வங்கதேசம்: தீ வைக்கப்பட்ட 14 வாக்குச்சாவடிகள் - வாக்குப் பதிவு தொடங்கிய பிறகு நிலைமை என்ன?

வங்கதேச தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது - தேர்தலுக்கு முன் தீ வைக்கப்பட்ட 14 வாக்குச்சாவடிகள்- என்ன நடந்தது? யார் காரணம்?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அன்பரசன் எத்திராஜன் & நதியா ரகோஜினா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

வங்கதேசத்தில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. நாட்டின் தேசிய சட்டமன்றத்தின் 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வேட்பாளர் இறந்ததால் நவ்கான்-2 தொகுதிக்கான வாக்குப் பதிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் ஆளும் அவாமி லீக் கட்சி நான்காவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், நாட்டின் முக்கிய எதிர்க் கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி, மற்றும் அதன் சித்தாந்தத்துடன் உடன்படும் பல கட்சிகள் இந்தத் தேர்தலைப் புறக்கணித்துள்ளன.

இந்தக் கட்சிகள் தேர்தலுக்கு முந்தைய நாள் மற்றும் தேர்தல் நடைபெறும் நாளன்று முழு கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தம் செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை காலை, சில பி.என்.பி கட்சியின் ஆதரவாளர்கள் கடையடைப்புக்கு ஆதரவாகப் பல இடங்களில் ஊர்வலம் செல்வதைக் காண முடிந்தது.

உள்ளூர் ஊடகங்களின்படி, டிசம்பர் 18ஆம் தேதி முதல் ஜனவரி 5ஆம் தேதி வரை தேர்தல் பிரசாரம் தொடங்கியதில் இருந்து 156 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. டாக்காவில் வெள்ளிக்கிழமை இரவு ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். இது தவிர, நாடு முழுவதும் குறைந்தது 14 வாக்குச் சாவடிகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் வன்முறையைத் தடுக்க BGB, RAB மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

வாக்களித்த பின் என்ன சொன்னார் பிரதமர் ஷேக் ஹசீனா?

வங்கதேச தேர்தல்

பிரதமர் ஷேக் ஹசீனா இன்று காலை டாக்காவின் சிட்டி காலேஜ் சென்டருக்கு சென்று வாக்களித்தார். அவர் கோபால்கஞ்ச்-3 தொகுதியில் போட்டியிடுகிறார். அவருடன் அவரது மகள் சைமா வாஜேத் மற்றும் சகோதரி ஷேக் ரெஹானாவும் வாக்களிக்க வந்தனர்.

வாக்களித்த பின்னர், பிரதமர் ஷேக் ஹசீனா, வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற பிரதான எதிர்க்கட்சியான பிஎன்பி கட்சியின் வேண்டுகோளுக்கு பதிலளித்த ஷேக் ஹசீனா,"நான் யாருக்கு என்னை நிரூபக்க வேண்டும்? பயங்கரவாத அமைப்புக்கா?அது தேவையில்லை. மக்களிடம் நிரூபிப்பேன். மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என பாருங்கள்,"என்றார்.

"அவர்கள் (எதிர்க்கட்சிகள்) என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை. நாட்டில் ஜனநாயகம் நிலவுவதற்கு என்னால் இயன்றவரை முயற்சி செய்வேன். மக்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்பதை நான் எப்போதும் உறுதியாக அறிவேன். இன்ஷா அல்லாஹ் தேர்தலில் வெற்றி பெறுவோம். நாங்கள் வெற்றி பெறுவோம், அதில் எந்த சந்தேகமும் இல்லை.

"எங்கள் நாடு இறையாண்மை மற்றும் சுதந்திரமானது. எங்களிடம் அதிக மக்கள் தொகை உள்ளது. மக்களின் ஜனநாயக உரிமைகளை நாங்கள் நிறுவியுள்ளோம். இந்த நாட்டில் ஜனநாயகம் தொடர்வதை உறுதி செய்ய விரும்புகிறேன்" என்று அவர் கூறினார்.

இந்தியாவைப் பற்றி, ஷேக் ஹசீனா ANI செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "உங்களை(இந்தியாவை) மனதார வரவேற்கிறோம். நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இந்தியா எங்கள் நம்பகமான நண்பர். எங்கள் விடுதலைப் போரின்போது, அவர்கள் எங்களுக்கு ஆதரவளித்தனர்."

தனது சகோதரியை குறிப்பிட்டு பேசிய ஷேக் ஹசீனா, "1975 க்குப் பிறகு, நாங்கள் எங்கள் முழு குடும்பத்தையும் இழந்து, நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம், பின்னர் அவர் எங்களுக்கு இந்தியர்கள் தான் அடைக்கலம் கொடுத்தனர். எனவே, இந்திய மக்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார்.

வங்கதேச தேர்தல்
வங்கதேசம், அரசியல் போராடம், ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், EPA

வங்கதேசத்தில் பல வாரங்களாகத் தொடர்ந்து வந்த அரசியல் பதற்றங்கள், வாக்குப் பதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன் ஆர்ப்பாட்டங்களாகவும் வன்முறையாகவும் வெடித்தது.

கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 28) அரசாங்கத்திற்கு எதிராக நடந்த மாபெரும் பேரணி வன்முறையாக மாறியது. இதில் இரண்டு எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஞாயிறு அன்று பல மூத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

புத்துயிர் பெற்றிருக்கும் பிரதான எதிர்க் கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகக் கோரி போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

தேசியவாதக் கட்சி மற்றும் அதன் கூட்டாளிகள் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நடுநிலையான, இடைக்கால அரசாங்கம் ஒன்றை விரும்புகின்றனர். பிரதமர் ஹசீனாவின் கீழ் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடக்கச் சாத்தியமில்லை என்று வாதிடுகின்றனர். ஆனால், அவாமி லீக் தலைமையிலான ஹசீனாவின் அரசு இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

என்ன நடந்தது?

வங்கதேசத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் அங்கு வன்முறை வெடித்து ஏன்?

பட மூலாதாரம், Getty Images

வங்கதேசத் தலைநகர் தாக்காவில் நடந்த தேசியவாதக் கட்சியின் பேரணி பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் அங்கு காணப்பட்ட மிகப்பெரிய கூட்டங்களில் ஒன்று.

ஆனால் அது விரைவில் வன்முறையாக மாறியது.

எதிர்கட்சி ஆதரவாளர்கள் கற்கள் மற்றும் செங்கற்களை வீசியபோது, போலீசார் ரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளைப் பிரயோகித்தனர்.

தலைநகர் தாக்காவின் சில சாலைகளில் கையெறி குண்டுகளும், கண்ணீர் புகைக் குண்டுகளும், உடைந்த கண்ணாடிகளும் சிதறிக் கிடந்தன.

வன்முறையை முதலில் தொடங்கியதாக இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்.

முதலில் தாக்கியது யார்?

பிபிசியிடம் பேசிய வங்கதேசத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமன், எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளின் வீடுகளைத் தாக்கியதாகக் கூறினார். “அவர்கள் குழப்பத்தை உருவாக்கினர்," என்று குற்றம் சாட்டினார்.

ஆனால் நடந்தது விஷயங்கள் அப்படியே தலைகீழானவை என்று தேசியவாதக் கட்சியினர் கூறுகின்றனர்.

பிபிசியிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் அமீர் கஸ்ரு மஹ்மூத் சவுதரி நடந்தது ஓர் அமைதியான பேரணி என்றார்.

“இது ஓர் அமைதியான, வன்முறையற்ற பேரணி. பெருமளவிலான மக்கள் அதில் கலந்து கொண்டதால் அரசாங்கம் குழப்பமடைந்தது. எனவே, அவர்கள் கூட்டத்தைச் சீர்குலைக்க முடிவு செய்தனர்," என்கிறார் அவர்.

மேலும், பேரணி இரண்டு பக்கங்களில் இருந்தும் தாக்கப்பட்டதாகவும், அவ்விடம் ஒரு யுத்தகளத்தை ஒத்திருந்ததாகவும் அவர் கூறினார். “இதனால், நாங்கள் எங்கள் பொதுக்கூட்டத்தைப் பாதியில் நிறுத்த வேண்டியிருந்தது," என்கிறார் சவுதரி.

ஆனால், பேரணியில் பங்கேற்ற எதிர்க்கட்சி செயல்பாட்டாளர்களைத் தங்கள் ஆதரவாளர்கள் தூண்டியதாக எழுந்த குற்றச்சாட்டை ஆளும் அவாமி லீக் நிராகரிக்கிறது.

வங்கதேசம், அரசியல் போராடம், ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, கலவரத்தைக் கட்டுப்படுத்த வங்கதேசத்தின் தலைநகரில் போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

நாடு தழுவிய முழு அடைப்பு

போலீஸ் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியவாதக் கட்சி அறிவித்திருந்த மூன்று நாள் நாடு தழுவிய முழு அடைப்பு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 31) தொடங்கியது.

பல இடங்களில் போராட்டக்காரர்கள் பேருந்துகளுக்கு தீ வைத்ததோடு, பாதுகாப்புப் படையினருடனும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களை வீசினர்.

செவ்வாய்க்கிழமை போலீசாருடன் நடந்த மோதலில் இரண்டு எதிர்க்கட்சி ஆர்வலர்கள் கொல்லப்பட்டனர். வன்முறைக்குப் பயந்து பெரும்பாலான வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

வங்கதேசத்தின் அரசியல் நிலைமை என்ன?

வங்கதேசத்தில் அரசியல் ஸ்திரமின்மை புதியதல்ல.

பல ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தெருக்களில் இறங்கிப் போராடியிருக்கின்றன. இவை வேலை நிறுத்தங்கள், வன்முறைகள் மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் அரசியல் பிளவு விரிவடைந்து, கசப்பு அதிகரித்து வருகிறது.

ஆளும் அவாமி லீக் தனது ஆட்சியின் இரண்டாவது தசாப்தத்தின் மத்தியில் இருக்கிறது. அடுத்து ஐந்தாண்டு பதவிக் காலத்தை அனுபவிக்க விரும்புகிறது.

தற்போது இரண்டு பிரதான கட்சிகளும் சமரசம் செய்து கொள்ளும் மனநிலையில் இல்லை. தேர்தலுக்கு முந்தைய பேச்சுவார்த்தைகள் நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன.

வங்கதேசம், அரசியல் போராடம், ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்களில் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீரும் ஒருவர்.

இரண்டு பெண் தலைவர்களுக்கிடையே மோதல்

கைது செய்யப்பட்ட தேசியவாதக் கட்சியின் தலைவர்களில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கிரும் அடங்குவார்.

அக்கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் கலிதா ஜியா ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கிர் அக்கட்சியை வழிநடத்தி வந்தார்.

தற்போது 78 வயதாகும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா வீட்டுக் காவலில் உள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, 76 வயதான தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவும், 78 வயதாகும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவும் வங்கதேச அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இருவரும் அரசியல் வம்சங்களின் வாரிசுகள்.

இருவரும் கடுமையான அரசியல் எதிரிகள். உள்நாட்டில் அவர்கள் ‘போரிடும் பேகம்கள்’ என்று வர்ணிக்கப்படுகிறார்கள். பேகம் என்பது உயர் பதவியில் இருக்கும் ஒரு முஸ்லீம் பெண்ணைக் குறிக்கிறது.

வங்கதேசம், அரசியல் போராடம், ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, ஷேக் ஹசீனா பதவி விலக மறுக்கிறார்.

மோசமான பொருளாதார நிலைமை

ஷேக் ஹசீனா 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தார். அதன் பின்னர் அவரது கட்சி மேலும் இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்த வெற்றிகளுக்குப் பின் பரவலான வாக்கு மோசடி இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.

வங்கதேசம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. பெரும்பாலான மக்கள் அதிகரித்து வரும் செலவுகளை, குறிப்பாக உணவுப் பொருட்களின் விலையேற்றத்தைச் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் பணவீக்கம் 9.6% ஆக இருந்தது.

இச்சமயத்தில் இந்த அரசியல் பதற்றம் உருவாகியிருக்கிறது. நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 2021இல் 4 லட்சம் கோடியாக இருந்தது. இதுவொரு வரலாற்று உச்சம். தற்போது இது 1.6 லட்சம் கோடியாகக் குறைந்திருக்கிறது. இது மூன்று மாத இறக்குமதிக்குக்கூட போதுமானதல்ல.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வங்கதேசம் சர்வதேச நாணய நிதியத்தை உதவிக்காக அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வங்கதேசம், அரசியல் போராடம், ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, தேசியவாதக் கட்சியின் ஆதரவாளர்கள், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று கோருகிறார்கள்.

‘மக்கள் கோபமாக இருக்கின்றனர்’

வங்கதேசத்தில் எதிர்க்கட்சி நடத்தும் பெரிய பேரணிகள் புதிதல்ல. ஆனால் அதிகரித்து வரும் உணவு விலைகள் மீதான பரவலான அதிருப்தியின் காரணமாக தற்போது அவை பெரும் கூட்டத்தை ஈர்க்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எதிர்கட்சியின் மூத்தத் தலைவரான அமீர் கஸ்ரு மஹ்மூத் சவுதரி "பொருளாதாரம் பேரழிவின் விளிம்பில் உள்ளது. மக்கள் அவதிப்படுகின்றனர். அதனால்தான் அவாமி லீக் போக்குவரத்தை ரத்து செய்து, கைதுகள் மற்றும் மிரட்டல்களை மேற்கொண்டு அவர்களைத் தடுக்க முயன்ற போதிலும் பல லட்சம் மக்கள் எங்கள் பேரணிகளில் இணைகிறார்கள்," என்று பிபிசியுடம் கூறினார்.

ஆனால், வங்கதேசத்தின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகளான திருமதி ஷேக் ஹசீனா, கடந்த 15 ஆண்டுகளாகத் தனது ஆட்சியின் கீழ் நாட்டின் நீடித்த பொருளாதார வளர்ச்சியைச் சுட்டிக்காட்டுகிறார்.

எதிர்ப்பு ஒடுக்கப்படுவதன் அறிகுறியா?

பேரணிக்குப் பிறகு நூற்றுக்கணக்கான எதிர்க்கட்சி ஆதரவாளர்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அமீர் கஸ்ரு மஹ்மூத் சவுதரி கைது செய்யப்பட்டிருப்பதை மனித உரிமை குழுக்கள் விமர்சித்துள்ளன.

"கடந்த வார இறுதியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மீது நடந்திருக்கும் கடுமையான அடக்குமுறை, ஜனவரியில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வங்கதேசத்தில் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை முற்றிலுமாக ஒடுக்குவதற்கான முயற்சியைக் குறிக்கிறது," என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறியிருக்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம், வங்கதேச அரசாங்கம் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டுமாறும், அனைத்து வங்கதேச மக்களின் மனித உரிமைகளும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளது.

வங்கதேச அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் உள்ளன.

வங்கதேசத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் அங்கு வன்முறை வெடித்து ஏன்?

பட மூலாதாரம், Getty Images

‘கருத்து சுதந்திரம் முடக்கப்படுகிறது’

வங்கதேச தேசியவாதக் கட்சி, நூற்றுக்கணக்கான தனது ஆதரவாளர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாகவும், பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறது. இந்த நடவடிக்கைகளுக்காக பாதுகாப்புப் படையினர் சிலரை அமெரிக்கா தன் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்துள்ளது.

வங்கதேச அரசாங்கம் துஷ்பிரயோகம் மற்றும் கொலைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க விரும்பும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் வருகைகளையும் அது கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது.

பிபிசியிடம் பேசிய வங்கதேசத்தின் முக்கிய பெண்கள் உரிமை ஆர்வலரான ஷிரீன் ஹக், அங்கு அச்சமான சூழல் நிலவுவதாகக் கூறினார். “குறிப்பாக எந்த வகையான ஆன்லைன் குழுவிலும் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துபவர்களைச் சிறையில் அடைக்க அரசாங்கம் கடுமையான டிஜிட்டல் பாதுகாப்பு சட்டத்தைப் பயன்படுத்துகிறது," என்கிறார் அவர்.

இந்தச் சட்டம் விமர்சகர்களை ஒடுக்குவதற்கும், கருத்து சுதந்திரத்தை முடக்குவதற்கும் பயன்படுத்தப்படுவதாக உரிமைக் குழுக்கள் கூறுகின்றன. இது 2018இல் அமலுக்கு வந்ததில் இருந்து இதுவரை பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆர்வலர்களுக்கு எதிராக ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.

‘இடைக்கால அரசாங்கத்திற்கான சாத்தியம் இல்லை’

ஐ.நா. சபையின் எதிர்ப்பு உட்பட பரவலான எதிர்ப்பைத் தொடர்ந்து, வங்கதேச அரசாங்கம் சமீபத்தில் டிஜிட்டல் பாதுகாப்பு சட்டத்திற்குப் பதிலாக புதிய சைபர் பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால் இந்தப் புதிய சட்டமும் அடக்குமுறை நடவடிக்கைகளை உள்ளடக்கியிருப்பதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

வௌம் ஜனவரி மாதம் சுதந்திரமான மற்றும் நியாயமான வாக்கெடுப்பை அரசாங்கம் நடத்தும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று ஹக் கூறுகிறார்.

எதிர்க்கட்சியும் இதே குற்றச்சாட்டை முன்வைக்கிறது. அதனால்தான் வாக்கெடுப்புக்கு முன்னதாக நடுநிலையான ஒரு இடைக்கால அரசாங்கத்தை மீண்டும் நிறுவ வேண்டும் என்று அது கோருகிறது. இந்த முறையை வங்கதேச பாராளுமன்றம் 2011-இல் அகற்றியது.

வெளியுறவு மந்திரி மொமன் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறார்.

"எந்த நாட்டிலும், ஆளும் அரசாங்கம் பதவி விலகி, தேர்ந்தெடுக்கப்படாத சிலரை அரசாங்கத்தை நடத்த அனுமதித்ததாகச் சரித்திரம் இல்லை. நாங்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம், எனவே அந்த வகையான கோரிக்கை ஏற்கத்தக்கது அல்ல," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

தங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் ஜனவரி மாதம் நடக்கவிருக்கும் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக தேசியவாதக் கட்சி மிரட்டல் விடுத்துள்ளது. ஆனால், இந்தத் தந்திரம் கடந்த காலத்தில் அவர்களுக்குச் சாதகமாக செயல்படவில்லை.

2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் எதிர்கட்சி கட்சி பங்கேற்க மறுத்த போது, அது அவாமி லீக் மற்றொரு மாபெரும் வெற்றி பெற உதவியது.

வங்கதேச மக்கள் நீடித்த அரசியல் அமைதியின்மையையும் மற்றும் வன்முறையின் சாத்தியக்கூறுகளையும் எதிர்நோக்கியுள்ளனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)