இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகள் வருகை: வளர்ச்சிக்கு உதவுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கக்கூடிய சுற்றுலாத்துறை இன்று படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
இந்த ஆண்டின் முதல் மாதம் தொடக்கம், லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இலங்கையை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி, இந்த ஆண்டின் ஜனவரி மாதம் 102,545 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்ததுடன், கடந்த பிப்ரவரி மாதம் 107,639 சுற்றுலா பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.
இந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 210,184 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.
கடந்த ஆண்டில் மார்ச் மாதத்திற்கு மாத்திரமே ஒரு லட்சத்தை தாண்டிய சுற்றுலா பயணிகள் வருகைத் தந்திருந்தனர்.
இதன்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு 106,500 சுற்றுலா பயணிகள் வருகைத் தந்திருந்தார்கள்.
ஏனைய 11 மாதங்களிலும் ஒரு லட்சத்திற்கும் குறைவான சுற்றுலா பயணிகளே வருகைத் தந்திருந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் சுற்றுலாத்துறை எப்போது வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது?
இலங்கையின் சுற்றுலாத்துறையானது, யுத்தம் நிறைவடைந்த காலப் பகுதிக்கு பின்னர் முன்னேற்றம் அடைந்து வந்த நிலையில், 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலில் பாரிய வீழ்ச்சியை நோக்கி நகர ஆரம்பித்தது.
குறிப்பாக 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் சுற்றுலாத்துறை வீழ்ச்சி அடைந்திருந்தது.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல், இலங்கையின் சுற்றுலாத்துறையை பாரிய வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்றிருந்தது.
இவ்வாறான நிலையில், 2019ஆம் ஆண்டு ஜுலை மாதத்திற்கு பின்னரான காலத்தில் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி நகர்ந்து, நவம்பர் மாதமளவில் வழமைக்கு திரும்பியிருந்ததாக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது.
2019ம் ஆண்டு மார்ச் மாதம் 244,328 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்த நிலையில், ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னராக மே மாதம் 37,802 சுற்றுலா பயணிகளாக குறைவடைந்திருந்தது.
இதையடுத்து, நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு, பாரிய சிரமத்திற்கு மத்தியில் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் வழமை நிலைமைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், 2019ம் ஆண்டு இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1,913,702 ஆக பதிவாகியிருந்தது.
2020ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களிலும் 2 லட்சத்தை தாண்டிய சுற்றுலா பயணிகள் பதிவான நிலையில், மார்ச் மாதம் நாட்டில் முதலாவது கோவிட் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்.
இதையடுத்து, இலங்கையில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, விமான நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

பட மூலாதாரம், SLTDA
இந்த நிலையில், 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை இலங்கைக்கு ஒரு சுற்றுலா பயணி கூட வருகைத்தரவில்லை என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது.
எவ்வாறாயினும், அந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோவிட் பரவலுக்கு மத்தியில் 393 சுற்றுலா பயணிகள் வருகைத் தந்திருந்தனர்.
2020ம் ஆண்டு இலங்கைக்கு மொத்தமாக 507,704 சுற்றுலா பயணிகள் வருகைத் தந்திருந்தனர்.
எனினும், 2021ம் ஆண்டு இலங்கையின் சுற்றுலாத்துறை பாரிய பின்னடைவை சந்தித்திருந்தது.
2021ம் ஆண்டு முழுவதும் 194,495 சுற்றுலா பயணிகள் மாத்திரமே வருகைத் தந்திருந்தனர்.
2022ம் ஆண்டு முழுவதும் 719,978 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்திருந்தனர்.
இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய சவால்களை எதிர்நோக்கிய வருடமாக 2022ம் ஆண்டு வரலாற்றில் பதிவாகியுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு, மின்சார தடை, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, வரிசைகளில் மக்கள் காத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்களவு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்திருந்தனர்.
இலங்கை ஆட்சியாளருக்கு எதிராக 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இதன்படி, மார்ச் மாதமே அதிகளவிலான பயணிகள் இறுதியாக பதிவாகியுள்ளனர்.
2022ம் ஆண்டு மார்ச் மாதம் 106,500 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்ததை அடுத்து, 2023ம் ஆண்டு ஜனவரி மாதமே ஒரு லட்சத்தை தாண்டிய சுற்றுலாப் பயணகள் நாட்டிற்கு வருகை தந்தார்கள்.
2021ம் ஆண்டு அதிகபட்சமாக டிசம்பர் மாதம் 89,506 சுற்றுலாப் பயணிகளே வருகைத் தந்தனர்.
2020ம் ஆண்டு சுற்றுலாத்துறை ஊடாக இலங்கைக்கு 0.7 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானமும், 2021ம் ஆண்டு 506.9 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானமும், 2022ம் ஆண்டு 1.1 பில்லியன் அமெரிக்க டாலரும் வருமானமாக கிடைத்துள்ளது.

பட மூலாதாரம், SLTDA
சுற்றுலாத்துறையில் முன்னேறும் இலங்கை
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு முதல் இரண்டு மாதங்களில் சுற்றுலாத்துறை முன்னேற்றமடைந்து வருவதை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின் ஊடாக உறுதிப்படுத்தப்படுகின்றது.
முதல் இரண்டு மாதங்களிலும், 2 லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டிய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.
இதன்படி, ரஷ்யாவிலிருந்தே ஜனவரி மாதம் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்ததுடன், அடுத்ததாக இந்தியாவிலிருந்தே அதிகளவிலானோர் வருகைத் தந்துள்ளனர்.
இலங்கை வரலாற்றில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் எப்போது வருகைத் தந்தார்கள்?
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளுக்கு அமைய, 1985ம் ஆண்டு முதலான தரவுகள் பதிவில் உள்ளன.
இதன்படி, 1985ம் ஆண்டு இலங்கைக்கு 257,456 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.
1985ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையான காலப் பகுதி வரை ஒரு மில்லியனுக்கும் குறைவான சுற்றுலாப் பயணிகளே வருகைத் தந்துள்ளனர்.
எனினும், 2012ம் ஆண்டு முதல் தடவையாக ஒரு மில்லியனை தாண்டிய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்தனர்.
இதன்படி, 2012ம் ஆண்டு 10 லட்சத்து 5 ஆயிரத்து 605 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்தனர்.
இந்த தொகையானது படிப்படியாக அதிகரித்து, 2016ம் ஆண்டு அந்த தொகையானது 2 மில்லியனை எட்டியிருந்தது.
இதன்படி, 2016ம் ஆண்டு 20 லட்சத்து 50 ஆயிரத்து 832 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்தனர்.
2016ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை 2 மில்லியனை தாண்டிய சுற்றுலாப் பயணிகள் வருடாந்தம் நாட்டிற்கு வருகைத் தந்த போதிலும், 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் காரணமாக அந்த வருடம் 1.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகளே வருகைத் தந்தனர்.
2020ம் ஆண்டு சுற்றுலாத்துறையானது, மீண்டும் 2009ம் ஆண்டு நோக்கி பின்னடைவை சந்தித்தது.
இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற 2009ம் ஆண்டு 447,890 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்ததை போன்று, 2020ஆம் ஆண்டு 5 லட்சத்தை தாண்டிய சுற்றுலாப் பயணிகளே வருகைத் தந்தனர்.
இந்த பின்னடைவிலிருந்து நாடு தற்போது முன்னோக்கி நகர ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

பட மூலாதாரம், Harin Fernando
இலங்கைக்கு 3 வருடங்களின் பின்னர் சீன சுற்றுலாப் பயணிகள்
2019ம் ஆண்டு இறுதி முதல் உலகளாவிய ரீதியில் பரவிய கோவிட் பெருந்தொற்றை அடுத்து, சீன சுற்றுலாப் பயணிகள் வருகை தடைப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 3 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக சீன சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்தது.
120 சீன சுற்றுலாப் பயணிகளுடன், ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் விமானம் நாட்டை வந்தடைந்தது.
அதேபோன்று, சீனா சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வரும் நோக்குடன், ஏப்ரல் மாதம் முதல் இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையில் வாராந்தம் 9 விமான சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிக்கின்றார்.
''சீனாவின் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு 3 வருடங்களின் பின்னர் இந்த வருடம் வருகைத் தருகின்றமை, இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கு மிக முக்கியமான காரணமாக அமையும் என நினைக்கின்றேன். பெருமளவலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு எதிர்காலத்தில் வருகைத் தருவார்கள் என நம்புகின்றேன். அது நாட்டிற்கு பாரிய சக்தியாக அமையும். ஒரு வருடத்திற்குள் 5 லட்சம் சீன சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தரும் போது, ஒரு சீன சுற்றுலாப் பயணி 5000 டாலரை எடுத்து வருவாராயின், அது சர்வதேச நாணய நிதியத்தினால் கடனாக வழங்கப்படும் தொகையுடன் ஒப்பிடப்படும். அதனால், இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இது பங்களிப்பாக இருக்கும்" என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிக்கின்றார்.
தற்போது காணப்படுகின்ற நிலைமை இவ்வாறே தொடருமாக இருந்தால், இலங்கை சுற்றுலாத்துறையின் ஊடாக பொருளாதார ஸ்திரதன்மையை நோக்கி நகரும் சாத்தியம் காணப்படுவதாக அரசாங்கம் நம்புகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












