சிதம்பரம் நடராஜர் கோவில்: சோழர் காலம் முதலே அரசு கட்டுப்பாட்டில் இல்லையா? உண்மை என்ன?

சிதம்பரம் நடராஜர் கோவில்
படக்குறிப்பு, அறநிலையத்துறை அதிகாரிகள் - தீட்சிதர்கள் இடையே வாக்குவாதம்
    • எழுதியவர், மாயகிருஷ்ணன். க
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை என கூறப்படும் சிற்றம்பல மேடையில் ஏறி நான்கு நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்யக்கூடாது என, தீட்சிதர்கள் கூறியதுடன் கதவை அடைத்தும் உள்ளதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்தப் பிரச்னை எப்போது, ஏன் தொடங்கியது?

சைவத்திரு கோவில்களில் சிறந்து விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் காலை, இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்று வருகிறது.

இன்று டிசம்பர் 26-ஆம் தேதி தேரோட்ட விழா நடைபெற்று வருகிறது. நாளை டிசம்பர் 27-ஆம் தேதி முக்கிய திருவிழாவான ஆருத்ரா தரிசன விழா நடைபெற உள்ளது.

இந்நிலையில், நேற்று (டிச.25) முதல் 28-ம் தேதி வரை கனகசபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதித்து தீட்சிதர்கள் கனகசபையின் கதவை மூடியுள்ளனர்.

சிதம்பரம்

ஆனித் திருமஞ்சன விழாவில் சர்ச்சை

சிதம்பரம் நடராஜர் கோவிலில் புகழ்பெற்ற ஆனி திருமஞ்சன திருவிழாவின் பொழுது பக்தர்கள் யாரும் கோவிலின் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோவில் தீட்சிதர்கள் சார்பில் பதாகை அறிவிப்பு வைக்கப்பட்டது. இதற்கு சில பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

புகார் கொடுத்த அலுவலர்

அப்போது சிதம்பரம் தில்லைக்காளி கோவில் செயல் அலுவலர் சரண்யா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் சிதம்பரம் தாசில்தார் செல்வகுமாருடன் கோவிலுக்குள் சென்றனர்.

கோவிலுக்குள் கனகசபை அருகே சென்ற செயல் அலுவலர் சரண்யா அங்கிருந்த, ‘பக்தர்கள் கனகசபை மேல் ஏறக் கூடாது’ என்று இருந்த பதாகையை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு அங்கிருந்த தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ”பதாகையை ஏன் அகற்றுகிறீர்கள்?” என்று கூறி அவர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

பதிலுக்கு செயல் அலுவலர் சரண்யா மற்றும் அலுவலர்கள் அரசாணையை மீறி, ’கனகசபை மீது ஏறக்கூடாது என பதாகை வைக்கக் கூடாது. இதை உடனடியாக அகற்றுங்கள்’ என கூறினார். ஆனால், தீட்சிதர்கள் பதாகையை அகற்றாமல் போலீசார் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதனால் பதாகையை அகற்றாமல் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் திரும்பிச் சென்றனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோவில்

கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சந்திரன் தலைமையில் சிதம்பரம் கோவில்களின் வட்டார ஆய்வாளர் நரசிங்கபெருமாள், தில்லை காளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் கோவிலின் பொது தீட்சிதர்களிடம் அரசாணையின்படி கனகசபையில் பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தி பேசினர்.

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த தீட்சிதர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற தடை ஆணை பெறப்பட்டுள்ளதாகவும், இந்த நான்கு நாட்கள் மட்டும் பக்தர்களை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தனர். ’அப்படியானால் நீதிமன்ற தடை ஆணையை கொடுங்கள்’ என, இந்து சமய அறநிலையத்துறையினர் தீட்சீதர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள் வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில், சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா சிதம்பரம் நகர போலீஸில் புகார் செய்தார்.

சிதம்பரம் நடராஜர் கோவில்
படக்குறிப்பு, கனகசபை மீது ஏற பக்தர்கள் மறுக்கப்படுவதற்கு எதிர்ப்பு

மீண்டும் காவல் நிலையத்தில் புகார்

இந்நிலையில், சிதம்பரம் தில்லைகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா சிதம்பரம் நகர காவல்நிலையத்தில் ஒரு புகார் செய்துள்ளார்.

அதில், ”சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அரசாணைப்படி பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்களா என்று கண்காணிப்புப் பணியில் நேற்று நானும், இந்து அறநிலையத்துறை சரக ஆய்வாளர் நரசிங்கபெருமாளும் இருந்த போது, தீட்சிதர்கள் இன்று டிசம்பர். 25 முதல் 28-ம் தேதி வரை பக்தர்களுக்கு கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என்று தெரிவித்ததாக” அப்புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், அதுகுறித்த நீதிமன்ற ஆணையை காட்டாமல் தங்கள் தரப்பு வழக்குரைஞரை கேட்டு சொல்வதாக தீட்சிதர்கள் மிரட்டியதாகவும் அரசு பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியதாகவும் 5-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அம்மனுவில் கூறியிருந்தார். காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோவில்
படக்குறிப்பு, மூடப்பட்ட கனகசபையின் கதவு

“சோழர் காலம் முதலே ஆயிரம் ஆண்டாக அரசு கட்டுப்பாட்டில் இல்லை”

கனகசபை சம்பவங்கள் குறித்து சிதம்பரம் நடராஜர் கோவிலின் வெங்கடேசன் தீட்சிதர் கூறுகையில்,

”நடராஜர் கோவில் மிக தொன்மையான கோவிலாகும். இது சோழர்கள் காலத்தில் இருந்தே தன்னாட்சி பெற்ற நிர்வாகம் ஆகும். இதற்கான கல்வெட்டு ஆதாரமும் உள்ளது” என்றும் கூறினார்.

மேலும், தங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் அரசாங்கம் இடையூறுகள் செய்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கோவில் நிர்வாகம் தொடர்பாக 1951-ல் உயர் நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்த நிலையில், தொடர்ந்து சில ஆண்டுகள் எந்த பிரச்னையும் இல்லாமல் விழாக்கள் நடைபெற்றதாக குறிப்பிட்ட அவர், 1980ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையும் நெருக்கடிகள் தொடர்ந்ததாக கூறினார்.

“2014-இல் உச்ச நீதிமன்றத்தில் இருந்த இரண்டு நீதிபதிகள் இது தீட்சிதர்கள் நிர்வாகத்தின் கீழ் இயங்குகிறது. எனவே, இதில் யாரும் தலையிட வேண்டாம் என்று கூறியுள்ளார்கள். 1951 தீர்ப்பு பொருந்தும் என்றும் கூறியதாகவும் கூறினார் என்ற போதிலும் தொடர்ந்து எங்களுக்கு தற்பொழுது நெருக்கடியை மாநில அரசாங்கம் கொடுத்து வருகின்றது” என தெரிவித்தார்.

வெங்கடேசன் தீட்சிதர்
படக்குறிப்பு, வெங்கடேசன் தீட்சிதர்

”பாதுகாப்பு முக்கியம்”

மேலும், பாதுகாப்பு கருதி நான்கு நாட்களுக்கு மட்டுமே அதிக கூட்டம் கூடும் நாட்களான திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா தரிசன உள்ளிட்ட முக்கிய விழாக்கள் காலங்களிலேயே கனக சபையில் பக்தர்கள் ஏறி தரிசனம் செய்ய தடை விதித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கனக சபை என்றால் என்ன?

சிதம்பரம் கோவிலில் சித்தசபை, கனகசபை, நடனசபை, தேவசபை, ராஜசபை ஆகிய ஐந்து சபைகள் நடராஜர் கோவிலில் அமைந்துள்ளன. பேரம்பலம் என்பது தேவசபை என்றும், நிருத்தசபை என்பது நடன சபை என்றும், கனகசபை என்பது பொன்னம்பலம் எனவும் அழைக்கப்படும். இதில் பொன்னம்பலம் என்றும் அழைக்கப்படும் கனக சபையானது நடராஜபெருமானை மிக அருகில் நின்று தரிசனம் செய்யும் இடமாகும்.

சமீபத்தில் தில்லை காளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, ”அறநிலையத் துறையினர் யாரும் உள்ளே வரக்கூடாது என்று பதாகை வைத்திருந்ததாகவும் திருச்செந்தூரில் வருஷாபிஷேகம் செய்யும்போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறுவதாகவும் தெரிவித்த தீட்சிதர், ”எங்களை மட்டும் கேள்வி கேட்பது ஏன்?” என கூறினார். இதுதொடர்பாக, தமிழக அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.

சிதம்பரம் நடராஜர் கோவில்

"சோழர் காலம் முதலே சிதம்பரம் நடராஜர் கோவில் தன்னாட்சி பெற்றது"

சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு புற சுவரில் உள்ள கல்வெட்டு விவரங்கள் குறித்து தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கலை கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசும்போது, ”சிதம்பரம் நடராஜர் கோவில் சோழர் காலம் முதலாகவே தன்னாட்சி பெற்ற சுதந்திரமான நிர்வாகத்தைக் கொண்டிருந்தது.

கோவிலின் முதல் பிரகாரத்தின் தெற்கு புற சுவற்றில் பொறிக்கப்பட்டுள்ள கி.பி. 1036-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள ராஜேந்திர சோழனின் கல்வெட்டில் இவ்வூர் "ராஜேந்திரசிங்கன் வளநாட்டுத் தனியூர் பெரும்பற்ற புலியூர்” என குறிப்பிடுவதிலிருந்து அறியமுடிகிறது. இது ’தனியூர்’ என்பது தன்னாட்சி பெற்ற ஊர் என்பதாகும்.

இது பற்றிய முழு விளக்கம் தென் இந்திய கல்வெட்டு தொகுதி நான்கு, எண் 223-ல் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

தில்லையின் முழு நிர்வாக பொறுப்புகளையும் கவனிப்பதற்கு என மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் பணி அமர்த்தப்பட்டு இருந்த உறுப்பினர்கள் பற்றிய முழு விவரங்களும் இவரது காலத்தில் வெளியிடப்பட்டுள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

”அந்த பட்டியலில் தீட்சிதர்களுடன், அரசரால் நேரடியாக நியமிக்கப்பட்ட அவரது நம்பிக்கைக்குரிய மற்றவர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். தன்னாட்சி பெற்ற நிர்வாகத்தை அரசரின் நேரடியாக நியமிக்கப்பட்ட நபர்களே கண்காணித்து வந்திருக்கிறார்கள். இந்த நிர்வாக குழுவில் மிகத் திறமை வாய்ந்த நிர்வாகிகளை இனம் கண்டு மிகச்சிறந்த முறையில் பெரும் பற்றப் புலியூர் ஆகிய தனியூர் மொத்த நிர்வாகமும் அரசின் தலையீடுகள் இன்றி முழு அதிகாரத்தோடு நடைபெற்றதை இவரது கல்வெட்டின் ஊடாக அறியலாம்” என அவர் தெரிவித்தார்.

பேராசிரியர் சிவராமகிருஷ்ணன்
படக்குறிப்பு, பேராசிரியர் சிவராமகிருஷ்ணன்

450 ஆண்டுகளாக இந்நிலை தொடர்வதை கல்வெட்டு சான்றுகள் உறுதிப்படுத்துவதாக பல உதாரணங்களுடன் இதற்கு வலுசேர்க்கிறார்.

”இக்கல்வெட்டில் நிர்வாக குழுவில் இருந்தவர்கள் பெயர்களும் உள்ளன. இதன் மூலம் அந்த காலத்தில் ஒளிவுமறைவற்ற வெளிப்படையான மக்கள் நலன் சார் நிர்வாக கட்டமைப்பு தில்லையிலும் இருந்துள்ளது. இந்த ஊரில் மக்களின் நலனுக்கான தன்னாட்சி என்ற சிறப்பு நிர்வாக அலகு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்” என்றார் அவர்.

எனவே, அந்த காலத்திலேயே தில்லையானது தன்னாட்சி பெற்ற அமைப்பாக இருந்து உள்ளது என நிறுவும் அவர், இந்நிலை செஞ்சி நாயக்கர் மன்னர்களின் காலம் வரை தன்னாட்சி அதிகாரம் தொடர்ந்து வருவதையும் இவர்களது கல்வெட்டுகளால் அறியமுடிவதாக அவர் கூறினார்.

தெய்வீக பக்தர்கள் பேரவை புகார்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்களை கனகசபை மேடை மீது அனுமதிக்காத தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெமினி ராதா மற்றும் நிர்வாகிகள் சிதம்பரம் காவல் துறை உதவி கண்காணிப்பாளர் ரகுபதியிடம் கனக சபை சர்ச்சை தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.

தொடர்ந்து அவர் பிபிசி தமிழிடம் கூறுகையில், “மார்கழி ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்கள் கனகசபை மேடை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் கனகசபை மீது ஏறும் படிக்கட்டின் கதவையும் கோயிலின் உட்புறமாக தாழிட்டுள்ளனர். இதுகுறித்து கேட்டபோது தீட்சிதர்கள் அதற்கும் அனுமதி தர மறுத்து எங்களை தவறாக விமர்சித்தனர்” என தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு மற்றும் தமிழக அரசின் அரசாணையை மதிக்காமல் பக்தர்கள் கனகசபை மீதேறி சுவாமி தரிசனம் செய்வதற்கு தடை விதித்துள்ள பொது தீட்சிதர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து கடலூர் மாவட்ட எஸ்.பி. மற்றும் கோவில் அறநிலையத்துறை அதிகாரி சரண்யாவின் பதில்களை பெற பலமுறை முயன்றும் அவர்கள் பதில் அளிக்கவில்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்,இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)