You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாமியார் பிரச்னையை 'இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்' மூலம் சமாளிக்கும் மருமகள்கள்
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
இந்திய குடும்ப உறவுகளில், குறிப்பாக திருமண உறவுகளில் அதிகம் விவாதிக்கப்பட்ட ஓர் உறவு என்றால் அது மாமியார் - மருமகள் உறவுதான். பெரும்பாலான தொலைக்காட்சித் தொடர்களில்கூட அந்த உறவுக்கு இடையே நடக்கும் பூசல்கள் - சண்டைகள்தான் கதையின் மையமாக இருக்கின்றன.
ஆனால், இருவருக்குள்ளும் ஏற்படும் விரிசல்கள், சச்சரவுகளைப் பொதுவில் எதார்த்தமாகப் பேசுவதற்கு இடையில் எப்போதும் ஒரு திரை இருக்கவே செய்கிறது. அது, சமூக ஊடகங்கள் வாயிலாகத் தற்போது விலகத் தொடங்கியிருக்கிறது எனலாம். சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்தும் இன்ஃப்ளூயன்சர்கள் எனப்படும் பிரபலங்கள் பலர் மாமியார்-மருமகள் உறவிலுள்ள சிக்கல்களை வெளிப்படையாகவும், அதே நேரத்தில் சிரிக்க வைக்கும் விதமாகவும் பேசுகின்றனர்.
அவை வெறும் அறிவுறுத்தல்களாக மட்டுமின்றி வீட்டுக்குள் இருவருக்கும் நடக்கும் சின்ன சின்ன பூசல்களைத் திரைப்பட வசனங்கள், பாடல்கள் வாயிலாகவும் நகைச்சுவையாக வீடியோக்களாக பதிவிடுகின்றனர்.
இவை, தங்கள் வாழ்க்கையில் நடப்பவை மட்டுமல்லாமல், அவர்களைப் பின்தொடர்பவர்கள் அனுப்பும் அனுபவங்களையும் அவர்கள் பதிவிடுகின்ற முரண்களை அப்படியான சில இன்ஃப்ளூயன்சர்கள் சிலரிடம் பேசினோம்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
'எல்லா மாமியார்களும் ஒன்றல்ல'
மாமியார்-மருமகள் உறவில் நடக்கும் பல முரண்களை இணைய உலகில் நகைச்சுவையான விதத்தில் பரவலாக எடுத்துச் சென்றவர்களுள் ஒருவர் தாரா கௌடா. பெங்களூருவை சேர்ந்த இவர், மாமியார்கள் குறித்த ரீல்ஸ்களுக்காகவே இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ளார். ‘பிங்க் நைட்டி வுமன்) எனும் பெயரில் அறியப்படும் இவரை 2.50 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர்.
“கொரோனா ஊரடங்கு காலத்தில்தான் பல சமூக ஊடக பிரபலங்கள் ரீல்ஸ்களை வெளியிடத் தொடங்கினர். நானும் அப்போதுதான் சில பொதுவான ரீல்ஸ்களை பகிர்ந்தேன். திருமணமான ஆண்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது எப்படி பார்க்கப்படுகிறதோ, அதே விதத்தில் பெண்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது பார்க்கப்படுவதில்லை. அவர்களின் உழைப்பு பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. அதுதொடர்பாக அச்சமயத்தில் ரீல்ஸ் பதிவிட்டேன்” என்கிறார் தாரா.
அலுவலகப் பணியை முடித்துவிட்டு வரும் மருமகள்கள் மீது உடனடியாக வீட்டு வேலையைச் சுமத்துவதை இவருடைய ரீல்ஸ்கள் கவனப்படுத்துகின்றன.
“சில மாமியார்கள் மருமகள்களை பல விஷயங்களில் ஒதுக்கிவிட்டு, தன் மகன்களுக்கு அதீத முக்கியத்துவம் அளிப்பதை” அவர் நகைச்சுவையாக விமர்சிக்கும் விதத்தில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். குறிப்பாக, “தாய்ப் பாசத்தால்” வீட்டில் “ராஜமரியாதையுடன் இருக்கும் ஆண்களுக்கு 'ராஜா பேட்டா’ (அரசரின் மகன்) என்ற பெயரையும்" இவர் சூடியுள்ளார்.
அதேபோல், வீட்டிலிருந்து வேலை செய்யும் பெண்களின் பிரச்னைகள் தொடர்பான பல வீடியோக்களை இவர் பதிவிட்டுள்ளார். வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் வார விடுமுறையில்கூட சீக்கிரமாக எழுவதற்குக் கட்டாயப்படுத்தப்படுவதாகப் பலர் தனக்கு மெசேஜ்களாக அனுப்பியதை அவர் ரீல்ஸாக பதிவிட்டுள்ளார்.
“என்னுடைய ரீல்ஸ்களை சில இளம்பெண்களே எதிர்த்துள்ளனர். ‘என்னுடைய அம்மா இப்படிப்பட்ட மாமியாராக இருக்க மாட்டார்’ என அவர்கள் கூறுவார்கள். என்னுடைய அம்மா இன்னொரு பெண்ணுக்கு மாமியார். என் அம்மா குறித்த பார்வை நிச்சயம் எனக்கும் எனது சகோதரரின் மனைவிக்கும் ஒன்று போலவே இருக்காது. அவருக்கு என் அம்மா பற்றிக் கூறுவதற்கு வேறு கதை இருக்கும். அதையும் புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார் தாரா.
“எல்லா மாமியார்களும் இப்படித்தான்” எனத் தான் பொதுமைப்படுத்தவில்லை என்றும் இன்னும் இந்த உறவில் நீடிக்கும் சிக்கல்களைக் கவனப்படுத்துவதே தனது நோக்கம் என்றும் அவர் கூறுகிறார்.
'நம்பிக்கை வந்திருக்கிறது'
சென்னையைச் சேர்ந்த சமூக ஊடக பிரபலமான சோஹா சனோஃபர், இத்தகைய ரீல்ஸ்கள் நம்பிக்கையை அளிப்பதாகக் கூறுகிறார்.
“என் மாமியாருடன் எனக்கு நல்ல உறவுதான் இருக்கிறது. என்னுடைய தோழிகள் பலர் அவர்களுடைய வீடுகளில் நடக்கும் சில விஷயங்களைக் கூறுவார்கள். அதை நான் ரீல்ஸாக பதிவிடுவேன்” என்றார் சோஹா.
ஒரு பெண் மாங்காய் சாப்பிட்டாலே அது கர்ப்பமாகத்தான் இருக்கும் என நினைத்து அதுகுறித்து மாமியார் கேட்பதை சமீபத்தில் கேலியான விதத்தில் ரீல்ஸாக பதிவிட்டார் சோஹா.
“பலரும் இத்தகைய ரீல்ஸ்களை தங்களுடன் தொடர்புப்படுத்திக் கொள்கின்றனர். இந்த ரீல்ஸ்களால், என் முன்பு எதையும் பேசக்கூடாது என்று எனது உறவினர்களே கூறுவார்கள். என் பெற்றோரே இதுகுறித்து எரிச்சலுடன் கேட்டுள்ளனர். ஆனால், இப்போது சாதாரணமாகிவிட்டது,” என்கிறார் சோஹா.
பலரும் இத்தகைய ரீல்ஸ்கள் மூலம் தங்கள் மாமியாருடனான பிரச்னைகளை மறைமுகமாகப் புரிய வைப்பதாக அவர் கூறுகிறார்.
"காமெடியாக இதைச் சொல்லிவிடலாம்" என்ற நம்பிக்கை பெண்களுக்கு வந்திருக்கிறது. சிலர் “அந்த ரீல்ஸ் என்னை பற்றித்தானே போட்ட” என்று கேட்பார்கள். நானும் ‘ஆமாம்’ எனச் சொல்லிடுவேன்” என்கிறார் சோஹா.
தன்னுடைய வீட்டில் இத்தகைய ரீல்ஸ்களால் மாற்றம் வந்திருப்பதாகக் கூறும் அவர், சில பெரியவர்கள் தங்களுடைய பழமைவாத எண்ணங்களை இதனால் களைவதாக அவர் கூறுகிறார்.
'இருவருமே முயல வேண்டும்'
பெண்களுக்காக கர்ப்பம், பேறுகால ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகளை வழங்கி வருகிறார் ‘விருக்ஷம்’ எனும் அமைப்பின் நிறுவனர் அனுபமா குமார் விஜயானந்த்.
இவர், திருமணத்திற்குப் பிறகு பெண்கள் தனது குடும்பத்தினருக்குப் பொருளாதார ரீதியாகப் பக்கபலமாக இருப்பதில் அடிக்கடி மாமியாருடன் ஏற்படும் பிரச்னைகள் குறித்து அலசுகிறார்.
“இந்த ரீல்ஸ்கள் வாயிலாக பெண்கள் விழிப்புணர்வைக் கொண்டு வர முயல்கின்றனர். நிச்சயமாக இன்னும் சில விஷயங்கள் மாற வேண்டியுள்ளது” என்கிறார் அனுபமா.
தங்களுக்கு இந்த உறவில் நேரும் பல பிரச்னைகளை பெண்கள் தொடர்ந்து அனுப்புவதாகவும் அதைத் தாங்கள் ரீல்ஸ்களாக பதிவிடுவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண் தன் குடும்பத்திற்குப் பொருளாதார ரீதியாகப் பக்கபலமாக இருப்பதோ, அல்லது அவருடைய குடும்பத்தின் மீது எப்போதும் போல் அன்பு கொண்டிருப்பதோ, வித்தியாசமானதோ அல்லது தவறோ அல்ல என்கிறார் அனுபமா.
ஆனால், குடும்பங்களில் குறிப்பாக மாமியாருடன் இதனால் ஓர் அமைதிப் போரே நடப்பதாகக் குறிப்பிடுகிறார் அவர். ‘பீ தி சேஞ்ச்’ (Be The Change) எனும் பெயரில் இந்த உறவில் எப்படி சுமூகமாக இருக்க முடியும் என்பது குறித்த சில ஆலோசனைகளையும் அவர் வழங்குகிறார்.
குறிப்பாக, குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு வேலைக்குச் செல்லும் பெண்களின் “அபரிமிதமான” உழைப்பைச் சில மாமியார்கள் கண்டுகொள்வதில்லை என்ற வருத்தத்தைத் தன்னுடைய வீடியோக்கள் பலவற்றில் அவர் பதிவு செய்துள்ளார்.
வேலைக்குச் செல்லாமல் வீட்டில் குழந்தைகளைப் பராமரிக்கும் பெண்களுக்கு ஏற்படும் உடல் களைப்பும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்பதை அவர் தனது வீடியோக்கள் வாயிலாக எடுத்துக் காட்டியுள்ளார்.
'மாற்றம் தொடங்கியிருக்கிறது'
சமூக ஊடகங்களின் வாயிலாகச் சில மாற்றங்கள் தென்படத் தொடங்கியுள்ளன. சில இளம்பெண்கள் தங்கள் மாமியார்களுடன் இணைந்து கேலியான ரீல்ஸ்களை பதிவிடுவதையும் பரவலாகக் காண முடிகிறது.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விருது பெற்ற அனுபமா, அந்த விருதைத் தனது மாமியாருக்குச் சமர்ப்பித்தார். “என்னுடைய துறையில் நான் என்ன சாதித்திருக்கிறேனோ, அது என் மாமியார் கொடுத்த ஊக்கத்தால்தான்” என்கிறார் அனுபமா.
கணவன் - மனைவி, மாமியார்-மருமகள் உறவுகள் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கி வரும் அனுபமா, இப்போது நிலைமை மாறத் தொடங்கியிருப்பதாகக் கூறுகிறார். "மாமியார் வீடுகளில் ஜாலியாக இருக்கிறது என எங்களின் பயிற்சி வகுப்புகளில் நிறைய பெண்கள் கூறுகின்றனர். சமூக ஊடகங்களில் வரும் இத்தகைய பதிவுகளைப் பார்த்து நிறைய பேர் மாறியிருக்கின்றனர். தான் அனுபவித்த கஷ்டங்களை மருமகள்கள் அனுபவிக்கக் கூடாது என நினைக்கும் மாமியார்களும் இப்போது உள்ளனர்” எனக் கூறுகிறார்.
இரண்டு ஆண் குழந்தைகளுக்குத் தாயான அனுபமா, இத்தகைய மாமியார்களைக் கண்டு தாம் ஊக்கம் கொள்வதாகக் கூறுகிறார்.
மாமியார்-மருமகள் உறவில் இணக்கம் ஏற்படுவதற்கு ஒருவர் மட்டும் நேர்மறையாக இருந்தால் போதாது, இருவரும் அப்படி இருந்தால்தான் நீண்ட காலத்திற்கு இணக்கமாகச் செல்ல முடியும் எனவும் அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கிறார் அனுபமா.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)