மேற்கு வங்கம்: 40 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் வன்முறை தொடர்கதையாக நீடிப்பது ஏன்?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், பிரபாகர் மணி திவாரி
- பதவி, கொல்கத்தாவில் இருந்து, பிபிசி ஹிந்திக்காக
மேற்கு வங்கத்தில் ஜூலை 8ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வன்முறைக்கு மத்தியில் மாலை 5 மணி வரை 66.28 சதவீத வாக்குகள் பதிவாகின.
மாநில தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, இம்முறை அதிகபட்சமாக 79.15 சதவீத வாக்குப்பதிவு பஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தில் பதிவானது. டார்ஜிலிங் மலைப்பகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.
வாக்குப்பதிவு நாளில் மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் வன்முறை, தீவைப்பு, போலி வாக்குப்பதிவு மற்றும் சாவடி கைப்பற்றப்பட்ட காட்சிகள், வன்முறைக்கு எடுத்துக்காட்டாக இருந்த 2018 உள்ளாட்சித் தேர்தலைக் கூட பின்தள்ளும் விதத்தில் இருந்தன. அந்த ஆண்டு வாக்குப்பதிவு நாளில் 10 பேர் உயிரிழந்தனர்.
அரசின் புள்ளிவிபரங்களின்படி, இந்த முறை அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த குறைந்தது 13 பேர் வன்முறையில் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது. இருப்பினும், 17 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளளன.
இது மட்டுமில்லாமல், டஜன் கணக்கான மக்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் இத்தகவல்கள் கூறுகின்றன. இந்த உயிரிழப்புக்களில் பெரும்பாலானவை துப்பாக்கிச் சூடு அல்லது குண்டுவெடிப்புகளால் ஏற்பட்டவை.
ஒருவேளை இது போன்ற ஆபத்துக்கள் குறித்து கல்கத்தா உயர்நீதிமன்றம் கூட அச்சம் கொண்டிருந்திருக்கலாம். அதனால் தான், ஜூலை 11-ஆம் தேதி வாக்குப்பதிவு முடிவுகள் வெளியான பிறகும், பத்து நாட்களுக்கு மத்திய பாதுகாப்புப் படையினர் மாநிலத்தில் நிறுத்தப்படவேண்டும் என ஜூலை 6-ஆம் தேதி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
வாக்குப்பதிவின் போது இந்த பெரிய அளவிலான வன்முறை நடந்ததை அடுத்து, மேற்கு வங்க மாநில அரசியல் சூழல் பதற்றத்துக்கு உள்ளாகியதுடன் அனைத்து கட்சியினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முக்கிய எதிர்க்கட்சியான பாஜக எழுப்பியுள்ளது.
மாநிலத்தில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க ஆட்சி அதிகாரத்தில் தலையிடுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மாநில பாஜக தலைவர் சுகந்த் மஜும்தார் கடிதம் எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், ANI
பாதுகாப்புப் படையினர் வன்முறையை தடுக்க தவறியது ஏன்?
இந்த வன்முறைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில தேர்தல் ஆணையர் ராஜீவ் சின்ஹா, சட்டம்-ஒழுங்கு மோசமடைந்ததற்கு மாவட்ட நிர்வாகமே பொறுப்பு என்றும், ஒட்டுமொத்த அமைப்பையும் கையாள்வதே தேர்தல் ஆணையத்தின் பணி என்றும் தெரிவித்தார்.
ஆனால், இவ்வளவு பெரிய அளவில் மத்தியப் படைகள் குவிக்கப்பட்டிருந்தும் ஏன் மிகப்பெரிய வன்முறைகள் நடந்தன என்பது பொதுவாக எழுந்துள்ள முக்கிய கேள்வியாக உள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் அரசின் உத்தரவின் பேரில் செயல்படும் மாநில தேர்தல் ஆணையம், பதற்றமான பகுதிகளில் போதுமான எண்ணிக்கையில் பாதுகாப்பு வீரர்களை நிறுத்தவில்லை என்று எதிர்க்கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மற்றும் சிபிஎம் ஆகியவை குற்றம் சாட்டுகின்றன.
ஆனால், மாநில தேர்தல் ஆணையர் ராஜீவ் சின்ஹா செய்தியாளர்களிடம் கூறுகையில், "மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சற்று முன்னதாகவே மாநிலத்துக்கு வந்திருந்தால், வன்முறையைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். சனிக்கிழமை மதியம் வரை 660 கம்பெனி மத்தியப் படைகள் மட்டுமே மாநிலத்திற்கு வந்திருந்தன. வன்முறைகள் கட்டுக்கு அடங்காத அளவுக்கு அதிகரித்ததற்கு இது தான் காரணம்," என்றார்.
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையம் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் 822 கம்பெனி மத்திய படைகளை அனுப்பிவைக்குமாறு கேட்டிருந்தது.
மத்தியப் படைகளின் கண்காணிப்பில் தேர்தலை நடத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் கடைசி வரை சலசலப்பு நிலவி, உச்ச நீதிமன்றம் வரை சென்றதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முன்னதாக தேர்தல் ஆணையம் 22 கம்பெனி மத்திய படைகளை மட்டுமே கேட்டிருந்தது.
உச்சநீதிமன்றத்தில் அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, மேலும் 800 கம்பெனி மத்திய படைகளை அனுப்புமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதில் 660 கம்பெனி மத்திய படைகள் மட்டுமே மேற்கு வங்கத்துக்கு வந்தன.
சுமார் முந்நூறு கம்பெனி மத்திய படைகள் வெள்ளிக்கிழமை இரவு தாமதமாக அல்லது சனிக்கிழமை வாக்குப்பதிவு தொடங்கிய பிறகுதான் மாநிலத்தை அடைந்தன.
அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் சமிரன் பால் பேசியபோது, "மத்திய படைகளை பிரித்தனுப்புவதில் தேர்தல் ஆணையம் தாமதம் செய்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. மேலும், முக்கிய வாக்குச் சாவடிகளை அடையாளம் காணும் பணியும் கடைசி நேரத்தில் பாதியிலேயே முடிக்கப்பட்டது. இதன் விளைவாக, மத்திய படைகளை போதுமான எண்ணிக்கையில் தேவைப்படும் இடங்களில் தேர்தல் ஆணையம் பணியமர்த்தவில்லை. இதனால் வன்முறைகள் இந்த அளவுக்கு பெரிய அளவில் ஏற்பட்டிருக்கலாம்," என்றார்.

பட மூலாதாரம், ANI
எங்கெல்லாம் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன?
மேற்கு வங்க மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வன்முறை, தீவைப்பு, வாக்குச் சாவடியைக் கைப்பற்றுதல் போன்ற புகார்கள் வந்துள்ளன. அதிகபட்சமாக ஏழு மாவட்டங்களில் வன்முறை நடந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் தான் அதிக எண்ணிக்கையில் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததாக தெரியவருகிறது.
வெள்ளிக்கிழமை இரவு முதல் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு வன்முறைச் சம்பவங்களில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்தனர். இது மட்டுமின்றி, கூச் பெகர் மற்றும் தின்ஹாட்டா பகுதிகளிலும் அதிக எண்ணிக்கையில் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்த வன்முறைகளில் 2 பேர் உயிரிழந்தனர். இதேபோல், கொல்கத்தாவை ஒட்டியுள்ள தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பங்கரில் நடந்த வன்முறை சம்பவங்களில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
மால்டா மற்றும் கிழக்கு பர்த்வான் மாவட்டங்களில் தலா இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடியா மாவட்டத்திலும் இரண்டு பேர் துப்பாக்கி குண்டு காயங்களால் உயிரிழந்துள்ளனர்.
இங்கு வாக்குப் பெட்டி தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, கூட்டத்தைக் கலைக்க மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
வன்முறையைத் தவிர, பெரிய அளவில் தீ வைப்பு, வாக்கு சாவடி கைப்பற்றுதல், வாக்குப்பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு ஓடுதல், வாக்குச் சீட்டுகளைக் கிழித்து தீயிட்டு எரித்தல், பெரிய அளவில் போலி வாக்குப் பதிவு என நூற்றுக்கணக்கான புகார்கள் வந்துள்ளன.

பட மூலாதாரம், SANJAY DAS
மீண்டும் திரும்பும் வன்முறை வரலாறு
தேர்தல் வன்முறையின் வேர்கள் மேற்கு வங்க அரசியலில் ஆழமாக வேரூன்றிவிட்டதால், அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தாலும், அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மூத்த பத்திரிக்கையாளர் தபாஸ் முகர்ஜி கூறுகையில், "மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறையின் நீண்ட கால வரலாறு உள்ளது. 1980கள் மற்றும் 1990களில் திரிணாமுல் காங்கிரஸும், பாஜகவும் இம்மாநிலத்தின் அரசியல் தளத்தில் இல்லாதபோது, இடது முன்னணி மற்றும் காங்கிரஸுக்கு இடையே அடிக்கடி இதுபோல் வன்முறைகள் ஏற்பட்டுள்ளன," என்றார்.
எதிர்க்கட்சிகளிடம் இருந்து ஆளும் கட்சி கடும் சவாலை எதிர்கொள்ளும் போதெல்லாம், தேர்தல் வன்முறை சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன என்பதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது என்று அவர் கூறுகிறார். முதலில் இடது முன்னணி ஆட்சியில் இருந்த போது காங்கிரஸுடன் மோதலாக இருந்தாலும் சரி, பின்னர் திரிணாமுல் காங்கிரஸோடு மோதலாக இருந்தாலும் சரி. வன்முறைகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகவே மாறிவிட்டது.
இப்போது பாஜகவின் வலுவான எழுச்சி மற்றும் காங்கிரஸ்-சிபிஎம் கூட்டணியின் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகளின் காரணமாக, வரலாறு மீண்டும் திரும்பும் என அஞ்சப்படுகிறது.

பட மூலாதாரம், ANI
பாதுகாப்புப் படையினரை முறையாகப் பணியில் ஈடுபடுத்தாதது தான் காரணமா?
இந்த வன்முறை தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்க் குற்றச்சாட்டுகளும் பரவலாக அதிகரித்துவருகின்றன. வாக்காளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் தவறிவிட்டதாகவும், எதிர்க்கட்சிகள் வன்முறையைத் தூண்டுவதாகவும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
மாநில அரசின் மூத்த அமைச்சர் ஷஷி பஞ்சா தமது ட்விட்டர் பக்கத்தில், "நேற்று இரவு முதல் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததாக செய்திகள் வெளியாகின. பாஜக, சிபிஎம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியினர் தான் மத்தியப் படைகளைக் கோரினர். இப்போது டிஎம்சி கட்சித் தொண்டர்கள் கொல்லப்படுகிறார்கள். மத்திய பாதுகாப்புப் படையினர் எங்கே இருக்கிறார்கள்?" என அவர் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், "திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டர்கள் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி வாக்காளர்களை அச்சுறுத்தும் வகையில் வெளிப்படையாக வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். அக்கட்சி பொதுமக்களிடையே மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது," என்றார்.
சிபிஎம் மாநிலச் செயலர் முகமது சலீம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் முறையாகப் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

பட மூலாதாரம், SANJAY DAS
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூறுகையில், "அரசு நிர்வாகத்தின் கீழ் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் என்பது ஒரு மாயை. குடியரசுத் தலைவர் ஆட்சி அல்லது அரசியலமைப்பின் 355 வது பிரிவின் கீழ் மட்டுமே இதுபோன்ற தேர்தல்கள் சாத்தியமாகும்," என்று கூறுகிறார்.
சனிக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, ராஜீவ் சின்ஹாவை தேர்தல் ஆணையராக நியமித்ததன் மூலம் ஆளுநர் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார் என்று தெரிவித்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டர்கள் இதுவரை 15க்கும் மேற்பட்டவர்களை கொன்றுள்ளனர். இந்த விவகாரத்தில் அரசியல் சாசனத்தின் 355 அல்லது 356 வது பிரிவின் மூலம் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும் அவல் வலியுறுத்தினார்.
இவ்வளவு கடுமையான வன்முறை, போலி வாக்குப் பதிவுகளுக்குப் பிறகு, உள்ளாட்சித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதே தற்போதைய மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
ஜூலை 11ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகுதான் இதற்கான விடை தெரியவரும். ஆனால் அரசியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள முக்கியமான மக்களவைத் தேர்தலில் தற்போதைய தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












