இந்தோனீசியா: 36 வயது பெண்ணை முழுதாக விழுங்கிய மலைப்பாம்பு - கணவர் கண்டுபிடித்தது எப்படி?

பட மூலாதாரம், Police handout
இந்தோனீசியாவில் காணாமல் போன பெண்ணின் சடலம் மலைப்பாம்பு வயிற்றுக்குள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாம்புகள் மனிதர்களை அரிதாகவே உண்கின்றன, ஆனால் இந்தோனீசியாவில் கடந்த சில மாதங்களில் இப்படி நடப்பது இது இரண்டாவது முறை.
காவல்துறை தரப்பு கூறுகையில், சிரியாட்டி என்னும் 36 வயது பெண், தனது குழந்தைக்கு மருந்துகள் வாங்குவதற்காக செவ்வாய்க்கிழமை (ஜூலை 2 ) தனது வீட்டை விட்டு வெளியேறினார்.
அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என்பதால் காணாமல் போயுள்ளதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தெற்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள சிதேபா கிராமத்தில் காணாமல் போன பெண்ணின் வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் அவரது செருப்புகள் மற்றும் ஆடை இருந்ததைக் கண்ட அவரது கணவர் அடியன்சா அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.
பிபிசி இந்தோனீசியாவிடம் பேசிய பிராந்திய காவல்துறைத் தலைவர் இடுல், காணாமல் போன பெண்ணின் கணவர் மலைப்பாம்பு ஒன்று வயிறு பெருத்த நிலையில் உயிருடன் படுத்துக் கிடந்ததைக் கண்டறிந்து, அது தன் மனைவியை உண்டிருக்கலாம் என்று சந்தேகித்து அதன் தலையை வெட்டியுள்ளார்.
பின்னர் தனது மனைவியின் உடல் இருக்கிறதா என்று கண்டறிய பாம்பின் வயிற்றுப் பகுதியை அறுத்திருக்கிறார். அவர் சந்தேகித்தப்படியே பாம்பின் வயிற்றில் அவரது மனைவியின் சடலம் இருந்துள்ளது.

பட மூலாதாரம், Police handout
ஜூன் மாதத் தொடக்கத்தில், தெற்கு சுலவேசியின் மற்றொரு மாவட்டத்தில் ஐந்து மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு விழுங்கியதில் ஒரு பெண் கொல்லப்பட்டார்.
அந்த சம்பவத்துக்கு பிறகு மலைப்பாம்பு தாக்குதல்களை எதிர்நோக்க தற்காப்புக்காக எப்போதும் கத்தியை எடுத்துச் செல்லுமாறு குடியிருப்பாளர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுபோன்ற விலங்குகளின் தாக்குதல்களுக்கும் காடழிப்புக்கும் இடையே வலுவான தொடர்பு இருப்பதாக தெற்கு சுலவேசி சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
அதன் இயக்குனர் முஹம்மது அல் அமீன் பிபிசி நியூஸ் இந்தோனீசியாவிடம் பேசுகையில், "இப்பகுதியில் சுரங்கம் மற்றும் தோட்டங்கள் உருவாக்க காடுகளின் நிலத்தை அழிக்கும் போக்கு கணிசமாக அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக இந்த விலங்குகள் உணவு இல்லாமல் திண்டாடுகின்றன. எனவே, இரைக்காக அவை குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து, மனிதர்களை நேரடியாக வேட்டையாடி தாக்குகின்றன” என்று விளக்கினார்.
மலைப் பாம்புகளின் பொதுவான இரைகளில் ஒன்று காட்டுப்பன்றிகள். அவற்றைத் தேடித்தான் மலைப்பாம்புகள் குடியிருப்புகளின் அருகில் பதுங்கியிருக்கலாம் என மக்கள் சந்தேகிப்பதாக இதுல் தெரிவித்தார்.
இருப்பினும், இப்போது காட்டில் பன்றிகள் அரிதாகவே காணப்படுகின்றன. எனவே பாம்புகள் மனிதர்களை இரையாக்குகின்றன.
இப்பகுதிகளில் மக்கள் தனியாகப் பயணிக்க வேண்டாம் என இடுல் கேட்டுக் கொண்டார்.

பட மூலாதாரம், Getty Images
பாம்பு மனிதர்களை எப்படி உண்கிறது?
இந்தோனீசியாவில் மக்களைக் கொல்லும் பாம்புகள் ரெட்டிகுலேட்டட் பைத்தான் (Reticulated Python) என்னும் வகையை சேர்ந்த மலைப்பாம்பு ஆகும்.
அவை 10 மீட்டருக்கும் (32 அடி) அதிகமான நீளத்தை எட்டக்கூடியவை மற்றும் மிகவும் சக்திவாய்ந்தவை.
இவ்வகை மலைப்பாம்புகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்துகின்றன. தங்கள் இரையைச் சுற்றி இறுக்கம் கொடுத்து முறுக்கி நசுக்கும். சில நிமிடங்களில் மூச்சுத்திணறல் அல்லது மாரடைப்பு ஏற்பட்டு அவர்கள் இறப்பார்கள்.
மலைப்பாம்புகள் தங்கள் உணவை முழுவதுமாக விழுங்கும் திறன் கொண்டவை. மலைப்பாம்பின் தாடைகள் மிகவும் நெகிழ்வான தசைநார்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. என்வே பெரிய இரைகளைக் கூட முழுவதுமாக விழுங்கும் அளவுக்கு இதன் தாடை மிகவும் நெகிழ்வு தன்மையுடன் இருக்கும்.
சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகத்தின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அதிகாரியும், ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு குறித்த ஆராய்ச்சியாளருமான மேரி-ரூத் லோ ஒரு பேட்டியில் கூறுகையில், ''மனிதர்களை மலைப்பாம்புகள் உண்ணும்போது, மனிதர்களின் தோள்பட்டை எளிதில் உடையாது. எனவே விழுங்குவது அவற்றுக்கு கடினமாக இருக்கும்” என்கிறார்.
"மலைப்பாம்புகள் பெரும்பாலும் பாலூட்டிகளை உண்பவை" என்று லோ சுட்டிக்காட்டுகின்றன. இருப்பினும் அவை எப்போதாவது முதலைகள் போன்ற ஊர்வனவற்றை சாப்பிடுகின்றன.
பெரும்பாலான மலைப்பாம்புகள் பாலூட்டி வகையைச் சேர்ந்த விலங்குகளை உண்கின்றன. அரிதாகவே முதலைகள் போன்ற ஊர்வனங்களை சாப்பிடும் என்கிறார் லோ.
"பொதுவாக மலைப்பாம்புகள் எலிகள் மற்றும் பிற சிறிய விலங்குகளை உண்கின்றன. ஆனால், ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக்குப் பிறகு, எலிகளை மலைப்பாம்பு குறி வைக்காது. ஏனெனில், பெரிய உருவத்துடன் இருக்கும் மலைப்பாம்புகளுக்கு எலிகளிடம் இருந்து கிடைக்கும் கலோரி போதாது" என்று அவர் கூறினார்.
மலைப்பாம்பு எவ்வளவு பெரியதாக வளர்கிறதோ, அதன் இரையும் அவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும். இதனால் பன்றி, மாடு போன்ற பெரிய விலங்குகள் கூட அவற்றுக்கு இரையாகும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












