இஸ்லாமிய நாடுகள் பரஸ்பர பகையை இப்போது மறந்துவிட்டனவா?

இஸ்லாமிய நாடுகள், துருக்கி, ரஷ்யா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரஜ்னிஷ் குமார்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கடந்த சில வருடங்களின் போக்கைப் பார்க்கும்போது மேற்காசியாவின் இஸ்லாமிய நாடுகள் தங்கள் வேறுபாடுகளை மறந்து விட்டது போல் தெரிகிறது.

2021 ஆம் ஆண்டில் செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகியவை கத்தாருக்கு எதிரான தடுப்புகளை முடிவுக்குக் கொண்டு வந்தன.

செளதி அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் இராக்கில் நடந்துள்ளன. ஏமன் விவகாரத்திலும் செளதி அரேபியாவின் நிலைப்பாடு மாறி வருகிறது.

துருக்கியும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டன. இரு நாடுகளுக்கும் இடையே உயர்மட்ட பயணமும் நடந்தது.

துருக்கியும் செளதி அரேபியாவுடனான பரஸ்பர வேறுபாடுகளை ஒதுக்கி வைத்தது. துருக்கி அதிபர் எர்துவான் கடந்த ஏப்ரல் மாதம் செளதிக்கு பயணம் மேற்கொண்டார்.

செளதி அரேபியா துருக்கியின் மத்திய வங்கியில் ஐநூறு கோடி டாலர்களை டெபாசிட் செய்வதாக திங்களன்று, அறிவித்தது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்காக செளதி அரேபியா தனது கருவூலத்தை திறந்துள்ளது.

மேற்கத்திய நாடுகளுடன் துருக்கியின் உறவுகள் சரியில்லாதபோதும், அமெரிக்காவுடனான செளதி அரேபியாவின் உறவு சிதைந்திருக்கும்போதும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் மேற்கிலிருந்து வரும் எல்லா உத்தரவுகளையும் ஏற்றுக்கொள்ளாத நிலையிலும் இது நடக்கிறது. இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள பகைமை அனைவரும் அறிந்ததே.

பகைமை கொண்ட இஸ்லாமிய நாடுகள் இப்போது ஒன்றுபட முயல்கின்றனவா? வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

இஸ்லாமிய நாடுகள், துருக்கி, ரஷ்யா

பட மூலாதாரம், Getty Images

வளைகுடா நாடுகளின் இந்திய தூதராக இருந்துள்ள தல்மிஸ் அகமது, எர்துவானின் செளதி அரேபியா பயணம் பற்றி பிபிசியிடம் பேசினார். "ஆப்கானிஸ்தான் பற்றிய குழப்பம் அதிகரித்துள்ளது, இது மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் அவநம்பிக்கையை ஆழப்படுத்தியுள்ளது" என்றார் அவர்.

“இந்தப் பகுதியில் தங்கள் சொந்த தூதாண்மையை நடத்த வேண்டும் என்று வளைகுடா நாடுகள் நினைக்கின்றன. செளதி அரேபியாவே இரானுடன் பேசி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகமே துருக்கிக்கு செல்கிறது. ஒரு புதிய சூழல் தொடங்கியுள்ளது,” என்று தல்மீஸ் அகமது குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தாலிபன்களிடம் ஒப்படைத்து, அங்கிருந்து கிளம்பிச்சென்ற விதமானது, அமெரிக்கா எந்த வேலையையும் தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டுவராது என்ற செய்தியை உணர்த்துகிறது. அமெரிக்காவுடனான உறவு தொடர்பாக நம்பிக்கையற்ற சூழல் நிலவுகிறது.

இஸ்லாமிய உலகில் பகைமை வலுவிழந்து வருவதாக தான் உணரவில்லை என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்கு ஆசிய ஆய்வு மையத்தின் பேராசிரியர் ஏ.கே.மஹாபாத்ரா தெரிவித்தார்.

"எர்துவான் இஸ்லாமிய உலகின் தலைவராவதற்கு விரும்புகிறார். ஒட்டோமான் பேரரசின் மரபு காரணமாக, துருக்கிக்கு ஏகபோக உரிமை இருப்பதாக அவர் கருதுகிறார். மறுபுறம், மெக்கா மற்றும் மதீனா காரணமாக இஸ்லாமிய உலகின் தலைமை மீதான இயற்கையான உரிமை தனக்குத்தான் உள்ளது என்று செளதி அரேபியா கருதுகிறது. செளதியின் முன் எர்துவான் மென்மையாக இருப்பது அவரது அரசியலின் ஒரு உத்தி. பரஸ்பர பகைமை வலுவிழப்பதாக இதைப் பார்க்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

இஸ்லாமிய நாடுகள், துருக்கி, ரஷ்யா

பட மூலாதாரம், Getty Images

“மேற்கு ஆசியா பல அதிகார மையங்கள் கொண்டது. தெற்காசியாவைப் போல இருமுனை கொண்டது அல்ல. அங்கு கத்தார் பணக்கார நாடு. செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவையும் செல்வந்த நாடுகள். மூன்று நாடுகளும் தங்கள் செல்வத்தின் அடிப்படையில் அந்தப் பிராந்தியத்தில் தங்களது செல்வாக்கை அதிகரித்து வருகின்றன. செளதி அரேபியா துருக்கியில் ஐந்து பில்லியன் டாலர்களை டெபாசிட் செய்துள்ளது, எனவே அது லாபத்திற்காகவும் பிராந்தியத்தில் தன் செல்வாக்கை அதிகரிக்கவும் செய்யப்பட்டுள்ளது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“இஸ்லாமிய உலகின் பகைமை முடிவுக்கு வரப்போகிறது என்பது நமது அவசர முடிவாக இருக்கும். செளதி அரேபியா அடிப்படைவாத இஸ்லாத்தில் இருந்து மிதவாத இஸ்லாத்திற்கும், துருக்கி மதச்சார்பற்ற நிலையில் இருந்து நவீன இஸ்லாத்திற்கும் அடிப்படைவாத அரசியல் இஸ்லாத்தை நோக்கியும் நகர்கிறது. இருவரின் அரசியல் இஸ்லாத்திற்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன.”

துருக்கிக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்ததற்கு பல காரணங்கள் உள்ளன. எர்துவான் துருக்கிக்கு தூதாண்மை மற்றும் செயல் உத்தி சுயாட்சியைக் கொடுத்தார் என்றும் இது மேற்கத்திய நாடுகளுக்கு பிடிக்கவில்லை என்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்காசிய ஆய்வுகள் மையத்தின் மற்றொரு பேராசிரியரான அஃப்தாப் கமால் பாஷா கருதுகிறார்.

“2003க்கு முன்பு துருக்கி, ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அட்டாதுர்க்கும் ராணுவத்தில் இருந்து வந்தவர். துருக்கியின் பொருளாதாரத்திலும் ராணுவத்தின் தலையீடு அதிகம். துருக்கியில் ஆட்சி மாற்ற கலகங்களும் நடந்துவந்தன. எர்துவான் அதை முடித்தார். எர்தோகனின் வருகைக்குப் பிறகு தனியார் வணிகர்கள் துருக்கியில் தோன்றினர். துருக்கி அரசில் ராணுவத்தின் தலையீடு முடிவுக்கு வந்தது. இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் எர்துவான் துருக்கியின் அரசியல் அமைப்பை முற்றிலுமாக மாற்றினார். இது எர்தோகனின் சாதனை என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

துருக்கியின் மத்திய வங்கியில் இருக்கும் செளதி அரேபியாவின் ஐந்து பில்லியன் டாலர்கள்

இஸ்லாமிய நாடுகள், துருக்கி, ரஷ்யா

பட மூலாதாரம், Getty Images

துருக்கியின் மத்திய வங்கியில் ஐந்து பில்லியன் டாலர்களை டெபாசிட் செய்ய செளதி அரேபியா முடிவு செய்துள்ளது. கடந்த மாதம் துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியில் மே 14ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் அதிபர் தேர்தலும் நடைபெற உள்ளது.

துருக்கிக்கு ஐந்து பில்லியன் டாலர்கள் வழங்க முடிவெடுத்த பிறகு ’வளர்ச்சிக்கான செளதி நிதியம்’ தனது அறிக்கையில், "செளதி அரேபியாவிற்கும் துருக்கிக்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்பு மற்றும் வரலாற்று உறவுகள் உள்ளன என்பதற்கு இந்த உதவி ஒரு சான்றாகும்" என்று கூறியுள்ளது.

வெளிநாட்டு அரசுகள், மற்ற நாடுகளின் மத்திய வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்யும் போது, தொகையை டெப்பாசிட் செய்தவர் வட்டி பெறுகிறார் மற்றும் அது கடனாக பார்க்கப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு முதல் குறைந்து வரும் அந்நிய செலாவணி கையிருப்புடன் துருக்கி போராடி வருகிறது. ரஷ்யா யுக்ரேனைத் தாக்கியபோது, எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் விண்ணைத் தொட்டன. துருக்கி எரிசக்திக்காக முற்றிலும் இறக்குமதியை சார்ந்துள்ளது.

மேற்கத்திய நாடுகளுடனான துருக்கியின் உறவுகள் மோசமடைந்ததால், வளைகுடா நாடுகளுடனான உறவை மீட்டெடுக்க கடந்த சில வருடங்களாக அது முயற்சி செய்து வருகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் செளதியுடன் துருக்கியின் உறவு கடந்த ஆண்டு சீரடைந்தது. துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்துவான் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும், ஏப்ரலில் செளதி அரேபியாவுக்கும் பயணம் மேற்கொண்டார்.

இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் துருக்கி சென்றார்.

“துருக்கியின் மத்திய வங்கியில் ஐந்து பில்லியன் டாலர்களை டெபாசிட் செய்வதன் மூலம் செளதி அரேபியா மிகவும் கடினமான காலங்களில் உதவியுள்ளது. துருக்கியின் பொருளாதாரம் ஏற்கனவே சிக்கலில் இருந்தது, ஆனால் நிலநடுக்கத்திற்குப் பிறகு நிலைமை மிகவும் சிக்கலானது,” என்று இஸ்தான்புல் பொருளாதார நிபுணர் என்வர் எர்கன்,’அரப் நியூஸிடம்’ கூறினார்.

நிலநடுக்கத்தால் துருக்கிக்கு 34 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று முதற்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. “துருக்கியின் நடப்பு கணக்கு பற்றாக்குறை இந்த ஆண்டு 30 பில்லியன் முதல் 40 பில்லியன் வரை இருக்கும். நிலநடுக்கத்திற்குப் பிறகு கட்டுமானப் பணிகளுக்கு பணமும் வளங்களும் தேவைப்படும். அப்படிப்பட்ட நேரத்தில் துருக்கிக்கு செளதி அரேபியா உதவியுள்ளது,” என்று என்வர் எர்கன் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு டாலருடன் ஒப்பிடுகையில் துருக்கிய கரன்சி லிராவின் மதிப்பு 30 சதவிகிதம் சரிந்தது. 2021 ஆம் ஆண்டில், டாலருடன் ஒப்பிடும்போது லிரா 44 சதவிகிதம் பலவீனமடைந்தது. துருக்கியின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போது துருக்கியின் அந்நியச் செலாவணி கையிருப்பு 20 பில்லியன் டாலருக்கும் குறைவாக உள்ளது.

2002 இல் எர்தோகன் துருக்கியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, செளதி உடனான உறவு செயலற்ற நிலையில் இருந்தது. எர்தோகனுக்கு முந்தைய அரசுகள் மேற்கத்திய சார்புடையவையாக கருதப்பட்டன. கூடவே துருக்கி மத்திய கிழக்கில் மிக்குறைவான ஆர்வத்தையே காட்டி வந்தது. எர்தோகன் ஆட்சிக்கு வந்ததும், வளைகுடா நாடுகளுடனான உறவுகளை மீட்சிப் பாதையில் கொண்டு வர முயன்றார். எர்துவானின் ஆரம்ப ஆட்சியில் எல்லா பிராந்திய நாடுகளுடனும் உறவுகள் மேம்பட்டன. இந்த காலகட்டத்தில் செளதி அரேபியாவுடனான துருக்கியின் உறவும் மேம்பட்டது.

செளதிக்கும் துருக்கிக்கும் இடையிலான உறவில் பிளவு

இஸ்லாமிய நாடுகள், துருக்கி, ரஷ்யா

பட மூலாதாரம், Getty Images

2011 இல் அரபு எழுச்சி தொடங்கியபோது, துருக்கி மற்றும் செளதி அரேபியாவின் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்தியல் வேறுபாடு காரணமாக, அரபு எழுச்சியில் அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் அவற்றின் சொந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டன.

அரபு எழுச்சி காலத்தில் அரசுகளுக்கு எதிரான கிளர்ச்சிக் குரல் காரணமாக, செளதி உட்பட மத்திய கிழக்கின் பல முடியாட்சி மற்றும் சர்வாதிகார அரசுகளின் மத்தியில் தங்கள் பதவி ஆட்டம்காணக்கூடும் என்ற அச்சம் பரவியது.

எர்தோகன் ஆரம்பத்தில் அரபு எழுச்சி பற்றிய தீர்மானம் ஏதும் எடுக்காமல் இருந்தார். ஆனால் பின்னர் அதை ஆதரிக்கத் தொடங்கினார். துருக்கியின் ஆட்சியிலும் ராணுவத்தின் கட்டுப்பாடு இருந்து வந்துள்ளது.

அத்தகைய சூழ்நிலையில் எர்தோகனின் ஆதரவு ஆச்சரியமானதல்ல. துருக்கியின் இந்த அணுகுமுறை செளதி அரேபியாவை கோபப்படுத்தியது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சீர்குலைந்தன.

2017 ஜூன் மாதம் கத்தாருக்கு எதிராக செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் எகிப்து கட்டுப்பாடுகளை விதித்தபோதும், துருக்கி அதை எதிர்த்தது. இந்த கட்டுப்பாடுகளை துருக்கி எல்லா வகையிலும் மீறியது. துருக்கியும் தனது வீரர்களை கத்தாருக்கு அனுப்பியது. துருக்கியின் இந்த நிலைப்பாட்டை நான்கு நாடுகளும் பகைமையாகவே கண்டன.

ஆனால், இஸ்தான்புல்லில் உள்ள செளதி தூதரகத்தில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தன. ஜமால் கஷோக்கி செளதியைச் சேர்ந்தவர். அவர் அங்குள்ள மன்னராட்சிக்கு எதிராக வெளிப்படையாக எழுதுவார். செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது கஷோக்கியை கொலை செய்ய வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

கஷோக்கி கொலை செய்யப்பட்ட ஆடியோவை துருக்கி வெளியிட்டது மற்றும் செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மீது நேரடியாக குற்றம் சாட்டியது. மேற்கத்திய நாடுகளில் செளதி பட்டத்து இளவரசரின் பிம்பம், சீர்திருத்தவாதத் தலைவர் என்ற விதமாக உருவாக்கிக்கொண்டிருந்தது. ஆனால் கஷோக்கி படுகொலையால் அனைத்தும் தலைகீழாக மாறியது.

2021 ஜனவரியில் செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகியவை கத்தாருக்கு எதிரான கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்தன. அப்போதிலிருந்து, வளைகுடா நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்த துருக்கி முயற்சிகளை மேற்கொண்டது.

மேற்கத்திய நாடுகளிடமிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டபோது துருக்கி, வளைகுடா நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்தத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. துருக்கி இஸ்ரேலுடனும் உறவுகளை மேம்படுத்தியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாடுகளும் தத்தமது தூதர்களை பரஸ்பரம் அனுப்பி வைத்தன.

கடந்த ஆண்டு ஏப்ரலில், துருக்கியில் நடந்து வந்த கஷோக்கி கொலை தொடர்பான எல்லா வழக்குகளும் முடிக்கப்பட்டு செளதியிடம் ஒப்படைக்கப்படன. துருக்கியின் இந்த முடிவை மனித உரிமை அமைப்புகள் விமர்சித்த போதிலும், தனது சொந்த நலனுக்காக இந்த முடிவை எடுத்ததாக துருக்கி கூறியது.

ஒருவருக்கொருவர் தேவை

இஸ்லாமிய நாடுகள், துருக்கி, ரஷ்யா

பட மூலாதாரம், Getty Images

கஷோக்கி படுகொலை தொடர்பாக எழுந்த சர்ச்சைக்குப் பிறகு செளதி அரேபியா, துருக்கிய தயாரிப்புகளை அறிவிப்பு ஏதும் வெளியிடாமல் புறக்கணித்தது. இதன் விளைவாக செளதிக்கான துருக்கிய பொருட்களின் ஏற்றுமதி 90% குறைந்தது. துருக்கியின் பொருளாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதால் தலைவணங்க நேரிட்டது என்று பலர் கூறினர். இருப்பினும், செளதி அரேபியாவுடனான உறவுகளை மேம்படுத்தியபோதிலும்கூட துருக்கியின் பொருளாதார நிலை மிகவும் நன்றாக இல்லை.

சர்வதேச அரசியலில் துருக்கியும் செளதி அரேபியாவும் ஒன்றுக்கொன்று தேவை என்று பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர். செளதி அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையே ஏமன் மறைமுகப்போர் நடத்தி வருகிறது. மறுபுறம் செளதி அரேபியாவுடன் இரான் நல்லுறவைக் கொண்டுள்ளது. தேவைப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு மத்தியஸ்தராக துருக்கி செயல்பட முடியும். இந்த சண்டையில் செளதிக்கு துருக்கி உதவ விரும்பினால், ராணுவ உதவியையும் வழங்க முடியும். இரானிய ஆளில்லா விமானங்களின் அச்சுறுத்தல் சமீபத்திய ஆண்டுகளில் செளதி அரேபியாவில் அதிகரித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், துருக்கி தனது ஆளில்லா விமானங்கள் மூலம் செளதி அரேபியாவுக்கு உதவ முடியும்.

வாஷிங்டன் டிசியில் உள்ள ஒரு ஆராய்ச்சி அமைப்பான ‘Arab Center Washington DC (ACW), தான் வெளியிட்ட ஒரு அறிக்கையில், "செளதி அரேபியாவிற்கும் துருக்கிக்கும் இடையிலான பதற்றம் மிகவும் தனிப்பட்டதாக உள்ளது. அதே நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் துருக்கி இடையேயான பதற்றம் கருத்தியல் ரீதியாக உள்ளது. அரசியல் இஸ்லாம் மற்றும் முஸ்லிம் பிரதர்வுட் அமைப்பு தொடர்பாக இரு நாடுகளின் சிந்தனையும் வேறுபட்டது. 2016 இல் எர்தோகனுக்கு எதிரான தோல்வியடைந்த ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பங்கு இருந்ததாக அங்காராவில் பலர் குற்றம் சாட்டுகின்றனர். லிபியாவில் துருக்கியின் ராணுவத் தலையீட்டிற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன்படவில்லை. 2014 ஆம் ஆண்டு செளதி அரேபியா, முஸ்லிம் பிரதர்வுட் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. கத்தாருக்கு அழுத்தம் கொடுப்பதற்காக செளதி அரேபியா இதை செய்தது.”என்று தெரிவித்துள்ளது.

“அமெரிக்கா மீதான அவநம்பிக்கை அதிகரித்துள்ளது. துருக்கியின் அணுகுமுறை செயல் உத்தி சுயாட்சிக்கானது. யாருடனும் நிரந்தர கூட்டணியில் ஈடுபட அது விரும்பவில்லை. துருக்கிக்கு ஒரு பங்கு இருக்க வேண்டும் என்பது அதன் முதன்மையான எண்ணம். எர்தோகன் ஒட்டோமான் பாரம்பரியத்திலிருந்து உத்வேகம் பெறுகிறார். இப்போது உருவாகும் இந்த உறவுகள் பிரச்சனை அடிப்படையிலானவை. கூட்டணி கிடையாது. இதில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை. போட்டி உள்ளது. ஒத்துழைப்பும் உள்ளது. நேட்டோ அவர்களுக்கு ஒரு நிர்பந்தம் அல்ல. துருக்கி அமெரிக்காவிடமிருந்து பேட்ரியாட் ஏவுகணையைக் கேட்டது. அது கொடுக்கவில்லை. எனவே எர்தோகன் ரஷ்யாவிலிருந்து எஸ் -400 ஐ வாங்கிவிட்டார்,” என்று வளைகுடா நாடுகளுக்கான இந்திய தூதராக இருந்த தல்மிஸ் அகமது குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: