'குடும்பத்தில் பிரச்னை.. அரசு வேலைக்கு ஆபத்து' - ஜல்லிக்கட்டு வழக்கில் 8 ஆண்டுக்கு பிறகு விடுவிக்கப்பட்ட 56 பேர்

"எனக்கு சொந்த ஊர் சேலம். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். ஆனால், மதுரை நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான வழக்கை எதிர்கொண்டு வந்தேன். இதனால் குடும்ப ரீதியாக பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்தது"

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி 2017-ஆம் ஆண்டு அலங்காநல்லூரில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற யுகஸ்ரீ, பிபிசி தமிழிடம் இவ்வாறு கூறினார்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக, 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் அ.தி.மு.க அரசு அறிவித்தது.

"ஆனால், போராட்டத்தின் மையமாக அலங்காநல்லூர் இருந்ததால் 64 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படவில்லை" என்கிறார், யுகஸ்ரீ.

இவருடன் சேர்த்து வழக்கில் 56 பேரை வியாழக்கிழமையன்று (ஜனவரி 29) மதுரை மாவட்ட நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்தது.

ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கிய பின்னணி என்ன? கைதானவர்கள் கூறுவது என்ன?

மெரினா வரை போராட்டம் நீண்டது எப்படி?

2014-ல் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 2017-ஆம் ஆண்டு அலங்காநல்லூருக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் வந்திருந்தனர்.

அலங்காநல்லூருக்கு சென்னை, கோவை, வேலூர், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இளைஞர்கள் குவிந்தனர். அங்கு குவிந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட துவங்கினர்.

இதுவே மாநிலம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அலையாக மாறியதாக கம்பூர் செல்வராஜ் குறிப்பிட்டார்.

முதல்நாள் (ஜனவரி 16) இரவு அலங்காநல்லூரில் போராட்டத்தைத் தொடர்ந்தனர். மறுநாள் காலை இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சென்றுள்ளனர்.

''அப்போது வாடிவாசலில் நின்றிருந்த சுமார் 200 பேரைக் காவல்துறை கைது செய்து, வாடிப்பட்டியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்தது. '' என்கிறார் கம்பூர் செல்வராஜ்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் பெற்றோரில் சிலரை வரவழைத்து அவர்களை எச்சரித்து அனுப்பும் சம்பவங்களும் நடந்ததாகக் கூறுகிறார், திருச்சியை சேர்ந்த உமர் முக்தார்.

"அங்கும் உணவு அருந்தாமல் போராட்டம் நடத்தினோம். மீண்டும் அலங்காநல்லூருக்கு போகக் கூடாது என காவல்துறை நெருக்கடி கொடுத்தது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

'வழக்குகள் வாபஸ்... ஆனால்?'

2017 ஜனவரி 18-ஆம் தேதியன்று திருமண மண்டபத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞர்கள், மீண்டும் அலங்காநல்லூர் வாடிவாசலுக்கு வந்தனர். ஜனவரி 23 ஆம் தேதி வரை போராட்டம் நீடித்தது.

அப்போது தங்களின் வாகனங்களை காவல்துறையினர் அடித்து நொறுக்கியதாகக் கூறுகிறார், திருச்சியை சேர்ந்த உமர் முக்தார். போராட்டத்தைத் தூண்டியதாக அலங்காநல்லூர் காவல்நிலையத்தில் இவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

போராட்டம் தொடர்பாக அலங்காநல்லூர் காவல்நிலையத்தில் 64 பேர் மீது 13 பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் உள்பட மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

'இந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்' என அரசியல் கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்து வந்தனர். அதன்படி வழக்குகளை தள்ளுபடி செய்வதாக, முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

"ஆனால், எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றினர். ஜல்லிக்கட்டின் மையமாக மதுரை இருந்ததால் அடுத்தகட்ட போராட்டம் நடந்துவிடக் கூடாது என்பதற்காக வழக்குகளை ரத்து செய்யவில்லை" எனக் கூறுகிறார், கம்பூர் செல்வராஜ்.

'அரசுப் பணியில் சேர முடியவில்லை'

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த எட்டு வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது.

"போராட்டத்தில் பங்கெடுத்த இளைஞர்களில் கோவையை சேர்ந்த மகாதேவன் உள்பட சிலரால் அரசுப் பணியில் சேர முடியவில்லை" என்கிறார், திருச்சியை சேர்ந்த உமர் முக்தார்.

அவரது கூற்றுப்படி, "குற்ற வழக்கு நிலுவையில் இருந்ததால் சிலரால் வெளிநாடுகளுக்கு செல்ல முடியவில்லை. ஒவ்வொரு முறை நீதிமன்றத்துக்கு வந்து செல்லும் வகையில் விடுப்பு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சிலருக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டது" எனக் கூறுகிறார்.

வழக்கில் 64 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராவதை ஒருங்கிணைப்பது சிரமமான பணியாக இருந்ததாகக் கூறும் கம்பூர் செல்வராஜ், "முதல் ஆறு ஆண்டுகளாக அடுத்தகட்டத்தை நோக்கி வழக்கு நகரவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக வழக்கு வேகம் எடுத்தது" என்கிறார்.

இதற்கென குழு ஒன்றை நியமித்து அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வேலைகளை மேற்கொண்டுள்ளனர்.

'வழக்கால் பெரிதும் பாதிக்கப்பட்டோம்'

வழக்குப்பதிவு செய்யப்பட்ட 64 பேரில் எட்டு பேர் பெண்கள். இவர்களில் சேலத்தைச் சேர்ந்த யுகஸ்ரீயும் ஒருவர். இந்த வழக்கால் தான் பெரிதும் பாதிக்கப்பட்டதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தற்போது சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் இவர் வேலை பார்த்து வருகிறார். "நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சென்னை, மதுரை என அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பொருளாதாரரீதியாகவும் இழப்பு ஏற்பட்டது" என்கிறார் அவர்.

ஒவ்வொரு முறை நீதிமன்றம் வருவது சிரமத்தைக் கொடுத்ததாகக் கூறும் யுகஸ்ரீ, "குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டன. வேலையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும், வழக்கில் இருந்தும் விடுதலையும் ஆக வேண்டும் என்பது முக்கியமானதாக இருந்தது" என்கிறார் அவர்.

''இந்த வழக்கில் இருந்து 56 பேரை மட்டும் விடுவித்து, ஜனவரி 29 அன்று மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கில் ஆஜராகாத ஒருவருக்கு தீர்ப்பு வழங்கப்படவில்லை. வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மூன்று பேர் இறந்துவிட்டனர். இதுதவிர, கூட்டத்துடன் சேர்ந்து வழக்கை சந்திக்காத நான்கு பேரின் வழக்கு மட்டும் தனியாக நடத்தப்பட உள்ளது.'' என போராட்ட குழுவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார்.

இதனைக் குறிப்பிட்டுப் பேசும் யுகஸ்ரீ, "நீதிமன்றத் தீர்ப்பு மூலம் எங்களின் சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், இப்படியொரு நிலைக்கு எங்களை அரசாங்கமும் சூழல்களும் ஏன் கொண்டு வந்து நிறுத்தியது என்ற கேள்வியே எழுகிறது" எனக் குறிப்பிட்டார்.

'தங்கள் மீதான வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அரசியல் கட்சிகள் பெரிதாக குரல் கொடுக்கவில்லை' என்ற குரலையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காண முடிகிறது.

"அதைப் பார்த்து நாங்கள் சலிப்படையவில்லை. போராட்டக் களத்தில் இதெல்லாம் சகஜம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்" எனக் கூறுகிறார், கம்பூர் செல்வராஜ்.

ஜல்லிக்கட்டு தடை நீக்கத்தின் பின்னணி

தொடர் போராட்டத்தின் காரணமாக தமிழ்நாடு அரசு சட்டத்திருத்தம் செய்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி அளித்தது.

மாநில அரசின் புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பீட்டா உள்பட பல்வேறு பிராணிகள் நல அமைப்புகளும் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தன.

வழக்கில், 'மாநில அரசின் சட்டத் திருத்தத்தை அரசமைப்புச் சட்டம் வழங்கிய உரிமையாக கருத முடியுமா' என, அரசியல் சாசன அமர்விடம் 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

'இவை பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதால் பெரிய அமர்வு மட்டுமே விசாரிக்க முடியும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வு கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் தீர்ப்பளித்தது.

அதில், பாரம்பரியத்தின் அங்கமாக பார்க்கப்படும் ஏறு தழுவுதல் போட்டியை அங்கீகரித்த மாநில அரசின் சட்டத் திருத்தத்தை அரசியல் சாசன அமர்வு உறுதி செய்தது.

மாநில அரசின் வாதத்தை முழுமையாக ஏற்பதாக அறிவித்த அரசியல் சாசன அமர்வு, 'தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெறும்' எனத் தெரிவித்தது.

'இதுபோன்ற போட்டிகளால் காளைகளுக்கு துன்பம் விளைவிக்கப்படுவதில்லை' எனக் கூறி ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் ஆகியவற்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது.

பல நூற்றாண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைமுறையில் இருந்து வந்துள்ளதாகவும் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பில் மேற்கோள் காட்டியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு