உறவுகளைத் தேடி பரிதவிக்கும் உள்ளங்கள் - ஒரே உடலுக்கு உரிமை கோரும் இரு குடும்பங்கள்

ஒடிஷா ரயில் விபத்து

ஒடிஷா மாநிலம், பாலாசோர் அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு கோரமண்டல் விரைவு ரயில், சரக்கு ரயிலுடன் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்தியாவில் இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மோசமான ரயில் விபத்தாக கருதப்படும் இதில் 288 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ள உயிரிழந்தவர்களின் உடல்கள் அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்படும் பணி இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

ஒடிஷா ரயில் விபத்து
படக்குறிப்பு, பாலாசோர் மாவட்ட மருத்துவமனையில் பேரப்பிள்ளைகளின் உடலை அடையாளம் காணும் முதியவர் நிஜாமுதீன்

பேரப்பிள்ளைகளின் உடல்களை அடையாளம் கண்ட முதியவர்

இந்த கோர விபத்தில் உயிரிழந்ததாக கருதப்படும் பிகாரை சேர்ந்த 16 வயது சிறுவன் தஃப்சீர் அன்சாரி மற்றும் இவரின் மூன்று வயது இளைய சகோதரரான தௌசீஃப் ஆகியோரின் உடல்கள் பாலாசோர் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை கண்ட அவர்களின் தாத்தா முகமது நிஜாமுதீன், ‘எங்க பசங்க இங்க இருக்காங்க’ என்றபடி ஓவென கதறி அழுதார்.

மருத்துவமனை சுவரில் ஒட்டப்பட்டிருந்த சிதைந்த முகத்துடன் கூடிய புகைப்படங்களில் இருந்து தஃப்சீர் அன்சாரி மற்றும் தெளசீஃப்பின் உடல்களை அவர்களின் தாத்தா அடையாளம் கண்டிருக்கிறார். பிணவறையில் வைக்கப்பட்டிருந்த தஃப்சீர் உடலில் எண் 20 என குறிக்கப்பட்டிருந்த சீட்டும் (Tag), தௌசீஃப் உடலில் எண் 169 என்று குறியிடப்பட்டிருந்த சீட்டும் தொங்கி கொண்டிருந்தன.

இவ்விரு சிறுவர்களும் விபத்து நிகழ்ந்த அன்று, அவர்களின் தந்தை முகமது பிகாரியுடன் கோரமண்டல் விரைவு ரயிலில் பயணம் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் சிறுவர்களின் உடல்கள் அவர்களின் தாத்தாவால் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால், சிறுவர்களின் தந்தையான பிகாரியின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.

இவரைப் போன்று இந்த ரயிலில் பயணித்த ஏழு வயது சிறுமியான ஜாஹிதா கான் என்ன ஆனார் என்றும் இதுவரை தெரியவில்லை.

ஜாஹிதா கான் மற்றும் அவரது தாய் ஷப்னம் பீவி கோரமண்டல் எக்ஸ்பிரசில் கொல்கத்தாவில் இருந்து ஹைதராபாத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஒடிஷா ரயில் விபத்து
படக்குறிப்பு, சிறுமி ஜாகிதாவை தேடும் அவரின் தந்தை சர்ஃப்ராஸ்

மகளை தேடும் தந்தை

“எனது மனைவி ஷப்னம் பீவியின் உடலை அடையாளம் கண்டுவிட்டேன். அவரது உடல் புவனேஸ்வரிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டுவிட்டது. தற்போது எனது மகளை தேடி பாலசோருக்கு வந்துள்ளேன். அவள் எந்த மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டதாக தெரியவில்லை. எந்த மருத்துவமனை வளாகத்திலும் அவளது புகைப்படம் ஒட்டப்படவில்லை” என்று கண்ணீர் ததும்ப கூறினார் ஜாகிதா கானின் தந்தையான சர்ஃப்ராஸ் அகமது.

ரயில் விபத்து நிகழ்ந்த பாலசோரில் இருந்து சர்ஃப்ராஸ் அகமதுவின் குடும்பம் வசித்துவந்த ஹைதராபாத் மாநகரம் 1,200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மகள் ஜாகிதாவைத் தேடிக் கொண்டிருக்கும் அவரால் பாலசோரில் இறந்த தமது மனைவியின் உடலை பெற்றுக் கொள்ள முடியவில்லை.

“எனது மனைவியும், மகளும் கோரமண்டல் எக்ஸ்பிரசின் ‘எஸ்1’ பெட்டியில் பயணம் மேற்கொண்டனர். விபத்து நிகழ்ந்த அன்று மாலை 5:30 மணி அளவில் எனது மனைவி பீவி ரயிலில் இருந்து என்னுடன் அலைபேசியில் பேசினார்” என்று கண்ணீர் மல்க கூறினார் அகமது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த சர்ஃப்ராஸ் ரயிலில் பயணித்த தமது குடும்பத்தினருடன் செல்ஃபோனில் பேசியுள்ளார். ஆனால் அதே நேரம் பிகாரைச் சேர்ந்த முகமது பிகாரியை அவரது குடும்பத்தினர் செல்ஃபோனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. ரயில் விபத்து செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், தொடர்ந்து அவரை செல்ஃபோனில் தொடர்பு கொள்ள முயன்றபோதும் பிகாரியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

“வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் நாங்கள் பிகாரியை செல்ஃபோனி்ல் தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் அவருடன் பேச முடியவில்லை. சனிக்கிழமை காலை அவரின் செல்ஃபோனில் பேசிய நபர், இந்த ஃபோனுக்கு சொந்தக்காரர் உயிருடன் இல்லை. எனவே மீண்டும் அவரை அழைக்க வேண்டாம் என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டார். எனவே, பிகாரியின் உடல் அருகில் இருந்து அவரின் செல்ஃபோன் கண்டெடுக்கப்பட்டதாக இருந்தால், அவரின் உடல் எங்கே? “ என்று கேள்வி எழுப்புகின்றனர் அவரின் உறவினர்கள்.

ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடலை அடையாளம் காண, பாலசோர் மருத்துவமனையில் அவர்களின் புகைப்படங்கள் மட்டுமே உறவினர்களிடம் காட்டப்படுகின்றன. இதில் அடையாளம் காணப்படாத உடல்கள் புவனேஸ்வருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இப்படி, ஹைதராபாத்தை சேர்ந்த சிறுமி ஜாகிதாவை தேடி அவரின் தந்தையும், பிகாரியின் உடலைத் தேடி அவரின் உறவினர்களும் ஒடிஷாவில் அலைந்து கொண்டிருக்கின்றனர்.

ஒடிஷா ரயில் விபத்து
படக்குறிப்பு, பாலாசோரின் இருந்து புவனேஸ்வருக்கு புறப்படும் அன்சாரி மற்றும் சுக்லால் குடும்பத்தினர்

ஒரு உடலுக்கு உரிமை கோரும் இரு குடும்பங்கள்

இந்த நிலையில், “சிறுவன் தஃப்சீர் அன்சாரியின் உடல் என்று அவரது தாத்தா நிஜாமுதீன் அடையாளம் காட்டிய சடலத்துக்கு மற்றொரு குடும்பமும் உரிமை கோரியுள்ளது” என்று அதிகாரிகள் சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார் அவர்.

எண் 20 என்று குறிக்கப்பட்டிருந்த அந்த உடல் மூன்று மணி நேரத்திற்கு முன்பே புவனேஸ்வருக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த நிஜாமுதீன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் புவனேஸ்வருக்கு செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

“இது எப்படி சாத்தியம்? அப்படியானால் எனது பேரன்களான தஃப்சீர் அன்சாரி மற்றும் தௌசீஃப்பை எனக்கு அடையாளம் தெரியாதா?” என்று கேள்வி எழுப்புகிறார் நிஜாமுதீன்.

பேரன்களை இழந்து தவிக்கும் முதியவரான நிஜாமுதீனை சமாதானப்படுத்த அரசு அதிகாரிகள் முயன்றனர். ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைப்பதில் கடைபிடிக்கப்படும் நடைமுறை குறித்து அவருக்கு அதிகாரிகள் விளக்கினர்.

“இந்த விவகாரம் தொடர்பாக, நீங்கள் புவனேஸ்வருக்கு சென்று மாநகராட்சி அதிகாரிகளை சந்தியுங்கள். உங்களுக்கு இலவச போக்குவரத்து வசதியும் செய்து தருகிறோம். அங்கு அதிகாரிகள் உங்களின் கோரிக்கை மற்றும் பிற குடும்பத்தினரின் கோரி்க்கையை பரிசீலித்து முடிவு எடுப்பார்கள். தேவைப்பட்டால் மரபணு சோதனை (டிஎன்ஏ) மேற்கொள்ளவும் ஆவன செய்யப்படும்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகளின் இந்த சமாதானத்துக்கு ஒப்புக்கொண்ட நிஜாமுதீன், குடும்ப உறுப்பினரான ஆலம் உடன் புவனேஸ்வருக்கு செல்ல ஒப்புக் கொண்டார். “எங்கள் பிள்ளைகள் முஸ்லிம்கள் என்பதால் அவர்களுக்கு சுன்னத் செய்யப்பட்டுள்ளதா என்பதை எளிதாக கண்டறிய முடியும். இல்லையென்றால் டிஎன்ஏ பரிசோதனைக்கு நாங்கள் தயார்” என்று பிபிசியிடம் கூறினார் ஆலம்.

ஒடிஷா ரயில் விபத்து
படக்குறிப்பு, சிறுவன் தஃப்சீர் அன்சாரியின் புகைப்படம் இடம்பெற்றுள்ள விண்ணப்பம்

எண் 20 என குறிக்கப்பட்டுள்ள உடல் யாருடையது?

பாலசோர் அரசு மருத்துவமனையில் எண் 20 என்று குறிக்கப்பட்டிருந்த உடல், ஜார்கண்ட் மாநிலம், தும்காவைச் சேர்ந்த 20 வயது இளைஞரான சுக்லால் மாரண்டி என்பவரின் சடலம் என்று அரசின் அதிகாரப்பூர்வ பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுக்லாலின் குடும்ப உறுப்பினரான பெட்கா மாரண்டி, எண் 20 என குறிக்கப்பட்டுள்ள உடல் தங்களின் குடும்பத்தைச் சேர்ந்த சுக்லால் மாரண்டியின் உடையது என்று அடையாளம் காட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, சுக்லால் குடும்பத்தினர் அரசு அதிகாரிகளிடம் அளித்திருந்த தொலைபேசி எண்ணில் இருந்து அவரின் குடும்ப உறுப்பினரை பிபிசி தொடர்பு கொண்டது. இந்த அழைப்புக்கு பதிலளித்த அனில் மாரண்டி, நாங்கள் அடையாளம் கண்டுள்ள உடலுக்கு அன்சாரி குடும்பத்தினர் உரிமை கோருவது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது.

“நாங்கள் புகைப்படத்தை மட்டும் பார்த்து, அதில் சிதைந்த நிலையில் இருந்த உடல் சுக்லாவுடையது என அடையாளம் கண்டுள்ளோம். இதில் தவறு நிகழ்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, இறந்த உடலை நேரில் பார்த்தால் அது யாருடையது என்பதை உறுதிப்படுத்தி விடலாம்” என்றார் அனில் மாரண்டி.

இதுபோன்று, ஒரே உடலுக்கு இரண்டு நபர்கள் உரிமை கோருவது போன்ற பிரச்னைகள் எழுந்தால் அதற்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் குறித்து விவரித்தார் பெயர் கூற விரும்பாத, பாலசோர் மாவட்ட மருத்துவமனை நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

“நிஜாமுதீன் மற்றும் மாரண்டி குடும்பத்தினர் புவனேஸ்வர் சென்றதும், அங்கு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய சடலம் பிணவறையில் இருந்து வெளியே எடுத்து வரப்படும். அங்கு இருக்கும் அதிகாரிகளின் முன்னிலையில் இறந்தவரின் அடையாள ஆவணங்கள் மற்றும் அவரின் பிற புகைப்படங்கள் சரிபார்க்கப்படும். அதனடிப்படையில் அதிகாரிகள் இதில் முடிவு எடுப்பார்கள். இல்லையெனில், தேவைப்பட்டால் டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்படும்” என்று அந்த அதிகாரி கூறினார்.

ரயில் விபத்தில் சிக்கிய சிறுமி ஜாகிதாவும், முகமது பிகாரியும் என்ன ஆனார்கள் என்று இதுவரை தெரியாததைப் போலவே, எண் 20 என குறிக்கப்பட்டுள்ள உடல் யாருடையது என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

  • ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
  • டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
  • இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
  • யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்