பிரிட்டன் - இந்தியா உறவை வலுப்படுத்துவதில் பிரதமர் கியர் ஸ்டாமர் சந்திக்கப் போகும் சவால்கள்

பிரிட்டன்: பிரதமர் கியர் ஸ்டாமர் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த முடியுமா? சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜுபைர் அகமது
    • பதவி, பிபிசி இந்திக்காக லண்டனில் இருந்து

ஒரு போட்டி துவங்குவதற்கு முன்பே ஓர் அணி தோல்வியை உணர்ந்தால் அது அதன் ஆதரவாளர்களுக்கு முழுமையாக மனச்சோர்வை அளித்துவிடும். ஜூலை 4 அன்று பிரிட்டனில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்த கன்சர்வேடிவ் கட்சியின் ஆதரவாளர்களும் இதையே உணர்ந்திருக்கக்கூடும்.

தேர்தல் துவங்குவதற்கு முன்பே கன்சர்வேடிவ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் வெற்றி பெறும் நம்பிக்கையை இழந்துவிட்டனர்.

வாக்காளர்களிடம், தொழிலாளர் கட்சிக்கு பெரும்பான்மையைத் தந்துவிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அவர்கள், கணிசமான இடங்களில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றால்தான் சிறந்த எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தில் திகழ முடியும் என்றும் வாக்காளர்களிடம் கேட்டுள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கன்சர்வேடிவ் கட்சியை தோல்விக்குத் தள்ளியது எது?

இந்தக் கேள்விக்கு அரசியல் விமர்சகர்கள், நிபுணர்கள் பல்வேறு காரணங்களை முன்வைக்கின்றனர். மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும், தெற்காசிய படிப்புகளில் நிபுணரான முனைவர் நீலம் ரெய்னா, "தொடர் ஊழல்கள்தான் அவர்களின் மிகப்பெரிய தோல்விக்குக் காரணம். ஏனெனில் அந்த ஊழல்கள் ஜனநாயத்தை புண்படுத்தி விட்டதோடு, அரசியல் மீதான எங்களின் நம்பிக்கையையும் வேரோடு அசைத்துவிட்டது," என்று குறிப்பிட்டார்.

தெற்காசிய அரசியல் குறித்து ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சியாளர் முனைவர் சிடிகி பாஜ்பாய், கன்சர்வேடிவ் கட்சியின் மோசமான தோல்விக்கு, 14 வருட ஆட்சிக் காலம் ஏற்படுத்திய அயற்சியும் ஒரு முக்கியக் காரணம் என்று குறிப்பிடுகிறார்.

"அந்த அயற்சியை, தொடர் ஊழல்களும், கொள்கை ரீதியான தவறுகளும் பெரிதாக்கியுள்ளதாகவும்," கூறுகிறார் பாஜ்பாய். அவர் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், கொள்கைகள் குறித்து ஆய்வு செய்யும் நிறுவனமான 'சாத்தம் ஹவுஸ்'-இல் ஆசியா-பசுபிக் பிராந்திய பிரிவில் ஆராய்ச்சியாளராக இருக்கிறார்.

கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட ஊழல்கள், கடந்த சில ஆண்டுகளில் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரத் தொடங்கின. பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா பெருந்தொற்றைக் கையாண்ட விதம், அவரின் நிர்வாகிகள் ஊரடங்கு உத்தரவு விதிகளை மீறியதும் அதிருப்தியைத் தந்துள்ளது.

பிரிட்டன்: பிரதமர் கியர் ஸ்டாமர் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த முடியுமா? சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

அவரைத் தொடர்ந்து, லிஸ் டிரஸ் பிரதமராகப் பதவியேற்றார். அவரின் மோசமான பொருளாதாரக் கொள்கை அவரது ஆட்சிக் காலத்திற்கு 40 நாட்களில் முற்றுப்புள்ளியை வைத்தது. பிறகு, ரிஷி சூனக் பிரதமரானார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பிரிட்டன் பிரதமர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஆட்சியில் கிடுகிடுவென உயர்ந்த விலைவாசி விவாதப் பொருளானது. ரிஷிக்கும் அவரின் ஆட்சிக்கும் மிக நெருங்கிய வட்டாரத்தில் இருந்த நபர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

போரீஸ் ஜான்சன் போலன்றி, லிஸ்ஸும், ரிஷியும் அந்தக் கட்சியினரால் பிரதமர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்று மேற்கோள் காட்டுகிறார் ரெய்னா.

சவுத்ஆல் தொகுதியின் நட்சத்திரப் போட்டியாளரான தொழிலாளர் கட்சியின் விரேந்தர் ஷர்மா இம்முறை போட்டியிடவில்லை. "இளம் தலைமுறை அரசியல்வாதிகளுக்காக இம்முடிவை எடுத்துள்ளேன்" என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

கன்சர்வேடிவ் கட்சியினர் பலருடன் நட்புரீதியில் பழகி வரும் ஷர்மாவும் அக்கட்சியின் தோல்விக்கான காரணங்கள் குறித்துப் பேசியபோது, உள்கட்சி பூசல்களும், கட்சித் தலைமையில் ஏற்பட்ட தொடர்ச்சியான மாற்றங்களும் தோல்விக்குக் காரணமெனக் குறிப்பிட்டார்.

"தளபதிகளை மாற்றிக்கொண்டே இருந்தால் போரை எப்படி வெல்வது? கடந்த சில ஆண்டுகளில் பிரிட்டன் நான்கு பிரதமர்களைக் கண்டிருக்கிறது. கட்சியில் ஒற்றுமை இல்லை. மேலும் அக்கட்சியினர் நாட்டின் பொருளாதாரத் தேக்கத்திற்கு வழிவகை செய்துவிட்டனர்," என்றும் குறிப்பிட்டார்.

தொழிலாளர் கட்சியை முழுமையாக மாற்றியதற்காக அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான கியர் ஸ்டாமரை கன்சர்வேடிவ் கட்சியினரே பாராட்டுகின்றனர். மூத்த கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் ஒருவர் பிபிசி நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, ஜெரேமி கார்பைன் தலைமையில் தொழிலாளர் கட்சி இப்போதும் செயல்பட்டிருந்தால் தேர்தலில் நிச்சயமாகத் தோல்வியைத் தழுவியிருக்கும் என்று கூறினார்.

"கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் முடிவுக்குப் பிறகு, தொழிலாளர் கட்சி இப்படி ஒரு மாபெரும் வெற்றியைப் பெறும் என்று யாராவது எதிர்பார்த்திருப்பார்களா?" என அவர் பேசியது குறிப்பிடத்தக்கது. கார்பைன் தலைமையில் இருந்த தொழிலாளர் கட்சி இந்தியாவுக்கு கவலையையே அளித்தது.

ஸ்டாமர் முன்னிருக்கும் பெரும் சவால்

பிரிட்டன்: பிரதமர் கியர் ஸ்டாமர் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த முடியுமா? சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

ஸ்டாமர் தலைமையில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சி மாநாட்டில் பிரேரணை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், காஷ்மீரில் மனித உரிமை தொடர்பான சிக்கல்கள் இருப்பதை மேற்கோள்காட்டியிருந்தது. காஷ்மீர் மக்களுக்கு சுய நிர்ணய உரிமையை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. இதை இந்தியா எதிர்த்தது. அக்கட்சியின் முன்னாள் தலைவர் கார்பைனோ இது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான விவகாரம் எனக் கருத்து தெரிவித்திருந்தார். ஆனாலும் அவரின் கருத்து இரு நாட்டு உறவிலும் சுமூகமான ஒரு நிலையை எட்ட உதவவில்லை.

ஸ்டாமர், இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளார். அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஷர்மா இருநாட்டுக்கும் இடையிலான உறவு ஸ்டாமரின் ஆட்சிக் காலத்தில் மேம்படும் என்று குறிப்பிட்டார்.

"இந்த நிலை நிச்சயமாக மாறும். கடந்த நாடாளுமன்றத்தில் 6 இந்திய வம்சாவளி எம்.பிக்கள் இடம் பெற்றனர். அவர்களின் பிரதிநிதித்துவம் தற்போது உயரும். ஸ்டாமர் சமநிலையான எதார்த்தவாதி. அவர் இருநாட்டு உறவு மேம்படுவதை உறுதி செய்வார்," என்றும் குறிப்பிட்டார் ஷர்மா.

பாஜ்பாய் இதுகுறித்துப் பேசுகையில், இரு நாட்டு உறவு மேம்பாடு அவ்வளவு எளிமையாக இருக்காது என்கிறார். "தொழிலாளர் கட்சியின் கீழ் இந்தியா – பிரிட்டன் உறவு சவால்கள் மிக்கது. மதிப்புரீதியான வெளிநாட்டுக் கொள்கைகளைச் செயல்படுத்துவதைத்தான் அதன் அரசு விரும்பும். தொழிலாளர் கட்சி மனித உரிமை தொடர்பான விவகாரங்களில் அதிக கவனம் செலுத்தும். பிரிட்டனில் வசிக்கும் 20 லட்சம் இந்தியர்கள் இந்தியர்கள், 12 லட்சம் பாகிஸ்தானியர்கள், இந்தியாவின் நிலைப்பாடு அல்லது இறையாண்மைக்கு சவால்விடுக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் குழுக்கள், பரந்துபட்ட அரசியல் மற்றும் இடம்சார் அரசியலில் ஏற்படும் முன்னேற்றங்கள் யாவும் இரு நாட்டின் உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும்," என மேற்கோள் காட்டியுள்ளார் பாஜ்பாய்.

டேவிட் லாம்மி வெளியுறவுத்துறை செயலாளராகப் பொறுப்பேற்றால் இரு நாட்டு உறவும் வலுப்பெறும் என்று ரெய்னா நம்பிக்கை தெரிவிக்கிறார். "தெற்காசியா பற்றிய புரிதல் அவருக்கு உள்ளது. இந்தியாவின் தற்போதைய ஆட்சி ஒரு கூட்டணி ஆட்சி என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இது இரு நாட்டு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்போது சமச்சீராகச் செயல்பட உதவும்," என்கிறார் அவர்.

ஸ்டாமர் ஆட்சியின் கீழ் இந்தியா - பிரிட்டன் இடையிலான உறவு இவ்வாறே தொடர்வதை நாம் எதிர்பார்க்கலாம் என்கிறார் பாஜ்பாய்.

"கார்பைன் தலைமையில் தொழிலாளர் கட்சி இருந்தபோது, இந்தியா - பிரிட்டன் இடையிலான உறவில் ஏற்பட்ட சிக்கல்களைச் சீர்படுத்த ஸ்டாமர் தலைமை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஸ்டாமர் மற்றும் அவரின் கட்சி உறுப்பினர்கள் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விருப்பம் கொண்டிருப்பதாக அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

பிரிட்டன்: பிரதமர் கியர் ஸ்டாமர் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த முடியுமா? சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் பயணத்தில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் (Free Trade Agreement, FTA) இந்தியாவுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ள ஸ்டாமர் முன்னுரிமை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

"வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் டேவிட் லாம்மி, இந்த ஒப்பந்தத்தை விரைவில் முடிக்கவும், இந்தியாவின் ஒப்புகையைப் பெற ஜூலை இறுதிக்குள் அவர் இந்தியா வர உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. ஒப்பந்தத்தில் 26 பிரிவுகளில் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாகவும்," பாஜ்பாய் குறிப்பிட்டுள்ளார்.

குடியேற்றம்

புலம்பெயர்தலைக் குறைப்பதாக பிரெக்ஸிட் நம்பிக்கை தெரிவித்திருந்தது. பிரெக்ஸிட்டிற்கு பிறகு இன்றைய நாளில், அதிக அளவு புலம்பெயர்ந்தேரை கொண்டுள்ள நாடாக பிரிட்டன் மாறியுள்ளது.

வேலைக்காக பிரிட்டனுக்கு படையெடுக்கும் இந்தியர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது தடையற்ற வர்த்த ஒப்பந்தத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று. சட்டப்பூர்வமாக பிரிட்டனில் குடியேறும் நபர்களின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைப்பது, சட்டத்திற்குப் புறம்பாக மக்கள் குடியேறுவதைத் தடுப்பது போன்றவற்றை இலக்காகக் கொண்டுள்ளது தொழிலாளர் கட்சி.

பிரிட்டனில் பணியாற்றும் இந்தியர்களில் பெரும்பான்மையானோர் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றுகின்றனர். சிறிய அளவிலான இந்தியர்கள் சட்டத்திற்குப் புறம்பாகவும் பிரிட்டனில் குடியேறுகின்றனர்.

அரசியல் மற்றும் பொருளாதார முன்னுரிமைகளைப் பிரதிபலிக்கும் வகையில், பிரிட்டனில் குடியேறும் மக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் சூழலில் திறமையான புலம்பெயர்ந்தோரின் பொருளாதார நன்மைகளைச் சமநிலைப்படுத்தவும் ஸ்டாமரின் கட்சி கொள்கைகளைக் கொண்டுள்ளது.

பிரிட்டனில் சமீபத்தில் குடியேறிவர்களில் 6.85 லட்சம் பேர் இந்தியர்கள். தேசிய மருத்துவ சேவை (NHS) மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையை மேம்படுத்த திறமைவாய்ந்த நபர்கள் பிரிட்டனுக்கு தேவை. ஆனால் இந்தியர்களுக்கு மட்டுமின்றி, இதர நாட்டினருக்கும் அந்நாடு வாய்ப்பு வழங்க விரும்புகிறது.

மனித உரிமை, குடிமக்கள் சட்டங்கள்

பிரிட்டன்: பிரதமர் கியர் ஸ்டாமர் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த முடியுமா? சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

தொழிலாளர் கட்சி, கருத்தியல் சார்ந்த வெளியுறவுக் கொள்கைகளையே காலம் காலமாகப் பின்பற்றி வருகிறது. இந்தியா உட்படப் பல்வேறு நாடுகளில் மனித உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வந்துள்ளது.

ஆனால் இந்த நடவடிக்கை இந்திய அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவுடனான உறவு சுமூகமாக இருக்க வேண்டுமெனில் நடைமுறைக்கு ஏற்ற கொள்கைகளை ஸ்டாமர் பின்பற்றுவார் என்ற நம்பிக்கையை இந்தியர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

தொழிலாளர் கட்சி கடந்த நாடாளுமன்றத்தில் 15 பாகிஸ்தான் வம்சாவளி எம்பிக்களை கொண்டிருந்தது. அதேநேரம் இந்திய வம்சாவளி எம்.பிக்களின் எண்ணிக்கை வெறும் 6.

பெரும்பான்மை அடிப்படையில் அக்கட்சி பாகிஸ்தான் வம்சாவளி உறுப்பினர்களின் அழுத்தத்திற்குக் கட்டுப்பட்டுத்தான் இருக்க வேண்டும். ஆனால் தற்போது அமைந்திருக்கும் புதிய ஆட்சியில், எண் 10, டவுனிங் தெருவில்(பிரதமர் அலுவலகம்) சமநிலை எப்படி கொண்டு வரப்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)