செந்தில் பாலாஜியை நீக்கும் முடிவில் இருந்து பின்வாங்கிய ஆளுநர் - என்ன காரணம்?

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் உத்தரவு

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் முடிவை அடுத்த உத்தரவு வரும்வரை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக வெளியிடப்பட்ட உத்தரவு வெளியான சில மணி நேரங்களிலேயே இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.

ஆளுநரின் உத்தரவு சர்ச்சைக்குள்ளான நிலையில் முதலமைச்சருக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிவுரையின் பேரில், அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையைப் பெற இருப்பதாக ஆளுநர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “அதிமுக ஆட்சியில் விஜயபாஸ்கரை நீக்கம் செய்ய ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தார். தற்போது செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறுகிறார்,” என்று தெரிவித்தார்.

மேலும், இது ஆளுநர் அதிகாரம் குறித்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுவதாகவும் அவர் விமர்சித்தார்.

என்ன நடந்தது?

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை உத்தரவிட்டார். அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு ஆளுநர் ஏற்பு தெரிவிக்காத நிலையில், தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து அவரை அமைச்சரவையில் தொடர வைத்திருந்தது.

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக எதிர்வினை ஆற்றினார்.

இதுகுறித்துப் பேசியுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், "செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. இதை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம்,'' என்று தெரிவித்தார்.

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மீதான வழக்கை சுட்டிக்காட்டி, ஆளுநர் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர்ந்தால் வழக்கு விசாரணை நியாயமாக நடக்காது என்றும், வழக்கு விசாரணை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஆளுநர் தற்போது பிறப்பித்துள்ள இந்த உத்தரவு சட்டத்திற்கு உட்பட்டதுதானா என்பது குறித்து அரசமைப்பு சட்ட அறிஞர், முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் பிபிசி தமிழிடம் பேசியபோது, ஆளுநருக்கு அமைச்சரை பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் இல்லை என்று கூறினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் ஜூலை 12ஆம் தேதி வரை நீட்டித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில் ஆளுநரின் இந்த உத்தரவு வந்தது.

பதவியில் இருந்து நீக்கியதற்கு ஆளுநர் கூறிய காரணம் என்ன?

ஆளுநர் செய்தது சட்டப்படி சரியா?

பட மூலாதாரம், R.N. RAVI

தற்போது செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாகக் குறிப்பிட்டு ஆளுநர் மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.

அதில், "அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணமோசடி செய்தல் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்.

அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்து, விசாரணையில் செல்வாக்கு செலுத்தி, சட்டம் மற்றும் நீதி வழங்கப்படுவதைத் தடுக்கிறார்.

தற்போது அமலாக்க இயக்குனரகம் விசாரித்து வரும் குற்ற வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ளார். அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மேலும் சில குற்ற வழக்குகள் மாநில காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

அமைச்சரவையில் செந்தில் பாலாஜி நீடிப்பது, நியாயமான விசாரணை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை எதிர்மறையாகப் பாதிக்கும். இது இறுதியில் மாநிலத்தில் அரசமைப்பு இயந்திரத்தை சீர்குலைக்க வழிவகுக்கும் என்ற நியாயமான அச்சங்கள் உள்ளன.

இந்நிலையில் ஆளுநர், வி.செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்கியுள்ளார்," என்று ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆளுநர் செய்தது சட்டப்படி சரியா?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

பட மூலாதாரம், TNDIPR

செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஆளுநர் தற்போது பிறப்பித்துள்ள இந்த உத்தரவு சட்டத்திற்கு உட்பட்டதுதானா என்பது குறித்து அரசமைப்பு சட்ட அறிஞர், முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் பிபிசி தமிழிடம் பேசியபோது, ஆளுநருக்கு அமைச்சரை பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் இல்லை என்று கூறினார்.

இதுகுறித்து விரிவாகப் பேசிய அவர், “அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறியுள்ளது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை சிறைத் தண்டனைக்கு உள்ளானால் ஒழிய, ஒருவர் பெயரில் குற்ற வழக்குகள் இருப்பதாலேயே சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கத் தகுதியானவர் இல்லையென்று ஆளுநரால் சொல்ல முடியாது.

சிறையில் இருக்கும்போது அவர் அமைச்சராகத் தொடர முடியாது என்று ஆளுநர் கருத்து தெரிவிக்கலாமே ஒழிய, பதவியிலிருந்து நீக்க முடியாது. குற்றச்சாட்டு சுமத்தி, தண்டனை பெற்றால்தான் அமைச்சரை தகுதி நீக்கம் செய்ய முடியும்.

குற்றச்சாட்டு சுமத்தி, விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நிலையில், அது கொலை, பாலியல் வல்லுறவு போன்ற மிக மோசமான குற்றமாக இருந்தால் அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய திருத்தம் கொண்டு வரவேண்டும்.

ஆகவே, இப்படிச் செய்ய முடியாது. ஆளுநருக்கு இந்த அதிகாரம் கிடையாது. அமித் ஷா மீதும் 2016இல் வழக்கு இருந்தது,” என்று அவர் கூறுகிறார்.

இப்போது முதலமைச்சரால் செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர்வார் என்று சொல்ல முடியும் என்று கூறும் அரிபரந்தாமன், அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டால் மட்டுமே முதலமைச்சரால் அப்படிச் சொல்ல முடியாது என்கிறார்.

ஆளும் கட்சி அடுத்து என்ன செய்ய வேண்டும்?

“ஆளுநரால் இப்படிச் செய்ய முடியாது. இது அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரையிலும் குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதிதான்.

இதுவோர் அரசியல் பிரச்னை. அதில் என்ன ஆதாரம் இருக்கிறது என்பதை விசாரித்து முடிவு செய்யவேண்டிய விஷயம். இதில் ஆளுநருக்கு எந்த வேலையும் இல்லை. ஆளுநர் அவரது எல்லையைத் தாண்டிச் செல்கிறார்,” என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான என்.ராம்.

“ஆளும் கட்சியினர் இதைக் கண்டிக்க வேண்டும். அரசியல்ரீதியாக இதை எதிர்ப்பதோடு, ஆளும் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இதை சட்டரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டும்,” என்று கூறும் அவர், “ஆளுநர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டதால், அவரை இந்த உத்தரவைத் திரும்பப் பெறுமாறு நீதிமன்றத்தின் மூலமாக கட்டாயப்படுத்த வேண்டும்,” என்றும் கூறுகிறார்.

ஆளுநர் அதிகாரம் பற்றி சென்னை உயர்நீதிமன்றம் என்ன கூறியுள்ளது?

ஆளுநர் அதிகாரம் பற்றி சென்னை உயர்நீதிமன்றம் என்ன கூறியுள்ளது?

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வதற்கு எதிராக இரண்டு மனுக்கள் தொடரப்பட்டன. அந்த மனுக்களை தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது அமைச்சர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரே காரணத்திற்காக அவரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதா என்று கேள்வியெழுப்பினர்.

மனுதாரர்கள் தரப்பில் அரசமைப்பு சட்டப்பிரிவு 164இன் படி, ஆளுநர் அந்த முடிவை ஆதரித்தால் மட்டுமே செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர முடியும் என்று வாதிட்டனர். ஆனால், “இந்தக் குறிப்பிட்ட வழக்கில் செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடரக்கூடாது என்று ஆளுநர் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளார்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், எந்தவித பரிந்துரையையும் அளிக்க ஆளுநருக்கு உரிமையுண்டு. ஆனால், “சட்டப்பிரிவு 164இன் கீழ் அமைச்சரை பதவி நீக்கம் செய்வதற்கு ஏதாவது சட்டபூர்வ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா?” என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

அந்த வழக்கில், “இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட கால அளவிலான சிறைத் தண்டனையைப் பெற்றால் மட்டுமே ஓர் அமைச்சரை பதவி நீக்கம் செய்ய முடியும். குற்ற வழக்கு இருப்பதாலேயே அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை,’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முதல்வர் மகிழ்ச்சியடைய வேண்டும் - வானதி சீனிவாசன்

செந்தில் பாலாஜியை ஆளுநர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்ட விவகாரம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரானதல்ல. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சீண்டி வம்பிழுக்கும் சேட்டையாகும்.

இது நரேந்திர மோதி, அமித் ஷா உள்ளிட்ட சங்பரிவார்களின் செயல்திட்டமாகும். ஆளும் கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கான வேலைத் திட்டத்தையும் அவர்களே தீர்மானிக்கின்றனர்.

பாஜக எதிர்ப்பு நிலையிலிருந்து எதிர்க்கட்சிகளைத் திசைதிருப்பும் சதிமுயற்சியே இது” என்று தெரிவித்துள்ளார்.

வானதி சீனிவாசன்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், “ஆளுநருக்கு இதிலெல்லாம் அதிகாரம் இல்லை எனப் பொதுவான கருத்தைச் சொல்கிறார்கள். ஒரு நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பது அரசமைப்பு சட்டத்தில் இருக்கும் ஒரு கூறு.

அது நடப்பதற்கு அங்கு வாய்ப்பு இல்லை என்பதால் ஆளுநர் அந்த முடிவை எடுக்கிறார்,” என்று கூறினார்.

மேலும், “எதிர்க்கட்சியாக இருந்தபோது எத்தனை முறை ஆளுநரிடம் மனு கொடுத்திருக்கிறீர்கள்?

நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆளுநருக்கு ஓர் அதிகாரம். அதுவே ஆளும் கட்சியாக மாறும்போது, அதிகாரம் மாறிவிடுமா?” என்றும் அவர் கேள்வியெழுப்பி உள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ''செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கியது பாஜக, அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி என்பதைவிட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். அவர்தான் செந்தில் பாலாஜிக்கு எதிராக முதன்முதலில் குற்றச்சாட்டு வைத்தார்,'' என்றும் கூறினார் வானதி சீனிவாசன்.

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி...

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி...

முன்னதாக, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்திருந்தார். அப்போது, ஆளுநரின் முடிவை எதிர்த்து அவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

அதுகுறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சரின் பரிந்துரையின் அடிப்படையில் செந்தில் பாலாஜி வசம் உள்ள துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவுக்கும், முத்துசாமிக்கும் மாற்றும் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

ஆனால் குற்றவியல் வழக்குகள் இருப்பதால் தமிழ்நாடு அமைச்சரவையில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கும் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை" என்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தது.

அதைத் தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் “அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பொறுப்பில் இருந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆகியவை அவரது உடல் நிலையின் காரணமாக, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மின்சாரத் துறையும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ச.முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும் பிரித்து வழங்கி இன்று தமிழ்நாடு அரசாணை பிறப்பித்துள்ளது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடரவும் ஆணையிடப்பட்டுள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: