செந்தில் பாலாஜி பதவி நீக்கம்: ஆளுநர் ரவியின் நடவடிக்கை சரியா?

பட மூலாதாரம், R.N.Ravi
- எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
- பதவி, பிபிசி தமிழ்
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரது இந்த நடவடிக்கை தமிழ்நாடு அரசியல் களத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது. ஆளுநரின் நடவடிக்கை சரியா? அரசியல் ரீதியாக என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது?
சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்த நிலையில், தற்போது அவர் சென்னை காவேரி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே, செந்தில்பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முத்துசாமிக்கும் பிரித்து வழங்கப்பட்டது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை ஜூன் 26ஆம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதில் தனக்கு விருப்பமில்லை என தெரிவித்துள்ள ஆளுநர், அமைச்சரை நீக்க வேண்டும் என எங்கே சொல்லியிருக்கிறார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை ஆளுநர் ஏற்கவில்லை என்பதற்கும், அவரை நீக்க உத்தரவிட்டார் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது” என்று கருத்து தெரிவித்திருந்தது.
செந்தில்பாலாஜியை நீக்கி உத்தரவிட்ட ஆளுநர்
இந்நிலையில், செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து ஆளுநர் நீக்கியுள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து நேற்று மாலை அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பில்,
- செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்தல், சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட கடுமையான கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்.
- அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்து, விசாரணையில் செல்வாக்கு செலுத்தி, சட்டம் மற்றும் நீதி வழங்கப்படுவதை தடுக்கிறார்.
- தற்போது அமலாக்க இயக்குனரகம் விசாரித்து வரும் குற்ற வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ளார். அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மேலும் சில குற்ற வழக்குகள் மாநில காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
- அமைச்சரவையில் செந்தில் பாலாஜி நீடிப்பது, நியாயமான விசாரணை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை எதிர்மறையாக பாதிக்கும். இது இறுதியில் மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரத்தை சீர்குலைக்க வழிவகுக்கும் என்ற நியாயமான அச்சங்கள் உள்ளன.
எனவே, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், SENTHIL BALAJI/TWITTER
ஆளுநருக்கு அதிகாரம் இல்லை- முதலமைச்சர்
ஆளுநரின் நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “ஆளுநருக்கு அந்த அதிகாரம் கிடையாது. நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்,” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், சட்ட அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசிய போது, “அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பது அவருக்கே தெரியவில்லை,” என்றார்.
ஆளுநரின் நடவடிக்கை சரியான அணுகுமுறையா?
மூத்த செய்தியாளர் தராசு ஷ்யாம் பிபிசி தமிழிடம் பேசுகையில், “மாநில அமைச்சர் ஆளுநரின் இசைவின்படிதான் பதவி வகிக்கிறார். செந்தில்பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் இசைவு தெரிவிக்கவில்லை. மாநிலங்களை பொறுத்தவரை அரசியல் சாசனத்தின் காவலர் ஆளுநர்தான். அந்தவகையில் ஆளுநர் செய்தது சரிதான்.
குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் அந்த அதிகாரம் இருக்கிறது. ஆனால், ஆளுநர்கள் செயல்படுத்துவதில்லை. கேரளாவில் இதேபோன்று அமைச்சர் கே.என்.பாலகோபல் தனது பதவியில் தொடரக்கூடாது என்று ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தனது இசைவின்மையை தெரிவித்திருந்தார். எனினும், ஆரிப் முகமது கான் பதவி நீக்கம் என்ற நிலைக்கு செல்லவில்லை. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சரை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார்,” என்றார்.
மசோதாக்களை நிறுத்தி வைப்பது, தமிழ்நாடு-தமிழகம் என்ற சர்ச்சையை ஏற்படுத்துவது என மாநில அரசுடன் இருந்த மோதலை இந்த நடவடிக்கை மூலம் ஆளுநர் வேறு கட்டத்துக்கு எடுத்து சென்றுள்ளார் என்று மூத்த செய்தியாளர் ப்ரியன் கூறுகிறார்.
“எந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை ஆளுநர் எடுத்துள்ளார் என்பது உத்தரவில் குறிப்பிடப்படவில்லை. முதல்வர் பரிந்துரையின் பேரில்தான் அமைச்சர்களை ஆளுநர் நியமிக்கிறார். யாரையும் தன்னிச்சையாக நியமிக்கவோ, நீக்கம் செய்யவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை,” என்றார்.

பட மூலாதாரம், ANI
தனக்கு இல்லாத அதிகாரங்களை இருப்பதாக நினைத்துக் கொண்டு தேவையில்லாத சர்ச்சைகளை ஆளுநர் உருவாகுவதாக திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறுகிறார்.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் அவர் பேசிய போது, “அரசியல் அமைப்பு சட்டம் 163, 164 ஆகியவற்றை படித்தால் ஆளுநர் என்றால் யார், அவருடைய இசைவு என்பது எங்கு இருக்கிறது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுநருக்கு எந்த இடத்திலும் தனிப்பட்ட முறையில் செயலாற்ற உரிமை இல்லை. அவர் எதை செய்தாலும் முதலமைச்சர், அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில்தான் செய்ய வேண்டும் என்பதை பி.ஆர். அம்பேத்கர் கூறியுள்ளார். நபம் ரெபியா வழக்கில் பி.ஆர். அம்பேத்கரின் வார்த்தைகளை உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறுகிறது.
தனது உத்தரவால் எதுவும் நடக்கபோவது இல்லை என்பதும் தனக்கு அந்த அதிகாரம் இல்லை என்பதும் ஆளுநருக்கு நன்றாகவே தெரியும்.
தன்னுடைய இருப்பை எப்போதும் காண்பித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஆளுநர் விளம்பர பிரியராக இருக்கிறார். தனக்கான பொறுப்பையும், அரசியலமைப்பு சட்டத்தையும் ஆளுநர் மதித்து செயல்படவில்லை,” என்றார்.

பட மூலாதாரம், SENTHIL BALAJI/TWITTER
செந்தில் பாலாஜியே பதவியை ராஜிநாமா செய்திருக்கலாம்
இது தேவையில்லாத சர்ச்சைதான். செந்தில்பாலாஜியே தனது பதவியை ராஜிநாமா செய்திருக்கலாம். அவர் மீதான வழக்கு எத்தனை ஆண்டுகள் நடைபெறும் என்று தெரியாது. அப்படி இருக்கும்போது எத்தனை ஆண்டுகளுக்கு அவர் துறை இல்லாத அமைச்சராக தொடருவார். இது அரசுக்கு செலவுதானே. மக்களின் வரிப்பணம் தானே அது? என்று கேள்வி எழுப்புகிறார் தராசு ஷ்யாம்.
செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜிநாமா செய்திருக்க வேண்டும் என்ற கருத்தை ப்ரியனும் முன்வைக்கிறார்.
“அமைச்சர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். அப்படி இருக்கும்போது தனது பதவியை அவர் ராஜிநாமா செய்வதுதான் தார்மீக ரீதியாக சரியாக இருக்கும். அதுதான் நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்துக்கு அழகு. ஆளுநர் செய்தது தவறுதான், அதே நேரத்தில் அரசும் உயர்ந்த நெறியை பின்பற்றி இருக்க வேண்டும். கட்சி ரீதியாக எத்தகைய உதவியை வேண்டுமானாலும் செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் செய்யலாம். ஆனால், அரசு ரீதியாக எந்த உதவியையும் செய்யக்கூடாது,” என்றார்.
பாஜக துணைத் தலைவரும் செய்தித் தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி பேசிய போது, “ஆளுநர்தான் மாநிலத்தின் முதல் குடிமகன். செந்தில்பாலாஜியை அமைச்சராக நியமித்ததே ஆளுநர் ஆர்.என்.ரவி தான். அவரை நீக்குவதற்கு ஆளுநருக்கு உரிமை இருக்கிறதா என்று கேட்கிறார்கள். தாராளமாக கேட்கட்டும். ஆனால், ஒரு அமைச்சர் கை நீட்டி காசு வாங்கலாமா? 'பணத்தை திருப்பிக்கொடுத்துவிட்டேன்; வழக்கை வாபஸ் பெறலாம்' என்று கூறுவது சரியா? "
"இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பல பேர் தங்களின் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். குற்றவாளி அல்ல என்று நிரூபணமான பின்னர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ளனர். எனவே, ஊழலுக்கு எதிரானதாக மட்டுமல்லாமல் அதிகார துஷ்பிரயோகத்துக்கும் எதிரான நடவடிக்கையாகத் தான் ஆளுநரின் நடவடிக்கையை பார்க்க வேண்டும்,” என்றார்.
ஆளுநரின் நடவடிக்கை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
அரசியல் ரீதியாக திமுகவுக்கு ஆளுநரின் நடவடிக்கை பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று தராசு ஷ்யாம் கூறுகிறார்.
“அரசியல் பின்னடைவு என்று இதில் எதுவும் இல்லை. ஆளுநர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துவிட்டார். மேற்கு வங்கத்தில் ஆளுநர் பஞ்சாயத்து தேர்தலில் தலையிடுகிறார். பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்ற ரீதியில் மு.க.ஸ்டாலின் இதனை கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது,” என்றார்.

பட மூலாதாரம், K.S.Alagiri
மத்திய அமைச்சர்களை பதவி நீக்கம் செய்வார்களா?
ஆளுநரின் நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி நம்மிடம் பேசிய போது, “அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் ஆளுநரின்செயல் புறம்பானது. செந்தில் பாலாஜி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதே தவிர, குற்றம் நிரூபிக்கப்படவில்லை. யார் வேண்டுமானாலும் யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சுமத்தலாம். அதற்காக அவர்களை பதவி நீக்கம் செய்ய முடியுமா?
ரஃபேல் விற்பனை மற்றும் ட்ரோன் விற்பனையில் தவறு நடந்திருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சர்களை பதவி நீக்கம் செய்துவிட முடியுமா? ஒரு அரசாங்கத்துக்கு என்னால் தொந்தரவு கொடுக்க முடியும் என்ற அதிகார மமதையில் ஆளுநர் இவ்வாறு செய்கிறார். சட்டம் இதை அனுமதிக்காது,” என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












