You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'ஹிஜாப் அணிந்து ரீல்ஸ் போடாதே'- இஸ்லாமிய பெண்கள் இணையத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன?
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
"நீ எப்படி வேண்டுமானாலும் ரீல்ஸ் போடு. ஆனால், ஹிஜாப் அணிந்து ஆடாதே" என்பதில் தொடங்கி "கொலை மிரட்டல்கள்" வரை- வஹீதா பேகம் என்ற இளம் பெண்ணின் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மற்றும் அவர் தொடர்பான பிற சமூக ஊடகப் பதிவுகளில் இத்தகைய கருத்துகளை காண முடிந்தது. இதில் சில பெண்களே அவருக்கு எதிரான கருத்துகளை பதிவிட்டிருந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த வஹீதா பேகம், தான் ஹிஜாப் அணிந்து ரீல்ஸ் வெளியிடுவதால், தனக்கும் தனது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல்கள் வருவதாக சில நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆனது.
ஹிஜாப் அணிந்து காணொளி வெளியிடுவதற்காக ஒரு இஸ்லாமிய பெண் விமர்சிக்கப்படுவது இது முதல் முறையல்ல.
2017இல் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஹிஜாப் மற்றும் ஜீன்ஸ் அணிந்து மூன்று பெண்கள் வீதியில் நடனமாடும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, அந்த மூன்று பெண்களுக்கு எதிராக கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன, 'இவர்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள்' என்று பலர் குற்றம் சாட்டினர்.
ஆனால், அந்தப் பெண்கள் ரீல்ஸ் அல்லது 'லைக்ஸ்' மோகத்தில் அதைச் செய்யவில்லை. 'ஹச்ஐவி விழிப்புணர்வு பிரசாரத்தின்' ஒரு பகுதியாகவே அந்த நடன நிகழ்வு (Flash mobs) நடைபெற்றது.
'என் அடையாளத்தை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை'
ஹிஜாப் அணிந்து சமூக ஊடகங்களில் தோன்றுவதால் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்துப் பேசிய இன்ஃப்ளுயன்சர் ஸிபா ஷிரின், "ஒரு இஸ்லாமியப் பெண் ஹிஜாப் அணிந்து ரீல்ஸ் அல்லது காணொளிகளை பதிவிடுவதால் எழும் விமர்சனங்களில் பெரும்பாலானவை இஸ்லாமிய சமூகத்தில் இருந்து தான் வரும்." என்று கூறுகிறார்.
ஒரு தனியார் தொலைக்காட்சியின் தொடரிலும் நடித்துள்ள இவர், "முதலில் எனது குடும்பம் எனக்கு ஆதரவளிக்கவில்லை. மறுபுறம், நான் ஹிஜாப் அணிந்து இருப்பதால், எனது பணி அல்லது கன்டென்ட் (Content) தவறாகப் புரிந்து கொள்ளப்படுமோ என்று இஸ்லாமிய சமூகம் கவலைப்பட்டது. அவர்களின் கவலை என்னைத் தடுப்பது அல்ல, மாறாக இஸ்லாமிய சமூகத்தின் விழுமியங்களையும் பிம்பத்தையும் பாதுகாப்பதே ஆகும்." என்று கூறுகிறார்.
மறுபுறம் பலரும் சமூக ஊடகங்களில் பலரும் தன்னை முன்முடிவுகளோடு அணுகியதாகவும் அவர் கூறுகிறார்.
"நான் ஹிஜாப் அணிவதால், எனது கன்டென்ட் மதத்தை போதிப்பதாகவோ அல்லது மற்றவர்களை மதம் மாற்ற முயற்சிப்பதாகவோ மட்டுமே இருக்கும் என்று பலர் நம்பினர்" என்கிறார்.
மேலும், "'பெரிய பிராண்டுகள், குறிப்பாகக் கூந்தல் பராமரிப்பு (Hair care) பிராண்டுகள் உன்னுடன் பணியாற்ற விரும்பாது, தயவுசெய்து ஹிஜாபை கழற்றிவிடு. நீயே உனது வாய்ப்புகளைக் குறைத்துக் கொள்கிறாய், உனக்கு எதிர்காலம் இல்லை' என்று என்னிடம் நேரடியாகவே சொல்லப்பட்டது."
ஆனால், சமூக ஊடகங்களில் தனது அடையாளத்தை மாற்றிக்கொள்ள தான் விரும்பவில்லை எனக் கூறுகிறார் ஸிபா.
"தொலைக்காட்சித் தொடரில் கூட ஹிஜாப் உடன் தான் நடித்தேன். நான் அதை என் அடையாளமாக பார்க்கிறேன். இப்போது என்னை என் குடும்பத்தாரும் ஆதரிக்கிறார்கள். பல பிராண்டுகளுடன் இணைந்து பணிபுரிகிறேன். அதேசமயம், என்னால் வாய்ப்புகளுக்காக என் சுயமரியாதையையோ அல்லது விமர்சனங்களுக்கு பயந்து என் அடையாளத்தையோ விட்டுத்தர முடியாது" என்கிறார் ஸிபா.
'இஸ்லாத்தின் பிரதிநிதிகள் அல்ல நாங்கள்'
"இஸ்லாமிய சமூகத்தில் பெண்கள் பெரும்பாலும் ஒழுக்கம் மற்றும் சமூக அந்தஸ்த்தின் வெளிப்படையான பிரதிநிதிகளாக காட்டப்படுகிறார்கள். ஆனால் ஆண்கள் இஸ்லாத்தின் பிரதிநிதிகளாகக் கட்டமைக்கப்படாமல் இந்த முரண்பாடுகளையும், சுதந்திரத்தையும் அனுபவிக்கிறார்கள்." என்று கூறுகிறார் ஆய்வறிஞர் நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
"ஒரு பெண் நடனமாடுவது, பொதுவில் பேசுவது அல்லது டிஜிட்டல் வெளியில் தனக்கான இருப்பை ஏற்படுத்துவது என்பது பெண்கள் அமைதியாகவும், அடக்கமாகவும், சமூகக் கட்டுப்பாட்டிற்குள்ளும் இருக்க வேண்டும் என்ற நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கு எதிராக அமைகிறது. ஒரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பங்கள், ஒரு மதத்திற்கு எதிரான அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுவது இதனால் தான்" என்று குறிப்பிடுகிறார் நிஷா.
"கடையநல்லூர் சம்பவம் போன்ற நிகழ்வுகளில், மிகவும் ஆக்ரோஷமான எதிர்வினைகள் இஸ்லாமிய சமூகத்திற்குள்ளிருந்தே வந்தன. இது மதக் கோட்பாட்டை விடச் சமூகக் கண்காணிப்பின் பங்கைக் காட்டுகிறது. உண்மையில் பெண்களின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிடுவோம் என்ற ஆண்களின் அச்சத்திலிருந்தே இத்தகைய விமர்சனங்கள் உருவாகின்றன." என்றும் நிஷா கூறுகிறார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம், மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு பெண், 'தான் ஹிஜாப் அணிந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பதிவிடுவதால், தன் உறவினர்கள் உள்பட பல ஆண்களிடமிருந்து பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் மற்றும் கொலை மிரட்டல்கள் வந்ததாக' காவல்துறையிடம் புகார் அளித்தார்.
இளம் முஸ்லிம் பெண்கள் இணையத்தில் தொடர்ச்சியான எதிர்மறை விமர்சனங்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர் என்று கூறும் நிஷா, "இத்தகைய எதிர்வினைகள் பயம், பதற்றம், சுய-சந்தேகம் மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து விலகுதல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும். மீண்டும் அவர்களை வீட்டிற்குள் முடக்கும்" என்றும் குறிப்பிடுகிறார்.
'இருதரப்பு அழுத்தங்கள்'
"மதம் என்றில்லை, தேசம், மொழி, இனம் என அனைத்து பார்வைகளும் பெண்களை மையப்படுத்தி அமைகின்றன. ஆனால், முஸ்லிம் பெண்கள் மதத்திற்கு உள்ளேயும், மதத்திற்கு வெளியேயும் என இரு கண்காணிப்புகளையும் எதிர்த்து போராடி வருகிறார்கள். எனவே, அவர் கூடுதல் இலக்குக்கு ஆளாகி வருகிறார்கள்" எனக் கூறுகிறார் ஊடகவியலாளர் மற்றும் ஆய்வு மாணவர் அப்துல்லா.
கர்நாடகா மாநிலத்தில் 2022ஆம் ஆண்டு எழுந்த கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவது தொடர்பான சர்ச்சைகளைக் குறிப்பிடும் அப்துல்லா, "ஹிஜாப் சர்ச்சை முஸ்லிம் பெண்களின் நியாயமான கல்வி உரிமைக்கு எதிரானதாக மாறியது. எனவே, முஸ்லிம் பெண்கள் அதிகம் நவீன அரசியல் உரையாடல்களில் குறிவைக்கப்படுவதற்குக் காரணம், அவர்கள் மீதான அக்கறை அல்ல. எதிராக, அவர்கள் மீதான மத மற்றும் நவீன சிந்தனையாளர்கள் இருவரின் வன்முறையுமே ஆகும்" என்று கூறுகிறார்.
"நிஜ வாழ்க்கையில் ஒரு ஆணால் அந்நிய பெண்களின் தனிப்பட்ட தேர்வுகள் மீது கலாச்சார பாடம் எடுப்பதோ, அவருக்கு அறிவுரை கூறுவதோ எளிதில் நடந்துவிட முடியாது. ஆனால், முகம் காட்டாத சமூக வலைத்தள கணக்குகள் அதற்கான அனைத்து அதிகாரத்தையும் இங்குத் தனிமனிதர்களுக்குக் கொடுக்கிறது." என்கிறார் அப்துல்லா.
"முஸ்லிம் பெண்களின் வலிமையான ஈடுபாடும், அவர்களின் உறுதியான தொடர் செயல்பாடும் அத்தகைய கணக்குகளைச் செயலிழக்க வைக்கும். முஸ்லிம் சமூகம் தனது சீரிய நிலைப்பாட்டை பெண்கள் பக்கம் நின்று எடுக்க வேண்டும். ஒரே நம்பிக்கையின் கீழ் எழும் பன்மைய குரல்களை அச்சுறுத்தும் சக்திகளை கண்டிப்பதை அந்தச் சமூகம் முதல் பணியாக தொடங்க வேண்டும்" என்றும் வலியுறுத்துகிறார் அப்துல்லா.
'பல மதங்களில் இருக்கும் பிரச்னை'
"ஹிஜாப் அணிவதும் அணியாததும் ஒரு பெண்ணின் விருப்பம். ஆனால், ஹிஜாப் அணியவேண்டும் அல்லது அதைக் கழற்று என்று சொல்கிறார்களே தவிர, 'உனக்கு அதை அணிவதில் விருப்பம் உள்ளதா?' எனக் கேட்பதில்லை. இஸ்லாம் மதத்தில் மட்டுமல்ல, பல மதங்களில் மத அடையாளங்கள் மற்றும் விழுமியங்கள் பெண்கள் மீதே திணிக்கப்படுகின்றன" என்கிறார் கரநாடகாவைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர் கே. ஷரீஃபா.
"சமூக ஊடகங்களில் ஒரு பெண் நாட்டிற்கு சேவையாற்றும் பணியில் இருப்பது போல, கஷ்டமான வீட்டு வேலைகளைப் பார்ப்பது போல, குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது போல காணொளிகள் வெளியானால் அதை பாராட்டுவார்கள், ஆனால் பெண்கள் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டால் ஆபாசமாக பதிவிடுவார்கள்." என்று அவர் கூறுகிறார்.
"எதை செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்பதை முடிவு செய்ய வேண்டியது அந்தப் பெண் தான், ஆனால் இங்கு பெண்களை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ள சமூகப் பிம்பங்கள் அதை தடுக்கின்றன. சமூகத்தின் யதார்த்தம் சமூக ஊடகங்களிலும் பிரதிபலிக்கிறது என நான் நினைக்கிறேன்." எனக் குறிப்பிடுகிறார் ஷரீஃபா.
அதேசமயம், "எது தனக்கான எல்லை என்பதை அந்தப் பெண் தான் முடிவு செய்ய வேண்டும். மற்றபடி, தேவையில்லாத அழுத்தங்களை பெண்கள் மீது சுமத்தாமல், அவர்கள் சமூக ஊடகங்களில் சுதந்திரமாக இயங்கக்கூடிய சூழலை உருவாக்குவதே இதற்கான ஒரு தீர்வாக இருக்கும்" என்கிறார் கவிஞர் ஷரீஃபா.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு