சண்டையை விடுத்து முதலில் சமாதானம் வேண்டியது யார்? இந்தியா, பாகிஸ்தான் கூறியது என்ன?
இந்தியா பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்தது குறித்து இந்தியாவில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால், இந்தியா தனது எந்தவொரு அறிவிப்பில் அமெரிக்கா பற்றி குறிப்பிடவில்லை. அதே சமயம் பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை இந்திய நேரப்பபடி மாலை 5.25 மணிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் தளத்தில், அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த, இரவு நீண்ட நேரம் நீடித்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என பதிவிட்டிருந்தார்.
இதனை உடனே மறுபகிர்வு செய்த அமெரிக்க துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ், இந்திய- பாகிஸ்தான் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவையும் வெளியிட்டார்.
அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோவும் இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் மாலை 5.37 மணியளவில் அறிவிப்பு வெளியிட்டார். கடந்த 48 மணி நேரத்தில் நானும் துணை அதிபர் வான்ஸும் இந்திய பிரதமர் மோதி, வெளியுறவுத்துறை அமைச்சர், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், பாகிஸ்தான் ஆர்மி ஜெனரல் ஆஸிம் முனீர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோருடன் கலந்துரையாடினோம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன என்பதையும் நடுநிலையான இடத்தில் வைத்து தமது பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்றார்.
அதற்கு அடுத்த நிமிடம், இந்திய நேரப்படி மாலை 5.38 மணிக்கு பாகிஸ்தான் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் தனது எக்ஸ் பக்கத்தில், 'பாகிஸ்தானும் இந்தியாவும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. பாகிஸ்தான் எப்போதும் தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யாமல், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருகிறது!' என அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்தியா தரப்பில் மாலை 5.55 மணிக்கு செய்தியாளர்களிடம் பேசிய, வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, சண்டை நிறுத்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். பாகிஸ்தானின் DGMO இந்தியாவின் DGMO-வை பிற்பகல் 3.35 மணிக்கு தொடர்புகொண்டார். இரு தரப்பினரும் தரை, வான் மற்றும் கடல் பரப்பில் இருந்து மேற்கொள்ளும் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் இந்திய நேரப்படி 5 மணி முதல் நிறுத்துவதாக உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பினருக்கும் இது குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவரது உரையில் அமெரிக்கா பற்றி எந்த குறிப்பும் இல்லை.
அதே நாளில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மே 10ஆம் தேதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், சண்டை நிறுத்தத்தில் முக்கிய பங்காற்றிய அதிபர் டிரம்புக்கு நன்றி என குறிப்பிட்டார்.
இந்தியா பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது, இந்தியாவில் பேசுபொருளானது. குறிப்பாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் பிரதமர் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என கோரியது.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் முப்படை செய்தியாளர்களை சந்தித்தது. அதில் பாகிஸ்தானில் பயங்கரவாத கட்டமைப்பு மீதான இலக்குகள் துல்லியமாக தாக்கப்பட்டன என்றும் கராச்சி உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை தாக்க படைகள் தயாராக நிலைநிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா வேண்டும் கேள்விக்கு பதிலளித்த ஏர் மார்ஷல் ஏகே பார்தி, பயங்கரவாத முகாம்களை தாக்கும் நமது இலக்கை அடைந்துவிட்டோமா என்றால், ஆம். அடைந்துவிட்டோம் என்றார்.
மறுநாள் திங்கள் கிழமை நடந்த செய்தியாளர்களுக்கான சந்திப்பில், இந்தியாவின் சண்டை பயங்கரவாதிகளுடன்தான், ராணுவத்துடன் அல்ல. ஆனால் பயங்கரவாதிகளுக்காக தலையிட பாகிஸ்தான் ராணுவம் தலையிட்டது பரிதாபத்துக்குரியது என்றார் ஏர் மார்ஷல் ஏகே பார்தி.
அதன் பின்னர் இரவு இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதி இரவு எட்டு மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது. இந்திய பாகிஸ்தான் மோதல் தொடங்கியதில் இருந்து பிரதமர் நேரடியாக உரையாற்றாத நிலையில், அவரது உரை உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் மோதி உரையாற்றுவதற்கு சற்று முன், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது அரசாங்கம் தான் இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் ஏற்படாமல் தடுத்ததாக கூறினார். சண்டையை தான் நிறுத்தியது எப்படி என்றும் அவர் தெரிவித்தார். அதில் வர்த்தகத்தை கையில் எடுத்து போரை நிறுத்தியாக கூறினார் .
இந்த சூழலில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது சண்டை நிறுத்தம் எவ்வாறு எட்டப்பட்டது என அவர் விளக்கினார். அதில் இந்திய ராணுவத்தின் ஆக்ரோஷமான நடவடிக்கைகள் பாகிஸ்தான் தப்பிக்கும் வழியை தேடியதாக குறிப்பிட்டார்.
"இந்தியாவின் ஆக்ரோஷமான நடவடிக்கைக்குப் பிறகு, தப்பிப்பதற்கான வழிகளைத் தேடத் தொடங்கியது பாகிஸ்தான். பதற்றத்தைக் குறைக்குமாறு பாகிஸ்தான் முழு உலகத்திடமும் வேண்டுகோள் விடுத்து வந்தது. மோசமாக தாக்கப்பட்ட பிறகு, மே 10 ஆம் தேதி மதியம், பாகிஸ்தான் இராணுவம் நமது டிஜிஎம்ஓவைத் தொடர்பு கொண்டது. அதற்குள் பயங்கரவாதத்தின் உள்கட்டமைப்பை பெரிய அளவில் நாம் அழித்துவிட்டோம், பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், பாகிஸ்தானின் மையப்பகுதியில் நிறுவப்பட்ட பயங்கரவாத தளங்களை இடிபாடுகளாக மாற்றிவிட்டோம். எனவே, சண்டையை நிறுத்த பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் இருந்து இனி பயங்கரவாத நடவடிக்கையோ அல்லது ராணுவ நடவடிக்கையோ இருக்காது என்று கூறப்பட்டது. எனவே இந்தியாவும் அதை ஏற்றுக் கொண்டது. அதனால்தான், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மற்றும் ராணுவ நிலைகளுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையை நாம் நிறுத்தி வைத்துள்ளோம். எதிர்வரும் நாட்களில், பாகிஸ்தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை, அதன் அணுகுமுறையின் அடிப்படையில் அளவிடுவோம்." என்று அவர் கூறினார்.
தனது பேச்சில், அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததாக எங்கும் மோதி குறிப்பிடவில்லை. பாகிஸ்தான்தான் சண்டை நிறுத்தத்திற்காக தொடர்பு கொண்டதாக குறிப்பிட்டார்.
இந்நிலையில், இன்றைய தினம் பாகிஸ்தான் மோதியின் கருத்தை மறுத்துள்ளது. அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தப் போர் நிறுத்தம், பதற்றத்தைக் குறைக்க வேண்டும் என்ற செய்தியுடன் எங்களைத் தொடர்பு கொண்ட பல நட்பு நாடுகளின் உதவியின் விளைவாகவே எட்டப்பட்டது. விரக்தியிலும் கையறு நிலையிலும் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை நாடியதாக சித்தரிப்பது மற்றொரு அப்பட்டமான பொய்யாகும்." என தெரிவித்துள்ளது.
அதே நேரம், இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் வர்த்தகம் குறித்து எதுவும் இடம்பெறவில்லை என கூறியுள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



