You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அன்டார்டிக் கிரில்: இந்த 'குட்டி ஹீரோ' இல்லை என்றால் திமிங்கலத்துக்குக் கூட பிரச்னைதான் - ஏன்?
- எழுதியவர், விக்டோரியா கில்
- பதவி, பிபிசி செய்திகள், அறிவியல் செய்தியாளர்
கடல்நீரின் நிறத்தில் ஏற்படும் கணிசமான மாற்றங்களைக் கவனிப்பதன் மூலம், அன்டார்டிக் கடலில் உள்ள சிறிய அளவில் இருக்கும் முக்கியமான கடல் உயிரினங்களை, விண்வெளியில் இருந்து கணக்கிட முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்தப் புதிய ஆராய்ச்சி அன்டார்டிக் கிரில் என்னும் ஒரு கடல் உயிரினம் மீது கவனம் செலுத்துகிறது. இவை சில சென்டிமீட்டர் நீளத்தில் மட்டுமே இருக்கும். அவை, பூமியில் அதிக எண்ணிக்கையில் உள்ள முக்கியமான விலங்குகளில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
திமிங்கலங்கள், பென்குவின்கள், நீர் நாய்கள், கடல் பறவைகள் போன்ற நீர்வாழ் உயிரினங்கள், உணவுக்காக இந்தச் சிறிய உயிரினங்களைச் சார்ந்துள்ளன.
இருப்பினும், மீன் பிடித்தல் மற்றும் காலநிலை மாற்றம் இந்த கிரிலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஞ்ஞானிகள் கவலைப்படுகின்றனர். மேலும், இந்த உயிரினங்களைக் கண்காணிக்க புதிய வழிமுறைகள் தேவை என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
"அன்டார்டிக் கிரில் தெற்குப் பெருங்கடலின் சூப்பர் ஹீரோக்கள்" என்று WWF-UK எனும் வனவிலங்கு அறக்கட்டளையின் துருவப் பகுதிகளின் தலைமை ஆலோசகரான ராட் டௌனி தெரிவித்தார்.
"அவை மற்ற பெரிய கடல்வாழ் உயிரினங்கள் உயிர்வாழ காரணமாக உள்ள சிறிய உயிரினங்கள். ஆனால், காலநிலை மாற்றம் மற்றும் அதிகளவில் மீன்பிடித்தல் ஆகியவற்றால் அவற்றுக்கு பாதிப்பு ஏற்படுகின்றன" என ராட் டௌனி விளக்குகிறார்.
ஸ்ட்ராத்க்லைட் பல்கலைக்கழகம், WWF மற்றும் பிரிட்டிஷ் அன்டார்டிக் சர்வே (BAS) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள், செயற்கைக்கோள்களை பயன்படுத்தி அன்டார்டிகாவைச் சுற்றியுள்ள கடலில் எத்தனை கிரில்கள் உள்ளன என்பதைக் கண்டறிய புதிய வழியை உருவாக்கி வருகின்றனர்.
கடல் நீர் எவ்வளவு ஒளியை உறிஞ்சுகிறது என்பது அதில் எத்தனை கிரில்கள் இருக்கின்றன என்பதை பொருத்து வேறுபடும். இந்த வேறுபாடுகளை கவனிப்பதே இந்த ஆராய்ச்சியின் முக்கிய அம்சமாகும்.
ஸ்ட்ராத்க்லைட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். கெய்ட் மெக்கரி, சமீபத்தில் அன்டார்டிகாவிலிருந்து ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்துள்ளார். அங்கு அவர் இந்த விளைவை கண்டறிவதற்காக இந்த கிரில்களை பிடித்து ஆய்வு செய்தார்.
"முதலில், கடல் நீர் எவ்வளவு ஒளி உறிஞ்சுகிறது என்பதை அளவிடுகிறோம். பிறகு, ஒரு கிரில்லை அந்த கடல் நீரில் சேர்ப்போம். அடுத்து, மற்றொரு கிரில்லைச் சேர்த்து மீண்டும் ஒருமுறை அளவிடுகிறோம்." என்று அந்தச் செய்முறையை அவர் விளக்கினார்.
கிரில்லின் எண்ணிக்கை கடலின் நிறத்தை எவ்வாறு மாற்றுகிறது என்பதை பகுப்பாய்வு செய்வதன் மூலம், விண்வெளியில் இருந்து கடலில் வாழும் கிரில்களின் எண்ணிக்கையை கண்காணிக்க செயற்கைக்கோள் மூலம் படம் எடுக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
பூமியில் உள்ள சில பெரிய விலங்குகளின் உணவுக்கான முக்கிய ஆதாரமாக கிரில் உள்ளது. ராட்சத திமிங்கலங்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து, அன்டார்டிகாவிற்குச் சென்று அவற்றை உண்கின்றன.
மேலும், ஆரோக்கியமான கடலுக்கு முக்கிய ஆதாரமாகவும் கிரில் உள்ளது . இது ஒரு சுழற்சி முறையில் நடக்கின்றது. திமிங்கலங்கள் கிரில்லை உண்ணுகின்றன, கிரில் கடல் பனியில் வாழும் நுண்ணிய தாவரங்களை சாப்பிடுகின்றன, மேலும் அந்த தாவரங்கள் வளரும்போது இந்த பூமியை வெப்பமாக்கும் கார்பனை உறிஞ்சுகின்றன. திமிங்கலங்கள் பெரிய அளவில் மலம் கழிக்கும்போது, அது இந்த பூமியை குளிர்விக்கும் கடல் தாவரங்களுக்கு உரமாக்குகிறது.
இருப்பினும், புவி வெப்பமடைதல் காரணமாக கடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது, சுற்றுசூழல் பாதுகாப்பு விஞ்ஞானிகள் இந்த இயற்கை சுழற்சி சீர்குலையக்கூடும் என்றும், இதனால் கிரில்கள் பாதிக்கப்படலாம் என்றும் கவலைப்படுகிறார்கள்.
டௌனி இதுகுறித்து பேசியபோது, "நாம் உடனடியாகவும், சிறப்பான முறையிலும் மீன்வளத்தை நிர்வகிக்க வேண்டும், மேலும் பாதுகாக்கப்பட்ட கடல் பகுதிகளின் வலையமைப்பிற்குள் கிரில்களின் வாழ்விடங்களைப் பாதுகாக்க வேண்டும்"எனத் தெரிவித்தார்.
"[இந்தத் திட்டத்தின் மூலம்] இந்த முக்கியமான உயிரினங்களைக் கண்காணித்து, பாதுகாக்க உதவும் ஒரு புதிய கருவி கிடைக்கக்கூடும்" என்றும் டௌனி குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)