நல்ல உடல் நலம், நீண்ட ஆயுளுக்கு நண்பர்கள் அவசியம் - எப்படி தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
காதல் உறவுகள் எப்போதும் ஒருவருடைய உடல் நலத்தை பேணிக் காப்பதோடு, நீண்ட காலம் வாழவும் உதவுகிறது என்பது எல்லோரும் அறிந்தது. ஆனால் நண்பர்களுடன் பழகுவதிலும் இதே போன்ற நன்மைகள் ஏற்படுகிறதா?
பென்னி ஷேக்ஸ் என்பவர் நாட்டிங்காமில் மேடை நகைச்சுவை கலைஞராக பணியாற்றி வருகிறார். அவருக்கு மனநல பிரச்னைகளும், பெருமூளை வாதமும் இருப்பதால் எல்லோரையும் போல் அவரால் செயல்பட முடியாது. இதனால் நண்பர்களுடன் பழகுவதற்கு அவர் குறைந்த நேரத்தையே செலவிடுகிறார்.
இதன் காரணமாகவே பெரும்பாலும் அவர் தனிமையில் இருப்பதை அவருடைய நண்பர்கள் புரிந்துகொள்கின்றனர். இருப்பினும் சரியான நேரத்துக்கு மருந்துகளை எடுத்துக் கொள்ளவும், மருத்துவ பரிசோதனைக்குச் செல்வது போன்ற செயல்களை அவருக்கு நினைவுபடுத்தவும் அவரது நண்பர்கள் தயங்குவதில்லை.
நண்பர்களின் இந்த உதவிகள் அவருக்கு பல வழிகளிலும் பயனுள்ளதாக இருக்கின்றன. உதாரணமாக கொரோனா பொதுமுடக்கத்தின் போது அவருடைய நண்பர் மார்க் நிக்கோலசுடன் இணைந்து, மாற்றுத் திறனாளி கலைஞர்களுக்கு உதவும் வகையில் ஒரு தகவல் பரிமாற்ற இணைய பக்கத்தை உருவாக்கினார் பென்னி ஷேக்ஸ். மாற்றுத் திறனாளி கலைஞர்கள் மனம் சோர்ந்து போய் இருக்கும் காலங்களில் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் உதவிகளை இந்த இணைய பக்கம் மூலம் ஒவ்வொருவரும் பகிர்ந்துகொள்கின்றனர்.
பென்னி ஷேக்ஸின் அனுபவங்கள் பெரும்பாலும் பிறருடைய அனுபவங்களில் இருந்து மாறுபட்டு காணப்படுகின்றன. உற்சாகமாக இருப்பது முதல் இதய நலத்தை ஆரோக்கியமாகப் பேணுவது வரை பல நன்மைகளை அவர் தமது நட்பின் மூலம் பெறுகிறார். காதல் மற்றும் குடும்ப உறவை விட நட்புறவு குறைந்தளவு நன்மைகளையே அளிக்கும் என காலம் காலமாக நம்பப்பட்டு வந்தாலும், நட்புறவும் பெருமளவில் நன்மைகளை அளிப்பதாகவே உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
நட்பால் கிடைக்கும் நன்மைகள்
நட்புறவு குறித்த ஆராய்ச்சி நூலை எழுதியிருக்கும் அறிவியல் பத்திரிக்கையாளர் லிடியா டென்வொர்த், ஒருவர் தனிமையில் அடைபட்டுக்கிடக்கும்போது அவருடைய நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாகத் தெரிவிக்கிறார். தனிமையில் சிக்கிக் கிடக்கும் போது ஒருவரது உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் தங்களது செயல்பாட்டை மாற்றிக் கொள்வதாகவும் அதனால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைவதாகவும் அவர் கூறுகிறார்.
சமூக இணைப்பு என்பது நோய் எதிர்ப்பு சக்தியை மட்டும் ஊக்குவிப்பதில்லை. பெரும்பாலும் நண்பர்களுடன் இணைந்து வாழ்பவர்களுக்கு நல்ல உடல் நலம், நீண்ட ஆயுள் போன்றவை கிடைப்பதுடன் ரத்த அழுத்தம் போன்ற உடல்நல பிரச்சினைகள் ஏற்படக்கூடிய ஆபத்துகளும் குறைகின்றன. மேலும் நட்பு உறவின் மூலம் நல்ல தூக்கம் கிடைப்பதுடன், நோய் ஏற்படும் போது விரைவில் குணமடையும் வாய்ப்பும் அதிகரிப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேபோல் நண்பர்களிடம் அடிக்கடி சண்டை போடுவது நீண்டகால நோய் தாக்கத்தின் அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. சில நேரங்களில் புகை பிடிப்பது, உயர் ரத்த அழுத்தம் போன்ற விஷயங்களை விட தனிமையில் இருப்பது என்பதே உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய அளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தனிமை என்பது ஒருவர் சுறுசுறுப்பாக இயங்குவதை பாதிக்கிறது என்றும், உடல் நலப் பிரச்சினைகளை அதிகரிக்கிறது என்றும் வடக்கு லண்டனில் செயல்படும் ஒரு தன்னார்வ அமைப்பின் மேலாளரான டோன்னா டர்ன்புல் தெரிவிக்கிறார். மேலும், நண்பர்களுடன் பழக்கவழக்கங்களைக் குறைத்துக் கொள்பவர்கள் சுறுசுறுப்பாக பணியாற்றவும் முடிவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஒருவர் உடல்நலம் சரியில்லாத நிலையில் இருக்கும் போது, குடும்ப உறுப்பினர்களை விட நண்பர்கள் அவரை அன்புடன் கவனித்துக் கொண்டால் அதில் மிகப்பெரும் பயன் கிடைப்பதாக அமெரிக்காவின் க்ளேர்மான்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உளவியல் நிபுணரான சைதா ஹேஷ்மதி மற்றும் அவரின் சக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குடும்ப உறவுகளை விட நட்புறவில் பெரும் பயன்கள் இல்லை என்று காலம் காலமாக நம்பப்பட்டு வரும் நிலையில், பல ஆண்டுகள் நடைபெற்ற ஆராய்ச்சிகள், நண்பர்களின் உறவு மிகவும் முக்கியம் என்பதை தற்போது உணர்த்துகின்றன. இந்த இரண்டு வகையான உறவுகளில் நண்பர்கள் உடனான உறவை எப்போதும் புறம் தள்ளக்கூடாது என லிடியா டென்வொர்த் எச்சரிக்கிறார்.
சில நேரங்களில், திருமணம் அல்லது குடும்ப பந்தங்களை விட நண்பர்களுடனான உறவுகள் கூடுதல் நன்மைகளை அளிக்கின்றன என்பது ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் 97 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், வயது முதிர்ந்தவர்களுக்கு குடும்ப பந்தங்களை விட நண்பர்கள் உடனான உறவுதான் அதிக உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
சிறுவயது முதல் முதுமை வரை நட்பு அவசியம்

பட மூலாதாரம், Getty Images
உலக அளவில் அனைத்து தரப்பு மக்களிடமும் காணப்படும் நட்புறவுகளில் சில ஒற்றுமையான விஷயங்கள் இருந்தாலும், பெரும்பாலான ஆராய்ச்சிகள் செல்வந்தர்கள் மற்றும் மேற்கத்தியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
மாற்றுதிறனாளிகளிடையே நிலவும் நட்புறவுகள் உட்பட குறிப்பிட்ட வகையான நட்புறவுகள் குறித்து பெரும் கவனம் செலுத்தப்படுவதில்லை.
பல கலாச்சாரங்களில் நட்பு என்பது தாமாகவே மற்றொருவரைச் சார்ந்திருக்க விரும்பும் மனநிலை என்றும் தனி நபர்களின் சமூகத் தேவைகளின் அடிப்படையில் பின்னாளில் அது மாறுகிறது என்றும் ஹேஷ்மதி கூறுகிறார்.
மேலும், கலாசாரம் சார்ந்த விஷயங்கள் நட்புறவில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறும் அவர், நட்பு என்பது இயற்கையாக ஏற்படுகிறதா, குடும்ப - சமூக நடைமுறைகள் காரணமாக ஏற்படுகிறதா அல்லது விசுவாசம் மற்றும் நம்பகத்தன்மையின் காரணமாக ஏற்படுகிறதா என்பதைப் பொறுத்தே விளைவுகள் அமைகின்றன என்கிறார்.
வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகும் நட்பின் தன்மைகளிலும் பெரும் வேறுபாடுகள் இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ள நிலையில், சிறுவயது முதல் முதுமை வரை நட்பு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது என லிடியா டென்வொர்த் குறிப்பிடுகிறார்.
நரம்பியல் தொடர்பான ஆராய்ச்சிகளிலும் நட்புறவு மிக முக்கியம் என தெரியவந்துள்ளது. மூளையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த சோதனையின் போது அதிக நண்பர்களைக் கொண்டவர்களின் மூளையில் நன்மைகளை ஏற்படுத்தும் மாறுதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடல் இயக்கங்களை கட்டுப்படுத்தும் மூளைப் பகுதியிலும் இது போல் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படுவதை இந்த ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன.

பட மூலாதாரம், Getty Images
நண்பர், விரும்பத்தகாதவர், அறிந்த நபர், அடையாளம் தெரியாத நபர்களில் யாருக்கு உதவ வேண்டும் என பலரிடம் கேள்விகள் எழுப்பப்பட்ட போது, நண்பர்களுக்கு உதவவேண்டும் என பதில் கூறியவர்களின் மூளைப் பகுதியில் அதிக மகிழ்ச்சி பதிவாகியிருந்தது ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
நீண்ட கால நட்பில் உள்ளவர்களை மகிழ்ச்சிப்படுத்த விரும்பிய இளம் வயதினரின் மூளைப் பகுதியில் இந்த மாற்றங்கள் மிக அதிகமாக இருந்ததாக நெதர்லாந்து நாட்டின் லெய்டென் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் பெர்னா குரொக்லு தெரிவித்துள்ளார்.
அதிலும் 15 மற்றும் 16 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு இந்த உணர்வு மிக அதிக அளவில் இருந்ததாகவும் இவர் கூறுகிறார்.
நட்பு தொடர்பான உணர்வுகள் குறித்து பேசும் ஹேஷ்மதி, மனிதர்களின் வயதின் அடிப்படையில் நட்பு வட்டாரம் குறித்த மாறுபட்ட சிந்தனைகள் ஏற்படுவதை சுட்டிக்காட்டுகிறார்.
சிறு வயதில் பலதரப்பட்ட நண்பர்களை வைத்திருந்தால் பிற்காலத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்குப் பயன்படும் நண்பர்களை மட்டும் வைத்திருக்க அது உதவுவதாகவும் இவர் கூறுகிறார்.
சாதாரண நட்புறவும் வாழ்க்கை முழுவதும் பயனளிக்கும் நிலையில், ஆழமான நட்பு என்பது பொதுவாக வயதானவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது.
சாதாரண நண்பர்கள் மூலம் நாம் எத்தனையோ நன்மைகளைப் பெறுகிறோம் என்ற போதிலும் நெருங்கிய நண்பர்கள் மூலம் மிக முக்கிய உதவிகளைப் பெறுகிறோம்.
இது போன்ற பலதரப்பட்ட நண்பர்களைக் கொண்டிருப்பது நமது உடல் நலத்தை ஊக்குவிப்பதோடு, பிரச்சினைகளின் போது முடிவெடுக்கும் திறன்களையும் வளர்க்கிறது.
ஒரே மனநிலையில் இரண்டு பேர் இருந்தால், அவர்களுக்கு இடையே சாதாரண நட்பு இருந்தாலும் அது வரவேற்கத்தக்கதுதான் என்று சொல்லும் ஹேஷ்மதி, ஒருவர் மற்றவரை வாரத்துக்கு ஒரு முறையாவது நேரில் சந்திக்கவேண்டும் என நினைக்கும் போது, மற்றவர் ஒவ்வொரு ஆண்டும் சில முறை வாட்ஸ்ஆப் மூலம் தொடர்பு கொள்வதே போதும் என நினைத்தால் இருவருக்கும் பொருத்தமற்ற நட்பாகவே அது இருக்கும் என்றும் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட நட்பு வட்டங்களை வைத்திருக்கும் நபர்களைப் பற்றிப் பேசும் டென்வொர்த், ஒருவருக்கு ஒத்து வராத சிந்தனைகளைக் கொண்ட நண்பர்களை நீண்ட காலம் நண்பராக வைத்திருக்க முடியாது என்றும், அது போல் அதிக நண்பர்கள் இருந்தால் ரத்த அழுத்தம் அதிகரித்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பென்னி ஷேக்ஸ் சொல்வதைப் போல, ஒருவர் ஏராளமான நண்பர்களைக் கொண்டிருந்தாலும், அதன் பின்னரும் தனிமையில் இருக்க முடியும்.
ஒருவர் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட்டிருந்தால், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கூட அவர் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என லாஸ் ஏன்ஜலிஸ் மாணவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
எவ்வளவுக்கு எவ்வளவு நேர்மறையான நட்புறவுகளைக் கொண்டிருக்கிறோமோ, அந்த அளவுக்கு பின்னாளில் மோசமான நட்புகள் மற்றும் ஒதுக்கிவைக்கப்படும் நிலைகளை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கிறது என குரொக்லு கருதுகிறார்.
இருப்பினும் இது குறித்து மேலும் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
மன அழுத்த பாதிப்பில் இருக்கும் நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான எண்ணங்கள் தோன்றுவதில் சில பிரச்சினைகள் இருப்பதால் இது குறித்த புரிதலைப் பெறுவதற்கும் ஏராளமான ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
நட்புறவு குறித்த ஆராய்ச்சிகளில் தெளிவாகத் தெரிந்து கொண்டது என்னவென்றால், சிறந்த நண்பர்களை உருவாக்குவதில் வாழ்க்கை முழுவதும் முயற்சிக்கவேண்டும் என்பதே ஆகும்.
நடுத்தர வயது கொண்டவர்கள், 50 அல்லது 60 வயதில் நண்பர்களைப் பற்றிச் சிந்தித்துக்கொள்ளலாம் என நினைத்தால் நிச்சயமாக அது ஒரு தவறான மனநிலையாகும் என டென்வொர்த் சொல்கிறார்.
நடுத்தர வயதில் அதிக வேலைப்பளு, குடும்பப் பணிகள் காரணமாக நண்பர்களை ஒதுக்கிவைக்கும் நிலை காணப்பட்டாலும், வாழ்நாள் முழுவதும் நட்பைப் பேணுவது முக்கியமாகிறது.
மருத்துவத் துறையைப் பொறுத்தவரை, தனிமைக் கொடுமையிலிருந்து விடுபடுவது குறித்த ஆலோசனைகளை வழங்கும் மருத்துவர்கள் வயதானவர்களை மட்டும் இலக்காகக் கொண்டு செயல்படக்கூடாது.
லண்டனின் புறநகர்ப் பகுதியான காம்டெனில் இது போன்ற மனமகிழ்ச்சி ஏற்படுத்தும் தன்னார்வப் பணியை மேற்கொண்டு வரும் டர்ன்புல், வயதானவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் மனமகிழ்ச்சி ஏற்படுத்தும் சிகிச்சை முறைகளை அனைத்து வயதினருக்கும் பரிந்துரைக்கும் வகையிலான ஒரு முறையை தயாரித்து வருகிறார்.
இந்த முறையை நேரடியாகப் பொதுமக்களிடம் செயல்படுத்தி அவர் பெரும் பலன்களைக் கண்டிருக்கிறார். காம்டென் நகரில் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்களுக்கு இது போன்ற மனமகிழ்ச்சி அளிக்கும் உளவியல் சிகிச்சையை அளித்த போது அதில் பெரும் பயன்கள் அவருக்குக் கிடைத்திருக்கின்றன.
இவரின் சிகிச்சைக்குப் பின், மன அழுத்தத்துக்குப் பயன்படுத்தும் மருந்துகளைக் கூட சிலர், மருத்துவர்களின் ஆலோசனையின்றியே நிறுத்தியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
இது போல் சிறு முயற்சிகளை மட்டும் மேற்கொள்வதை விட்டு விட்டு நீண்ட கால அடிப்படையில் நட்புகளைப் பேணுவது குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினால், நிச்சயம் நன்மை பயக்கும் என டர்ன்புல் நம்புகிறார்.
நாம் நமக்குள் ஒரு சமூகப் பிணைப்பை ஏற்படுத்தி, அதை முறையாகப் பயன்படுத்தும் போது உடல்நலத்தைக் காப்பதில் அது பெரும் பங்காற்றும் என்றும் அவர் கூறுகிறார்.
இருப்பினும் நிறைய நண்பர்களை உருவாக்குவது எல்லோருக்கும் எளிதான காரியமல்ல. அன்றாடச் செலவினங்கள் அதிகரித்து வரும் நிலையில் நட்பு வட்டத்தைப் பெரிதாக்குவதில் ஒரு கப் டீ வாங்குவதில் தொடங்கி போக்குவரத்துச் செலவினங்கள் வரை பல தடைக்கற்கள் இருக்கின்றன என்கிறார் டர்ன்புல்.
பொதுவாக, உடல்நலத்தைப் பேணும் வகையிலான நட்புகளை உருவாக்குவதில் என்ன மாதிரியான விழிப்புணர்வு நடவடிக்கைகள் நல்ல பயன்களை அளிக்கின்றன என்பது குறித்து மேலும் பல ஆய்வுகளை மேற்கொண்டு தரவுகளைப் பெறவேண்டியுள்ளது.
இருப்பினும் மிக எளிதாக அனைவரும் ஒரு செயலை இப்போது செய்ய முடியும். அது என்னவென்றால், நல்ல நண்பர்களைத் தேர்வு செய்வதில் அனைவரும் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்பதே ஆகும். டென்வொர்த் கூறுவதைப் போல, நேரம் மிகக்குறைவாக இருந்தாலும், நட்புக்காக அதையும் முதலீடு செய்யவேண்டிய தேவை இருக்கிறது என்பதை உணர வேண்டும்.
நேரத்தை முதலீடு செய்வது எப்போதும் எளிதானதல்ல என்றாலும், அதனால் எதிர்காலத்தில் நிறைய பயன்கள் இருக்கின்றன. இதைத் பென்னி ஷேக்ஸ் நேரடியாக உணர்ந்திருக்கிறார். அவருடைய மனநலக் குறைபாட்டை அறிந்த மருத்துவர்கள், அவர் புதிய நண்பர்களைத் தேடும் முயற்சியைத் தொடங்க அறிவுறுத்தினர்.
உண்மையில் அதன் பொருள் என்ன என அவருக்கு தொடக்கத்தில் புரியவில்லை. ஆனால் நண்பர்கள் மூலம் அவருக்கு எத்தனை உதவிகள் கிடைத்தன, அவரது மனநலம் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது என்பதை 18 ஆண்டுகளுக்குப் பின் தான் உணர்ந்ததாக அவர் கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












