You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குழந்தைகளை அடிப்பது மட்டுமல்ல, அதீத செல்லமும் ஆபத்து - நிபுணர்கள் கூறுவது என்ன?
- எழுதியவர், க.சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
பெற்றோர் தங்களது குழந்தைகளைக் கண்டிப்பதும், சில நேரங்களில் அடிப்பதும் குழந்தைகளின் மனதில் வாழ்நாள் வடுவாகப் பதிந்து, ஒரு தனி மனிதராகத் திறம்பட அவர்கள் வளர்வதையே பாதிக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். இதுகுறித்த புரிதல் தற்போது இந்திய சமூகத்தில் ஓரளவுக்கு அதிகரித்து வருகிறது.
ஆனால் அதேவேளையில், இன்றைய சூழலில் மற்றொரு பிரச்னையும் குழந்தை வளர்ப்பில் உருவெடுத்து வருவதாக மனநல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது குழந்தைகளுக்கு அதீத செல்லம் கொடுத்து, மிகவும் பாதுகாத்து வளர்ப்பதால் அவர்கள் மிகவும் பலவீனமான மனத்துடன் வளர்வார்கள் என்று எச்சரிக்கின்றனர்.
ஒரு குழந்தையாகத் தனது தந்தையிடம் வாங்கிய வசைகளையும் அடிகளையும் நினைவுகூரும் சமூக ஊடக பிரபலமான அஷ்மிதா இந்தக் கூற்றுகளை ஆமோதிக்கிறார். அவரைப் பொறுத்தவரை தனது குழந்தைப் பருவத்தில் பெற்றோரின் வளர்ப்பு முறை ஆறாத வடுவாக மனதில் பதிந்துவிட்டது. இருப்பினும், அதைத் தமது குழந்தைகளுக்கும் கடத்திவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
“நான் குழந்தையாக இருக்கையில், அப்பா வாங்கிக் கொடுத்த ஒரு பொம்மையை உடைத்தால் அதற்காக என் அப்பா அடிப்பார், கடுமையாகத் திட்டுவார். அந்த பொம்மை எனக்காக வாங்கியதுதானே, என் விருப்பப்படி விளையாட உரிமை உள்ளது அல்லவா என்ற புரிதல் அவர்களுக்கு இருந்ததில்லை.
இது என்னை மனதளவில் ஒரு குழந்தையாக வெகுவாகப் பாதித்தது. இன்றளவும் அவர்களின் இத்தகைய அணுகுமுறைகளால் ஏற்பட்ட வடு என்னைப் பின்தொடர்கிறது. ஆகையால்தான், நான் என் குழந்தைகளின் மனதில் அப்படிப்பட்ட வடு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.”
குழந்தை வளர்ப்பைப் பொருத்தவரை, அதீத கண்டிப்பு மனதளவில் அவர்களை மிகவும் பலவீனமாக்கிவிடும் என்பதைத் தாம் உணர்ந்திருப்பதே, ஒரு பெற்றோராக இந்த அணுகுமுறைக்குக் காரணம் எனக் கூறும் அவர், அதேவேளையில் தேவையான சூழ்நிலைகளில் கண்டிப்பதும் தன்னிச்சையாக செயல்பட அனுமதிப்பதும் ஒரு தனிமனிதராக அவர்களை மேம்படுத்தும் எனக் கூறுகிறார்.
குழந்தை வளர்ப்பில் செய்யக்கூடாத தவறுகள் என்ன?
குழந்தை வளர்ப்பில் இரண்டு விதமான அணுகுமுறைகள் மிகவும் ஆபத்தானவை என்கிறார் மனநல மருத்துவர் வெங்கடேஸ்வரன்.
“முதலாவதாக குழந்தைகளை மிகவும் கண்டிப்புடன் அடித்து வளர்ப்பது, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் நடந்துகொள்வது. இந்த அணுகுமுறை பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அதிகமாகக் காணப்பட்டது. இது எந்த அளவுக்கு குழந்தைகளுக்கு ஆபத்தானதோ, அதே அளவுக்கு அதீத செல்லமும் பாதுகாப்பும் கொண்ட இப்போதைய வளர்ப்பு முறையும் ஆபத்தானது,” என்கிறார் அவர்.
“இரண்டாவதாக, வீட்டிற்கு வெளியிலேயே அதிகமாக விடாமல், வெளியே சென்றால் வெயிலில் கறுத்துவிடுவார்கள் எனவும் கீழே விழுந்தால் அடிபட்டுவிடும் எனவும் மிகத் தீவிரமாகப் பாதுகாத்து (over-protective), குழந்தைகளின் பொருந்தாத விருப்பங்களைக் கூட பெற்றோர் பூர்த்தி செய்வது, எப்போதும் நச்சரித்துக் கொண்டே இருப்பது ஆகியவையும் தவறான வளர்ப்பு முறைதான்.” என்கிறார் மருத்துவர் வெங்கடேஸ்வரன்.
“இதனால் குழந்தைகள் மிகவும் பலவீனமான மனத்துடன், பிரச்னைகளை எதிர்கொள்ளும் துணிவின்றி வளர்வார்கள். இது எதிர்காலத்தில் மன உறுதியில்லாத நபராக அவர்கள் வளர்வதற்கும், எளிதில் தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்கும் அளவுக்கு ஆபத்தான நிலைக்கும் தள்ளக்கூடும்,” என்று கடுமையாக எச்சரிக்கிறார் அவர். குழந்தைகள் சமூகத்தில் ஒரு தனிமனிதராக முழுமை பெற்று வளர்வதற்கு நிஜ உலகின் சவால்களை எதிர்கொள்ளப் பெற்றோர் அனுமதிக்க வேண்டியது மிக அவசியம் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.
அவரது கூற்றின்படி, இந்த இரண்டுமே குழந்தைகள் வளர்வதில் எதிர்மறையான தாக்கத்தையே செலுத்துகின்றன. “குழந்தைகளுடன் எப்போதும் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும். அதேபோல் அவர்களுடன் அதிக நேரம் செலவிடுவது, பேசிக்கொண்டிருப்பது, வெளியே செல்வது, கண்டிப்பு தேவையான இடத்தில் நேர்மறையான கண்டிப்புடன் இருக்கும் அதேவேளையில் நட்புடனும் பழகுவதே நேர்மறையான தாக்கத்தை குழந்தைகளின் வளர்ப்பில் செலுத்தும்.” என்கிறார் அவர்.
டாக்சிக் பேரன்டிங் என்பது என்ன?
குழந்தை வளர்ப்பில் “அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ என்ற மனநிலையில் தமது குழந்தைகளை வளர்ப்பதே டாக்சிக் பேரன்டிங்” என்றும் கூறும் அவர், அது இன்றும் தொடர்வதாகவும் அதன் வடிவம்தான் மாறிவிட்டதாகவும் கூறுகிறார்.
இதற்கு நேர்மாறாக அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் குழந்தையை அதன் போக்கில் வளர விடுவதே முறையான குழந்தை வளர்ப்பு என்று தெரிவிக்கிறார் எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ்.
உதாரணத்திற்கு முந்தைய தலைமுறைகளில் குழந்தைகளின் படிப்பை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்வது அதிகம் நிலவியதாகச் சொல்லப்படும் நிலையில், அந்த அணுகுமுறை இன்னமும் மாறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஒருவிதத்தில் அது உண்மைதான் எனக் கூறும் மருத்துவர் வெங்கடேஸ்வரன், முன்பைப் போன்ற அதீத கண்டிப்பு இல்லையென்றாலும் படிப்பு குறித்து அறிவுரைகளுடன் எப்போதும் நச்சரித்துக்கொண்டே இருப்பது, உணர்வு ரீதியாக குழந்தைகளை அச்சுறுத்துவது போன்ற செயல்பாடுகள் இன்னும் நீடிப்பதாக அவர் கூறுகிறார்.
அதோடு, பெற்றோர் அறிவுரைகளை மிகச் சுருக்கமாகவும் திறம்படவும் வழங்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தும் அவர், “தினமும், எந்நேரமும் அறிவுரைகளைக் கொட்டுவதைவிட, நேர்மறையான அணுகுமுறையுடன், அவர்களின் ஓய்வுநேரங்களில் சுருக்கமான அறிவுரைகளை வழங்க வேண்டும். தேவையற்ற அறிவுரைகளைத் தவிர்க்க வேண்டும்.” என்று அவர் கூறுகிறார்.
குறிப்பாக, தமது குழந்தைகளுக்காக பெற்றோர் எவ்வளவு செலவு செய்கிறார்கள் எனச் சொல்லிக்காட்டுவது, மற்ற குழந்தைகளுடனான ஒப்பீடுகள் ஆகியவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும் எனவும் கூறுகிறார். குறிப்பாக, அவர்களது குற்றவுணர்ச்சியையும் பயம் மற்றும் பதற்றத்தையும் அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கிறார்.
நவீன பெற்றோர்கள் எதிர்கொள்ளும் புதிய சிக்கல்
இப்போதைய நவீன பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் ஒரு புதிய சிக்கலை எதிர்கொள்வதாக நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கூறுகிறார்.
இன்றைய சூழலில் சமூக ஊடக பின்னணியில்தான் ஒருவர் தனது வாழ்வை வடிவமைத்துக் கொள்வது அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய டிஜிட்டல் உலகம் குழந்தைகளின் வாழ்வில் மிகவும் அஞ்சத்தக்க வகையில் தாக்கம் செலுத்துவதாகவும் வலியுறுத்துகிறார்.
அவரது கூற்றுப்படி, ஒரு குழந்தையின் கையில் செல்போனை கொடுத்து உட்கார வைப்பது அதன் எதிர்காலத்திற்கு 200% நல்லது அல்ல. “அந்த செல்போனுடன் குழந்தை அதிக நேரம் இருக்கும்போது, அதில் பல தவறான வழிகாட்டுதல்களை பெறக்கூடும்.
"தவிர்க்க முடியாத பல தவறான விஷயங்களை செல்போனில் விளம்பரங்களின் ஊடாக குழந்தைகளைச் சென்றடைகிறது. உங்கள் குழந்தைகள் என்ன செய்கின்றனர், எதைப் பார்க்கின்றனர் என்பதைக் கண்காணித்து, நெறிமுறைப்படுத்த வேண்டியது மிக அவசியம்,” என்று வலியுறுத்துகிறார்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அவர்களுக்கான சுதந்திரத்தைக் கொடுக்க நினைத்தாலும், அதை ஒரு கண்காணிப்புக்குள் வைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்யத் தவறுவதும் டாக்சிக் பேரன்டிங் தான் என்கிறார் குஷ்பு. “சுதந்திரமாகவே இருந்தாலும், அளவுக்கு மீறும்போது நஞ்சாகிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.”
அதை ஆமோதிக்கும் எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ், “இன்றைய சூழலில் 10 அல்லது 11 வயதிலேயே இருபாலர்களுமே மனதளவில் கணிசமான முதிர்ச்சியை அடைந்துவிடுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் சிறுவயதிலேயே ஆபாசப் படம் பார்க்கும் பழக்கமும் டிஜிட்டல் அணுகல்களால் எளிதில் கிடைத்துவிடுகிறது.” இத்தகைய விஷயங்களை பெற்றோர்கள் முற்றிலும் கண்காணிப்பது இப்போது சவாலாகி வருவதாகத் தெரிவிக்கிறார்.
“சிறுவயதில் குழந்தைகளை அமைதிப்படுத்த செல்போன் கொடுத்துப் பழக்கும்போது, அந்தக் குழந்தையின் வாழ்வில் அந்தச் சாதனம் ஓர் அங்கமாகத் தொடங்குகிறது. அதில் இருந்துதான் இந்தப் பிரச்னைகளும் தொடங்குகின்றன. குறிப்பாக இருதரப்பும் வேலைக்குச் செல்லும் சூழலில், குழந்தைகளை முழு நேரமும் கவனித்துக்கொள்ள பெற்றோர்கள் உடன் இருப்பதில்லை. கூடவே அவர்கள் கையில் செல்போனும் இருக்கிறது. இத்தகைய நிலை, குழந்தைகளுக்கு ஓர் ஆபத்தான மெய்நிகர் சூழலை உருவாக்குகிறது,” என்கிறார் அவர்.
இத்தகைய பிரச்னைகளைத் தவிர்க்க பெற்றோர்கள், குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களை எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்துகிறார் மனநல மருத்துவர் வெங்கடேஸ்வரன்.
குழந்தைகள் கையில் எப்போது செல்போன் கொடுக்கலாம், கொடுக்கக்கூடாது?
இன்றைய சூழலில் குழந்தைகள் கையில் செல்போன் கொடுப்பது என்பது தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது. இந்நிலையில், அவர்களிடம் அதை எப்போது கொடுக்கலாம், கொடுக்கக்கூடாது என்பது குறித்துப் பேசியபோது, “குழந்தைகளிடம் செல்போன் கொடுப்பதில் தவறில்லை, ஆனால் அதை அவர்கள் எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பெற்றோர் கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம்,” என்கிறார் மருத்துவர் வெங்கடேஸ்வரன்.
அடிப்படையில், 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நிச்சயமாக செல்போன்களை காட்டக்கூடாது என உறுதியாகக் கூறும் அவர், அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பொருத்தவரை சில நெறிமுறைகள் உள்ளன என்கிறார்.
"இரண்டு முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒரு நாளில் அதிகபட்சம் ஒரு மணிநேரம் வரை டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்த அனுமதிக்கலாம். அதிலும், ஒரே நேரத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. அவர்களது தினசரி வாழ்வில் இருக்கும் விளையாட்டு, குடும்பத்தினர் உடனான நடவடிக்கைகள், உணவு மற்றும் உறக்கத்திற்கான நேரம் ஆகியவை போக நேரமிருந்தால் மட்டுமே இந்த நேரத்தை ஒதுக்க வேண்டும்.
ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அப்படி ஏதும் குறிப்பிட்ட நேர நிர்ணயம் இல்லையென்றாலும், அதேபோல் அவர்களது பள்ளி நேரம், விளையாட்டு, குடும்ப நேரம், உணவு மற்றும் உறக்கம் ஆகியவை போக மீதமிருக்கும் நேரத்தில் மட்டுமே அனுமதிக்கலாம்.
இதுபோக, உணவு நேரத்திலோ, உறங்கும் நேரத்திலோ கட்டாயமாக டிஜிட்டல் சாதனங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்" என வலியுறுத்துகிறார் மருத்துவர் வெங்கடேஸ்வரன்.
அதேவேளையில், குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களில் என்ன செய்கிறார்கள் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. அவரது கூற்றுப்படி, கற்றல் தொடர்பான எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்கலாம், ஆனால் சமூக ஊடகங்கள், வீடியோ கேம்கள், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான உள்ளடக்கங்கள் ஆகியவை கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவை.
மேலும், “அவ்வப்போது குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள் என்பதை அருகிலிருந்து கவனித்து, அதுகுறித்து அவர்களுடன் மிகுந்த ஈடுபாட்டுடன் உரையாடல்களை (Co-Tutoring) நிகழ்த்த வேண்டும். இது குழந்தைகள் மத்தியில் சிந்தனைத் திறனை வளர்க்கும்.” என்று அவர் கூறுகிறார்.
குழந்தைகளை ரீல்ஸ் செய்ய வைப்பது சரியா?
இன்றைய காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பில் ஒரு முக்கியப் பிரச்னையாக ரீல்ஸ்களை எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ் முன்வைக்கிறார்.
அவரது கூற்றுப்படி, ஒரு குழந்தையை ரீல்ஸ் செய்ய வைப்பது என்பது தவறான அணுகுமுறை. “ஒரு குழந்தைக்கு அதன் புகைப்படமோ, வீடியோவோ சமூக ஊடகங்களில் வெளியிடப்படும்போது அதன் விளைவுகள் – நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ எதுவாக இருப்பினும் – என்ன என்பது தெரியாது. அப்படியிருக்கையில், அந்தக் குழந்தை எதிர்காலத்தில் விவரம் தெரியும்போது இத்தகைய செயல்களைப் பற்றிய விருப்பமின்மை ஏற்படலாம். அது அவர்களை மனதளவில் பாதிக்கும்,” என்கிறார் அவர்.
இந்தக் கருத்துடன் உடன்படுகிறார் சமூக ஊடக பிரபலமான அஷ்மிதா. “என் குழந்தையை லாப நோக்கத்துடனோ, கட்டாயப்படுத்தியோ நான் இன்ஸ்டா ரீல்ஸ்களில் பங்கெடுக்க வைப்பதில்லை. அதேவேளையில், அவர்களின் விருப்பம் என்பது மிகவும் முக்கியம். குழந்தைகளை அவர்களின் போக்கில் வளர விடுவதே மிகவும் தேவையான ஒன்று.” என்கிறார் அவர்.
இதுகுறித்துப் பேசிய மனநல மருத்துவர் வெங்கடேஸ்வரன், “குழந்தைகளை கட்டாயப்படுத்தி ரீல்ஸ் செய்ய வைப்பது அவர்களது மனநலனை பாதிக்கும். அதோடு, சட்டத்திற்குப் புறம்பான வகையில் அவர்களைக் காட்சிப்படுத்துவதும் தவறு,” என்று வலியுறுத்துகிறார்.
அதேவேளையில், இப்படியாக ரீல்ஸ் செய்வதில் ஈடுபடும் குழந்தைகளைப் பெற்றோர் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் அவற்றின் மீது ஒரு தீவிர ஈடுபாடு வந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறார். அதாவது, எப்போதும் ரீல்ஸ் செய்வதில் குறியாக இருக்கும் வகையிலான அறிகுறிகள் தென்பட்டால் உடனே சுதாரித்து, குழந்தைகளின் நலனில் கூடுதல் கவனம் செலுத்தி, ரீல்ஸ் செய்வதை நிறுத்தி, திசைதிருப்ப வேண்டியது அவசியம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)