குஜராத்தில் தங்கத்தை தேடி தோண்டியபோது கிடைத்தவை, மனித வரலாற்றை மாற்றும் பொக்கிஷங்களா?

பட மூலாதாரம், PRASHANT GUPTA
குஜராத் மாநிலம் கட்ச் நகரின் தோலாவிராவிலிருந்து 51 கிமீ தொலைவில் உள்ள லோத்ரானி பகுதியில் ஹரப்பா நாகரிக காலத்தை சேர்ந்த தொன்ம எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தோலாவிராவில் கிடைத்த புதைபடிவங்களைப் போன்றே இங்கும் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
சிந்து சமவெளி பண்பாட்டின் முக்கிய நகரங்களாகக் கருதப்படும் ஆமதாபாத்தின் லோத்தல் மற்றும் கட்சின் தோலாவிரா ஆகியவை, தற்போது குஜராத்தின் உலகளாவிய அடையாளங்களாக மாறியுள்ளன.
பேராசிரியர் டாமியன் ராபின்சன் வழிகாட்டுதலின் படி, ஆய்வாளர் அஜய் யாதவ், லோத்ரானி பகுதியில் ஆய்வு செய்து இந்த புதைபடிவங்களைக் கண்டுபிடித்துள்ளார். அவர்கள் இருவரும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தொல்லியல் அமைப்புடன் இணைந்து பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பகுதியின் உள்ளூர்வாசிகள் தங்கத்தை தேடும் முயற்சியில் இந்த இடத்தை தோண்டும்போது, இந்த புதைபடிவங்களை கண்டுபிடித்ததாக தெரிவிக்கிறார் அவர். அவற்றை முதற்கட்டமாக ஆய்வு செய்ததில் இந்த படிமங்கள் ஹரப்பா காலத்தைச் சேர்ந்தவை என்பதை அவர் உணர்ந்துள்ளார்.
அஜய் யாதவின் கூற்றுப்படி, தோலாவிராவில் கிடைத்த பெரிய அளவிலான ஹரப்பா மண்பாண்டங்களை போலவே இங்கும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஹரப்பா நாகரீகத்துடன் ஒப்பிடுகையில், இந்த குடியேற்றம் மிகவும் முதிர்ச்சியடைந்ததாக தெரிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த இடத்தை விரிவாக ஆய்வு செய்வதன் மூலம் மேலும் பல உண்மைகளை கண்டறிய முடியும் என்று கூறப்படுகிறது.

பட மூலாதாரம், PRASHANT GUPTA
ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது என்ன?
ஆய்வாளர்கள் குழு கட்சின் காதிர் மற்றும் பெல்லாபெட் பகுதிகளில் பல இடங்களை ஆராய்ந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில், லோத்ராணிக்கும் ராசா-ஜி கர்தாவுக்கும் இடையே தோலாவிராவிலிருந்து கிழக்கே 51 கிலோமீட்டர் தொலைவில் ஹரப்பா காலத்து குடியேற்றம் உள்ளது என்பதை தெரிந்துகொண்டார் அஜய்.
இதற்கு முன்பு ஏற்கெனவே இந்த பகுதியில் ஹரப்பாவை சேர்ந்த மூன்று குடியேற்ற பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு பேலியோலித்திக் காலத்தை சேர்ந்தவை. இதில் கமானியாவில் உள்ள டிம்பி-2, சயாகானில் உள்ள வந்த் மற்றும் ஜடாவாடாவிற்கு அருகிலுள்ள மோரூவின் ஹரப்பா தொல்பொருள் ஆய்வுத்தளங்கள் ஆகியவை அடங்கும்.
இந்த பகுதிகளில் பல தசாப்தங்களாகவே ஏராளமான ஆய்வுகள் நடைபெற்று வரும் போதிலும் கூட, எதையும் உறுதியாக கண்டறியமுடியவில்லை.
இந்நிலையில் மோலோதரில் நிறைய மண்பாண்டங்கள், டெரகோட்டா பீப்பாய்கள் மற்றும் புதைகுழிகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, உறுதியான குடியிருப்புகள் (ஹரப்பா காலத்தைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது), துளையிடப்பட்ட ஜாடிகள், மண்பாண்டங்கள் ஆகியவை இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இங்கு காணப்படும் குடியிருப்புகளின் சுவர்கள் சராசரியாக 3.3 மீட்டர் தடிமன் கொண்டவை. வடமேற்கு திசையில் சராசரியாக 10*10 மீட்டர் அளவுள்ள அறைகளைக் கொண்டிருக்கும் ஒரு கிணறும் உள்ளது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதைபடிவங்கள் தோலாவிராவைப் போலவே இருப்பதால் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

பட மூலாதாரம், PRASHANT GUPTA
கேள்வி எழுப்பும் ஆய்வாளர்கள்
இந்நிலையில் இந்த கண்டுபிடிப்புகள் குறித்து பல ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஸ்பெயினில் உள்ள கேட்டலான் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிளாசிக்கல் ஆர்க்கியாலஜியின் ஆராய்ச்சியாளர் பிரான்சிசி. சி , புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல் தவறானது என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவை ஏற்கெனவே ஆய்வில் இருப்பவைதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக, இந்திய தொல்லியல் துறை, கேரள பல்கலைக்கழகம், கட்ச் பல்கலைக்கழகம் மற்றும் பிற நிறுவனங்கள் லோத்ரானியில் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த கண்டுபிடிப்பு குறித்து இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
இது தொடர்பாக இந்திய தொல்லியல் துறையின் வதோதரா வட்ட கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் ஏ.எஸ்.வி.சுப்ரமணியத்தை தொடர்பு கொள்ள பிபிசி குஜராத்தி பலமுறை முயற்சித்தது. எனினும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

பட மூலாதாரம், K AMARNATH RAMAKRISHNAN / FACEBOOK
ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
குஜராத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைபடிவங்கள் குறித்து தொல்பொருள் ஆய்வறிஞரான அமர்நாத் ராமகிருஷ்ணனிடம் பேசினோம்.
குஜராத்தில் இதற்கு முன்பே ஏராளமான தொல்பொருள் ஆய்வுத்தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று கூறும் அவர், இந்த பகுதி கட்ச் கடல்பகுதியை ஒட்டியிருப்பதால் பல்வேறு நகரங்களுடன் வணிகத்தொடர்பை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புகள் அதிகம் என தெரிவித்துள்ளார்.
“ஏற்கனவே இங்கு நடத்தப்பட்ட ஆய்வுகளில் பல தொல்பொருள் எச்சங்கள் கிடைத்துள்ளது. இந்த பகுதி கடலை சார்ந்ததாக இருந்ததால், இவர்களுக்கு சுமேரியன் தொடர்புகள் இருந்துள்ளது” என்றார்.
குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டவைகளில் இருந்து இரண்டு மாநிலங்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளதா என்று அவரிடம் கேட்டோம்.
அதற்கு பதிலளித்த அவர், “ இன்னும் அதற்கான விரிவான ஆய்வுகள் செய்யப்படவில்லை. மகாராஷ்டிரா தைமாபாத்தோடு ஆய்வு நிற்கிறது. மேலும் ஆய்வை செய்தால் மட்டுமே தொடர்புகள் குறித்து கண்டறிய முடியும்” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
ஹரப்பா நாகரிகம் என்றால் என்ன?
சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, உலகில் மூன்று பெரிய நாகரிகங்கள் இருந்துள்ளன.
அதில் ஒன்றான பண்டைய எகிப்து நாகரிகம் நைல் நதிக்கரையில் செழுமையான நகரங்களையும், அரண்மனைகளையும் கட்டியெழுப்பியது.
மற்றொரு நாகரிகமான மெசபடோமிய நாகரிகம் மேற்கு மற்றும் மத்திய-கிழக்கு ஆசியாவில் டைக்ரிஸ்-யூப்ரடீஸ் நதிக்கரையில் உருவானது.
அதே சமயத்தில், சிந்து நதிக்கரையில் ஒரு நாகரீகமும் உருவாகியிருந்தது. மேலும் அதுவே அந்தக் காலத்தின் மிக நவீன மற்றும் நகர்ப்புற கலாச்சாரமாக கருதப்பட்டது.
சிந்து சமவெளி நாகரிகம் இன்றைய இந்தியாவின் மேற்கில் சிந்து நதிக்கரையிலும், கிழக்கே பாகிஸ்தானிலும் உருவானது.
பாகிஸ்தானில் உள்ள ஹரப்பா இந்த நாகரிகத்தின் முக்கிய மையமாக இருந்தது. எனவே இந்த பண்டைய நாகரிகம் 'ஹரப்பா நாகரிகம்' என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த சிந்து சமவெளி நாகரிகத்தின் வேர்கள் வடக்கே ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்கில் குஜராத் வரை பரவியுள்ளது.
ஹரப்பா, கனேரிவாலா, மொஹஞ்சதாரோ, தோலாவிரா, காளி வங்காளம், ராக்கிகர்ஹி, ரூபார் மற்றும் லோத்தல் ஆகியவை இந்த கலாச்சாரத்தின் முக்கிய நகரங்களாகும்.
கட்சில் உள்ள தோலாவிரா மற்றும் அகமதாபாத்திற்கு அருகிலுள்ள லோத்தல் ஆகியவை குஜராத்தில் உள்ள சிந்து சமவெளி நாகரிகத்தின் தொல்பொருள் தளங்கள் ஆகும்.
ஆராய்ச்சியாளர்கள் இதை இந்திய கலாச்சாரத்தின் அடித்தளமாக கருதுகின்றனர். இந்தியாவின் இன்றைய வாழ்க்கைமுறை இந்த கலாச்சாரத்தின் அடித்தளத்தில் தான் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












