விராட் கோலி: 'நமத்து போன வெடி' என்ற ஏளனத்தை கடந்து வெடித்துச் சிதறும் சாதனைகள்

விராட் கோலி

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், விதான்ஷு குமார்
    • பதவி, பிபிசி இந்தி விளையாட்டு செய்தியாளர்

கடந்த ஆண்டு வரை 'நமத்துப் போன வெடி' என்று ஏளனம் செய்யப்பட்ட ஒரு வீரர் ஒரே இன்னிங்ஸில் வெடித்துச் சிதறி பல சாதனைகளுக்குச் சொந்தக்காரராக மாறியுள்ளார்.

இந்தச் சம்பவம் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்துள்ளது.

இந்த சாதனையை நிகழ்த்தியவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் அவரது பெர்ஃபார்மன்ஸ் தான் இப்போது முக்கிய பேசுபொருளாக மாறி இருக்கிறது.

முதல் இன்னிங்ஸில் பந்து பவுண்டரியை நோக்கிச் செல்வதைத் தடுக்க முயன்றபோது இரண்டு ஃபீல்டர்கள் நேருக்கு நேர் மோதி பந்தை நிறுத்த வேண்டியிருந்தது. இதனால் காயமடைந்த வீரர்களுக்காக போட்டியே சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு நடந்த போட்டியின் முடிவு இந்திய அணியின் பக்கம் ஒருதலைபட்சமாக மாறியது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து அம்சங்களிலும் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டதால், எதிர்த்து ஆடிய இலங்கை அணியின் ஆட்டத் திறன் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான அணி போல இருந்தது.

ஆனால் இந்தப் போட்டியிலிருந்து பல சுவாரஸ்யமான கதைகள் உருவாகின்றன. அவை போட்டியை மறக்க முடியாத ஒன்றாக மாற்றுகின்றன. கடந்த போட்டியின் மறக்க முடியாத சில அம்சங்களைப் பார்ப்போம்.

மிகப்பெரிய வெற்றி

விராட் கோலி

பட மூலாதாரம், Twitter/BCCI

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 390 ரன்கள் குவித்தது. 16வது ஓவரில், இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தபோது, இலங்கை வீரர்கள் ஆபத்து முடிந்துவிட்டதாக நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ரோஹித் பேட்டிங் செய்த விதத்தைப் பார்க்கும்போது, அவர் ஒரு பெரிய சதம் அல்லது இரட்டை சதம் அடிப்பார் என்று தோன்றியது.

ஆனால் 3வது இடத்தில் களமிறங்கிய விராட் கோலி, முதலில் ஷுப்மன் கில்லுடனும், பின்னர் ஷ்ரேயாஸ் ஐயருடன் மூன்றாவது விக்கெட்டுக்கு ஆடி இரண்டு சத பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்.

கில் 97 பந்துகளில் 116 ரன்களோடு ஆட்டமிழந்த நிலையில், குறைந்த ஒருநாள் போட்டிகளே ஆடியிருந்தாலும் தனது வாழ்க்கையின் சிறந்த இன்னிங்ஸை ஆடிய ஷ்ரேயாஸ் தனது பங்குக்கு 38 ரன்கள் சேர்த்தார்.

ஆனால் இந்த இன்னிங்ஸ்கள் அனைத்தும் விராட் கோலியின் மேஜிக்கிற்கு முன்பு கானல் நீர் போலவே காட்சியளித்தன. இந்த இன்னிங்ஸில் கோலி 110 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 166 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 150ஆக இருந்தது. இந்த இன்னிங்ஸில் மட்டும் அவர் எட்டு சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளை விளாசினார்.

இலங்கை படுதோல்வி

இலங்கை

பட மூலாதாரம், Twitter/OfficialSLC

இந்திய அணி 390 ரன்கள் குவித்த நிலையில் இலங்கை அணி கடுமையான போட்டியை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இலங்கை அணி ஜெயசூர்யா, சங்கக்காரா, டி சில்வா ஆகியோரைக் கொண்ட கிளாசிக் அணி அல்ல.

இவர்கள் இருந்த அணி எவ்வளவு பெரிய ஸ்கோராக இருந்தாலும், தீவிரமாக துரத்தும். ஆனால் அடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் ஆட்டம், தண்ணீரில் நனைந்த பட்டாசை வெடிக்க முயல்வது போல இருந்தது.

ஒட்டுமொத்த இலங்கை அணியும் 22 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்து 73 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி. இதற்கு முன்பு 2008ஆம் ஆண்டு அயர்லாந்தை 290 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது தான் சாதனையாக இருந்தது.

இந்த வெற்றியின் மூலம், இந்தியா 96 முறை இலங்கையைத் தோற்கடித்துள்ளது. இது தனிப்பட்ட ஒரு நாட்டுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி பெற்ற அதிகபட்ச வெற்றியாகக் கருதப்படுகிறது.

'கிங் கோலி'

விராட் கோலி

பட மூலாதாரம், ANI

"கால்பந்து உலகில் மெஸ்ஸி தான் கோட்(GOAT - Greatest of All Time) என்றால், என்னைப் பொருத்தவரை சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி தான் கோட்."

நேற்றைய போட்டிக்கு பிறகு ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்ஃபோ(ESPNcricinfo) நிகழ்ச்சியில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஃபர்வேஷ் மகரூஃப் கூறிய வார்த்தைகள் இவை.

இந்தியா பெற்ற இந்த வெற்றியின் மூலம் முன்னாள் கேப்டன் விராட் கோலி மிகப்பெரிய ஹீரோவாக பார்க்கப்படுகிறார். இத்தொடரில் தனது இரண்டாவது சதத்தையும், தனது கடைசி நான்கு ஒருநாள் போட்டிகளில் மூன்றாவது சதத்தையும் அடித்துள்ளார் கோலி. 46 சதங்களுடன் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற சாதனையை உடைக்க நெருங்கி வருகிறார்.

2019க்கு பிறகு விராட் கோலி தொடர்ந்து 3 ஆண்டுகள் சதம் அடிக்காமல் இருந்தார். கடந்த ஆண்டு இந்த வறட்சியை முறியடித்த அவர், தற்போது 4 போட்டிகளில் 3 சதங்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

அதேநேரம், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சச்சின், சங்கக்காரா, பாண்டிங், ஜெயசூர்யா ஆகியோருக்கு அடுத்தபடியாக 5வது இடத்தில் உள்ளார். ஆனால் பேட்டிங் சராசரியின் அடிப்படையில், அவர் அனைவரையும்விட சிறந்தவராக விளங்குகிறார். இவர் ஆடியுள்ள 258 போட்டிகளில், இவரின் சராசரி 58ஆக இருக்கிறது. இதுவரை ஒருநாள் போட்டிகளில் மட்டும் 12 ஆயிரத்து 754 ரன்கள் குவித்துள்ளார். 

இதே இன்னிங்ஸில், அவர் சச்சினின் மற்றொரு சாதனையையும் முறியடித்தார். அது, ஒரே அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த சாதனை. இலங்கைக்கு எதிராக 10 சதங்கள் அடித்துள்ள அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 சதங்கள் அடித்த சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.

விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

கோலி தனது அரை சதத்தை எட்ட 48 பந்துகள் எடுத்துக் கொண்ட நிலையில், சதத்தை அடுத்த 37 பந்துகளில் எட்டினார். அப்போது அவரது ஸ்ட்ரைக் ரேட் 135.1 ஆக இருந்தது. ஆனால் சதமடித்த பின்னர் அவர் எதிர்கொண்ட 25 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்சர்களை விளாசி, 66 ரன்களை குவித்தார் கோலி. அவரின் கடைசி 25 பந்துகளில் ஸ்ட்ரைக் ரேட் 264 ஆக இருந்தது.

இஷான் கிஷானுக்கு பிறகு, குறைந்த பந்துகளில் 150 ரன்களை எட்டிய இந்திய வீரர் என்ற சாதனையையும் கோலி இதன்மூலம் படைத்தார். இஷான் கிஷன் 103 பந்துகளில் 150 ரன்கள் குவித்துள்ள நிலையில், நேற்றைய ஆட்டத்தில் கோலி 106 பந்துகளில் இந்த சாதனையை எட்டினார். 

கோலி ஒரே இன்னிங்கிஸில் அதிக சிக்சர்களை அடித்ததும் நேற்றைய போட்டியில்தான். இந்த ஆட்டத்தில் மட்டும் மொத்தம் 8 சிக்சர்களை கோலி பறக்கவிட்டு இருந்தார். அதில் தோனி போல அடித்த ஹெலிகாப்டர் ஷாட் சிக்ஸ்-உம் அடங்கும்.

டி20 போட்டிகளில் நின்று ஆடும் வீரர்களுக்கு பெரியளவில் வாய்ப்பு இருக்காது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 ஓவர்களுக்கு ஒர் அணி தாக்குப்பிடித்து ஆட, ஒன் டவுன் இறங்கும் வீரரின் நிதானம் அவசியம். இதைத்தான் இந்திய அணியின் முன்னாள் ஆட்டக்காரரான ராகுல் டிராவிட் செய்து வந்தார்.

நேற்றைய ஆட்டத்தின் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒன் டவுன் இடத்தில் நங்கூரமாக நின்று, ஸ்கோரை உயர்த்த தன்னால் பங்களிக்க முடியும் என்பதை விராட் கோலி மீண்டும் ஒரு முறை நிருப்பித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: