பாலியல் வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றம் சுமத்தும் போக்கு தொடர்வது ஏன்?

பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில தகவல்கள் சங்கடம் தரலாம்)

கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வியெழுப்பி வருகின்றனர். ஆனால், அதே சமயம் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த சில மணிநேரங்களிலேயே பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம்சுமத்தி பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டதை காண முடிந்தது.

"பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றம் சுமத்துவது என்பது, குற்றம் செய்தவர்கள் அதற்கு பொறுப்பேற்க விடாமல் செய்யும்," என்றும் "இது குற்றங்களை அதிகரிக்கவே வழிவகுக்கும்." என்கின்றனர், பெண்ணிய செயற்பாட்டாளர்கள்.

இப்படி பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சுமத்துவது, பாலியல் வன்கொடுமையிலிருந்து மீண்டு வந்துகொண்டிருக்கும் பெண்ணின் நம்பிக்கையை குலைத்துவிடும் என்கிறார், ஒரு மனநல மருத்துவர்.

கோவையில் சில நாட்களுக்கு முன்பு கல்லுாரி மாணவி ஒருவர், தன் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 பேர் கார் கண்ணாடியை உடைத்து, நண்பரை அரிவாளால் வெட்டிவிட்டு, அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள் துடியலுார் அருகேயுள்ள வெள்ளக்கிணறு பகுதியில், இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் 3 பேரையும் சுட்டுப்பிடித்ததாக கோவை மாநகர காவல்துறையினர் தெரிவித்தனர்.

பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம், Getty Images

பெண்ணை நோக்கி எழும் கேள்விகள்

இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது குற்றம்சுமத்தி பலரும் பதிவிட்டிருந்ததை பார்க்க முடிந்தது.

சம்பவம் நடந்த நேரம் மற்றும் அப்பெண் தன் நண்பருடன் இருந்ததையும் குறிப்பிட்டு பலரும் கேள்வியெழுப்பியிருந்தனர். மேலும், உடனிருந்த நண்பரையும் விமர்சித்து பதிவிடப்பட்டிருந்தன.

இப்படி பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம்சுமத்துவது அவர்களுக்கு என்ன மாதிரியான காயத்தை ஏற்படுத்தும்?

2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது பெண்ணும் அவருடைய 16 வயது சகோதரியும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.

விசேஷம் ஒன்றுக்கு இரு சகோதரிகளும் தன் நண்பர்களுடன் சென்றுவிட்டு திரும்பும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், அவர்களின் நண்பர்களை தாக்கிவிட்டு, அப்பெண்களை வலுக்கட்டாயமாக தங்கள் வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.

"இரவு 11 மணி இருக்கும். எங்களை கத்தியை காட்டி மிரட்டி, இருசக்கர வாகனத்தில் வைத்து ஆள் அரவமற்ற பகுதிக்கு அழைத்துச் சென்றனர். எங்களை அழைத்து வந்த 3 பேரும் அங்கு ஏற்கெனவே இருந்த ஒருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தனர். இதை வெளியில் சொல்ல கூடாது என்றும் மிரட்டினர்." என்கிறார், 20 வயதான அந்த பெண்.

அவரை அச்சம்பவம் நிகழ்ந்த அன்றே எப்படியோ அவரின் நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட, அவரின் சகோதரியை மட்டும் மறுநாள்தான் ஒரு பேருந்து நிலையத்தில் அழுத நிலையில் கண்டறிய முடிந்ததாக அவர்களின் தாயார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"என் அம்மாவிடம் நடந்ததை கூறியதும் அவர்தான் எங்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். இன்றுவரை அவர்தான் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்." என்கிறார் மூத்த பெண்.

"காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டாம் என அக்கம்பக்கத்தினரே கூறினாலும், நான் கேட்கவில்லை." என்கிறார் அவரின் தாயார்.

தன்னையும் தனது சகோதரியையும் காவலர்களே ஆரம்பத்தில் குற்றம் சுமத்தியதாக 20 வயதான அந்த பெண் கூறுகிறார்.

மேலும், காவல்துறையினர் அவர்களின் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது தங்களை பற்றியே அண்டை வீட்டார் அதிகம் குறைகூறியதாக தெரிவிக்கிறார் அவர்.

பாலியல் வன்கொடுமை
படக்குறிப்பு, கோப்புப்படம்

"பாலியல் வன்கொடுமையைவிட என் மீதே தவறு எனக் கூறும்போதுதான் எனக்கு தற்கொலை எண்ணங்கள் கூட எழுந்தன. ஒருகட்டத்தில் என் மீதுதான் தவறு என்றுகூட நினைத்திருக்கிறேன்." என்றார் அந்த பெண்.

இதிலிருந்து இன்று வரை அக்குடும்பம் மீளவில்லை. "எப்படி இந்த வலியிலிருந்து மீள்வது என்று தெரியவில்லை." என்றார்.

பாலியல் வன்கொடுமை ஒருபுறம், அவர் மீது குற்றம் சுமத்தப்படுதல் மறுபுறம் என, மன அழுத்தத்தில் இருக்கும் இந்த சகோதரிகளுக்கு உரிய மனநல ஆலோசனைகளும் வழங்கப்படவில்லை என்பது அவர்களிடம் பேசியதிலிருந்து தெரியவந்தது.

ஆனால், பெண்களைக் குறை கூறாமல், எல்லா இடங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம் என்பதை அவர் வலியுறுத்துகிறார்.

"எனக்கும் என் தங்கைக்கும் இக்கொடுமையை இழைத்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என நான் நம்புகிறேன்." என்றும் தெரிவித்தார்.

கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மீது குற்றம்சுமத்தக் கூடாது என கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.

''தனிநபர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும். அவர் செய்தது சரியா, தவறா என்று தீர்ப்பிடுகிற வேலையை யாரும் செய்ய வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறோம். அது தனி மனித சுதந்திரம் தொடர்புடையது.'' என்றார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் மீது குற்றம் சுமத்துவது, சமூக ஊடகங்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், காவல்நிலையங்கள் எனப் பல தரப்புகளிலும் தொடர்வதாக பெண்ணிய செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

அரசியல் தலைவர்களும் பல சமயங்களில் இத்தகைய கருத்துகளை பொதுவெளியில் கூறியுள்ளனர்.

தாரா கிருஷ்ணசுவாமி

பட மூலாதாரம், Tara Krishnaswamy/Facebook

படக்குறிப்பு, குற்றங்களிலிருந்து தப்பிப்பதற்காக பெண்கள் மீது குற்றம் சுமத்தப்படுவதாகக் கூறுகிறார், தாரா கிருஷ்ணசுவாமி

சர்ச்சை கருத்துகள்

கடந்த மார்ச் மாதம் மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 வயது சிறுமியை 16 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையினர் வழக்கு பதிந்தனர். அப்போது அம்மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த மகாபாரதி, "சிறுவனின் முகத்தில் எச்சில் உமிழ்ந்ததால் தான் இச்சம்பவம் நடந்ததாக" கூறியது கடும் எதிர்ப்பை சந்தித்தது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சமீபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி, "அவர் எப்படி நள்ளிரவில் வெளியே சென்றார்? பெண்கள் நள்ளிரவில் வெளியே செல்ல அனுமதிக்கப்படக் கூடாது," எனக் கூறியதாக பரவலாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ஆனாலும், இதுகுறித்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தன் கருத்து "தவறாகச் சித்தரிக்கப்பட்டதாக" மமதா பானர்ஜி தெரிவித்தார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் அக்டோபர் மாத இறுதியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகள் இருவர் மீது ஒரு நபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.

அம்மாநில அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா, "இரு வீரர்களும் ஹோட்டலை விட்டு வெளியேறுவதற்கு முன்பே இதுகுறித்து காவலர்கள் மற்றும் நிர்வாகத்திடம் தெரிவித்திருக்க வேண்டும்." என பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றம் சுமத்தும் போக்கில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஏன் இது தொடர்கிறது?

"யார் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களை குறை கூறினால் குற்றங்கள் அதிகமாகவே செய்யும். இந்தியா ஒரு ஆணாதிக்க சமூகமாக இருப்பதால், பெண்களை குற்றம் சொல்வது எளிதாக இருக்கிறது. 'நாம் செய்தது சரி, அவர்கள் தான் தங்களை பாதுகாத்துக்கொள்ளவில்லை' எனக் குற்றம் செய்தவர்கள் நினைப்பார்கள். இது எளிதாக தப்பிக்கும் மனநிலை. தவறு செய்தவர்களை பொறுப்பேற்க விடாமல் செய்துவிடும்." என கூறுகிறார், எழுத்தாளரும் பெண்ணியச் செயற்பாட்டாளருமான தாரா கிருஷ்ணசுவாமி.

இவர், பெண் எம்எல்ஏக்கள், எம்.பிக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வலியுறுத்தும் 'பொலிட்டிக்கல் ஷக்தி' (Political Shakti) எனும் அமைப்பின் இணை நிறுவனராக உள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களை குறை கூறாமல் பாதுகாப்பை அனைத்து இடங்களிலும் நேரங்களிலும் உறுதிப்படுத்துவதே சிறந்த தீர்வாக இருக்க முடியும் என்றும் அவர் கூறுகிறார்.

பாதிக்கப்பட்ட பெண்களை குற்றம்சுமத்தும்போது அவர்களின் நம்பிக்கையை அது குலைத்துவிடும் என்கிறார், மனநல மருத்துவர் கிருபாகரன்.

"ஒருகட்டத்தில் தங்கள் மீது தான் தவறு என அப்பெண்கள் நினைப்பார்கள். குற்ற உணர்வு, நம்பிக்கையின்மை, மன அழுத்தம், தற்கொலை எண்ணங்கள் ஏற்படலாம். ஏற்கெனவே பலவகையான அழுத்தங்களுக்கு ஆளாகும் இப்பெண்கள், தீவிரத்தைப் பொறுத்து இதற்கென மனநல ஆலோசகரின் உதவியை நாடலாம்," என்றார் அவர்.

மேலும், கிராமங்களில் இன்றளவும் மனநல ஆலோசனை குறித்த விழிப்புணர்வு பெரிதளவில் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு சாரா நிறுவனங்களை இணைத்துக்கொண்டு, கிராமங்களில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

"காவலர்கள் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களை குற்றம் சொல்லாமல், குற்றவாளிகளை பிடிப்பதிலும் அவர்களுக்கு தக்க தண்டனையை பெற்றுத்தருவதிலுமே கவனம் செலுத்த வேண்டும்." என்கிறார் ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி.

"காவலர்கள் பெண்கள் பாதுகாப்பு குறித்து வலியுறுத்தலாம். ஆனால், ஒரு குற்றம் நடந்த பின்னர் பாதிக்கப்பட்ட பெண்கள் மீது குற்றம்சுமத்தக் கூடாது. கோவை பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை காவல் கண்காணிப்பாளர் மிகுந்த பொறுப்புடன் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். காவலர்கள் அப்படி தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்" என்றார்.

முக்கிய குறிப்பு

மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு