காஷ்மீரில் அமர்நாத் குகை வரை சாலை அமைப்பதால் பனிலிங்கம் விரைவாக உருகிவிடுமா? - என்ன சர்ச்சை?

அமர்நாத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமர்நாத் குகையில் 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம்
    • எழுதியவர், மஜித் ஜஹாங்கீர்
    • பதவி, ஸ்ரீநகரில் இருந்து பிபிசி ஹிந்திக்காக

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கு செல்லும் பாதையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவது கடந்த சில நாட்களாக செய்திகளில் வெளியாகி வருகிறது.

இந்திய அரசின் எல்லைச் சாலைகள் அமைப்பு (பி.ஆர்.ஒ) தனது எக்ஸ் (டிவிட்டர்) தளத்தில் சமீபத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்தது. அந்த வீடியோவில், தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கு சாலை அமைக்கப்படுவது காட்டப்பட்டுள்ளது.

இந்த வீடியோ வெளியானதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இச்சாலையால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், எதிர்காலத்தில் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அரசியல் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நிபுணர்கள் மற்றும் அனைத்து மக்களும் கவலையடைந்துள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும், கட்சியின் மாநிலச் செயலாளருமான முகமது யூசுப் தாரிகாமி தெரிவித்தார்.

"இங்கு நம்பிக்கையுடன் பயணம் செய்ய வருபவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து. பாதுகாப்பு என்பது தீவிரவாதம் அல்ல. மாறாக, அவர்கள் வெவ்வேறு பருவநிலைக்கு ஏற்ப பாதுகாப்பாக இருக்க வேண்டும், விபத்துகள் ஏற்படக்கூடாது. எனவே, அந்த சாலை அமைப்பதற்கான அவசியமில்லை என்பதை நாங்கள் நம்புகிறோம்" என அவர் தெரிவித்தார்.

அமர்நாத் யாத்திரைக்கும் மக்களின் வேலைவாய்ப்புக்கும் தொடர்புள்ளது என்றும் அங்கு சாலை அமைப்பது அவர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

அமர்நாத் குகை சாலை

பட மூலாதாரம், MAJID JAHANGIR

அமர்நாத் செல்லும் பாதை எப்படியிருக்கும்?

ஸ்ரீநகரில் இருந்து அமர்நாத் குகைக்கு 131 கி.மீ தூரம் உள்ளது. மேலும் இது கடல் மட்டத்திலிருந்து 12,756 அடி உயரத்தில் உள்ளது.

அமர்நாத் குகையின் முழுப்பகுதியும் ஆண்டு முழுவதும் பனிப்பாறைகள் மற்றும் உயர்ந்த பனி மலைகளால் சூழப்பட்டுள்ளது.

பஹல்காம் மற்றும் பால்டலில் உள்ள ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்கள் குதிரைகள், பல்லக்குகள் மற்றும் கைவண்டிகளின் உதவியுடன் பல்வேறு வேலைகளை செய்துவருகின்றனர். அமர்நாத் குகையை பஹல்காம் மற்றும் பால்டால் வழியாக அடையலாம். பஹல்காமில் இருந்து 20 கி.மீ. மற்றும் பால்டாலில் இருந்து சுமார் 14 கி.மீ. தூரம் நடந்தே அமர்நாத் வரை பயணிக்க வேண்டும்.

தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ஹஸ்னைன் மசூதி, சாலை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்குவதற்கு முன் சுற்றுச்சூழல் மதிப்பீடு தொடர்பான விதிகள் பின்பற்றப்பட்டதா என கேள்வி எழுப்புகிறார்.

"சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்பட்டிருந்தால், அதை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும். அதில் என்ன கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை மக்களுக்கு கூற வேண்டும். இது இன்றைக்கான விஷயம் அல்ல, வரும் தலைமுறைகளுடன் தொடர்புடையது" என அவர் கூறுகிறார்.

"இது நமது கடமை மட்டுமல்ல. நமது எதிர்கால சந்ததியினருக்கு அதே நிலையில் சுற்றுச்சூழலை விட்டுச்செல்ல சர்வதேச சட்டங்களும் அரசியலமைப்பு சட்டமும் இதுகுறித்து செயலாற்ற வேண்டும்" என்கிறார் அவர்.

ஆகஸ்ட் 05, 2019 அன்று, ஜம்மு-காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டபோது, ​​ஜம்மு - காஷ்மீர் மேம்பாட்டுச் சட்டம் என்ற ஒன்று இருந்தது. அதன்படி, எந்தவொரு திட்டத்திற்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை நிபுணர்கள் மூலம் செய்வது அவசியம் என அவர் விளக்குகிறார்.

அமர்நாத் குகை சாலை

பட மூலாதாரம், BRO VIDEO GRAB

படக்குறிப்பு, சங்கம் பள்ளத்தாக்கிலிருந்து அதன் மேல் பகுதிக்கு செல்வதற்கான மாற்று சாலை
அமர்நாத் குகை சாலை

பட மூலாதாரம், BRO VIDEO GRAB

படக்குறிப்பு, சங்கம் பள்ளத்தாக்கின் மேல்பகுதி வரையிலான சாலை
அமர்நாத் குகை சாலை

பட மூலாதாரம், BRO VIDEO GRAB

படக்குறிப்பு, அமர்நாத் குகை வரையிலான சாலையை விரிவுபடுத்துவது தொடர்பாக பி.ஆர்.ஓ. வெளியிட்ட காணொளி

அமர்நாத் சாலை பற்றி பி.ஆர்.ஓ. என்ன சொல்கிறது?

ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சிகளின் எதிர்ப்புக்குப் பிறகு, பி.ஆர்.ஓ. நவம்பர் 10 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், அமர்நாத் குகைக் கோவிலில் தற்போது நடைபெற்று வரும் சாலைத் திட்டம் பாதசாரிகள் பயன்பாட்டுக்காக, சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையில், “இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி புனித அமர்நாத் குகைக்கு செல்லும் பாதைகளை அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது“ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு, 2012-ஆம் ஆண்டு நீதிமன்றம், பாதசாரிகளின் நடமாட்டத்தை எளிதாக்கவும், அப்பகுதியில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், தற்போதுள்ள பாதையின் முக்கியமான பகுதிகளை மேம்படுத்தவும், பாதுகாப்பு கைப்பிடிகள் மற்றும் தடுப்புச்சுவர்களைப் பராமரிக்கவும் சாலையை அகலப்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வாகனப் பாதை வழியாக குகைக் கோயிலுக்குச் செல்வது பற்றிய செய்தி "தவறானது" என்று பி.ஆர்.ஓ. அதில் கூறியிருந்தது. "நடைபாதையாகவும் பல்லக்குகள் மூலமாகவும் கைகளில் ஊன்றுகோல்களை வைத்துக்கொண்டு பயணிப்பவர்கள், குதிரைவண்டிகளில் பயணிப்பவர்களுக்காகவும் பாதைகளை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெறுவதாக" அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமர்நாத் குகை சாலை

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பி.ஆர்.ஓ.வின் டி.ஜி. ராஜீவ் சவுத்ரி, ஸ்ரீ அமர்நாத் யாத்ரா பாதையில் பால்டால் மற்றும் சந்தன்வாரியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஜூன் மாதம் ஆய்வு செய்தார்.

பாதை பழுது

முன்னதாக, பால்டால் வழித்தடத்தில் இருந்து அமர்நாத் குகை வரையிலான பாதை மற்றும் சாலைகளை சீரமைக்கும் பணி ஜம்மு-காஷ்மீர் அரசின் சாலைகள் மற்றும் கட்டடங்கள் துறையால் கவனிக்கப்பட்டது. அதேநேரத்தில், பஹல்காமில் இருந்து குகை வரையிலான சாலையை சரிசெய்து பராமரிக்கும் பணி பஹல்காம் மேம்பாட்டு ஆணையம் கவனித்து வந்தது.

செப்டம்பர் 2022-இல், பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணி எல்லைச் சாலைகள் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் அரசு செப்டம்பர் 2022-இல் அமர்நாத் பாதையின் பராமரிப்பு மற்றும் மேம்படுத்தும் பணியை தங்களிடம் ஒப்படைத்ததாக பி.ஆர்.ஓ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போது, சங்கம் பள்ளத்தாக்கில் இருந்து சாலையை பி.ஆர்.ஓ. விரிவுபடுத்தியுள்ளது. சங்கம் பள்ளத்தாக்கின் மேலிருந்து கீழ் குகை வரையிலான நீளமும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது எனவும் கீழ் குகையிலிருந்து புனித குகை வரையிலான பாதையும் அகலப்படுத்தப்பட்டுள்ளது என எல்லைச் சாலைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

பி.ஆர்.ஓ-வின் கூற்றுப்படி, பால்டால் பாதையில் இருந்து பராரி மார்க் வரையிலான சாலை ஜூன் 2023-இல் விரிவாக்கம் செய்யப்பட்டது. இரண்டு பாதைகளிலும் பணிபுரியும் பொறுப்பை பி.ஆர்.ஓ-விடம் அரசாங்கம் ஒப்படைத்தது.

அமர்நாத் யாத்திரை

பட மூலாதாரம், Getty Images

பாஜகவின் குற்றச்சாட்டு

குகை வரை சாலை அமைக்கப்பட்டாலும், அதில் யாரும் ஆட்சேபனை தெரிவிக்கக் கூடாது என்பது ஜம்மு-காஷ்மீர் பாஜகவின் கருத்து.

அக்கட்சியின் ஜம்மு-காஷ்மீர் செய்தித் தொடர்பாளர் அல்டாஃப் தாக்கூர் கூறுகையில், ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பணி தொடங்கும்போது, ​​சுற்றுச்சூழல் சான்றிதழ் பெறப்பட்டு, அமர்நாத் குகை வரை சாலை அமைப்பதற்கு இதேபோன்ற விதிகள் கருத்தில் கொள்ளப்பட்டன என்றார்.

சாலை அமைக்கப்படும் இடத்தில் மரங்கள் வெட்டப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும் என்று தாக்கூர் கூறுகிறார்.

"அங்கே கல் மலைகள் மட்டுமே உள்ளன. அங்கு சாலை அமைப்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்று நினைக்கிறேன். சாலை அமைந்தால் அங்கு செல்வதற்கு மக்களுக்கு எளிதாக இருக்கும். சாலை அமைப்பதன் மூலம் மத சுற்றுலா அதிகரிக்கும்" என்றார் அவர்.

ஜம்மு-காஷ்மீரில் யாரும் அமர்நாத் யாத்திரைக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால், "அமர்நாத் குகைக்கு வாகனங்கள் செல்வதற்கு சாலை அமைப்பதற்கு எதிராகவே எங்களது குரலும் வருத்தமும் இருப்பதாக" காஷ்மீரி பண்டிட்டும் அரசியல் ஆர்வலருமான மோஹித் பன் கூறுகிறார்.

காடுகளுக்கு நடுவில் எங்கெல்லாம் கான்கிரீட் கட்டடங்கள் கட்டப்பட்டதோ, அங்கெல்லாம் சூழலியல் பாதிப்புகள் ஏற்பட்டதாக அவர் கூறுகிறார்.

குகையை அடைவதற்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் விளைவு, இப்போது சிறிது நாட்களிலேயே குகையில் உள்ள சிவலிங்கம் உருகிவிடுவதாக அவர் கூறினார்.

அமர்நாத் குகை

பட மூலாதாரம், Getty Images

"பாஜக மத கண்ணோட்டத்தில் பார்க்கிறது"

அதேசமயம், அமர்நாத் குகைக்கு செல்லும் பாதையில் பாஜக அரசியல் செய்வதாகவும், இந்த சூழ்நிலையை சாதகமாக்கிக் கொள்வதாகவும் மக்கள் ஜனநாயக கட்சி குற்றம்சாட்டுகிறது.

அக்கட்சியின் பொதுச்செயலாளர் (அமைப்பு) டாக்டர் மெஹபூப் பெய்க் கூறுகையில், "அமர்நாத் குகைக்கு செல்லும் பாதை மிகவும் உணர்வுப்பூர்வமானது. இதற்குக் காரணம் பாஜக ஒவ்வொரு விஷயத்தையும் மதக்கண்ணோட்டத்தில் பார்ப்பதுதான். இப்போது தேர்தல் வர உள்ளது. இம்மாதிரியான பிரச்னைகளை தேர்தல்களில் பயன்படுத்த விரும்புகிறது. இது மிகவும் வருத்தமளிக்கிறது. மதச்சார்பற்ற நாட்டில், அரசாங்கத்தை மதத்துடன் கலப்பது அரசியலமைப்புக்கு எதிரானது." என்றார்.

காஷ்மீர் அரசியல் கட்சிகளான தேசிய மாநாட்டு கட்சியும், மக்கள் ஜனநாயக கட்சியும் இஸ்லாம் மதத்தை வைத்து ஆதாயம் தேட முயசிப்பதாக ஜம்மு-காஷ்மீர் பாஜக குற்றம்சாட்டி வருகிறது.

தற்போது மக்களவை தேர்தல் வர உள்ளதால், காஷ்மீர் அரசியல் கட்சிகள், அமர்நாத் குகைக்கு சாலை அமைப்பதை வேண்டுமென்றே பிரச்னையாக்கி, 2008-ஆம் ஆண்டை போன்று மீண்டும் செய்து, முஸ்லிம்களின் வாக்குகளை பெற விரும்புகின்றன என, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அல்டாஃப் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் நிலப்பிரச்னை பல மாதங்களாக நீடித்தது குறிப்பிடத்தக்கது. குகையைச் சுற்றியுள்ள நிலத்தை அமர்நாத் கோவில் வாரியத்திற்கு வழங்குவதற்கு எதிராக பெரியளவில் போராட்டங்கள் நடைபெற்றன.

அன்றைய மத்திய, மாநில அரசுகள் நிலம் வழங்கும் முடிவை திரும்பப் பெற்றதையடுத்து போராட்டங்கள் நிறுத்தப்பட்டன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)