இந்தியாவின் புதிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவயின் முழு பின்னணியும், முக்கிய தீர்ப்புகளும்

பட மூலாதாரம், X/@rashtrapatibhvn
- எழுதியவர், பாக்யஸ்ரீ ரவுத்
- பதவி, பிபிசி செய்தியாளர்
பூஷன் ராமகிருஷ்ணா கவய் எனும் பி.ஆர்.கவய், இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக இன்று (மே 14) பதவியேற்றார். சஞ்சீவ் கன்னா ஓய்வைத் தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதியாக அவர் பொறுப்பேற்றுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் பி.ஆர்.கவய்க்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் பிரதமர் மோதி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நீதிபதி பி.ஆர்.கவய் நாட்டின் இரண்டாவது தலித் தலைமை நீதிபதியாக இருப்பார். நீதிபதி கவய்க்கு முன்பு, நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் 2007 இல் முதல் தலித் தலைமை நீதிபதியாக ஆனார்.
உச்ச நீதிமன்றத்தின் சீனியாரிட்டி பட்டியலில் நீதிபதி கவாயின் பெயர் முதலிடத்தில் உள்ளது, எனவே நீதிபதி கன்னா அவரது பெயரை முன்மொழிந்துள்ளார்.
நாக்பூரில் இருந்து இந்திய தலைமை நீதிபதியாக பதவியேற்கும் மூன்றாவது நபர் நீதிபதி பி.ஆர்.கவய் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு முன்பு, நாக்பூரைச் சேர்ந்த நீதிபதி ஷரத் பாப்டே மற்றும் நீதிபதி எம். ஹிதாயத்துல்லா ஆகியோர் இந்தப் பதவியை வகித்துள்ளனர்.
நீதிபதி பூஷன் கவாயின் பின்னணி மற்றும் அவர் வழங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளை விரிவாகப் பார்ப்போம்.

பட மூலாதாரம், ANI
தலைமை நீதிபதி பி.ஆர். கவய் யார்?
1960 நவம்பர் 24 அன்று மகாராஷ்டிராவின் அமராவதி நகரில் பிறந்த தலைமை நீதிபதி பி.ஆர். கவய் , கேரளா மற்றும் பிஹார் மாநில ஆளுநராக பணியாற்றியுள்ள குடியரசுக் கட்சித் தலைவர் ஆர்.எஸ். கவாயின் மகன் ஆவார்.
அமராவதியில் பள்ளிக் கல்வியை முடித்த அவர், சட்டம் படிக்க மும்பைக்கு சென்றார்.
1985 மார்ச் 16-ஆம் தேதி பார் கவுன்சிலில் உறுப்பினரான பூஷன் கவய், 1987 வரை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மற்றும் முன்னாள் அட்வகேட் ஜெனரலுடன் பணியாற்றினார்.
1987ஆம் ஆண்டில் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் தனியாக பயிற்சியைத் தொடங்கிய அவர், 1990ம் ஆண்டில் நாக்பூருக்கு குடிபெயர்ந்துவிட்டார். பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பிரிவில் வழக்கறிஞராக தனது பணியைத் தொடர்ந்தார்.
நாக்பூர் மற்றும் அமராவதி நகராட்சிகளுக்கும், அமராவதி பல்கலைக் கழகத்திற்கும் சட்ட ஆலோசகராக அவர் பணியாற்றியுள்ளார்.
ஆகஸ்ட் 1992 முதல் ஜூலை 1993 வரை, பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சில், அரசு உதவி வழக்கறிஞர் மற்றும் அரசு கூடுதல் வழக்கறிஞர் பதவியை வகித்தார்.
2000 ஜனவரி 17-ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சிற்கு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார், பின்னர் 2003 நவம்பர் 14 -ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியானார்.

2005 நவம்பர் 12 முதல் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக பணியாற்றும் போது பல முக்கியமான தீர்ப்புகளை வழங்கினார். 14 ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய பிறகு, 2019 மே 24-ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
இன்று இந்திய தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள கவய் 6 மாத பணிக்குப் பிறகு 2025 நவம்பர் 23இல் ஓய்வு பெறுவார்.
நீதிபதி எம். ஹிதாயத்துல்லா மற்றும் நீதிபதி ஷரத் பாப்டே ஆகியோரைத் தொடர்ந்து, இந்திய நீதித்துறையில் மிக உயர்ந்த பதவிக்கு உயரும் நாக்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் மூன்றாவது உறுப்பினர் கவய் என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், ANI
நீதிபதி பூஷன் கவயின் தந்தை ஆர்.எஸ். கவாயின் பின்னணி
சமூக ஆர்வலர் மற்றும் அரசியல் தலைவர் ஆர்.எஸ். கவய் என்று அறியப்படும் ராமகிருஷ்ணா சூர்யபன் கவாயின் மகன் தலைமை நீதிபதி பூஷன் கவய்.
ஆர்.எஸ். கவய் ஆரம்பத்தில் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதற்கு முன்பு சமூகப் பணிகளில் ஈடுபட்டார். அரசியல் பின்னணி ஏதும் இல்லை என்றாலும், அரசியல் அரங்கில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்து இந்திய குடியரசுக் கட்சியின் முக்கிய தலைவராக உயர்ந்த ராமகிருஷ்ணா சூர்யபன் கவய், 1972 ஆம் ஆண்டு அக்கட்சியின் தலைவரானார்.
சட்ட மேலவை உறுப்பினராகவும், அமராவதி தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும், மாநிலங்களவை எம்.பி.யாகவும் பணியாற்றியவர் ஆர்.எஸ். கவய்.
கேரளா மற்றும் பிஹார் ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.எஸ். கவய், இந்திய அரசியலமைப்பை நன்கு அறிந்தவர்களில் ஒருவர் என்று பாராட்டப்படுபவர்.
தீக்ஷாபூமி நினைவுக் குழுவின் தலைவராகவும் இருந்த ஆர்.எஸ். கவய்தனது இறுதி நாட்களில், உடல்நிலை சரியில்லாமல் நாக்பூரில் தனது மகன் நீதிபதி பூஷன் கவயுடன் வசித்தார். ஆர்.எஸ். கவய், 2015 இல் நாக்பூரில் காலமானார்.

பட மூலாதாரம், ANI
பூஷன் கவய் வழங்கிய முக்கிய தீர்ப்புகள்
உச்ச நீதிமன்ற நீதிபதியாக, நீதிபதி பூஷன் கவய் பல வரலாற்று சிறப்புமிக்க வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை 2023 ஆம் ஆண்டில் உறுதி செய்த உச்ச நீதிமன்ற அமர்வில் பி.ஆர். கவாயும் இடம் பெற்றிருந்தார்.
பண மதிப்பிழப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பை வழங்கும் போது, "இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் பிரிவு 26(2) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களை அனைத்து வகையான ரூபாய் நோட்டுகளையும் தடை செய்யப் பயன்படுத்தலாம். இந்தப் பிரிவில் பயன்படுத்தப்படும் 'ஏதேனும்' என்ற வார்த்தையை குறுகிய அர்த்தத்தில் புரிந்துக் கொள்ள முடியாது" என்று நீதிபதி கவய் கூறியிருந்தார்.
2024 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) இடஒதுக்கீடு கட்டமைப்பிற்குள் துணை வகைப்பாடு அரசியலமைப்பு ரீதியாக அனுமதிக்கப்படுகிறது என்ற ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. நீதிபதி பூஷன் கவய் இந்த அமர்வில் இடம் பெற்றிருந்தார்.
அப்போது, நீதிபதி கவய் உட்பட நான்கு நீதிபதிகள், SC மற்றும் ST இடஒதுக்கீடுகளுக்குள் கிரீமி லேயர் விதியை அறிமுகப்படுத்தலாம் என பரிந்துரைத்தனர்.
"அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள சமத்துவக் கொள்கையை நிறுவுவதில் இந்த நடவடிக்கை முக்கியமானதாக இருக்கலாம். இருப்பினும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) வழக்கைப் போலவே, பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) ஆகியோருக்கும் கிரீமி லேயரை செயல்படுத்துவதற்கான குறிப்பிட்ட அளவுகோல்களை அரசாங்கம் நிறுவ வேண்டும். OBC மற்றும் பட்டியல் சாதியினர், பழங்குடியினருக்கான அளவுகோல்கள் வேறுபடலாம்" என்று கவய் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், ANI
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்த போது, அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
டிசம்பர் 2023 இல், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்வதற்கான மத்திய அரசின் நடவடிக்கையை உறுதி செய்தது. வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த அரசியலமைப்பு அமர்வில் நீதிபதி பூஷன் கவாயும் இடம் பெற்றிருந்தார்.
மற்றொரு குறிப்பிடத்தக்க தீர்ப்பில், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வானது தேர்தல் பத்திரத் திட்டத்தை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்தது.
இந்தத் திட்டத்தின் கீழ் நன்கொடையாளர்களின் பெயர் வெளியிடப்படாதது அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a) இன் கீழ் குடிமக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதாக தீர்ப்பு வழங்கிய அந்த அமர்வின் ஐந்து நீதிபதிகளில் நீதிபதி பி.ஆர். கவய் ஒருவராக இருந்தார்.
உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிப்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கையாண்ட 2 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு நீதிபதி கவய் தலைமை தாங்கினார்.
மனுக்களை விசாரித்த நீதிபதி, உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் சொத்துகளை அழிப்பது சட்டவிரோதமானது என்று கூறி, இடிக்கும் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய நடைமுறை பாதுகாப்புகளை உச்ச நீதிமன்றம் வகுத்தது.
முக்கியமாக, இந்த வழிகாட்டுதல்கள் வழக்கில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் பொருந்தும் என்றும், இந்த விதிகளை செயல்படுத்துவதற்கு பொருத்தமான சுற்றறிக்கைகளை வெளியிடுமாறும் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் அந்த அமர்வு உத்தரவிட்டது.

பட மூலாதாரம், ANI
ராகுல் காந்தி வழக்கு
ராகுல் காந்தி சம்பந்தப்பட்ட அவதூறு வழக்கில், சூரத் அமர்வு நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இருப்பினும், அதிகபட்ச தண்டனையை வழங்குவதற்கான குறிப்பிட்ட காரணங்களை கீழ் நீதிமன்றம் வழங்கவில்லை என்பதைக் குறிப்பிட்டு, உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்தது.
இந்த வழக்கு நீதிபதி பூஷன் கவய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, காங்கிரஸ் கட்சியுடனான தனது குடும்பத்தினரின் நீண்டகால தொடர்பைக் காரணம் காட்டி, தானாக முன்வந்து வழக்கில் இருந்து விலக முன்வந்தார் நீதிபதி கவய்.
"எனது தந்தை காங்கிரஸ் உறுப்பினராக இல்லை, ஆனால் அவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடையவர். காங்கிரஸ் ஆதரவுடன், அவர் சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆனார். எனது சகோதரரும் அரசியலில் தீவிரமாக உள்ளவர், அவர் காங்கிரஸுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பவர். எனவே, இந்த வழக்கை நான் விசாரிக்க வேண்டுமா இல்லையா என்பதை நான் ஆலோசிக்க வேண்டும்." என்று அவர் சொல்லியிருந்த போதிலும், ராகுல் காந்தியின் வழக்கை விசாரித்த அமர்வில் அவர் தொடர்ந்தார்.

பட மூலாதாரம், ANI
பிரசாந்த் பூஷண் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
இந்திய தலைமை நீதிபதி குறித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சமூக ஊடக தளமான எக்ஸ்-இல் இட்டபதிவு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவர் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவரது கருத்துகள் அவமதிப்புக்கு சமமானவை என்று முடிவு செய்து, இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது நீதிமன்றம். இந்த வழக்கை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பூஷன் கவய்மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
டீஸ்டா செடல்வாட், மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்
நீதிபதி பூஷன் கவய் தலைமையிலான சிறப்பு அமர்வு 2023 ஆம் ஆண்டு சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட்டுக்கு ஜாமீன் வழங்கியது. 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக சதித்திட்டம் தீட்டப்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு 2024 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிபதிகள் பூஷன் கவய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்றது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, 17 மாதங்கள் காவலில் இருந்த பிறகு சிசோடியா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
கவய் முன்னுள்ள முக்கியமான வழக்குகள்
1991 ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் செல்லுபடித்தன்மையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தற்போது உச்ச நீதிமன்றம் விசாரணையில் உள்ளது. 2024 ஆம் ஆண்டில், இந்த சட்டம் தொடர்பான குறிப்பிடத்தக்க இடைக்கால உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.
புதிய வழக்குகள் தாக்கல் செய்வதற்கும், ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளில் உள்ள எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற விஷயங்களில் கீழமை நீதிமன்றங்கள் எந்த உத்தரவுகளையும் பிறப்பிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பட மூலாதாரம், ANI
தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. கன்னா ஓய்வு பெற்றுள்ளதால், தற்போதைய தலைமை நீதிபதியான நீதிபதி பி.ஆர். கவய் முன் இந்த வழக்குகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கவாயின் பதவிக் காலத்தில் அவர் தலைமை தாங்கும் முக்கிய வழக்குகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு நிறைவேற்றிய வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கும் சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வே விசாரித்து வந்தது. இதுவும் பூஷன் கவய் விசாரிக்கும் முக்கியமான வழக்காக இருக்கும்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












