குஜராத்தில் பாக். உளவாளி கைது - மளிகைக் கடைக்காரர் போர்வையில் ராணுவத்தை வேவு பார்த்தது எப்படி?

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய உளவாளி

பட மூலாதாரம், V BHATI / GETTY

படக்குறிப்பு, இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் லப்சங்கர் மகேஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளார்.
    • எழுதியவர், பார்கவ் பாரிக்
    • பதவி, பிபிசிக்காக

பாகிஸ்தான் உளவாளியாகச் செயல்பட்டு வந்த ஒருவர் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்து குஜராத்தில் குடியேறிய அவர், குடியுரிமையும் பெற்றார். தற்போது உளவு பார்த்த வழக்கில் தீவிரவாத தடுப்புப் பிரிவினரால் (ஏடிஎஸ்) கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் தாராபூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்த பாகிஸ்தான் சிறு தொழிலதிபர் ஒருவர் பல ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் IVF (செயற்கை கருவூட்டல்) சிகிச்சைக்காக பாகிஸ்தானில் இருந்து குஜராத்திற்கு மனைவியுடன் வந்தார்.

அதன் பிறகு மாமாவின் உதவியோடு இங்கு மளிகைக் கடை ஒன்றை நிறுவினார். இந்தியா வந்த பிறகும் அவர்களுக்கு குழந்தை இல்லை. இதற்கு மீண்டும் சிகிச்சை தேவைப்பட்டது.

தந்தையாகும் நம்பிக்கையுடன் இந்தியா வந்த லப்சங்கர் மகேஸ்வரி, குடியுரிமை பெற்ற பிறகு உளவு பார்த்ததாகவும், இந்திய ராணுவ வீரர்களின் போன்களை ஹேக் செய்ததாகவும் தீவிரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனந்த் நகருக்கு அருகிலுள்ள மற்றொரு சிறிய நகரமான தாராபூரைச் சேர்ந்த ரதி குடும்பத்தினர் காலம்காலமாக தானியம் மற்றும் எண்ணெய் வியாபாரம் செய்துவந்தனர். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது அவர்களில் சிலர் பாகிஸ்தானிலும் சிலர் இந்தியாவிலும் குடியேறினர்.

இதனால் தாராபூரைச் சேர்ந்த வியாபாரி ஒருவரின் மகளை லப்சங்கர் மகேஸ்வரி திருமணம் செய்து கொண்டார்.

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய உளவாளி

பட மூலாதாரம், V BHATI / GETTY

படக்குறிப்பு, செயற்கைக் கருவூட்டல் சிகிச்சைக்காக இந்தியா வந்த பின் இந்தியக் குடியுரிமை பெற்று இங்கேயே அவர் வசித்து வந்ததாக ஏடிஎஸ் காவல் கண்காணிப்பாளர் கூறுகிறார்.

பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பியும் அது முடியவில்லை

இந்தியாவில் குடியேறி குடியுரிமை பெற்ற பாகிஸ்தானியரான டாக்டர் ஓம் மகேஸ்வரி பிபிசியிடம் பேசியபோது, "வாஜ்பாய் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில் இந்தியா - பாகிஸ்தான் உறவுகள் தொடர்ந்து மேம்பட்டு வந்த போது, மருத்துவ காரணங்களுக்காக பலர் நீண்ட கால விசாவில் இந்தியாவுக்கு வந்தனர்" என்று கூறினார்.

அப்போது, ​​பாகிஸ்தானில் உள்ள சவாய் கிராமத்தைச் சேர்ந்த லப்சங்கர் மகேஸ்வரியும் இந்தியா வந்தார். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் ஐவிஎஃப் சிகிச்சைக்காக குஜராத் வந்தனர். சிகிச்சை அளித்தும் அவருடைய மனைவியால் கருத்தரிக்க முடியவில்லை. ஒருபுறம் மருத்துவச் செலவு, மறுபுறம் எந்தத் தொழிலும் இல்லாததால் சம்பாதித்த பணம் அனைத்தும் செலவாகிவிட்டது. அதன் பின் லப்சங்கரின் மனைவியுடைய குடும்பத்தினரின் உதவியுடன் அவர் தனது வாழ்க்கையை நடத்திவந்தார்,'' என்றார்.

“பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்றும் அவர்களுக்கு குழந்தை இல்லை. பாகிஸ்தானுக்கு திரும்பிச் செல்ல அவர் 2002ல் அனுமதி கோரினார். ஆனால், அந்த அனுமதி அப்போது அவருக்குக் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் அவர் இங்கு ஒரு தொழிலைத் தொடங்கினார். இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்து, 2005-ல் குடியுரிமை கிடைத்தது" என்று அவர் கூறினார்.

“அதன் பிறகு மளிகை சாமான்கள் மொத்த வியாபாரத்தில் இறங்கினார். அன்று முதல் அவருடன் எனக்கு அதிக தொடர்பு இல்லை.”

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய உளவாளி

பட மூலாதாரம், Getty Images

2022ல் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

மளிகை வியாபாரத்தில் லப்சங்கர் மகேஸ்வரிக்கு அறிமுகமான ஜெயேஷ் தக்கரிடம் பிபிசி பேசியது.

“ஆரம்பத்தில் மாமாவோடு சேர்ந்து தானிய மொத்த வியாபாரம் செய்து கமிஷன் வாங்கிக் கொண்டிருந்தார். இந்தியக் குடியுரிமை பெற்ற பிறகு, தாராபூர் சதுக்கத்தில் சொந்தமாக மளிகை மொத்த வியாபாரக் கடையைத் திறந்தார்.

இங்கு வியாபாரம் நன்றாக நடக்கிறது. ஆனால், அவரது பெற்றோர் பாகிஸ்தானில் உள்ளனர். அதனால் அவர் அங்கு செல்ல விரும்பினார்.

கொரோனா பரவிய காலத்தில் சில நஷ்டங்கள் ஏற்பட்டன. அவரது உறவினர்களில் ஒருவரான கருணால் ரதி, தானியம் மற்றும் எண்ணெயில் கலப்படம் செய்யத் தொடங்கினார்,” என்றார் ஜெயேஷ்.

தொடர்ந்து பேசிய ஜெயேஷ், “அவர் மீது போலிப் பொருட்கள் விற்பனை செய்ததாக ஒரு வழக்கும் ஏற்கெனவே நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, அப்போது பாகிஸ்தானில் உள்ள சொத்துகளை விற்று குஜராத்தில் தொழில் தொடங்க விரும்பினார். அதற்காக 2022ல் மீண்டும் அங்கு செல்ல அனுமதி கோரினார். அதனடிப்படையில் அங்கு சென்று 45 நாட்கள் பாகிஸ்தானில் இருந்தார். ஆனால், அவர் பாகிஸ்தான் உளவாளி என்பது எங்களுக்குத் தெரியாது,'' என்றார்.

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய உளவாளி

பட மூலாதாரம், V. BHATI

படக்குறிப்பு, லப்சங்கர் மகேஸ்வரியிடம் போலீசார் 7 நாள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

மளிகைக் கடைக்காரர் போர்வையில் ராணுவத்தை வேவு பார்த்தது எப்படி?

தொழில்நுட்ப உதவியுடன் இந்திய ராணுவ வீரர்களை உளவு பார்த்த வழக்கில் கைது செய்யப்பட்ட லப்சங்கர் மகேஸ்வரி வழக்கு குறித்து குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பி ஓ.பி. ஜாட் பிபிசியிடம் பேசினார்.

2005 இல் இந்திய குடியுரிமை பெற்ற பிறகு, மகேஸ்வரி இந்திய ராணுவத்தினருக்கு எதிராக உளவு பார்த்தார். அவர் 2022 இல் பாகிஸ்தான் விசாவிற்கு விண்ணப்பித்தார். ஆனால், அவருக்கு விசா கிடைக்கவில்லை. இதையடுத்து பாகிஸ்தானில் தங்கியுள்ள தனது அத்தை மகன் கிஷோர் ராம்வானிக்கு போன் செய்து, விரைவில் விசா கிடைக்க உதவுமாறு கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தூதரகத்தில் ஒருவரைச் சந்திக்கச் சொன்னார்கள். அவரைச் சந்தித்த பின் விசா வந்தது. அவர் தனது சகோதரி மற்றும் மைத்துனருக்கு பாகிஸ்தான் விசாவையும் ஏற்பாடு செய்தார்," என்று அவர் கூறினார்.

அப்போது, ​​ஜாம்நகரில் உள்ள முகமது சக்லைனுக்கு பாகிஸ்தான் தூதரகத்தில் அறிமுகமான ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. அதன் பிறகு அவர் பெயரில் சிம் கார்டு வாங்கினார்.

ஜாம்நகரைச் சேர்ந்த அஸ்கர் மோதியின் போனில் முதலில் சிம்கார்டு ஆக்டிவேட் செய்யப்பட்டது. பின்னர், அவரது சகோதரி மற்றும் மைத்துனர் பாகிஸ்தான் திரும்பியபோது, ​​லப்சங்கர் பாகிஸ்தானுக்கு சிம் கார்டை அனுப்பினார்" என்று எஸ்பி கூறினார்.

இந்தியாவிலிருந்து லப்சங்கர் அனுப்பிய சிம் கார்டு மூலம் வாட்ஸ்அப் ஆக்டிவேட் செய்யப்பட்டது. பாகிஸ்தான் விசா பெற உதவிய நபருக்கு அந்த வாட்ஸ்அப் ஓடிபி வழங்கப்பட்டது.

அதன் பிறகு இந்திய ராணுவ வீரர்களை அழைக்க ஆரம்பித்தனர். “உங்கள் பிள்ளைகள் படிக்கும் சைனிக் பள்ளியில் இருந்து அழைக்கிறோம்” என்று அழைத்து, பள்ளியின் புதிய விதிமுறைகள் மற்றும் குழந்தைகளுக்கான உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை நிரப்ப சில ‘APK’ கோப்புகளை அனுப்புவார்கள். அந்த கோப்புகள் ஏற்கனவே ட்ரோஜன் எனப்படும் அதிகாரப்பூர்வமற்ற மென்பொருளுடன் தொலைவிலிருந்து அணுகப்பட்டு தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

"அதன் பிறகு, ஹர் கர் திரங்கா பிரசாரத்தைத் தொடங்குவதற்கான இணைப்புடன் கூடிய மற்றொரு ‘APK’ கோப்பு இந்திய ராணுவ வீரர்களுக்கு அனுப்பப்பட்டது. இந்த கோப்பை ட்ரோஜன் மால்வேர் மூலமாகவும் கண்காணிக்க முடியும்.

இந்த மால்வேர் ராணுவ வீரர்களின் தொலைபேசியில் ஊடுருவி அவர்களின் வாட்ஸ்அப் பதிவுகள், படங்கள் மற்றும் அசைவுகளை முழுமையாகக் கண்டறியும். அதனால் கார்கில் எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர் ஒருவரின் போனில் ‘ரிமோட் அக்சஸ் ட்ரோஜன்‘ மால்வேரை பதிவேற்றினார். அதன் அடிப்படையில் இந்திய ராணுவத்தின் ரகசிய தகவல்கள் பாகிஸ்தானை சென்றடைகிறது” என்று ஏ.டி.எஸ். எஸ்பி கூறினார்.

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய உளவாளி

பட மூலாதாரம், V. BHATI

படக்குறிப்பு, தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணைய பாதுகாப்பு உதவி பேராசிரியர் நிலாய் மிஸ்திரி.

தொலைதூரத்திலிருந்து ட்ரோஜன் வைரஸ் மூலம் கண்காணிப்பு

இந்நிலையில், குஜராத் ஏ.டி.எஸ். பிரிவினர், ராணுவ உளவுப் பிரிவினருடன் இணைந்து கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு, தாராபூரில் லப்சங்கர் மகேஸ்வரியை கைது செய்தனர்.

இதுவரை அவர் இந்த வைரஸ் கோப்பை பல இந்திய ராணுவ வீரர்களுக்கு அனுப்பியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

"தொலைவிலிருந்து கண்காணிக்கும் ட்ரோஜன் வைரஸ் பயன்படுத்தப்பட்ட சம்பவங்களில், மால்வேர் போன்ற ஆட்வேர்கள் ஒருவருடைய மொபைல் போனில் இணையதள இணைப்பு அல்லது ‘APK‘ வடிவம் மூலம் ஊடுருவுகிறது" என்று தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணைய பாதுகாப்பு உதவி பேராசிரியர் நிலாய் மிஸ்திரி கூறினார்.

இந்த ஆட்வேர் ஒருவருடைய போனில் உள்ள அனைத்து தரவுகளையும் சேகரித்து சிறிய கோப்புகளாக அனுப்புகிறது. இதற்கு உங்கள் தொலைபேசியின் மிகக் குறைவான இணையத் தரவு தேவைப்படுகிறது. உங்களுக்குத் தெரியாமலேயே அது நடந்து கொண்டிருக்கும்.

"இது ஒரு பேசிவ் ட்ரோஜன். இதில் மற்றொரு வகை 'ஆக்டிவ் ட்ரோஜன்' ஆகும். இது ஒருவருடைய மொபைலில் நடக்கும் அனைத்து செயல்பாடுகளையும் பதிவு செய்து உடனடியாக அந்தத் தரவுகளை அனுப்புகிறது. இது திரை கண்காணிப்பு என்று அழைக்கப்படுகிறது. வாட்ஸ்அப் சாட்டிங், வீடியோ அல்லது ஒருவருடைய மொபைலில் எந்த செய்தியாக இருந்தாலும், அவருக்கே தெரியாமல் வேறு ஒருவர் அவற்றைப் பார்க்க முடியும்.

ட்ரோஜன் வைரஸைப் பயன்படுத்தும் இணைப்புகளை கிளிக் செய்யும் போது, ​​நமது போனில் உள்ள தரவுகள் மட்டுமின்றி, நமது நடமாட்டம் குறித்த முழுத் தகவல்களையும் எங்கிருந்தும் தெரிந்துகொள்ள முடியும் என்றார் மிஸ்திரி.

மேலும், குஜராத் தீவிரவாத தடுப்புப் படையால் கைது செய்யப்பட்டுள்ள லப்சங்கர் மகேஸ்வரி தாராபூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணைக்காக அவரை 14 நாள் போலீஸ் காவலில் ஒப்படைக்குமாறு அரசு வழக்கறிஞர் எம்.எச்.ரத்தோர் நீதிமன்றத்தில் கோரினார்.

“லப்சங்கரின் போனில் பல எண்கள் உள்ளன. யாரிடம் பேசுகிறார், யாருக்கு தகவல் தெரிவிக்கிறது, மேலும், இவ்வளவு எளிதாக அவருக்கு சிம் கார்டுகளை கொடுப்பது யார் உள்ளிட்ட இதுபோன்ற விஷயங்களை விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது" என்று ரத்தோர் வாதிட்டார்.

நீதிமன்றம் அவரை ஏழு நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டது. இக்காலத்தில் ​​லப்சங்கருக்கு பாகிஸ்தானில் யாருடன் தொடர்பு, குஜராத்தில் பாகிஸ்தானியர்கள் யாரெல்லாம் இருக்கின்றனர், என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)