தென்னாப்பிரிக்காவின் டி20 தொடரான SA20-யை மூன்றாவது முறையாக வென்றது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி. இறுதிப் போட்டியில் பிரிடோரியா கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் வீழ்த்தியது.
கேப் டவுனில் நடந்த இந்தப் போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பிரிடோரியா கேபிடல்ஸ் அணிக்கு தொடக்கமே கடினமாக இருந்தது. முதல் 7 பந்துகளிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணி. பிரைஸ் பார்சன்ஸ் மற்றும் டெவால் பிரெவிஸ் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினார்கள். அந்தக் கூட்டணியும் உடைந்துவிட, கேபிடல்ஸ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
டெவால் பிரெவிஸ் மட்டும் தனி ஆளாகப் போராடி சதமடித்தார். அவர் 56 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து 19வது ஓவரில் அவுட் ஆனார். அவருடைய ஆட்டத்தின் காரணமாக கேபிடல்ஸ் 158 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் மார்கோ யான்சன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவர் 4 ஓவர்களில் 10 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார்.
அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் அணியுமே ஒருகட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 8.4 ஓவர்களில் அந்த அணி 48/4 என்ற மோசமான நிலையில் இருந்தது. ஆனால், அதன் பிறகு ஜோடி சேர்ந்த மேத்யூ பிரீட்ஸ்கி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்து அந்த அணியை வெற்றி பெற வைத்தனர். பிரீட்ஸ்கி 68 ரன்களும், ஸ்டப்ஸ் 63 ரன்களும் எடுத்தனர்.
கேபிடல்ஸ் தோல்வியடைந்தாலும் சதம் அடித்த, பிரெவிஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்த சீசனில் 390 ரன் எடுத்த சன்ரைசர்ஸ் வீரர் குயின்டன் டி காக் தொடர் நாயகன் விருது வென்றார்.
இது சன்ரைசர்ஸ் அணிக்கு மூன்றாவது கோப்பை. மொத்தம் 4 சீசன்களே நடந்திருக்கும் இந்த SA20 தொடரில் அந்த அணி 4 முறையுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. அதில் மூன்றில் வென்றிருக்கிறது.