நோபல் பரிசு பெற்ற முதல் தமிழரான சி.வி. ராமனுக்கு அந்த சிந்தனை இங்கே உதித்தது எப்படி?

சர்.சி.வி.ராமன்
    • எழுதியவர், லக்கோஜு ஸ்ரீநிவாஸ்
    • பதவி, பிபிசிக்காக

விசாகப்பட்டினம் கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஏ.வி.என் கல்லூரி. இக்கல்லூரியின் முதல் தளத்தில் உள்ள வகுப்பறையில் இருந்து பியூசி (இடைநிலை கல்வி) படித்த சந்திரசேகர வெங்கட ராமன், இந்தியாவிற்கு நோபல் பரிசு வாங்கித் தந்தார். அவர் தனது முக்கியமான ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினமான கடைப்பிடிக்கப்படுகிறது.

சி.வி.ராமன் ஒளிச் சிதறல் குறித்த தனது சோதனைகளுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். ஏவிஎன் கல்லூரியில் படிக்கும் போது தனக்குள் தோன்றிய யோசனைகள்தான் இந்த நோபல் பரிசுக்குக் காரணம் என்று சி.வி.ராமன் தன் வாழ்க்கை வரலாற்றில் எழுதியிருக்கிறார்.

இயற்பியலுக்கான இந்தியாவின் முதல் நோபல் பரிசை பெற்ற சி.வி.ராமன் குறித்து, ஏ.வி.என் கல்லூரியுடனான நினைவுகள் என்ன? சி.வி.ராமன் பரிசோதனை செய்த இயற்பியல் ஆய்வுக்கூடம் இப்போது எப்படி இருக்கிறது?

சர். சி.வி. ராமன் நோபல் பரிசு பெற காரணமாக இருந்த இயற்பியல் ஆய்வகம் இப்போது எப்படி இருக்கிறது?

சி.வி.ராமன் ஏன் விசாகப்பட்டினம் வந்தார்?

நோபல் பரிசு பெற்ற முதல் தமிழரான சி.வி.ராமன் 1888-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் திருச்சியில் பிறந்தார். தந்தை சந்திரசேகர் ஐயர், கல்லூரி பேராசிரியர். கணிதம் மற்றும் இயற்பியல் கற்பித்த சந்திரசேகருக்கு விசாகப்பட்டினம் ஏவிஎன் கல்லூரியில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணி கிடைத்தது.

சி.வி. ராமனின் தந்தை விசாகப்பட்டினம் ஏவிஎன் கல்லூரிக்கு பணி நிமித்தம் வந்ததால், ராமனின் குடும்பம் விசாகப்பட்டினத்திற்கு குடிபெயர்ந்தது.

சி.வி. ராமன் 1905-ல் ஏவிஎன் கல்லூரியில் பியூசி படித்தார். முன்னதாக, விசாகப்பட்டினத்தில் 10ஆம் வகுப்பு வரை படித்தார். சி.வி. ராமனின் கல்வி வாழ்க்கை பெரும்பாலும் விசாகப்பட்டினத்தில்தான் இருந்தது.

சி.வி.ராமன் பள்ளிப் பருவத்திலிருந்தே ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டிருந்தார். அவரின் வாழ்க்கை வரலாற்றை ‘சி.வி.ராமன்- எ பயோகிராஃபி’ என்ற தலைப்பில் எழுதியுள்ள உமா பரமேஸ்வரன், இங்கு படிக்கும் நாட்களில் ஆய்வகத்தில் தான் சி.வி.ராமன் அதிக நேரத்தை செலவழித்ததாக தெரிவித்தார்.

ஏவிஎன் கல்லூரியில் படித்த சி.வி.ராமன், ஆந்திரா பல்கலைக் கழகத்தில் இயற்பியல் துறையை தொடங்குவதிலும் இத்துறையின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றினார் என்கிறார் பேராசிரியர் சீனிவாச ராவ்.

மேலும், அவர் ஆந்திர பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைக்கு கௌரவ பேராசிரியராக மாணவர்களுக்குக் கற்பித்தார்.

சர். சி.வி. ராமன் நோபல் பரிசு பெற காரணமாக இருந்த இயற்பியல் ஆய்வகம் இப்போது எப்படி இருக்கிறது?
படக்குறிப்பு, பேராசிரியர் சீனிவாச ராவ்

ஏவிஎன் கல்லூரியில் சி.வி.ராமன்

ஏவிஎன் கல்லூரியின் பிரதான வாயிலைக் கடந்து கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தோம். சி.வி. ராமனின் அடையாளங்கள், கல்லூரியின் பல இடங்களில் தெரிந்தன.

கல்லூரியின் இயற்பியல் ஆய்வகம், சி.வி.ராமன் சிலை போன்றவை எதிரெதிரே உள்ளன. ஆய்வகப் பலகையில் அவரது ஓவியத்தைக் காணலாம்.

கல்லூரி முதல்வர் சிம்ஹாத்ரி நாயுடு பிபிசியிடம் கூறுகையில், மாணவராக இருந்தபோது அவர் உருவாக்கிய யோசனைகளுக்கான அடிப்படை பரிசோதனைகளை இங்குதான் செய்து வந்ததாக தெரிவித்தார்.

எனவே, அந்த அறை கோவிலாகவே கருதப்படுகிறது என்கிறார் அவர். அந்த அறையில் தற்போது மாணவர்கள் அறிவியல் பரிசோதனைகளை செய்து வருகின்றனர் என்றார்.

இயற்பியல் ஆய்வகத்திற்கு மேலே சி.வி.ராமன் பி.யூ.சி படித்த வகுப்பறை உள்ளது.

அங்கிருந்து பார்த்தால் கடலும் தெருக்களும் தெளிவாகத் தெரியும். ஆனால் இப்போது தெருக்களில் பல கட்டடங்கள் உருவாகிவிட்டன. எனவே, கடல் தெரியவில்லை.

ஆனால் சில கப்பல்கள், கனரக கொள்கலன்கள் மற்றும் கிரேன்கள் துறைமுகத்தில் நங்கூரமிட்டு காணப்படுகின்றன.

சர். சி.வி. ராமன் நோபல் பரிசு பெற காரணமாக இருந்த இயற்பியல் ஆய்வகம் இப்போது எப்படி இருக்கிறது?
படக்குறிப்பு, ஏ.வி.என் கல்லூரியில் சி.வி. ராமன் படித்த வகுப்பறை

ராமன் விளைவை கண்டுபிடித்தது எப்படி?

ராமன் இயற்பியல் ஆய்வகத்தின் மேலே உள்ள வகுப்பறையில் அமர்ந்து வலது பக்க ஜன்னல் வழியாக கடலைப் பார்ப்பது வழக்கம்.

சி.வி.ராமனின் வாழ்க்கை வரலாற்றில் கடல் ஏன் நீலமாக இருக்கிறது என்று சிந்திக்கத் தொடங்கியதாக ஆந்திர பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். சீனிவாச ராவ் கூறினார். இவர் முன்பு ஏவிஎன் கல்லூரியின் இயற்பியல் துறையில் பணியாற்றினார்.

சி.வி.ராமனின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது ராமனைப் பற்றிய பல ஆச்சர்யமான, அற்புதமான விஷயங்கள் தெரியும் என்கிறார் எஸ். சீனிவாச ராவ்.

“சிறிதளவு பணத்தில் எப்படி அறிவியல் பரிசோதனைகள் செய்யலாம் என்பதை சி.வி.ராமன் நிரூபித்தார். நம்மைச் சுற்றியுள்ள சூழல் மற்றும் அதிலுள்ள விஷயங்களில் இருந்தும் அறிவியல் சோதனைகளை செய்ய முடியும் என்றும், ஆக்கப்பூர்வமான யோசனை இருந்தால் போதும் என்றும் அவர் கூறினார். ராமன் விளைவைக் கண்டுபிடிப்பதற்காக அந்த நாட்களில் அவர் நூற்றுக்கணக்கான டாலர்களை செலவு செய்தார். "அவர் கண்டுபிடித்த விஷயத்துடன் செலவை ஒப்பிட்டுப் பார்த்தால்... அது 'ஒன்றுமே இல்லை' என்று பேராசிரியர் சீனிவாச ராவ் விளக்கினார்.

நாம் அன்றாடம் பார்க்கும் கடலின் நிறம் குறித்த தனது கருத்துகளால் உலக அறிவியல் சமூகத்தையே வியப்பில் ஆழ்த்திய ராமன் விளைவை அவர் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

சர். சி.வி. ராமன் நோபல் பரிசு பெற காரணமாக இருந்த இயற்பியல் ஆய்வகம் இப்போது எப்படி இருக்கிறது?

ராமன் விளைவு என்பது என்ன?

ஒரு பொருளின் மீது ஒளிக்கதிர்கள் விழும்போது, ​​ஒளி சிதறுகிறது. அதாவது ஒளிக்கதிர்களில் உள்ள ஃபோட்டான் துகள்கள் திரவப் பொருட்களின் அணுக்கள் மீது விழுந்து சிதறுகின்றன.

இந்த ஃபோட்டான்களில் சில அதிக அதிர்வெண்ணிலும் மற்றவை குறைந்த அதிர்வெண்ணிலும் சிதறுகின்றன. அதாவது, சம்பவ ஒளியின் ஒரு பகுதி வேறுபட்ட அதிர்வெண்ணுடன் சிதறடிக்கப்படுகிறது.

உதாரணமாக கடல் நீரில் சூரிய ஒளி படும்போது அந்த ஒளியில் உள்ள நீல நிறம் அதிகமாக சிதறி நம் கண்களை சென்றடைகிறது என்று சி.வி.ராமன் கண்டுபிடித்தார்.

பொருட்களின் மீது படும் ஒளிக்கதிர்கள் எவ்வாறு சிதறிக்கிடக்கின்றன என்பதைக் காட்டும் ஆராய்ச்சியின் முடிவு 'ராமன் விளைவு' எனப்படுகிறது.

1930-ல் அவரது கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்றார். ராமன் விளைவு மூலம், ரசாயனப் பொருட்களின் அணு மற்றும் மூலக்கூறு கட்டமைப்புகளை அவதானித்து அவற்றின் பண்புகளை அறிய முடியும்.

தொழிற்சாலைகளில் உள்ள செயற்கை ரசாயன கலவைகள், ஜவுளி சாயங்கள் மற்றும் மருத்துவத் துறையில் தேவைப்படும் மருந்துகளின் பகுப்பாய்வு ஆகியவற்றுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

சர். சி.வி. ராமன் நோபல் பரிசு பெற காரணமாக இருந்த இயற்பியல் ஆய்வகம் இப்போது எப்படி இருக்கிறது?

ராமன் விளைவு பிரபலம் அடைந்தது எப்படி?

கடல் ஏன் நீலமாக இருக்கிறது என்ற கேள்வியில் இருந்துதான் ராமனின் ஆராய்ச்சி தொடங்கியது... கடல் நீரில் உள்ள மூலக்கூறுகள் பிரிந்து செல்வதாக ராமன் விளக்கியதாக ஏவிஎன் கல்லூரியின் இயற்பியல் துறை ஆசிரியர் டாக்டர் ஜி.சங்கர நாராயண ராவ் பிபிசியிடம் தெரிவித்தார். சூரிய ஒளி வெவ்வேறு வண்ணங்களில் பிரதிபலிக்கிறது. ஆனால், அவற்றில் நீல கதிர்கள் ஆழமாக ஊடுருவி பிரதிபலிக்கின்றன. அதனால் கடல் நீலமாக தோன்றுகிறது.

ஏவிஎன் கல்லூரியில் தொடங்கிய சி.வி.ராமன் ஆய்வுப் பயணம் ராமன் விளைவு வரை விரிந்தது என அவர் தெரிவித்தார்.

ஒரு பொருளின் மீது ஒளி விழுந்தால் அது சிதறி விடும்... அதன் காரணமாக அது தன் போக்கை மாற்றி விடும் என்பதை ராமன் தனது கோட்பாடுகள் மூலம் நிரூபித்தார்.

ராமன் தன்னிடம் அதிக முதலீடு இல்லாவிட்டாலும், அப்போது தேவையான நவீன கருவிகள் இல்லாவிட்டாலும், தன்னிடம் இருந்த குறைந்த வளத்தில் சோதனை செய்ததாக சங்கர நாராயண ராவ் கூறுகிறார்.

ஏவிஎன் கல்லூரியில் எப்போதும் மாணவர்களிடம் இவற்றைச் சொல்வார்கள், அவர் எங்கு படித்தார், எங்கு பரிசோதனை செய்தார் என்பதை மாணவர்களிடம் கூறி பெருமைப்படுவார்கள்.

பிப்ரவரி 28, 1928-ல், ராமன் ஒரு பொருளின் மீது ஒளிக்கற்றை விழுந்தால், அது சிதறுகிறது என்பதை முதன்முறையாக சோதனை மூலம் நிரூபித்தார்.

இதன் அடிப்படையில் தான், அன்றைய தினம் தேசிய அறிவியல் தினமாக முழுவதும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விழாவாக கல்லூரியில் நடத்துவார்கள். தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 1987 முதல் இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்படுகிறது.

சி.வி.ராமன் ஒளி மட்டுமின்றி ஒலி, நிறங்கள், திரவங்களின் பாகுத்தன்மை, தாதுக்கள், வைரம், படிகம் போன்றவற்றிலும் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார் என்று பேராசிரியர் எஸ். சீனிவாச ராவ் கூறினார்.

ராமனின் ஆய்வுக் கட்டுரைகள் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தால் சேகரிக்கப்பட்டு அங்கேயே பாதுகாக்கப்பட்டதாக அவர் கூறினார்.

சர். சி.வி. ராமன் நோபல் பரிசு பெற காரணமாக இருந்த இயற்பியல் ஆய்வகம் இப்போது எப்படி இருக்கிறது?

பெருமை கொள்ளும் மாணவர்கள்

தற்போதைய ஏவிஎன் கல்லூரி 1860-ம் ஆண்டு ஏவிஎன் உயர்நிலைப்பள்ளியாக தொடங்கப்பட்டு பின்னர் 1878-ம் ஆண்டு ஏவிஎன் கல்லூரியாக மாறியது. 1960-ல், உயர்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவையொட்டி, சி.வி.ராமன் வாழ்த்து தெரிவித்து கையெழுத்திட்ட ஆவணத்தை அனுப்பினார். அது இன்னும் கல்லூரியில் பாதுகாக்கப்படுகிறது.

மாணவர்களிடம் சி.வி.ராமனைப் பற்றிச் சொல்லும்போது, ​​அவர் படித்த வகுப்பறை, பரிசோதனை செய்த ஆய்வகம், கையெழுத்துப் போட்ட ஆவணத்தைக் காட்டுகிறார்கள். அவர்களைப் பார்த்து மாணவர்கள் உத்வேகம் பெறுகிறார்கள் என்று கல்லூரி முதல்வர் சிம்ஹாத்ரி நாயுடு கூறினார்.

சர். சி.வி. ராமன் நோபல் பரிசு பெற காரணமாக இருந்த இயற்பியல் ஆய்வகம் இப்போது எப்படி இருக்கிறது?
படக்குறிப்பு, இயற்பியல் ஆய்வகம்

சி.வி.ராமன் மாணவராக இருந்தபோது இயற்பியல் பரிசோதனைகளை மேற்கொண்ட அதே ஆய்வகத்தில்தான் தற்போதைய அறிவியல் மாணவர்களும் சோதனை செய்து வருகின்றனர். சி.வி.ராமன் படித்த கல்லூரியில் தாங்களும் படிக்கிறோம் என்பதில் பெருமை அடைவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

“சி.வி.ராமன் படித்த அதே கல்லூரியில் நாங்கள் படிப்பதில் பெருமை அடைகிறோம். அவர் ஆய்வுகளை செய்த ஆய்வகத்தில் இங்கு பணியாற்றுவது எங்களுக்கு மிகுந்த உத்வேகத்தை அளிக்கிறது. இது அறிவியல் துறையில் நாம் ஏதாவது சாதிக்க முடியும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது” என்று பி.எஸ்சி மாணவர்களான லிகிதேஸ்வரி மற்றும் சோனி ஆகியோர் பிபிசியிடம் தெரிவித்தனர்.

சி.வி.ராமனுடன் புரட்சிக் கதாநாயகன் அல்லூரி சீதாராமராஜு, திரைப்பட நடிகர் எஸ்.வி.ரங்காராவ், சுதந்திரப் போராட்ட வீரர் தென்னெடி விஸ்வநாதம் ஆகியோர் ஏவிஎன் கல்லூரியில் படித்தவர்கள். அதுமட்டுமின்றி, கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களான ரவி சாஸ்திரி மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ஆகியோரும் இங்கு மாணவர்களாக இருந்தனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)