பசுவை ஏன் கொல்லக் கூடாது? காங்கிரஸின் கேள்வியால் போராட்டத்தில் இறங்கிய கர்நாடக பாஜக - என்ன நடந்தது?

கர்நாடகா பசுவதை விவகாரம்

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி ஹிந்தி, பெங்களூரு

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்று இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையவில்லை. அதற்குள் மாநில அமைச்சர் ஒருவர் பசுவதை தொடர்பாக கூறியுள்ள கருத்து, ஆளுங்கட்சிக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

“எருதுகளை கொல்லலாம் என்று சொன்னால், பசுக்களை ஏன் வதைக்க கூடாது? என்று மாநில அமைச்சர் எழுப்பியுள்ள கேள்வி, கர்நாடக அரசியலில் அனலை கிளப்பி உள்ளது.

பசுவதை மற்றும் கால்நடை பாதுகாப்பு சட்டம் 2020இல், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு திருத்தங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், இரண்டு நாட்கள் மாநிலம் தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது பாஜக.

“இந்த விஷயத்தில் மாநில அரசு மேற்கொண்டு எவ்வாறு செயல்படும் என்பதை பொறுத்து எங்களின் போராட்டம் அமையும்” என்று பாஜக செய்தித் தொடர்பாளர் எம்ஜி மகேஷ் பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.

ஏழாண்டுகள் சிறை

கா்நாடகாவில் ஆட்சியில் இருந்த முந்தைய பாஜக அரசு, பசு வதையை முற்றிலும் தடை செய்யும் நோக்கத்தில் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி, பசுவதையில் ஈடுபடுவோருக்கு 5000 ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும் என்பதுடன், அவர்கள் மூன்றாண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அனுபவிக்க நேரிடும்.

தொடர்ந்து இந்த குற்றச் செயலை மேற்கொள்பவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையுடன், ஒரு லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் இந்த சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது.

அமைச்சரின் கேள்வியும், சர்ச்சையும்

இந்த நிலையில், கர்நாடக மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே. வெங்கடேஷ் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “வயதான கால்நடைகளை பராமரிப்பதிலும், இறந்த கால்நடைகளை அப்புறப்படுத்துவதிலும் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, பசுவதை தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படுமா?” என்று செய்தியாளர் ஒருவர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் அளித்த பதில், தற்போது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பசுவதை தடையால் விவசாயிகள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர் என்பது உண்மைதான் என்று கூறிய அமைச்சர் வெங்கடேஷ், “மலட்டு எருதுகளையும், காளைகளையும் ஒருவர் கொல்லலாம் என்றால், பசுக்களை கொல்வதில் மட்டும் என்ன தவறு உள்ளது?” என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

இறந்த மாடுகளின் உடலை அப்புறப்படுத்த புல்டோசர்களை வாடகைக்கு எடுக்க வேண்டிய நிலை தமக்கே ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, பசுவதை மற்றும் கால்நடை பராமரிப்பு சட்டத்தில் உரிய திருத்தங்களை கொண்டு வர மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் வெங்கடேஷ் கூறியிருந்தார்.

பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்

அமைச்சரின் இந்த கருத்துக்கு பாஜகவைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“இந்தியர்களுக்கும், பசுக்களுக்கும் இடையேயான தொடர்பு உணர்வுபூர்வமானது. அவர்கள் பசுவை தாயாக கருதி வணங்குகின்றனர்” என்று கூறியுள்ளார் மாநில முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை.

“ வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு காங்கிரஸ் இந்த முயற்சியை மேற்கொள்கிறது. ஆனால், மத உணர்வுகளுக்காக மட்டுமின்றி, அதன் தனிப்பட்ட பயன்பாடுகளுக்காகவும் பசுக்கள் மதிக்கப்படுகின்றன. குடகு மாவட்டத்தில் அமைந்துள்ள குஷால்நகர் -ஹசன் சாலையில் பேருந்து விபத்தில் சிக்கி மாடுகள் இறப்பதை தடுக்கும் நோக்கில், அந்த பகுதி மக்கள் கல்வெட்டைக் கூட வணங்குகின்றனர்” என்று கூறினார் பாஜக செய்தித் தொடர்பாளர் மகேஷ்.

“பசுவதைக்கு அனுமதி அளிப்பதன் மூலம் விவசாயிகளின் பொருளாதார நிலை மேம்படும் என்ற வாதம் ஏற்புடையது அல்ல. ஹிந்துக்களில் சில பிரிவினரும் மாட்டிறைச்சியை உண்கின்றனர் என்பது போன்ற விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் நாம் பசுவதையை தடுத்தே ஆக வேண்டும்” என்றும் மகேஷ் கூறினார்.

மைசூர் மகாராஜா விதித்த நிபந்தனை

முதல்வர் சித்தராமையா

பட மூலாதாரம், Getty Images

இந்திய ஒன்றியத்துடன் இணைந்த தருணத்திலும் மைசூர் சமஸ்தானம் பசுவதைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்தது என்றும் சுட்டிக்காட்டினார் மகேஷ்.

“எங்கள் மாநிலத்தில் பசுவதை கூடாது என்பது தான் சமஸ்தானங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டபோது, மைசூர் மகாராஜா மத்திய அரசுக்கு வைத்த ஒற்றை நிபந்தனை” என்று மகேஷ் தெரிவித்தார்.

முதல்வர் சித்தராமையா கேள்வி

இந்த விவகாரத்தில் ஆட்சேபம் தெரிவிக்க பாஜகவுக்கு தார்மீக ரீதியாக அதிகாரம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. இந்த விஷயத்தை அமைச்சரவையில் விவாதிப்பது குறித்து அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தை முன்வைத்து, தலைநகர் பெங்களூரில் பாஜக இன்று நடத்திய போராட்டங்கள் குறித்து, முதல்வர் சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “விவசாயக் கடன் தள்ளுபடி, நீர்ப்பாசனத்திற்கு 1.5 லட்சம் கோடி ரூபாய், விவசாயத்திற்கு 10 மணி நேரம் மின்சாரம் என்பன போன்ற வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை. ஆட்சியில் இருந்தபோது அரசுத் திட்டங்களில் கமிஷன் பார்த்து, மாநிலத்தை கொள்ளையடித்த பாஜகவுக்கு இதுபோன்ற பிரச்சனைகளை எழுப்ப என்ன தார்மீக உரிமை இருக்கிறது?” என்று சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார்.

பசுவதை விவகாரத்தில் பாஜகவும், காங்கிரஸும் மாறுபட்ட கருத்துகளை கொண்டிருக்க, இதில் அரசியல் ஆய்வாளரின் பார்வை வேறுவிதமாக உள்ளது.

பசுவதை

பட மூலாதாரம், Getty Images

மகாபாரத காலத்தில் மாட்டிறைச்சி

“பாஜக ராஜகுருவாக கருதும் எஸ்.எல்.பைரப்பா, ‘பூர்வா’ எனும் பல தொகுப்புகள் கொண்ட புத்தகத்தை எழுதியுள்ளார். இந்திய மொழிகள் பலவற்றிலும் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதில் வரும் கதையில் அவர் பாண்டவர்களை எப்படி சந்திப்பது என்பது குறித்து விவரிக்கிறார். ரிஷிகள் சிலர் பாண்டவர்களை சந்திக்க சென்றபோது, திரௌபதி அவர்கள் அனைவருக்கும் பசுக் கன்று இறைச்சியை பரிமாறினார் என்று பைரப்பா குறிப்பிட்டுள்ளார். மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் மகாபாரத காலத்தில் இருந்தே உள்ளது என்பதே இந்த குறிப்பின் அர்த்தம்” என்று கூறுகிறார் அரசியல் ஆய்வாளரான எம்.கே.பாஸ்கர் ராவ்.

“உணவு என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்த விஷயம். யானை மாமிசம் உண்ணாது. ஆனால் சிங்கமோ, புலியோ இறைச்சியை தவிர எதையும் சாப்பிடாது. இவ்வாறு விலங்குகள் கூட தங்களுக்கு விருப்பமான உணவை உட்கொள்கின்றன.

கர்நாடகாவில் இன்றைய அரசியல் சூழலில் பாஜக எழுப்புவதற்கு எந்த பிரச்னையும் இல்லை. அதனால் இந்த விஷயத்தை அந்தக் கட்சி கையில் எடுத்துள்ளது. அமைச்சர் வெங்கடேஷ் அதற்கான வாய்ப்பை அளித்துள்ளார்” என்றும் விமர்சித்துள்ளார் பாஸ்கர் ராவ்.

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை பேராசிரியரான ஏ. நாராயணா பிபிசி ஹிந்தியிடம் கூறியபோது, “கர்நாடக மாநில அரசு இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதற்கு முன்பு, பாஜக இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளது. காங்கிரஸ் தலைவர்களின் அறிக்கையில் இடம்பெறும் அம்சங்களை திரித்து, அதை வைத்து போராட்டம் நடத்துவது பாஜக பின்பற்றும் வழக்கமான நடைமுறையாக உள்ளது. எருமை மாடுகளை வெட்டும் போது, மலட்டு மாடுகளை ஏன் வெட்டக்கூடாது? என்பதுதான் அமைச்சர் வெங்கடேஷ் எழுப்பியுள்ள கேள்வி என்கிறார் நாராயணா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: