சித்தராமையா: முதலமைச்சர் இலக்கை மீண்டும் அடைந்த கர்நாடக அரசியலின் ‘மாஸ்டர்’

சித்தராமையா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி இந்தி சேவைக்காக

கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனவும் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

கிராமப்புற கர்நாடகத்தில் வலுவான பிடிப்புள்ள முன்னாள் முதல்வராக இருந்த சித்தராமையா முதல்வர் பதவிக்கு வருவது அவரது சாதனைகளின் வரிசையில் இன்னொரு சாதனை.

நாட்டில் தொடர்ந்து 13 பட்ஜெட்களை தாக்கல் செய்த சாதனையையும் சித்தராமையா படைத்துள்ளார். தொடர்ந்து பத்து முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் பிரதமரும், மத்திய நிதியமைச்சருமான மொரார்ஜி தேசாய், சித்தராமையாவுக்குப் பிறகுதான் வருகிறார்.

சித்தராமையா முதல் முறையாக 2013 முதல் 2018 வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது தேவராஜ் அர்ஸுக்குப் பிறகு (1972-1978) ஐந்தாண்டு பதவிக் காலத்தை முடித்த இரண்டாவது முதலமைச்சராக ஆனார்.

”அவரது கடுமையான நடத்தைக்குப் பிறகும், அவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. சமூக நீதிக்காக அவர் தொடர்ந்து குரல் எழுப்பியதே இதற்குக் காரணமாக இருக்கலாம்.”

”1997-98ல் ஜே.எச்.படேல் ஆட்சியின்போதும், 2004ல் காங்கிரஸ்-ஜே.டி.எஸ். முதல் கூட்டணி ஆட்சியின்போதும் அவர் ஒரு கிளர்ச்சியாளராக இருந்தார். அப்போது சித்தராமையா ஜேடிஎஸ்-ல் இருந்தார்,” என்று அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் ஏ. நாராயணா கூறினார்.

மக்கள் மத்தியில் அவருடைய பிரபலம் காரணமாகவே, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரைவிட சித்தராமையா முன்னிலையில் இருந்தார். 'கர்நாடகாவில் அவர் மிகவும் சமயோசித அரசியல்வாதி' என்று எதிரணியினர்கூட சிவகுமார் பற்றிக் கூறுகின்றனர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

எம்.எல்.ஏ.க்களின் ரகசிய வாக்கெடுப்பு மூலம் முதல்வர் பதவிக்கு போட்டியிடும் இருவரின் பலத்தையும் காங்கிரஸ் மேலிடம் கணித்திருந்தது. சித்தராமையா தனது கடைசி தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கும் முன் பிபிசிக்கு அளித்த பேட்டியிலும் இதே கோரிக்கையை முன்வைத்திருந்தார். அப்போது அவர், 'ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுப்பு நடக்கவேண்டும். அதுதான் ஜனநாயக முறையும்கூட,” என்று தெரிவித்தார்.

'கிளர்ச்சியாளர்' சித்தராமையா முதல்வராக இருந்தபோது எந்தவொரு கிளர்ச்சியையும் சந்திக்க வேண்டி வரவில்லை என்பது சுவாரஸ்யமான விஷயம்.

"சித்தராமையாவின் கிராமமான சித்தார்மன்ஹூண்டியில் அனைவரும் ஒருமையில் பெயர் சொல்லி அழைக்கிறார்கள். பெற்றோரைக்கூட அப்படித்தான் அழைப்பர்,” என்று சிஆர்பிஎஃப்-ன் ஓய்வுபெற்ற ஐஜியும் சித்தராமையாவின் பால்ய நண்பருமான கே. அர்கேஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.

"ஆனால், அதை ஆணவமாகக் கருதக் கூடாது. பிரதமர் மோதியை சித்தராமையா இவ்வாறு அழைக்கும்போது, அவரை அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதாக மக்கள் கருதுகின்றனர். உண்மையில் சித்தராமையா பேசும்விதமே இப்படித்தான்,” என்றார் அவர்.

புள்ளி விவரங்களில் மாஸ்டர்

siddharamaiah, priyanka and shivakumar

பட மூலாதாரம், Getty Images

1985ஆம் ஆண்டு, ராமகிருஷ்ண ஹெக்டே அரசில் சித்தராமையா கால்நடை துறை அமைச்சராக இருந்தபோது, அவரது கணீர் குரல் மற்றும் புள்ளிவிவரங்களை நினைவில் வைத்திருக்கும் திறனும் அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியது.

”அவருக்கு புள்ளிவிவரங்கள் மற்றும் பட்ஜெட் தேவைகள் மீது பெரும் பிடிப்பு இருப்பதை நாங்கள் மிக விரைவில் உணர்ந்தோம். சித்தராமையாவின் திறன் பல மூத்த அதிகாரிகளை அவரது ரசிகர்களாக ஆக்கியுள்ளது,” என்று ஒரு முன்னாள் மூத்த அதிகாரி பிபிசி இந்தியிடம் கூறினார்.

சித்தராமையாவின் பொருளாதார அறிவை அனைவரும் பாராட்டுகின்றனர். சென்ற சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக அவர் மாநில பட்ஜெட் மீது உரை நிகழ்த்தும்போது, ஆளும் பாஜகவின் எல்லா எம்எல்ஏக்களும் அவையில் இருப்பது வழக்கம்.

'நிர்வாகத்தில் சித்தராமையாவின் பிடி மிகவும் வலுவானது. அவர் கோப்புகளைப் படிக்கும் முறையும் மிகவும் பாராட்டுக்குரியது. ஓர் அதிகாரியின் ஆலோசனை சரியானது என்று அவர் உணர்ந்தால், அவர் அதை வெளிப்படையாகச் சொல்வார். அரசியல் ஒற்றுமைக்கு மிகுந்த அக்கறை காட்டுவார்.

எந்த அதிகாரியின் அணுகுமுறைக்கும் எதிராக அமைச்சரவையில் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுப்பேன் என்றும் அதிகாரி அதைப் பற்றி வருத்தப்படக் கூடாது என்றும் பலமுறை அதிகாரிகளிடம் கூறி வந்தார்,” என்று ஓய்வு பெற்ற மற்றோர் அதிகாரி கூறினார்.

கிராமப்புறங்களில் நல்ல பிடிப்பு

சித்தராமையா

பட மூலாதாரம், Getty Images

பேராசிரியர் எம்.டி.நஞ்சுண்டசாமி, சித்தராமையா மீது மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவர் மைசூரில் உள்ள சட்டக் கல்லூரியில் சித்தராமையாவுக்கு கற்பித்தார். பேராசிரியர் நஞ்சுண்டசாமி கர்நாடக ராஜ்ய ராயத் சங்கத்தை (விவசாயிகள் அமைப்பு) உருவாக்கினார்.

”ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலையில் நாங்கள் கூட்டங்களை நடத்துவோம். அதில் அனைவரும் சமூகப் பிரச்னைகள் பற்றிப் பேசவும் விவாதிக்கவும் சுதந்திரம் இருந்தது. அப்போதுதான், கிராமப்புறப் பொருளாதாரம், சமூக நீதி போன்ற விஷயங்கள் பற்றி எங்களுக்குத் தெரிய வந்தது. சமத்துவ உணர்வு, பேச்சு சுதந்திரம், அரசமைப்புச் சட்டத்தைப் பற்றிய புரிதலும் அந்தக் கூட்டங்களின் மூலம் ஏற்பட்டது,” என்று அர்கேஷ் கூறினார்.

இந்தச் சந்திப்புகள் தாலுகா வளர்ச்சி வாரிய (டிடிபி) தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற சித்தராமையாவுக்கு தைரியத்தை அளித்தன.

”சித்தராமையாவின் சமூகப் பின்னணியைப் பார்க்கும்போது, இந்தக் கூட்டங்கள் இல்லாமல் அவர் இவ்வளவு தன்னம்பிக்கையைப் பெற்றிருக்க மாட்டார் என்று சொல்லலாம். ஏனெனில், சித்தராமையாவின் தந்தை படித்த பணக்காரர் அல்ல. சித்தராமையா பள்ளிக்கூடத்திற்கே மிகவும் காலம் கடந்துதான் சென்றார்,” என்று அர்கேஷ் தெரிவித்தார்.

இருப்பினும் கணிதத்தில் சித்தராமையா மிகுந்த திறமைசாலியாக இருந்தார். அர்கேஷ் ஒரு ரகசியத்தைச் சொல்கிறார். “அவர் ஒரு நல்ல சீட்டாட்டக்காரர் என்பது உங்களுக்குத் தெரியுமா? ரம்மி ஆடும்போது ஒருமுறைகூட ஆட்டத்தை இழந்ததில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.

அரசியல் தந்திரம்

சித்தராமையா

பட மூலாதாரம், Getty Images

அரசியல் ரீதியாக சித்தராமையா, 'புத்திசாலி; அரசியல் கணக்குகளை சிறப்பாக மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

குருபா (அல்லது கட்ரியா) சமூகத்தைச் சேர்ந்த சித்தராமையா, தனது பழைய வழிகாட்டியான எச்.டி.தேவ கெளடாவின் சமய சார்பற்ற ஜனதா தளத்திலிருந்து பிரிந்து செல்வதற்காக,

அஹிந்தா (சிறுபான்மையினர், பிற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகள்) நலன்களை முன்வைத்து, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே தனது தளத்தை விரிவுபடுத்தினார்.

2013இல் காங்கிரஸை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற பிறகு சித்தராமையா அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்த முதல் நடவடிக்கை ’அன்ன பாக்ய திட்டத்தின்’ கீழ் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு மாதமும் ஐந்து கிலோ அரிசி வழங்குவதாகும். பின்னர் இது ஏழு கிலோவாக உயர்த்தப்பட்டது.

அவருடைய நலத்திட்டங்களின் செலவு 4410 கோடி ரூபாய். இதில் பால் உற்பத்தியாளர்களுக்கு மானியம், தலித்/பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினருக்கு ஒருமுறை கடன் தள்ளுபடி, ஏழைகளின் பழைய மின்கட்டணங்களை தள்ளுபடி செய்தல் உள்ளிட்டவை அடங்கும்.

இருப்பினும் சில சர்ச்சைக்குரிய விஷயங்களில் முதல்வர் சித்தராமையாவின் அணுகுமுறை அவருக்கு எதிராகச் சென்றது.

2018ஆம் ஆண்டில், லிங்காயத்துகளின் கோரிக்கைப்படி அவர்களுக்கு தனி மத அந்தஸ்து வழங்க பரிந்துரைத்தது அவரது மிகவும் சர்ச்சைக்குரிய முடிவு. அவர் அதை அறிவித்தார், ஆனால் அது லிங்காயத் சமூகத்திற்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதை மக்களுக்கு விளக்கவில்லை.

இதன் மூலம் லிங்காயத் சமூகத்தை பிளவுபடுத்த சித்தராமையா முயற்சி செய்வதாக பாஜகவுக்கு பிரசாரம் செய்ய வாய்ப்பு கிடைத்தது.

அவரது மற்றொரு முடிவு, தனது பழைய தொகுதியான சாமுண்டேஸ்வரியில் போட்டியிடுவது. 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு, சித்தராமையா அங்கு கால் வைத்ததில்லை.

தேர்தலில் சித்தராமையா படுதோல்வி அடைந்தார். அதேநேரம் தனது இரண்டாவது தொகுதியான பாதாமியில், வெறும் 1600 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.

ஆனால் சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது சித்தராமையாவின் பிரபலம் தெளிவாகத் தெரிந்தது.

"அவரது கூட்டங்களில் கூட்டத்தை கூட்டுவதற்கு நாங்கள் பணம் செலவழிக்கத் தேவையில்லை. அவர் எங்கு சென்றாலும், அவரை வரவேற்கவும் அவர் பேசுவதைக் கேட்கவும் மக்கள் கூடுவது வழக்கம்,” என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: