குழந்தை பிறப்பை அதிகரிக்க அதிக அளவில் முதலீடு செய்யும் ஆசியா - பயன் கிடைக்குமா?

பிறப்பு விகிதம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மரிக்கோ ஓய்
    • பதவி, வர்த்தக செய்தியாளர்

ஆசியாவின் மிகப் பெரும் பொருளாதார சக்திகளாக விளங்கும் சில நாடுகளில், பிறப்பு விகிதம் குறைந்து வருவது கவலையளிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையை மாற்றும் முயற்சியாக இந்நாடுகள் பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களைச் செலவிடத் தொடங்கியுள்ளன. ஆனால் இந்த முயற்சி பயன் தருமா?

தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை ஜப்பான் கடந்த 1990களில் தொடங்கியது. இதே போன்ற முயற்சியை தென்கொரியா 2000-வது ஆண்டுகளில் தொடங்கியது. ஆனால் சிங்கப்பூரில் இந்நடவடிக்கை 1987-ம் ஆண்டே தொடங்கப்பட்டது.

சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிறப்பு விகிதம் குறைந்துள்ளதைத் தொடர்ந்து, மக்கள் தொகையை அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் நாடுகளுடன் அந்நாட்டு அரசும் அண்மையில் இணைந்துள்ளது.

இது போன்ற முயற்சிகளுக்காக செலவு செய்யப்பட்ட தொகை எவ்வளவு என்பதை துல்லியமாக கணக்கிட முடியாவிட்டாலும், தென்கொரியா இம்முயற்சியில் கடந்த 16 ஆண்டுகளில் 200 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளதாக அதிபர் யூன் சுக்-இயோல் அண்மையில் அறிவித்தார்.

இருப்பினும், சராசரியாக ஒரு பெண்ணுக்கு 0.78 குழந்தை மட்டுமே பிறக்கிறது என்ற வீதத்தில், உலகிலேயே பிறப்பு விகிதம் குறைந்த நாடு என்ற தனது பழைய நிலையை தென்கொரியா மீண்டும் முறியடித்துள்ளது.

வரலாற்றில் முதன்முறையாக ஆண்டுக்கு வெறும் 8,00,000 குழந்தைகளை மட்டுமே பெற்றெடுத்த அண்டை நாடான ஜப்பானில், குழந்தை பிறப்பை ஊக்குவிக்க மேற்கொள்ளப்பட்டு வந்த செலவை இரண்டு மடங்காக்க பிரதமர் ஃபுமியோ கிஷிதா உறுதிபூண்டார். முன்பு சுமார் 75 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிடப்பட்ட நிலையில், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 2 சதவிகிதம் அதிகம் செலவு செய்ய இதன்மூலம் முடிவெடுக்கப்பட்டது.

உலக அளவில் பிறப்பு விகிதத்தை குறைக்க பல நாடுகள் முயற்சி மேற்கொள்ளும் நிலையில், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க விரும்பும் நாடுகளின் எண்ணிக்கை கடந்த 1976க்குப் பின் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என ஐக்கிய நாடுகள் அமைப்பு அண்மையில் வெளியிட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பிறப்பு விகிதம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற சட்டத்தை 2016-ம் ஆண்டு சீனா ரத்து செய்தது

மக்கள் தொகையை அதிகரிக்க இந்த நாடுகள் விரும்புவதன் காரணம் என்ன?

சுருக்கமாகச் சொன்னால், அதிக எண்ணிக்கையில் மக்கள் இருந்தால் அவர்கள் அதிகமாக உழைத்து உற்பத்தியை பெருக்குவதன் மூலம் பொருளாதார வளர்ச்சி அதிகமாகும். அதிக மக்கள் தொகை இருப்பதால் அரசுகளுக்கு கூடுதல் செலவுகள் ஏற்படும் என்றாலும், அந்த மக்களிடம் இருந்து அதிக வரி வருவாய் கிடைக்கும் என்பதால் அதைத் தான் அரசுகள் விரும்புகின்றன.

மேலும், பல ஆசிய நாடுகளில் உள்ள பெரும்பாலான மக்கள் வயதானவர்களாக அதிவேகமாக மாறிக்கொண்டுள்ளனர். இதில் ஜப்பான் தான் முன்னணியில் இருக்கிறது. அந்நாட்டு மக்கள் தொகையில் 30 சதவிகிதம் பேர் 65 வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருக்கின்றனர். இப்பகுதியில் உள்ள மேலும் சில நாடுகளிலும் இதே நிலை தான் காணப்படுகிறது.

சமீபத்தில் மக்கள் தொகையில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளிய இந்தியாவில், கால் பங்குக்கும் அதிகமானோர் 10 முதல் 20 வயதுக்குள் இருக்கின்றனர். இது இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்வதற்கான வாய்ப்பை அளிக்கும்.

அதே நேரம், உழைக்கும் மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தால், வயதான- உழைக்க முடியாமல் இருக்கும் மக்களை கவனித்துக்கொள்வதற்கு அதிக செலவு பிடிக்கும்.

"மக்கள் தொகை குறைந்து வருவது பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் ஒன்றாகவே கருதப்படுகிறது. வயதானவர்கள் மட்டுமே அதிகமாக இருந்தால், அவர்களுக்கான உதவிகள் கூட கிடைக்காது," என்கிறார் விக்டோரியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த க்ஸியூஜியான் பெங்.

பிறப்பு விகிதம்
படக்குறிப்பு, அண்மைக்காலங்களில் சீனாவின் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து வருகிறது

ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஒரே மாதிரியான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றில் சில, புதிதாக குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு நிதி அளிப்பது, மானியத்துடன் அல்லது இலவச கல்வி அளிப்பது, கூடுதலாக மழலையர் பள்ளி வசதிகளை ஏற்படுத்தித் தருவது, வரிச்சலுகைகள், தம்பதியினருக்கு பேறுகால விடுமுறையை அதிகமாகத் தருவது போன்ற நடவடிக்கைகள்.

ஆனால், இது போன்ற நடவடிக்கைகளால் பயன் கிடைக்கிறதா?

ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கடந்த சில தசாப்தங்களாக கிடைத்துள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் மிகச்சிறிய அளவிலேயே பயன் அளித்துள்ளன. ஜப்பான் நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்ததாக அந்நாட்டு நிதி அமைச்சகத்தின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இதே பார்வையைத் தான் ஐக்கிய நாடுகள் அமைப்பும் கொண்டுள்ளது.

"வரலாறைப் பார்க்கும் போது, பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்க தெளிவாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை," என்கிறார் பிபிசியிடம் பேசிய ஐக்கிய நாடுகள் அமைப்பின் மக்கள் தொகைக்கான பிரிவைச் சேர்ந்த அலன்னா அர்மிடேஜ்.

மேலும் பேசிய அவர், "பெண்கள் ஏன் குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டமறுக்கிறார்கள் என்பதையும், வேலையையும், குடும்ப வாழ்க்கையையும் சமப்படுத்த முடியாமல் பெண்கள் தவிப்பதையும் நாம் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்," என்றார்.

ஆனால், பிறப்பு விகிதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் ஆசிய நாடுகளை விட ஸ்காண்டிநேவியன் நாடுகளில் அதிக பயன்களை அளித்துள்ளன என்கிறார் விக்டோரியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த க்ஸியூஜியான் பெங்.

"குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவுகள் மிகவும் குறைவாக இருப்பது மற்றும் அருமையான நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டதே இதற்குக் காரணம்."

உலக பொருளாதார அமைப்பின் அறிக்கையின் படி, உலக அளவிலான பாலின விகிதாச்சார அளவுகளிலும் ஆசிய நாடுகள் பின்தங்கியுள்ளன என தெரியவருகிறது.

உலகிலேயே அதிக கடன்களுடன் தவிக்கும் வளர்ந்த நாடான ஜப்பானில், குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் பெரும் பொருட்செலவை கொண்டவையாக இருக்கின்றன. இத்திட்டங்களுக்கு எப்படி நிதி ஒதுக்குவது என்பது மிகப்பெரும் கேள்வியாக இருக்கிறது.

அரசின் வசம் உள்ள பத்திரங்களை விற்பனை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளும் ஜப்பானில் பரிசீலிக்கப்படுகின்றன. இதனால் கடன் சுமை அதிகரிக்கும் என்பது மட்டுமல்லாமல், வரிவிதிப்பும், சமூக காப்பீட்டுத் திட்டங்களுக்கான சந்தாவும் அதிகரிக்கும்.

பிறப்பு விகிதம்
படக்குறிப்பு, ஜி7 கூட்டமைப்பு நாடுகளில் அதிக கடன் சுமையுடன் தத்தளிக்கும் நாடு ஜப்பான்

இதில் முதல் நடவடிக்கை மூலமாக எதிர்கால சந்ததியினரின் கடன் சுமை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. அடுத்த இரண்டு நடவடிக்கைகள் காரணமாக, ஏற்கெனவே கடும் சிரமத்தில் தவிக்கும் உழைக்கும் வர்க்கத்தினருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், குறைவான குழந்தைகளே போதும் என்ற மனப்பான்மையை உருவாக்கும்.

ஆனால், இந்த நடவடிக்கைகள் வேலை செய்கின்றனவா என்பதை விட, இந்நடவடிக்கைகளில் இன்னும் கூடுதல் முதலீடு தேவை என INSEAD பேராசிரியர் அன்டோனியோ ஃபடாஸ் தெரிவிக்கிறார்.

"பிறப்பு விகிதம் குறைந்ததற்கு, போதுமான முதலீடு செய்யப்படவில்லை என்பதே காரணமாக இருந்தால் என்ன செய்வது?" என அவர் கேள்வி எழுப்புகிறார்.

மக்கள் தொகை குறைவதைக் கருத்தில் கொண்டு அதற்குத் தயாராகும் விதத்தில் வேறு பல திட்டங்களிலும் அரசுகள் முதலீடு செய்துவருகின்றன.

"மக்கள் தொகை குறைவதால் வேலைத் திறன்களும் குறைந்துவிடும் என்பதை அறிந்து, அதைச் சமாளிக்கும் விதத்தில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன கண்டுபிடிப்புக்களை உருவாக்கும் முயற்சியில் சீனா பல்வேறு முதலீடுகளைச் செய்திருக்கிறது," என்கிறார் விக்டோரியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த க்ஸியூஜியான் பெங்.

வேலைத் திறன்களை அதிகரிக்கும் விதமாக வெளிநாட்டு இளைஞர்களுக்கு வேலை அளிக்கும் திட்டங்கள் ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் பெரும்பாலும் நடைமுறையில் இல்லாவிட்டாலும், குடியுரிமை விதிகளைத் தளர்த்தி வெளிநாட்டினருக்கு வேலைவாய்ப்புக்களை அளிப்பது குறித்தும் இந்நாட்டு அரசுகள் பரிசீலித்து வருகின்றன.

"உலக அளவில் பிறப்பு விகிதம் குறைவதால் இது போல் வெளிநாட்டவர்களுக்கு வேலை அளிக்கும் திட்டங்களும் அவசியமாகின்றன," என்கிறார் பெங்.

பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கான திட்டங்களில் சரியான அளவு செலவுகள் மேற்கொள்வதைத் தவிர, இந்நாடுகளுக்கு வேறு எந்த வாய்ப்பும் இருப்பதாகத் தெரியவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: