பெரிய விஷயம் என்கிறார்.
வினயா தேஷ்பாண்டே கூறுகையில், "பாஜக மற்றும் சிவசேனா இரண்டுமே இந்துத்துவா அரசியல் செய்கின்றன. சிவசேனா ஒரு மாநிலக் கட்சியாக இருந்தாலும் சித்தாந்த ரீதியாகத் தேசியக் கட்சியாக உள்ளது. இத்தகைய சூழலில் அஜித் பவார் மகாராஷ்டிர மாநில அரசியலின் பெரிய தலைவராக இருந்தார். என்சிபி கட்சியின் பிடி சரத் பவாரிடம் இல்லை, தன்னிடம் தான் உள்ளது என்பதை அவர் கடந்த தேர்தலில் நிரூபித்திருந்தார்" என்றார்.
வினயா தேஷ்பாண்டே மேலும் கூறுகையில், "பாஜக தலைமையிலான அரசாங்கம் நிலையாக இருக்கும் ஆனால் மராத்தா அரசியல் எழுச்சி பெறக்கூடும். என்சிபி மீண்டும் சரத் பவாரின் தலைமையில் ஒன்றுபடலாம், இது பாஜகவின் பலத்திற்குச் சாதகமாக இருக்காது" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு