'இது தெய்வ குற்றம்' - கள்ளழகர் கோவில் வழக்கில் நீதிமன்ற உத்தரவு பற்றி சேகர்பாபு கூறுவது என்ன?

"கடந்த 2023ஆம் ஆண்டில் 107 கோடியாக இருந்த கோவிலின் உபரி நிதி, 2024ஆம் ஆண்டில் 62 கோடியாக சரிந்துள்ளது. சட்ட அதிகாரமின்றி (authority of law) இந்த நிதி செலவிடப்பட்டுள்ளது. இது தெய்வ குற்றம். வேலியே பயிரை மேய்வதற்கு இது தெளிவான உதாரணம்."

மதுரை கள்ளழகர் கோவில் வளாகத்தில் புதிய கட்டுமானங்களை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில் நீதிபதிகள் கூறிய வார்த்தைகள் இவை.

கோவிலில் வணிக கட்டடங்கள் கட்டுவதற்கான அரசாணையை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தீர்ப்பின் விவரம் என்ன? பிபிசி தமிழிடம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியது என்ன?

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது. இதே தாலுகாவில் உள்ள வெள்ளரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏ.வி.பி.பிரபு என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், கோவில் வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிகக் கட்டுமானங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் இது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இதே கோரிக்கையை முன்வைத்து நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது, "மலை சார்ந்து பாரம்பரியமான புனிதத் தலமாக அழகர் கோவில் அமைந்துள்ளது. திருப்பதியில் உள்ள பெருமாள் போல தென் மாவட்டத்திற்கான ஏழுமலையானாக கள்ளழகரைப் பார்க்கிறோம்" எனக் குறிப்பிட்டார், வழக்கு தொடர்ந்த ஏ.வி.பி.பிரபு.

கள்ளழகர் கோவில் ஆடித் தேரோட்டத்தின்போது மேலூரில் வடக்குத் தெரு, மேலத் தெரு, தெற்குத் தெரு, பாளையப்பட்டு என நான்கு தெருக்களைச் சேர்ந்தவர்கள் குழுவாக இணைந்து தேரை இழுக்கின்றனர்.

இவ்வாறு தேர் வடம்பிடித்து இழுக்கும் உரிமையைப் பெற்றுள்ளவர்களை 'நாட்டார்' என அழைக்கின்றனர். இந்த நாட்டாரில் ஒருவராக வழக்குத் தொடர்ந்த ஏ.வி.பி.பிரபு இருக்கிறார்.

"ஆடித் திருவிழாவின்போது வண்டி, மாடுகளைக் கட்டிக் கொண்டு கள்ளழகரை தரிசிப்பதற்கு மக்கள் வருவார்கள். ஆனால், கடந்த ஆண்டு எங்கள் வாகனங்களை உள்ளே அனுமதிக்கவில்லை" என்கிறார் அவர்.

'தீர்த்தம் ஆட முடியாத நிலை ஏற்படும்'

கட்டுமானப் பணிகள் நடப்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறும் ஏ.வி.பி.பிரபு, "கோவில் அமைந்துள்ள மலையின் பசுமை மாறாமல் இருக்க வேண்டும். ஆனால், அதைக் கெடுக்கும் விதத்தில் கோவில் நிதியைத் தேவையற்ற வழியில் பயன்படுத்துவதை அறிந்தோம்" என்றார்.

ஆடித் தேரோட்டத்தின்போது 2000க்கும் மேற்பட்ட வாகனங்களில் வரும் மக்கள் அங்குள்ள பரந்த காலியிடத்தில் நிறுத்துவதை வழக்கமாக வைத்துள்ளதாகக் கூறும் அவர், "அந்த இடத்தில்தான் கட்டுமானங்களை எழுப்பி வருகின்றனர்" என்றார்.

கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதியன்று கள்ளழகர் கோவிலின் துணை ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில், கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்கு யாத்ரி நிவாஸ், அர்ச்சகர்கள் குடியிருப்பு, விருந்தினர் மாளிகை, உணவகங்கள், கடைகள், கழிப்பறைகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆகியவை கட்டப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பணிகளை ஈரோட்டைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு வழங்க உள்ளதாகவும் உத்தரவில் கூறியுள்ளார்.

இதைக் குறிப்பிட்டுப் பேசிய ஏ.வி.பி.பிரபு, "கோவில் வளாகத்தில் தங்கும் விடுதி என்ற பெயரில் 8 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடத்தை அறநிலையத் துறை திறந்து வைத்துவிட்டது" என்றார்.

"பக்தர்கள் தீர்த்தமாடும் நீரை மறுசுழற்சி செய்கின்றனர். அது புனித தீர்த்தமாகப் பார்க்கப்படுகிறது. இவ்வாறு மறுசுழற்சி செய்வதை ஏற்க முடியாது" என்றும் அவர் தெரிவித்தார்.

"இதுபோன்று கட்டடங்களைக் கட்டிவிட்டால் தீர்த்தமாடக்கூட யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிடும், மலையின் புனிதத் தன்மை கெட்டுவிடும் என்பதால் வழக்கு தொடர்ந்தேன்."

இதுதொடர்பாக கள்ளழகர் கோவிலின் துணை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அவர் கொடுத்துள்ளார். "என்னுடைய புகாரை ஒரு பொருட்டாகவே அதிகாரிகள் எடுத்துக் கொள்ளவில்லை" என்கிறார் ஏ.வி.பி.பிரபு.

'திசை திருப்பப்பட்ட நிதி'

கள்ளழகர் கோவில் தொடர்பான இரண்டு மனுக்களையும் இணைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்து வந்தது.

வழக்கின் வாதத்தில் மனுதாரர் ஏ.வி.பி.பிரபு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ஆர்.வெங்கடேஷ், கோவில் நிதியில் இருந்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு 2024ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை 135ஐ சுட்டிக்காட்டி வாதிட்டார்.

மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முதலில் 92 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பிறகு 40 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டதாக வாதிட்ட எம்.ஆர்.வெங்டேஷ், "மேம்பாடு என்ற பெயரில் கணிசமான அளவு கோவில் நிதி தேவையற்ற நோக்கங்களுக்காக திசை திருப்பி விடப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

"அரசாணையின் அடிப்படை தவறானது" எனக் குற்றம் சாட்டிய அவர், "கோவிலின் பராமரிப்பு செலவினங்கள் அனைத்தும் நடப்பு வரவுகளில் இருந்து செயல்படுத்தப்பட வேண்டுமென அறநிலையத் துறை சட்டம் கூறுகிறது. உபரி நிதியில் இருந்து அல்ல" எனத் தெரிவித்தார்.

இதற்கு மாறாக, கள்ளழகர் கோவில் நிதியை சட்டத்திற்குப் புறம்பாகப் பயன்படுத்தியதால் அவை குறைந்துவிட்டதாக அவர் வாதிட்டார். "நிதிநிலை அறிக்கைகளைக் கவனித்தால் எந்த அளவுக்கு பொறுப்பற்ற முறையில் கோவில் நிதி செலவிடப்படுகின்றன என்பது தெரிகிறது" எனவும் அவர் வாதிட்டார்.

'இது தெய்வக் குற்றம்'

வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு, கடந்த ஜனவரி 23ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கியது.

"கள்ளழகர் கோவிலில் அறங்காவலர் குழு இல்லாமல் உபரி நிதியைப் பயன்படுத்தி வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. கோவில் நிதியை தனிப்பட்ட சொத்தாகக் கருத முடியாது" எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில், கோவில் நிதியில் இருந்து வளர்ச்சிப் பணிகளுக்காக 40 கோடி ரூபாயை ஒதுக்கி ஒப்புதல் வழங்கிய அரசாணையை நீதிபதிகள் ரத்து செய்துள்ளனர்.

அதோடு, "2022ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி கள்ளழகர் கோவிலின் உபரி நிதி 96 கோடியே 60 லட்சம் ரூபாயாக இருந்துள்ளது. இது 2023ஆம் ஆண்டில் 107 கோடியே 60 லட்சமாக உயர்ந்துள்ளது. ஆனால், 2024 மார்ச் மாதத்தில் இந்தத் தொகை சுமார் 62 கோடியே 37 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

"இது மிகவும் கவலைக்குரிய விஷயம்" எனத் தீர்ப்பில் கூறியுள்ள நீதிபதிகள், "சட்ட அதிகாரமின்றி இவ்வாறு செலவிடப்பட்டுள்ளது. இது தெய்வக் குற்றம். வேலியே பயிரை மேய்வதற்கு இது தெளிவான உதாரணம்" எனக் கூறியுள்ளனர்.

அது தவிர, கோவில் நிதி எவ்வாறு தணிக்கை செய்யப்படுகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், "தணிக்கை மேற்கொள்ளப்படும் விதம் குறித்து இரண்டு வாரங்களில் இந்து சமய அறநிலையத் துறை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்" என்றும் உத்தரவிட்டனர்.

'அரசே தொகையைக் கொடுக்க வேண்டும்'

கோவில் வளாகத்தில் அக்னி புஷ்கரணி பகுதிக்கு அருகில் பணியாளர் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதைத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், "இதுபோன்ற கட்டுமானத்தால் அக்னி புஷ்கரணி பாதிக்கப்படும் என்பதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை" எனத் தெரிவித்தனர்.

"அக்னி புஷ்கரணிக்கு அருகில் குடியிருப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை அமைக்கக் கூடாது. இந்தத் திட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதற்காகச் செலவிடப்பட்ட தொகையை கோவிலுக்கு தமிழ்நாடு அரசு திருப்பி வழங்க வேண்டும்" என்று தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

"கோவில்களில் நடக்கும் கட்டுமானப் பணிகளுக்கு எந்தவித அனுமதிகளும் பெறவில்லை" எனக் கூறிய நீதிபதிகள், "உரிய ஒப்புதல் பெறாமல் கட்டுமானங்களை மேற்கொள்ள மாட்டோம்" என கோவில் நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகவும் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

"கோவிலில் முன்மொழியப்பட்ட சில கட்டடங்கள், இந்திய தொல்லியல் கழகத்தால் பாதுகாக்கப்படும் கட்டடங்களுக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் இதை சட்டப்படி அனுமதிக்க முடியாது" என மனுதாரரின் வழக்கறிஞர் எம்.ஆர்.வெங்கடேஷ் வாதிட்டார்.

"கட்டுமானங்களுக்கு இந்திய தொல்லியல் கழகத்தின் அனுமதி பெறப்படும்" என தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தெரிவித்தார். கோவில் வளாகத்தில் நாயக்கர் மஹால் போன்ற தொல்லியல் நினைவுச் சின்னங்களுக்கு அருகில் கட்டுமானம் நடைபெற்றுள்ளதை தலைமை வழக்கறிஞர் ஒப்புக் கொண்டுள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

"இந்தக் கட்டுமானங்கள் உடனே அகற்றப்படும்" என தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளதாக தீர்ப்பில் பதிவு செய்துள்ள நீதிபதிகள், "உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளனர்.

'அறங்காவலர்களே முடிவு செய்ய வேண்டும்'

நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாகக் கூறுகிறார், மனுதாரரின் வழக்கறிஞர் எம்.ஆர்.வெங்கடேஷ். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அறங்காவலர்கள் இல்லாமல் செயல் அலுவலர்கள் மூலமாகவே நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர். இதை நீதிமன்றம் ஏற்கவில்லை" என்றார்.

இதே கருத்தை பிபிசி தமிழிடம் தெரிவித்த ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ், "கோவில் வளர்ச்சி என்ற பெயரில் அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. சட்ட விதிகளுக்கு உட்பட்டு அறங்காவலர்கள் முடிவு செய்ய வேண்டும் எனத் தீர்ப்பு கூறுகிறது" எனக் குறிப்பிட்டார்.

அவரது கூற்றுப்படி, "கோவிலின் ஆண்டு நிதிநிலை விவரம், உபரிநிதியை எவ்வாறு செலவு செய்வது, பக்தர்களின் பாதுகாப்புக்கும் ஆரோக்கியத்துக்கும் செலவு செய்யக்கூடிய பணம் என ஒவ்வொன்றுக்கும் விதிகளின்படி செலவு செய்வது குறித்து அலசி ஆராய்ந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது."

கள்ளழகர் கோவிலுக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் தனித்தனியாகச் சென்று பார்வையிட்டதாகக் கூறும் டி.ஆர்.ரமேஷ், "அங்குள்ள கட்டுமானங்களை அவர்கள் கவனித்துள்ளனர். இவற்றில் பல கட்டுமானங்கள் அவசியமற்றவை எனக் கூறியுள்ளனர்" என்கிறார்.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் வணிகக் கட்டடங்களை கட்டுவதற்கு எதிராக மூன்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

'மூன்றுக்கும் மேற்பட்ட தீர்ப்புகள்'

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வணிக வளாகம் கட்டுவதற்குக் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு நந்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் கட்டுமானத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது. இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

சென்னை ராசப்பா தெருவில் கந்தகோட்டம் ஸ்ரீமுத்துகுமாரசாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்குச் சொந்தமாக நிலங்கள் உள்ளன. இவற்றில் வணிக வளாகம் மற்றும் குடியிருப்புகளைக் கட்டும் முயற்சியில் இந்து சமய அறநிலையத் துறை ஈடுபட்டது.

இதைக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, அருள் முருகன் அமர்வு, 'கோவில் நிதியைப் பயன்படுத்தி வணிக வளாகம் கட்டக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டும் கட்டப்பட்டு வருகின்றன' எனக் கூறினர்.

அப்போது அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "80 சதவிகித பணிகள் முடிந்துவிட்டன. ஏழு கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்தக் கட்டடங்கள் மூலம் மாதம் 7 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்" என வாதிட்டார்.

இந்த வழக்கில், "கட்டடங்களை பக்தர்களின் வசதிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வணிகரீதியில் பயன்படுத்தக் கூடாது" என உத்தரவிட்ட நீதிபதிகள், "கோவில் நிதியில் வணிக வளாகங்களைக் கட்டக்கூடாது மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு அறநிலையத் துறை ஆணையர் சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும்" என உத்தரவிட்டனர்.

இதுகுறித்துப் பேசியபோது, "நீதிமன்றம் உத்தரவிட்டும் கோவில் நிதியில் கட்டடம் கட்டும் பணிகளை அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாக" கூறுகிறார், ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ்.

சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு கோவிலில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதாகக் கூறிய டி.ஆர்.ரமேஷ், "செயல் அலுவலர்கள் மூலமாக இதைச் செயல்படுத்துகின்றனர். இனி இதுபோன்று மேற்கொள்ள முடியாது என்பதை கள்ளழகர் வழக்கின் தீர்ப்பு உணர்த்துகிறது" என்றார்.

'சட்டரீதியாக விவாதிக்க வேண்டும்' - அமைச்சர் சேகர்பாபு

கள்ளழகர் கோவில் வழக்கின் தீர்ப்பு தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் பிபிசி தமிழ் பேசியது.

"இரண்டு விதமாக தீர்ப்பு வெளிவந்துள்ளது. சில கட்டுமானங்களை மேற்கொள்ளுமாறு கூறுகின்றனர். அறங்காவலர் குழுவை அழைத்து விவாதிக்காமல் செயல்பட்டதாகவும் கூறுகின்றனர். தீர்ப்பில் உள்ள விவரங்களை சட்டரீதியாக விவாதிக்க வேண்டியுள்ளது" எனக் கூறினார்.

'நிதியை செலவிட்டது தெய்வ குற்றம்' எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது குறித்துக் கேட்டபோது, " தீர்ப்பை முழுமையாகப் படித்த பிறகே அதுதொடர்பாக பதில் கூற முடியும்" என்று மட்டும் அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு