கரிம வாயு மூலம் நடக்கும் 'லாப' வர்த்தகம் - யாரெல்லாம் ஈடுபட முடியும்?

கரிம வர்த்தகம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க. சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்

எகிப்தில் நடந்து கொண்டிருக்கும் 27ஆம் காலநிலை மாநாட்டில், அமெரிக்கா ஒரு புதிய கரிம வர்த்தக திட்டத்தை வெளியிட்டது. வளரும் நாடுகளின் தூய ஆற்றல் திட்டங்களில் தனியார் முதலீடுகளைப் பெருக்குவதே அதன் நோக்கமாகச் சொல்லப்பட்டது.

நீண்டகால பார்வையில், ஏழை நாடுகள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்கு மாறுவது, காலநிலை தாக்கங்களுக்கான தாங்குதிறனை அதிகரிப்பது ஆகியவற்றுக்கு வழிவகுக்கலாம் என்பதே அதன் நோக்கம்.

இந்த திட்டத்தில், நைஜீரியாவும் சிலியும் ஆர்வம் காட்டியுள்ளன. கரிம சந்தை என்ற வர்த்தக அமைப்புக்குள் நுழைவது குறித்து இந்தியா கடந்த ஆகஸ்ட் மாதம் ஆற்றல் தொடர்பான மசோதாவிலேயே பேசியிருந்தது. ஆஃப்ரிக்க நாடுகளில் சி்ல இத்தகைய முன்னெடுப்பை எடுத்துள்ளன.

காலநிலை நிதி, ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள நாடுகளின் பொருளாதாரங்களை ஆதரிக்கும் வகையில், கரிம கிரெடிட்களை விற்பனைக்கு வைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பசுமை இல்ல வாயு வெளியீட்டுக்கு விலை நிர்ணயித்து அதை ஒரு பண்டமாக மாற்றுவதே கரிம சந்தை. கரிம வர்த்தகத்தில் மிகப்பெரிய பயனாளியாக மாறும் வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்தியா, 2.5 முதல் 3 பில்லியன் டன் வரையிலான கரிம தேக்கத்தை உருவாக்குவதாக தேசியளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளில் தெரிவித்துள்ளது.

கரிம வர்த்தகம் என்றால் என்ன?

கரிம சந்தை என்பது புதிய முறையா என்று பார்த்தால் இல்லை. இது 1997ஆம் ஆண்டில் காலநிலை மாற்றம் குறித்த ஐ.நாவின் கியோட்டோ உடன்படிக்கையில் தொடங்கியது.

வளர்ந்த நாடுகளின் குழு தங்கள் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்காகவும் கட்டுப்படுத்துவதற்காகவும் உறுதியளித்தனர்.

அப்போது, தூய மேம்பாட்டு முறையை உருவாக்க கரிம சந்தை வழி வகுத்தது. இது கட்டாய உமிழ்வு குறைப்பு இலக்குகளைப் பூர்த்தி செய்யத் தவறிய நாடுகளை வளரும் நாடுகளில் உமிழ்வு குறைப்பு திட்டங்களுக்காக நிதியளிக்கவும் அங்கு கிரகிக்கப்பட்ட கரிமத்தைக் கோருவதற்கும் வழிவகுத்தது.

“கியோட்டோ உடன்படிக்கை தான் இதற்கான தொடக்கம். ஒரு குறிப்பிட்ட நாடு கரிம வாயுக்களை வெளியிடாமல் இருக்கலாம். ஆனால், மற்ற நாடுகள் ஏற்படுத்தும் மாசு மொத்த பூமியின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

உலக நாடுகள் மேற்கொண்டு மாசுபடுத்துவதைக் குறைத்து, கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம். அதற்காக ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கரிம உமிழ்வைக் குறைக்குமாறு உலக நாடுகள் வலியுறுத்தப்படுகின்றன.

அதை உடனடியாகச் செய்ய முடியாது என்பதால் ஆண்டுவாரியாக அதற்கான இலக்குகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஒரு தரப்பினால் குறிப்பிட்ட இலக்கை அடையும் அளவுக்கு கரிம உமிழ்வைக் குறைக்க முடியவில்லை.

ஆனால், இன்னொரு தரப்பு குறைக்க வேண்டிய அளவைவிட அதிகமாகவே குறைத்திருந்தால், கரிம உமிழ்வைக் குறைக்காத தரப்பு, தன் ஒழுங்குமுறை அளவைத் தாண்டி குறைத்துள்ளவர்களிடம் கரிமத்தை கிரெடிட்டாக வாங்கிக் கொண்டு, தானும் குறைத்துவிட்டதாகக் கணக்கு காட்டலாம்,” என்கிறார் பொருளாதார வல்லுநர் வ.நாகப்பன்.

கரிம வர்த்தகம்

பட மூலாதாரம், Getty Images

2005ஆம் ஆண்டு ஜனவரியில், ஐரோப்பிய ஒன்றியம் உலகின் முதல் சர்வதேச உமிழ்வு வர்த்தக அமைப்பை (Emission Trading System) அறிமுகப்படுத்தியது.

சீனா 2021இல் உலகின் மிகப்பெரிய உமிழ்வு வர்த்தக அமைப்பை அறிமுகப்படுத்தியது. புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் உலகளாவிய கரிம உமிழ்வில் ஏழில் ஒரு பங்கை இது உள்ளடக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவும், அதன் சமீபத்திய ஆற்றல் மசோதாவில், கரிம கிரெடிட் வர்த்தக திட்டத்தை உருவாக்குவது குறித்துப் பேசியுள்ளது. மாசுபடுத்துபவர்கள் குறிப்பிட்ட அளவு உமிழ்வுகளுக்குச் சமமான கிரெடிட்களை பரிமாற்றிக்கொள்ள முடியும்.

கரிம சந்தை முதலில் தன்னார்வமாக இருக்கவுள்ளது. ஆனால், அதில் ஒரு கட்டாய வர்த்தக அமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் உள்ளன.

கரிம உமிழ்வைக் குறைப்பதற்கான பொருளாதார ஊக்கம்

இது நாட்டின் அனைத்து மூலைகளிலும் இருக்கும் தொழில்முனைவோர்களுக்குப் பலனளிக்குமா என்ற கேள்வி ஒருபுறம் எழுகிறது.

அதேவேளையில், குறைந்த கரிமத்தை வெளியிட்டு தங்களிடம் மீதமிருக்கும் கரிம வெளியீட்டிற்கான அளவை கரிம வர்த்தகத்தில் விற்பனை செய்யும்போது, அதைப் பெற்றுக்கொண்டு அந்த அளவையும் அதிக கரிம வெளியீட்டை மேற்கொள்ளும் நிறுவனங்கள் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த ஜூன் 22ஆம் தேதியன்று, பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் ஐரோப்பிய ஒன்றிய உமிழ்வு வர்த்தக முறையின் திருத்தம் குறித்த வாக்கெடுப்பு நடந்தது.

இந்தியாவின் உள்ளார்ந்த பகுதிகளில் இருக்கும் தொழில்முனைவோரும் இதில் ஈடுபட முடியும் என்கிறார் எகிப்தில் 27வது காலநிலை மாநாட்டில் தற்போது இருக்கும், கொள்கை ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த காலநிலை பொருளாதார வல்லுநர் அமன் ஸ்ரீவஸ்தவா.

அவர், “உள்ளூர் தொழில்முனைவோரின் வணிகம், அந்தத் துறைக்கான அளவுகோலை விடக் குறைவான உமிழ்வைக் கொண்டிருந்தால் அல்லது உமிழ்வை ஒப்பீட்டளவில் குறைத்தால், வருவாயை அதிகரிப்பதற்காக சந்தையில் கரிம கிரெடிட்களை விற்பனை செய்யலாம். கரிம வர்த்தகம், உமிழ்வை திறம்படக் குறைப்பதற்கான குறைந்த விலையிலான வழியை வழங்க முடியும்,” எனக் கூறினார்.

மேற்கொண்டு பேசுகையில், “இருப்பினும், கரிம சந்தையைப் பற்றியும் அது எவ்வாறு செயல்படுகிறது என்றும் முழுமையாக அறிந்திருக்காத உள்ளூர் தொழில்முனைவோர்களுக்கு, ஒழுங்குமுறை சுமை ஏற்படலாம். அவர்கள் உமிழ்வு கண்காணிப்பு, அதைப் பதிவு செய்வதற்கான உள்கட்டமைப்பை நிறுவுவதற்கான செலவு ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

குறிப்பாக கரிம நீக்கம் செய்வதற்கான தொழில்நுட்பங்களை அவர்களால் வாங்க முடியாமல் போகலாம். இத்தகைய செலவுகள் உள்ளூர் தொழில்முனைவோரின் வணிகத்திற்கு தீங்கு விளைவிக்கும். அத்தகைய நிறுவனங்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கக்கூடும். 

தொழில் நிறுவனங்களுக்கு கரிம உமிழ்வைக் குறைப்பதற்கான பொருளாதார ஊக்கம் இருக்கும். பொருளாதாரத்தில் வகிக்கும் பங்கு காரணமாக சில தொழில்கள் விரைவாக இந்த மாற்றத்தை அடைய முடியும். அதேநேரம் சில தொழில்கள் இந்த மாற்றத்தை அடைவதில் போராடக்கூடும்,” என்றார்.

அதேவேளையில், “இந்த கரிம வர்த்தக முறையில் நிறுவனங்கள் மட்டுமே ஈடுபடலாம் என்றில்லை. ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு மக்கள் சமூகம் சமூகக் காடு உருவாக்கத்தில் ஈடுபட்டு மரங்களை நட்டு காட்டை உருவாக்குகிறார்கள் அல்லது தோட்டப் பயிரிடுதல் செயல்பாடு மூலம் ஏதேனும் கரிம கிரகிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்றால், அவர்களுடைய நடவடிக்கைகளின் மூலம் கிரகிக்கப்படும் கரிமத்தை கிரெடிட்டாக விற்க முடியும்,” என்று கூறுகிறார் வ.நாகப்பன்.

சான்றாக, ஒரு பழங்குடியின கிராமம் தங்களுடைய சமூகக் காடுகள் முறையில் ஒரு ஏக்கர் நிலத்தைப் பாதுகாத்து மீட்டுருவாக்குகிறார்கள் என்றால், அந்த நிலத்திலுள்ள பசுமைப் பரப்பு எவ்வளவு கரிமத்தைக் கிரகித்து வைக்கிறதோ அந்த அளவுக்கு நிகரான கரிம கிரெடிட்களை பெற்றுக்கொண்டு, அதை அவர்கள் விற்பனை செய்ய முடியும்.

இதில் நிறுவனங்கள், மக்கள் குழுக்கள் என்று யார் வேண்டுமானாலும் ஈடுபட முடியும். கரிம வெளியீட்டு அளவைக் குறைப்பது மட்டுமின்றி, கரிம கிரகிப்பு செயல்முறையும் கரிம வர்த்தகத்தில் பங்கு வகிக்கிறது.

ஒப்புதலுக்கு வராத உலக நாடுகள்

எகிப்தில் 27வது காலநிலை மாநாட்டில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கரிம கிரெடிட்களில் உலகளாவிய வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்த விவரங்கள் மற்றும் விதிமுறைகளில் உலக நாடுகள் ஓர் உடன்பாட்டுக்கு வரவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்காக மற்ற நாடுகளுக்கு அல்லது நிறுவனங்களுக்குப் பணம் செலுத்த கரிம பதிலீடுகள் (Carbon offset) அனுமதிக்கின்றன. நிறுவனங்கள் ஏற்கெனவே தனியார் சந்தைகளில் கரிம பதிலீட்டு கிரெடிட்களை வர்த்தகம் செய்துகொண்டிருக்கின்றன.

சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனாவிலுள்ள ஷாங்காய் சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றல் பரிமாற்றம் கட்டடத்தில், 2021ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதியன்று கரிம உமிழ்வு வர்த்தக சந்தை தொடங்கப்பட்டது.

இந்நிலையில், அத்தகைய கிரெடிட்களை வாங்குவதன் மூலம் நாடுகள் தங்கள் தேசிய காலநிலை இலக்குகளை ஓரளவுக்கு அடைய உதவக்கூடும் விதிகளை நிர்ணயிக்க பாரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 6 வழி செய்யலாம்.

 உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வதேச அளவிலான விதிகள், கரிம வெளியீட்டைக் குறைக்கும் திட்டங்களை உருவாக்க உதவலாம் என்று நம்பப்பட்டது.

ஆனால் உலக நாடுகள் அதற்கான விதிமுறைகள் எப்படியிருக்க வேண்டும், எத்தகைய திட்டங்கள் அதற்கு ஏற்புடையவை, அவை நடைமுறையில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை எப்படி உறுதி செய்வது என்பனவற்றை வரையறுப்பதில் ஓர் ஒப்புதலுக்கு இன்னும் வராமலே இருக்கின்றன.

கரிம வர்த்தகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த கரிம வர்த்தகத்தில் நிறுவனங்கள் மட்டுமின்றி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி, காடு உருவாக்கம் போன்ற கரிம கிரகிப்பு அல்லது கரிம குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் தனிநபரோ சமூகமோ குழுவோ யாராக இருந்தாலும் தங்கள் கரிம கிரெடிட்களுக்கு சான்றிதழ் பெற்று வர்த்தகத்தில் ஈடுபட முடியும்.

கரிம வர்த்தகம் ஆபத்தானதா?

ஒரு நிறுவனம் 100 டன் கரிமத்தை வெளியிடுகிறது. அதில், 40 டன் கரிமத்தைக் கிரகிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமோ அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்ப புதுமையின் மூலம் கரிம வெளியீட்டில் 40 டன்னை குறைத்தோ, தனது உமிழ்வை பதிலீடு செய்கிறது.

இன்னொருபுறம் ஒரு நிறுவனம் 200 டன் கரிமத்தை வெளியிடுகிறார். ஆனால், அது 120 டன்களை வெளியிட வேண்டும் என்று ஒழுங்குமுறை விதிகள் கூறுகின்றன. இப்போது முந்தைய நிறுவனத்தைப் போன்ற இரண்டு நிறுவனங்களிடம் சேர்த்து 80 டன் கிரகித்து வைத்த கரிமத்தைப் பணம் கொடுத்து பெற்றுக்கொள்கிறார்.

ஆக, இந்த இடத்தில் அவர் பணம் கொடுத்து பெற்றுக்கொண்ட கரிம அளவை அவர் வெளியிடலாம். ஏனெனில், அவர் வெளியிடப்போகும் 80 டன் கரிமத்திற்கு ஈடாக முன்பே கரிம கிரகிப்பு நடவடிக்கைக்குச் செலவழித்துவிட்டார்.

இதில், “ஒரு சந்தையில் விநியோகிப்பவரும் அதைக் கேட்டு வாங்குபவரும் இருப்பார்கள். ஒருவருக்கு கிரகித்து வைக்கப்பட்டுள்ள கரிமத்தின் தேவை ஏன் ஏற்படுகிறது என்பதற்கு அது சரியானது. ஆனால் விநியோகிப்பவராக இருப்பவர்களுக்கு 40 டன் கரிம வாயுவை கிரகித்து வைக்கும் வேலையை மேற்கொள்வதற்கான இடம் வேண்டும்.

இத்தகைய நிலத்தை ஏற்பாடு செய்வதற்கு அவர்கள் மக்களிடம் தான் செல்வார்கள்.

இது நிலத்தில் மட்டுமல்ல, கடல் பகுதியிலும் நடக்கலாம். கடல் பகுதியில் நிலத்தைவிடப் பல மடங்கு அதிகமாக கரிம கிரகிப்பு செயல்முறை நடக்கும். அப்படியிருக்கையில், அதை வைத்து எத்தனை நிறுவனங்களிடம் கிரகித்து வைக்கப்பட்ட கரிம அளவைப் பிரித்து விற்பனை செய்யமுடியும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.

கரிம வர்த்தகம்

பட மூலாதாரம், Getty Images

இதன்மூலம் ஒரு புதிய சந்தையை உருவாக்குகிறார்கள். இதில் அரசுகள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் ஈடுபட முடியும். சான்றாக இந்தியாவில் 24 சதவீதம் காட்டுப்பகுதி உள்ளது. அதில், பலவும் டன் கணக்கிலான கரிமத்தை கிரகிக்கின்றன.

அதை நிறுவனங்களுக்குப் பிரித்துக் கொடுத்து, உமிழ்வு வர்த்தக அமைப்பின் மூலம் வர்த்தகம் செய்யலாம். இது புவி வெப்பமயமாதலை விரைவுபடுத்தும் பசுமை இல்ல வாயுக்களையும் ஒருவித விற்பனைப் பண்டமாக்குகிறது.

இதனால் கரிம வெளியீட்டில் பெரிய தாக்கம் இருப்பதைவிட, நில மற்றும் கடல் அபகரிப்பு பெரியளவில் இருக்கும்,” என்று கூறுகிறார் நீலப் பொருளாதாரம் குறித்து ஆய்வு செய்துள்ள வல்லுநர் ஸ்ரீதர்.

இந்த வர்த்தக முறையைப் பயன்படுத்தி, பெரியளவில் கரிம உமிழ்வை மேற்கொள்ளும் நிறுவனங்கள் தங்கள் உமிழ்வை ஒழுங்குபடுத்திய நிறுவனங்களிடம் இருந்து கரிம கொடுப்பனவுகளை வாங்குவதற்கும் அதன் மூலம் உமிழ்வை ஒழுங்குபடுத்துவதில் இருந்து தப்பிப்பதற்கும் இந்த வர்த்தக முறை வாய்ப்பளிக்கிறதா எனக் கேட்டபோது, “சில நிறுவனங்கள் கரிம கிரெடிட்களை வாங்க முடியும். எனவே உமிழ்வுக்கான வரம்புகள் அவ்வப்போது இறுக்கப்படாவிட்டால், கரிம உமிழ்வைத் தொடர்ந்து மெற்கொள்ளப் பணம் செலுத்த முடியும். இந்த இடத்தில் பசுமை இல்ல வாயு வெளியீட்டிற்கான உமிழ்வு வரம்புகள் எப்படியிருக்கும் என்ற கேள்வி எழுகிறது.

அவை நிலையானதாக இருந்தால் சரி. அப்படியில்லாமல், உமிழ்வின் தீவிரத்தை அடிப்படையாகக் கொண்டது என்றால், சீனாவில் உமிழ்வு வர்த்தக அமைப்பைப் போல தீவிர வரம்பு இறுக்கப்பட்டாலும்கூட, நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை அதிகரித்தால் காலப்போக்கில் உமிழ்வு வரம்புகளும் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும்,” என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: