You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'தனியறையில் உடைந்து அழுதிருக்கிறேன்' - குழந்தை வளர்ப்பில் இளம் தாய்மார்களை வாட்டும் குற்ற உணர்ச்சி
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
“பலமுறை தனியறையில் உடைந்து அழுதிருக்கிறேன்.”
“நிதானமின்றி மற்றவர்கள் முன்பு கத்தியிருக்கிறேன்.”
இது சென்னையைச் சேர்ந்த, 33 வயதான கனிமொழியின் குரல்.
தனது நான்கு மாத ஆண் குழந்தைக்கு ஏதாவது உடல்நலப் பிரச்னை ஏற்பட்டால், அதற்குத் தன்னையே நொந்துகொள்ளும் அவர், இதிலிருந்து வெளியே வர முடியாமல் திணறுகிறார்.
குழந்தையின் பொருட்டு தன்னைத் தானே குறை சொல்லி, ‘குற்ற உணர்வு’க்குள் மூழ்குவதற்கு அவரிடம் பல காரணங்கள் உள்ளன. குழந்தையைச் சரியான நேரத்திற்குள் குளிக்க வைக்க முடியாதது முதல் குழந்தைக்கு வரும் காய்ச்சல் வரை அவரது குற்ற உணர்வுக்கான பட்டியல் நீள்கிறது.
சுயாதீன (ஃப்ரீலான்ஸ்) கிராஃபிக்ஸ் டிசைனரான கனிமொழி, தனது குழந்தையைக் கவனித்துக்கொண்டே வீடு மற்றும் அலுவல்ரீதியான பணிகளைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. தற்சமயம், அவர் வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறார்.
“என் வேலையைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட நேரத்திற்குள் ஏதேனும் ஒரு பணியை முடித்துக் கொடுக்க வேண்டியிருக்கும். இதனால் குழந்தை அழும்போது உடனே பால் கொடுக்க முடியாத சூழல் ஏற்படும். குழந்தை அழுத களைப்பிலேயே உறங்கிவிடும். இதனால் குழந்தையின் வயிறு ஒட்டிப் போயிருக்கும். அப்போது, என்னால்தானே குழந்தைக்கு இந்த நிலை என்று எனக்குத் தோன்றும்” என்கிறார் கனிமொழி.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கனிமொழி காதல் திருமணம் செய்துகொண்டதால், இரு வீட்டாரின் துணையுமின்றி குழந்தையைக் கவனித்துக்கொள்ள வேண்டியுள்ளது.
ஒருசமயம், நள்ளிரவு 12 மணியையும் கடந்து வேலை பார்க்க வேண்டிய நிலையில், அசதியில் அவர் தூங்கிவிட்டதால், குழந்தைக்கு ஒரு மணிக்குக் கொடுக்க வேண்டிய மருந்தைக் கொடுக்க முடியாமல் போயுள்ளது. அதனால், குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
“கொஞ்சம் விழித்திருந்து நான் மருந்தைக் கொடுத்திருக்க வேண்டும். என்னால்தானே குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. இரவு நேரத்தில் முழுமையாக நான்தான் குழந்தையைக் கவனிக்க வேண்டும் என்பதால், இதற்கு என் கனவரும் என்னைக் கடிந்துகொண்டார்” எனக் கூறும் கனிமொழி, ஏழு ஆண்டு காத்திருப்பிற்குப் பின் பிறந்த குழந்தையை நன்றாகப் பார்த்துக்கொள்ள முடியாமல் கஷ்டப்படுத்துகிறோமோ என்ற “குற்ற உணர்வில்” சிக்கி உழல்கிறார்.
குழந்தைக்கு ஒழுங்காக தாய்ப்பால் கொடுக்கவில்லை, சரிவர குளிப்பாட்டாத காரணத்தால் குழந்தைக்கு மூக்கு, தலை போன்றவற்றின் வடிவம் சரியாக இல்லை என்று பெரியவர்கள் கூறும் ‘குறைகளும்’ அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
“என்னால் ஒழுங்காகப் பார்த்துக்கொள்ள முடியாததால், குழந்தை என்னிடம் நெருக்கமாக இல்லையோ என்றுகூட எனக்குத் தோன்றும். என் கணவரை கண்டால் குழந்தை ‘குஷி’யாகிவிடும். என்னிடம் ஒட்டாது.”
'வேலையை விட்டுவிடலாமா?'
இந்தக் குற்ற உணர்வு கனிமொழிக்கு மட்டுமல்ல; குழந்தையைச் சரியாகக் கவனிக்கவில்லையோ என்ற வருத்தத்தில் வேலையைக்கூட விட்டுவிடலாமா என்ற எண்ணம் தனக்கு அடிக்கடி தோன்றுவதாகக் கூறுகிறார், சென்னையில் ரெப்கோ வங்கியில் பணிபுரியும் கார்த்திகா.
வங்கிப் பணி என்பதால், வீட்டிலிருந்து வேலை செய்யும் சௌகரியம் தனக்கு இல்லை எனக் கூறும் அவரது குழந்தைக்கு நான்கரை வயதாகிறது.
“இப்போதுகூட எனது மகனுக்கு ஐந்து நாட்களாக உடல்நிலை சரியில்லை. இந்த நேரத்தில் அவனுடன் இல்லாதபோது, ‘நாம் எதற்காக வேலை செய்யவேண்டும்’, ‘வேலையை விட்டுவிடலாமா’ என்றுகூடத் தோன்றும். ஆனால், பொருளாதாரச் சூழல் காரணமாக வேலைக்குச் சென்றுதான் ஆக வேண்டும்” என்கிறார் கார்த்திகா.
“நான் இருந்தால்தான் சாப்பிடுவேன், மருந்து குடிப்பேன் என்று என் மகன் அடம்பிடிப்பான். அதனாலேயே அவனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். அவனுக்குப் பள்ளி விடுமுறை என்றால், எனக்கும் விடுமுறை என நினைத்து ஏமாந்து போவான்.”
இது தனிப்பட்ட கார்த்திகா, கனிமொழியின் கதைகள் மட்டுமல்ல. தம் குழந்தைகளுக்கு நேரும் எல்லா பிரச்னைகளுக்கும் தாங்கள்தான் காரணம், வேலைக்குச் செல்வதுதான் காரணம் என நினைக்கும் பெண்கள் ஏராளமானோர் உள்ளனர்.
பணிச் சந்தையிலிருந்து வெளியேறும் பெண்கள்
தாய்மார்களுக்கு ஏற்படும் இத்தகைய ‘குற்ற உணர்வு’ உலகம் முழுவதிலும் பரவலாகக் காணப்படுகின்றது.
குறிப்பாக, இந்திய சமூகத்தில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பெரும்பாலும் பெண்களிடத்திலேயே உள்ளது. இதனால், குழந்தை வளர்ப்பு - வேலை என்ற இரண்டு விஷயங்களுக்கு இடையே பெண்கள் சிக்கிக் கொள்கின்றனர்.
இது இந்திய புள்ளியியல் துறை அமைச்சகம் வெளியிட்ட 2022-23ஆம் ஆண்டுக்கான காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பிலும் (Periodic Labour Force Survey) பிரதிபலித்தது.
குழந்தை வளர்ப்பு பொறுப்பு காரணமாகப் பணிச் சந்தையில் பங்குகொள்ள முடியவில்லை என 43.4% இந்திய பெண்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குழந்தை வளர்ப்பு மற்றும் குடும்பத்தில் தனிப்பட்ட பொறுப்புகள் காரணமாக, பணிச் சந்தையில் இருந்து வெளியேறியதாகச் சுமார் 90% பெண்கள் தெரிவித்துள்ளனர்.
திரைப் பிரபலங்கள்கூட தாங்கள் இத்தகைய குற்ற உணர்வில் சிக்கியதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர். நடிகைகள் காஜல் அகர்வால், சோனம் கபூர், நேஹா தூபியா எனப் பலரும் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளனர்.
இக்கட்டுரைக்காக சில இளம் தாய்மார்களிடம் நான் பேசியபோது, சில பதின்பருவ பிள்ளைகளின் அம்மாக்களும் இத்தகைய ‘குற்ற உணர்வில்’ சிக்கியிருப்பதை அறிய முடிந்தது. குழந்தைகளின் வயது வித்தியாசமின்றி இத்தகைய குற்ற உணர்வு பெரும்பாலான தாய்மார்களைத் தாக்கும் என்பதை அவர்கள் பேசியதிலிருந்து உணர முடிந்தது.
முன்னணி ஆங்கில ஊடகமொன்றில் பணிபுரியும் 40 வயதைத் தாண்டிய பத்திரிகையாளர் ஒருவர், “எனது மகனுக்கு 18 வயதாகிறது. அவன் பள்ளியில் படிக்கும்போது பொதுத் தேர்வில் அவன் கல்வி முன்னேற்றத்திற்காக நேரம் செலவழிக்க முடியாதது, என்னை இன்னும் குற்ற உணர்வில் ஆழ்த்துகிறது. இளம் தாய்மார்களோ அல்லது வளர்ந்த பிள்ளைகளின் அம்மாக்களோ இந்தக் குற்ற உணர்வு எப்போதும் மறையாது” என்று அவர் தெரிவித்தார்.
குழந்தைகளின் உடல்நிலை, கல்வி, நடத்தை எனப் பலவற்றுக்கும் அம்மாக்கள் மீதே பெரும்பான்மையான நேரங்களில் குற்றம் சாட்டப்படுகிறது. அம்மாக்களும் தங்கள் மீதே குற்றம் சாட்டிக் கொள்கின்றனர் என்பதை அவர்களிடம் பேசியதிலிருந்து அறிய முடிகிறது.
குற்ற உணர்வின் தீவிரம்
கடந்த ஏப்ரல் மாதம் சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் ரம்யா - வெங்கடேஷ் என்ற தம்பதியின் ஒன்பது மாத கைக்குழந்தை எதிர்பாராதவிதமாக நான்காவது மாடியின் பால்கனியில் இருந்து தவறி கீழ் தளத்திலிருந்த ‘சன் ஷேடில்’ விழுந்தது. அந்தக் குழந்தையை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றினர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் அதிவேகமாக வைரலானது.
அதற்கு அடுத்த மாதமே, அக்குழந்தையின் தாய் ரம்யா தற்கொலை செய்துகொண்டார். குழந்தை விழுந்ததற்கு அதன் “தாயைக் குற்றம் சாட்டி வெறுப்புக் கருத்துகள் பரப்பப்பட்டதே அவருடைய தற்கொலைக்குக் காரணம்” எனக் கூறப்பட்டது.
ரம்யாவின் தற்கொலைக்கான காரணங்களை அறிய அந்த நேரத்தில் பிபிசி தமிழ் முயன்றது. அப்போது, ரம்யா மகப்பேறுக்குப் பிந்தைய மனச்சோர்வு (Postpartum Depression), இணையவழித் தொல்லை (Cyber Bullying) மற்றும் குழந்தை கீழே விழுந்த நிகழ்வுக்குப் பிந்தைய மனச்சோர்வு (Post Traumatic Depression) போன்ற பாதிப்புகளால் மனமுடைந்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.
‘‘எனது மகள் ரம்யா இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு மன அழுத்தம் ஏற்பட்டு, வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர் போல் இருந்தார். யாரிடமும் பேசாமல் விரக்தியில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்துள்ளார்,” என்று ரம்யாவின் தந்தையே கூறியிருந்தார்.
ஏன் பெண்களுக்கு மட்டும்?
குழந்தைகளுடைய நலனின்பால் தாய்க்கு மட்டும் அதீத குற்ற உணர்வு ஏற்படுவது ஏன்?
“குழந்தைகளை வளர்ப்பதற்கென ஒரு குறிப்பிட்ட தத்துவமோ அல்லது யோசனையோ (thumb rule) இல்லை. குறிப்பாக, இந்திய சமூகத்தில் காலம் காலமாக ஒரு பெண் தன் குழந்தையுடன் அவரது அம்மா வீட்டில்தான் முதல் முக்கியமான சில மாதங்களைக் கழிக்கிறார். தன் அம்மா எப்படி வளர்க்கிறார் என்பதைப் பார்த்துதான் குழந்தையை வளர்க்கிறார். தாய்ப்பால் ஊட்டுதல் உள்ளிட்ட இயற்கை காரணங்களுக்காக குழந்தை வளர்ப்பின் பெரும்பாலான பொறுப்புகள் பெண்களைச் சார்ந்தே இருக்கின்றன” என்கிறார், மனநல ஆலோசகர் சில்வினா மேரி.
அதிலும், முந்தைய தலைமுறையினர் குழந்தை வளர்ப்பில் தந்தை பெரும் பொறுப்பை எடுத்துக் கொள்ளாததை ஒரு ‘கலாசாரமாகவே’ பின்பற்றி வருகின்றனர், அதனால் பெரும் அழுத்தம் இளம் தாய்மார்களுக்கு ஏற்படுகிறது என்கிறார் அவர்.
“குழந்தை வளர்ப்பு என்பது தாய்-தந்தை இருவரின் பொறுப்பும்தான். ஏதேனும் தவறு நடந்தால் அதற்கு தாயைக் குறை சொல்வது கூடாது. பரிச்சார்த்த முயற்சியில்தான் குழந்தை வளர்ப்பு என்பது சிறிது சிறிதாகத் தெரிய ஆரம்பிக்கும்” என்கிறார் மேரி.
குழந்தை வளர்ப்பில் ஆண்கள் பங்கெடுப்பதைப் பொறுத்தவரை, இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒரு சிறிய மாற்றம் தென்படத் தொடங்கியிருப்பதாக மேரி குறிப்பிடுகிறார்.
“குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி, இந்தப் பெரும் பொறுப்புகள் நம்மை விட்டு விலகும் வரைகூட இந்தக் குற்ற உணர்வு சிலருக்கு நீடிக்கலாம்” என்கிறார் அவர்.
தங்கள் பிள்ளைகள் சொந்தமாக வாழ்வது அல்லது உயர்கல்வி பெறுவது என, வீட்டைவிட்டு வெளியேறும்போதுகூட ‘தனிமையின் உணர்வை’ அதிகமாக அம்மாக்கள் உணர்வார்கள் என்கிறார் மேரி. இதை மருத்துவ மொழியில் “எம்ப்டி நெஸ்ட் சிண்ட்ரோம்’ என்கின்றனர்.
என்ன செய்ய வேண்டும்?
இத்தகைய குற்ற உணர்விலிருந்து வெளியே வருவதற்கான சில ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.
- இளம் தாய்மார்கள் தங்களுக்காக 15-20 நிமிடங்களை நிச்சயம் ஒதுக்க வேண்டும். உடல்நலனில் அக்கறை செலுத்தி, தங்களின் தனிப்பட்ட நலன்களுக்காக நேரம் ஒதுக்கி சிலவற்றை மேற்கொள்ள வேண்டும். தினமும் சிறிது நேரமாவது வெளியே சென்றுவர வேண்டும்.
- எங்காவது அவர் வெளியே சென்றால், வீட்டில் இருப்பவர்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கு முன்வர வேண்டும். குழந்தை அழுதால் எல்லா நேரத்திலும் அம்மாதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. குழந்தை அழுதால் அம்மாவை குறை சொல்லக்கூடாது, தான் சரியாகக் கவனிக்காததால்தான் குழந்தை அழுவதாக அம்மாக்களும் நினைக்கக்கூடாது.
- குழந்தைகளுடன் சேர்ந்து அம்மாக்களும் கற்றுக்கொள்கின்றனர் என்பதை உடன் இருப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
- மற்ற குழந்தைகளின் குணநலன்களுடன் ஒப்பிட்டுத் தன்மீது குறை சுமத்திக் கொள்ளக்கூடாது.
எப்போது மனநல ஆலோசகரை அணுக வேண்டும்?
“இதனால் மிகவும் மனச்சோர்வு, மன அழுத்தம் ஏற்படும்போது குடும்பத்தினரின் உதவியை முதலில் நாடுங்கள்" என்றும், அப்போது, "எல்லோருக்கும் இது சகஜம்தான்” என குடும்பத்தினர் புறம்தள்ளக் கூடாது என்றும் மேரி வலியுறுத்துகிறார்.
அடுத்தகட்டமாக இது சரியாகவில்லை என்றால் அவர்கள் ஏற்கெனவே ஆலோசித்து வரும் மகளிரியல் மருத்துவர் அல்லது குழந்தைநல மருத்துவரிடம் பேசலாம்.
அவர்கள் "சில எதார்த்தமான ஆலோசனைகளை வழங்குவார்கள். அப்போதும் இதில் முன்னேற்றம் ஏற்படாமல், தூக்கம், பசி ஆகியவை பாதிக்கும்போது மனநல ஆலோசகரை நிச்சயம் அணுக வேண்டும்,” என்றார் மனநல ஆலோசகர் மேரி.
முக்கியக் குறிப்பு
மனநல பிரச்னைகளை மருந்து மற்றும் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இதற்காக நீங்கள் ஒரு மனநல மருத்துவரின் உதவியைப் பெற வேண்டும். மேலும் இந்த உதவி எண்களையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணிநேர சேவை)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேர சேவை)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019 (13 மொழிகளில் சேவைகள் கிடைக்கின்றன)
மனித நடத்தை மற்றும் அது சார்ந்த அறிவியல் நிறுவனம் - 9868396824, 9868396841, 011-22574820
தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் – 080 – 26995000
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)