இந்தியா-பாகிஸ்தான் இடையில் அணு ஆயுதப் போர் மூளுமா? அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், Corbis via Getty Images
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
சமீபத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலில், இறுதிகட்ட எச்சரிக்கைகளோ, அணு ஆயுதப் போரைக் குறிக்கும் அறிவிப்புகளோ இல்லை.
ஆனால், அடுத்தடுத்து நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதல்கள், மறைமுகச் சமிக்ஞைகள் மற்றும் விரைவாக மேற்கொள்ளப்பட்ட சர்வதேச தலையீடு ஆகியவை இந்தப் பிராந்தியத்தின் மோசமான சூழ்நிலை குறித்த அச்சத்தைச் சுட்டிக் காட்டின.
இந்த நெருக்கடி அணு ஆயுதப் போரை நோக்கிச் செல்லவில்லை. ஆனால் அது எவ்வளவு விரைவாக அந்த ஆபத்தை நோக்கி முன்னேறும் என்பதற்கான நினைவூட்டலாக அது இருந்தது.
இத்தகைய நெருக்கடி எவ்வளவு விரைவாக பெரும் அழிவாக மாறலாம் என்பதை விஞ்ஞானிகளும் கணித்துள்ளனர்.
2019ஆம் ஆண்டு, உலகளாவிய விஞ்ஞானிகள் குழு மேற்கொண்ட ஆய்வு, ஒரு தீவிரமான அச்சுறுத்தலைக் கொண்ட கற்பனைக் காட்சியுடன் தொடங்குகிறது.

2019ஆம் ஆண்டு, உலகளாவிய விஞ்ஞானிகள் குழு மேற்கொண்ட ஆய்வு, ஒரு தீவிரமான அச்சுறுத்தலைக் கொண்ட கற்பனைக் காட்சியுடன் தொடங்குகிறது. அதன்படி, 2025ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறுகிறது. அதற்குப் பதிலளிக்கும் வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் வெடிக்கிறது என்கிறது அந்த ஆய்வு.
அந்த ஆய்வு வெளியாகி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையில் உண்மையாகவே ஒரு மோதல் ஏற்பட்டது.
கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் சண்டை நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டாலும், முழுமையான அளவில் போர் வெடிக்கலாம் என்ற அச்சத்தைத் தூண்டியது. அதே நேரத்தில், இந்தப் பிராந்தியத்தின் உறுதி எவ்வளவு பாதிப்புக்குட்பட்டது என்பதை அது மறுபடியும் நினைவூட்டியது.
இந்த மோதல் உச்சம் தொட்டபோது, பாகிஸ்தான் "இரட்டைச் சமிக்ஞைகளை" அனுப்பியது.
ஒரு பக்கம் ராணுவ ரீதியாக பதிலடி கொடுக்கும் அதே வேளையில், மறுபக்கம் தேசிய கட்டளை ஆணையக் (என்சிஏ - NCA) கூட்டத்தை அறிவித்தது. நாட்டின் அணு ஆயுதக் களஞ்சியத்தின் கட்டுப்பாடு மற்றும் பயன்பாட்டை என்சிஏ மேற்பார்வையிடுகிறது.
இந்த அறிவிப்பு ஒரு குறியீடா, உத்தி சார்ந்த நகர்வா அல்லது உண்மையான எச்சரிக்கையா என்பது நமக்கு ஒருபோதும் தெரியாது.
இந்த மோதல் பெரியளவில் உருபெறாதவாறு, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ பதற்றத்தைத் தணிக்க முயற்சி செய்ததாகக் கூறப்படும் வேளையில் பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தது.
"அமெரிக்கா வெறும் சண்டை நிறுத்தத்தை மட்டும் ஏற்படுத்தவில்லை. அது ஒரு அணுசக்தி மோதலைத் தவிர்த்தது" என்று இதுகுறித்து அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, திங்கட்கிழமை நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, "அணு ஆயுத மிரட்டலை இந்தியா சகித்துக்கொள்ளாது. அணுசக்தி அச்சுறுத்தலால் இந்தியா பின்னடைவைச் சந்திக்காது" என்றார்.
மேலும், "அணு ஆயுத மிரட்டல்களின் பெயரில் பயங்கரவாதம் தீர்க்கமான மற்றும் துல்லியமான தாக்குதல்களை எதிர்கொள்ளும்" என்றும் மோதி தெரிவித்தார்.
அணு ஆயுத ஒப்பீடு
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (சிப்ரி-Sipri) வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவும் பாகிஸ்தானும் தலா சுமார் 170 அணு ஆயுதங்களை வைத்துள்ளன.
2024 ஜனவரி நிலவரப்படி உலகளவில் மொத்தமாக 12,121 அணு ஆயுதங்கள் உள்ளன என்று சிப்ரி மதிப்பீடு செய்துள்ளது. இதில் 9,585 ஆயுதங்கள் ராணுவக் கையிருப்புகளில் வைக்கப்பட்டுள்ளன. 3,904 ஆயுதங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. அந்த அடிப்படையில், அதற்கு முந்தைய ஆண்டை விட (2023ஐ விட) 60 ஆயுதங்கள் அதிகமாக உள்ளன. அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் சேர்ந்து 8,000-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை வைத்துள்ளன.
அமெரிக்காவின் அல்பானி பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு விவகார நிபுணர் கிறிஸ்டோஃபர் கிளாரி கூறுகையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் செயல்பாட்டிலுள்ள அணு ஆயுதங்களில் பெரும்பாலும் நில அடிப்படையிலான ஏவுகணை படைகளே இருக்கின்றன.
ஆனால், நிலம், வான் மற்றும் கடல் வழியாக வெடிகுண்டை ஏவக்கூடிய அணு ஆயுதங்களை இரு நாடுகளும் உருவாக்கி வருகின்றன என்றார்.
"இந்தியாவிடம் பாகிஸ்தானை விட பெரிய வான்வழிப் படை (அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட விமானம்) இருக்கலாம். பாகிஸ்தானின் கடற்படையைப் பற்றி நமக்கு மிகக் குறைவாகவே தெரியும் என்றாலும், இந்தியாவின் கடற்படை பாகிஸ்தானின் கடல் சார்ந்த அணுசக்திப் படையை விட மேம்பட்டதாகவும், திறமையானதாகவும் இருப்பதாக மதிப்பிடுவது நியாயமானது," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்குவதில் இந்தியா செலவிட்ட "நேரம் அல்லது பணத்தை" போன்ற எவ்விதமான முதலீட்டையும் பாகிஸ்தான் செய்யவில்லை என்பதும், இதனால் கடற்படை அணுசக்தி திறனில் இந்தியாவுக்கு "தெளிவான" முதன்மையிடம் உருவாகியதும் அதற்கான ஒரு காரணம் என்றார் கிளாரி.
இரு நாடுகளின் அணு ஆயுதக் கொள்கை
1998ம் ஆண்டில் அணு ஆயுதங்களை சோதித்ததிலிருந்து, பாகிஸ்தான் ஒருபோதும் அதன் அதிகாரப்பூர்வ அணுசக்தி கோட்பாட்டை முறையாக அறிவிக்கவில்லை.
இதற்கு நேர்மாறாக, இந்தியா 1998 ஆம் ஆண்டு தனது சொந்த அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்ட பிறகு , முதலில் தான் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டது.
ஆனால் இந்த நிலைப்பாடு தளர்வதற்கான அறிகுறிகளையும் இந்தியா வெளிப்படுத்தியுள்ளது.
2003 ஆம் ஆண்டில், ரசாயன அல்லது உயிரியல் ரீதியிலான தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் உரிமையை இந்தியா தக்க வைத்துக் கொண்டது. சில நிபந்தனைகளின் கீழ் முதலில் எதிர்ப்பை தெரிவிக்க இது அனுமதிக்கிறது.
2016 ஆம் ஆண்டில், அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், இந்தியா தனது 'முதலில் (அணு ஆயுதங்களை) பயன்படுத்துவதில்லை' என்ற கொள்கையால் கட்டுப்பாட்டில் இருப்பதாக உணரக்கூடாது என்று பரிந்துரைத்தார், இதனால் அதன் நீண்டகால நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுந்தபோது, இந்தக் கொள்கைகள் குறித்து தெளிவின்மை ஏற்பட்டது. (பின்னர் இது தனது சொந்தக் கருத்து என்று பாரிக்கர் தெளிவுபடுத்தினார்.)

பட மூலாதாரம், AFP via Getty Images
பாகிஸ்தானிடம் முறையாக அறிவிக்கப்பட்ட அணுசக்தி கோட்பாடு இல்லை என்பதால், அந்நாட்டிடம் அணுசக்தி சார்ந்த திட்டம் இல்லை என்று அர்த்தமில்லை.
கார்னகி எண்டோமென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸின் சாதியா தஸ்லீம் கூறுவதன் படி, அதிகாரப்பூர்வ அறிக்கைகள், நேர்காணல்கள் மற்றும் அணுசக்தி சார்ந்த முன்னேற்றங்கள் பாகிஸ்தானின் நிலைப்பாடு குறித்து தெளிவான தடயங்களை வழங்குகின்றன.
பாகிஸ்தானின் அணுசக்தி வரம்பு தெளிவற்ற நிலையில் உள்ளது. ஆனால், முக்கிய பிராந்தியங்களில் இழப்பு, முக்கிய ராணுவ சொத்துக்களின் அழிவு, பொருளாதார ரீதியாக அழுத்தம் அல்லது அரசியலில் உறுதியின்மை போன்ற நான்கு முக்கிய சிக்கல்களை, 2001 ஆம் ஆண்டில் என்சிஏவின் மூலோபாயத் திட்டப் பிரிவின் அப்போதைய தலைவர் காலித் கித்வாய் விவரித்தார்.
2002ம் ஆண்டில், அப்போதைய அதிபர் பர்வேஸ் முஷாரஃப் இதுகுறித்து விளக்கியபோது, "பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் இந்தியாவையே குறிவைக்கின்றன" என்றும் ஆனால் "பாகிஸ்தான் என்ற நாடு முழுவதுமாக ஆபத்தில் உள்ளது என்றால் மட்டுமே அவை பயன்படுத்தப்படும்." என்றும் தெளிவுபடுத்தினார்.
முந்தைய நடவடிக்கைகள் உணர்த்துவது என்ன?
2019 ம் ஆண்டு இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலின்போது, பாகிஸ்தான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராகி வருகிறது என அஞ்சிய, பெயர் குறிப்பிடப்படாத "இந்திய அரசின் உயர் அதிகாரியுடன்" பேசுவதற்காக, இரவு நேரத்தில் திடீரென விழித்தெழுந்ததாக அமெரிக்க முன்னாள் வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ தனது நினைவுக் குறிப்பில் எழுதியுள்ளார்.
அதே நேரத்தில், பாகிஸ்தான் ஊடகங்கள் மூத்த அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்ததை மேற்கோள் காட்டின. "[தேசிய கட்டளை ஆணையம்] என்றால் என்ன, அது எதைக் குறிக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள் என நம்புகிறேன். நாங்கள் உங்களை ஆச்சர்யப்படுத்துவோம் என்று ஏற்கெனவே கூறியுள்ளேன். அந்த ஆச்சர்யத்துக்காக காத்திருக்கவும்... பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பின் விளைவுகளை உணராமலே நீங்கள் போரைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்"என்று அவர் கூறியிருந்தார்.
1999 கார்கில் போரின் போது, பாகிஸ்தானின் அப்போதைய வெளியுறவுச் செயலாளர் ஷம்ஷாத் அகமது, நாட்டின் எல்லைகளை பாதுகாக்க "எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தத் தயங்க மாட்டோம்" என எச்சரித்தார்.
பல ஆண்டுகள் கழித்து, பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை பயன்படுத்தத் தயாராகி வந்துள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்தது என அமெரிக்க அதிகாரி புரூஸ் ரீடல் கூறினார்.

பட மூலாதாரம், AFP via Getty Images
ஆனால் இதுபோன்ற கூற்றுகளின் மீது இரு தப்பினருக்கும் சந்தேகம் உண்டு.
பாகிஸ்தானுக்கான இந்திய முன்னாள் உயர் தூதர் அஜய் பிசாரியா தனது நினைவுக் குறிப்பில், 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதலில் அணு ஆயுதப் பரவல் ஏற்படுவதற்கான அபாயத்தையும், மோதலை அமைதிப்படுத்துவதில் அமெரிக்காவின் பங்கையும் பாம்பியோ மிகைப்படுத்தியதாக எழுதியுள்ளார்.
மேலும் கார்கில் போரின் போது, "இந்திய விமானப்படை தனது எல்லைக்குள் நுழையாது என்பது பாகிஸ்தானுக்குத் தெரியும்" என்பதால், அணுசக்தி மிரட்டலுக்குத் தேவையான அடிப்படை காரணமே இல்லாத சூழலில் அத்தகைய மிரட்டலுக்கே இடமில்லை என பாகிஸ்தானிய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்."
"எந்தவொரு மோதலும் அதிகரிக்கக்கூடும் என்பதை மூலோபாய சமிக்ஞை உலகுக்கு நினைவூட்டுகிறது. மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணு ஆயுதங்களை கொண்டுள்ளதால், இவ்வகை மோதல்களில் ஆபத்துகள் அதிகம். ஆனால், அதனால் இரு நாடுகளும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கிறார்கள் எனப் பொருளாகாது," என்று லாகூரைச் சேர்ந்த பாதுகாப்பு நிபுணர் எஜாஸ் ஹைதர் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆனால், அணுசக்தி மோதல் தற்செயலாகவும் ஏற்படக்கூடும். "இது மனித தவறு, அணு ஆயுதங்கள் அல்லது அது தொடர்பான கட்டுப்பாட்டு அமைப்புகளை அணுகுபவர்கள் அனுமதியின்றி பயன்படுத்துதல் (ஹேக்கர்கள்), பயங்கரவாதிகள், கணினி செயலிழப்புகள், செயற்கைக்கோள்களிலிருந்து பெறப்பட்ட தவறான தரவுகள் மற்றும் நிலையற்ற தலைவர்கள் போன்ற காரணங்களால் ஏற்படக்கூடும்" என்று உலகளாவிய விஞ்ஞானிகள் குழுவின் 2019 ஆம் ஆண்டுக்கான முக்கிய ஆய்வறிக்கையின் முதன்மை ஆசிரியரான ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆலன் ரோபோக் பிபிசியிடம் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
மார்ச் 2022 இல், இந்தியா தற்செயலாக அணு ஆயுதங்களை ஏவக்கூடிய ஒரு குரூஸ் ஏவுகணையை ஏவியது .
அது பாகிஸ்தான் எல்லைக்குள் 124 கிமீ (77 மைல்) தூரம் பயணித்து மோதியது. இதனால் பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியா இரண்டு நாட்கள் வரை ராணுவ ஹாட்லைனைப் பயன்படுத்தவோ அல்லது பொது அறிக்கையை வெளியிடவோ தவறியதாகவும் பாகிஸ்தான் கூறியது.
பதற்றங்கள் அதிகரித்தபோது இது நடந்திருந்தால், இந்தச் சம்பவம் கடுமையான மோதலாக மாறியிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். (சில மாதங்களுக்குப் பிறகு, "தற்செயலாக ஏவுகணையை ஏவியதற்காக" இந்திய அரசாங்கம் மூன்று விமானப்படை அதிகாரிகளை பணிநீக்கம் செய்தது.)
ஆனால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அணு ஆயுதப் போரின் ஆபத்து "ஒப்பீட்டளவில் சிறியதாக" இருப்பதாக கிளாரி கூறுகிறார்.
"எல்லையில் பெரிய தரைவழிப் போர் இல்லாத வரை, அணு ஆயுதப் பயன்பாட்டின் ஆபத்துகள் ஒப்பீட்டளவில் சிறியதாகவும் சமாளிக்கக்கூடியதாகவும் இருக்கும்" என்று அவர் கூறினார்.
"தரைவழிப் போரில், 'பயன்படுத்து அல்லது இழந்துவிடு' எனும் சிக்கல், உங்கள் நிலங்கள் எதிரியால் கைப்பற்றப்படுவதற்கான சாத்தியக்கூறுகளால் ஏற்படுகிறது." ('பயன்படுத்து அல்லது இழந்துவிடு' என்பது, எதிரியின் முதல் தாக்குதலில் அழிக்கப்படுவதற்குள், அணு ஆயுதம் கொண்ட நாடு தனது ஆயுதங்களை பயன்படுத்தும் அழுத்தத்தைக் குறிக்கிறது.)

பட மூலாதாரம், AFP via Getty Images
"ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலுக்குப் பிறகு, அணு ஆயுதத்தை உபயோகிக்கக் கூடாது எனும் தடையை முதல் முறையாக மீறிய நாடு என்று இந்தியாவோ அல்லது பாகிஸ்தானோ முத்திரை குத்தப்படுவதை விரும்பவில்லை" என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஹூவர் நிறுவனத்தின் மூத்த அறிஞர் சுமித் கங்குலி பிபிசியிடம் கூறுகிறார்.
"மேலும், அணு ஆயுதப் பயன்பாட்டில் ஈடுபடும் எந்தவொரு தரப்பினரும் கணிசமான பதிலடியை எதிர்கொள்ள நேரிடும். ஏற்றுக்கொள்ள முடியாத உயிரிழப்புகளைச் சந்திக்க நேரிடும்" என்றும் கங்குலி பிபிசியிடம் கூறினார்.
அதே நேரத்தில், இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் அணு ஆயுதங்களை பலப்படுத்தி வருவதாகத் தெரிகிறது.
புதிய ஏவுகணை விநியோக அமைப்புகள் உருவாகிக் கொண்டிருக்கும் நிலையில், நான்கு புளூட்டோனியம் உலைகள் மற்றும் விரிவடைந்து வரும் யுரேனியம் செறிவூட்டல் வசதிகளைக் கொண்டு, பாகிஸ்தானின் அணு ஆயுத களஞ்சியம் 2020களின் இறுதிக்குள் சுமார் 200 போர்க்கலங்களை (warheads) எட்டக்கூடும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் அணு தகவல் திட்டத்தால் ஆராய்ச்சி செய்யப்பட்ட தி நியூக்ளியர் நோட்புக் தெரிவித்துள்ளது.
மேலும், 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவிடம் சுமார் 680 கிலோ ஆயுதத் தரம் மிக்க புளூட்டோனியம் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டது. இது தோராயமாக 130 முதல் 210 அணு ஆயுதங்கள் உருவாக்க போதுமான அளவு என்று சர்வதேச பிளவுபடும் பொருட்கள் குழு (International Panel on Fissile Materials) தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியான நெருக்கடிகள் மற்றும் மோதலுக்கான அபாயங்களும் இருந்தாலும், இதுவரை இரு நாடுகளும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அணு மோதலைத் தவிர்த்து வருகின்றன. "தடுப்புச் செயல்முறை இன்னும் வேலை செய்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தானியர்கள் செய்ததெல்லாம் வழக்கமான தாக்குதல்களுக்கு அவர்களின் சொந்த வழக்கமான தாக்குதல்களால் பதிலளிப்பது தான்" என்று இஸ்லாமாபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட அரசியல் ஆய்வாளர் உமர் ஃபரூக் குறிப்பிடுகிறார்.
ஆயினும், அணு ஆயுதங்களின் இருப்பே ஒரு நிலையான மற்றும் தொடர்ச்சியான அபாயத்தை உருவாக்குகிறது.
தலைவர்கள் எவ்வளவு அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் நோக்கங்கள் எவ்வளவு பொறுப்புடன் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், அந்த ஆபத்தை முற்றிலும் தவிர்க்க முடியாது.
"அணு ஆயுதங்கள் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், ஏற்றுக்கொள்ள முடியாத அளவிலான ஆபத்து எப்போதும் இருக்கும்," என்று லாப நோக்கற்ற ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் பரவல் தடை மையத்தின் (Center for Arms Control and Non-Proliferation) மூத்த கொள்கை இயக்குநர் ஜான் எராத் பிபிசியிடம் கூறினார்.
"இந்திய அரசும் பாகிஸ்தான் அரசும் இதற்கு முன் இத்தகைய சூழ்நிலைகளை சமாளித்துள்ளன, எனவே தற்போதைய ஆபத்து குறைவாக இருக்கலாம். ஆனால் அணு ஆயுதங்களைப் பொறுத்தவரை, ஒரு சிறிய ஆபத்து கூட மிகப் பெரியது."
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












