தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறித்து பேசிய பிரதமர் மோதி, அதன் மூலம் இந்திய மக்கள் பயனடைவார்கள் என்று கூறினார்.
இந்திய எரிசக்தி வாரம் (IEW) 2026-இன் நான்காவது பதிப்பை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) அன்று பிரதமர் மோதி மெய்நிகர் முறையில் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய பிரதமர், "நேற்று (ஜனவரி 26) இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே ஒரு மிகப்பெரிய ஒப்பந்தம் கையெழுத்தானது. உலகில் பலரும் அதைப் பற்றி தான் விவாதித்து வருகின்றனர்" என்று கூறினார்.
"இந்த ஒப்பந்தம் 1.4 பில்லியன் இந்திய மக்களுக்கும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கும் மகத்தான வாய்ப்புகளைக் கொண்டுவருகிறது. இது உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு."
"இந்த ஒப்பந்தம் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 25 சதவீதத்தையும், உலகளாவிய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கையும் பிரதிபலிக்கிறது. வர்த்தகம், ஜனநாயகம் மற்றும் சட்ட அமலாக்கம் தொடர்பான நமது அர்ப்பணிப்பு இந்த ஒப்பந்தத்தால் வலுப்படுத்தப்படுகிறது" என்று அவர் கூறினார்.
ஒப்பந்தம் நிறைவடைந்ததற்காக இந்திய இளைஞர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்த அவர், "ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் நகைகள், தோல் மற்றும் காலணிகள் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்" என்று கூறினார்.