ஐ.டி. வேலை என்று ஆசை காட்டி வெளிநாடு அழைத்துச் சென்று சித்திரவதை செய்யும் கும்பல் - முழு பின்னணி

    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

நாடு விட்டு நாடு விமானத்தில் பயணம், தரையிறங்கிய பின் விர்ரென்று காரில் 600கி.மீ செல்ல வேண்டும். காடுகளைத் தாண்டி நள்ளிரவில் ஆற்றைக் கடக்க வேண்டும். கண் விழித்துப் பார்த்தால், உயர்ந்த சுவர்கள் கொண்ட, பவுன்சர்கள் வரவேற்கும் சிறிய வளாகம் - இவை த்ரில்லர் படத்தில் வரும் காட்சிகளை நினைவுபடுத்தலாம். ஆனால் இந்தியர்கள் பலர் இந்தச் சூழல்களில் இருந்து ஆபத்தை நெருங்கி உயிர்பிழைத்து வந்துள்ளனர்.

வெளிநாட்டில் ஐ.டி. வேலை, கை நிறைய சம்பளம் என்று கூறி பட்டதாரிகள் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து முகவர்கள் மூலமாக மியான்மர், தாய்லாந்து, கம்போடியா உள்ளிட்ட நாடுகளுக்கு கூட்டிச் செல்லப்படுகிறார்கள்.

கிராஃபிக் டிசைனிங், ஐ.டி. வேலை என்று கனவு கண்டவர்கள், சமூக ஊடகங்களில் போலி ஐடி உருவாக்கி, பலரையும் ஆசைத் தூண்டிலில் விழ வைத்துப் பணத்தை இழக்கச் செய்ய வேண்டும். இதுதான் வேலை.

“ஒரு நாளுக்கு 30 முதல் 40 பேருடன் 'சாட்' செய்ய வேண்டும். ஒரு நபர் ஏமாந்து முதலீடு செய்துவிட்டால், அதைச் செய்ய வைத்தவருக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் ஒரு மணி அடிக்கும். ஒரு நேரத்தில் 200 பேர் அமர்ந்திருக்கும் அந்த அறையில் ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் மணி அடிக்கும்,” என்கிறார் கடந்த ஆண்டு மியான்மரில் இருந்து மீட்கப்பட்ட கோவையைச் சேர்ந்த டிப்ளமோ முடித்துள்ள ஸ்டீபன்.

“அனைவருக்கும் லேப்டாப் மற்றும் பல ஐ போன்கள் கொடுக்கப்படும். என்னிடம் ஏழு ஐ போன்கள் இருந்தன. யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்ய 3 முதல் 4 மணிநேரம் வரை ஆகும். பொதுவாக இன்ஸ்டா அல்லது பேஸ்புக் பக்கங்களுக்குச் சென்று, அவர் விடுமுறைக்கு எங்கு சென்றுள்ளார், என்ன கார் வைத்துள்ளார், எங்கு பார்ட்டி செல்கிறார், என்ன மாதிரியான உடைகள் அணிகிறார் என்றெல்லாம் கவனித்து தேர்ந்தெடுப்போம்." என்று கூறுகிறார் ஸ்டீபன்

"அப்படி தேர்ந்தெடுப்பவருக்கு முதலில் எப்போதும் “ஹாஹாய்” என்று அனுப்ப மாட்டோம். நீங்கள் சென்ற மலைப்பகுதிக்கு நானும் செல்ல விரும்புகிறேன், அங்கு தங்குவதற்கு என்ன வசதிகள் உள்ளன என்று இயல்பாக உரையாடலை தொடங்குவோம். அவர்கள் பதில் அளித்து இரண்டு நாட்கள் அந்த சாட்டை ஓபன் செய்ய மாட்டோம். பிறகு, அவர்களை எப்படியாவது டெலிகிராம் செயலிக்கு வர வைப்போம். பின் மெல்ல மெல்லப் பேச ஆரம்பிப்போம்,” என்று தங்களுக்கு கொடுக்கப்பட்ட பயிற்சிகள் குறித்து விளக்குகிறார் ஸ்டீபன்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகரிக்கும் நிதி மோசடிகள்

இந்தியாவைக் குறிவைத்து நடைபெறும் நிதி மோசடிகளில் கிட்டத்தட்ட 50% மியான்மர், கம்போடியா, லாவோஸ் ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து நடைபெறுகிறது என்று இந்தியக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் இரு வாரங்களுக்கு முன் தெரிவித்துள்ளது.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த மையத்தின் தலைமைச் செயல் அலுவலர், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 1,776 கோடி ரூபாயை இந்தியர்கள் நிதி மோசடிகளில் இழந்துள்ளனர் என்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து நிகழ்த்தப்படும் ஒருங்கிணைந்த குற்றங்கள் சமீப காலங்களில் அதிகரித்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நிதி மோசடிகள் நடைபெற்றாலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மோசடிகளில் இழந்த பணத்தின் தொகை அதிகம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நடைபெறும் மோசடிகள் குறித்து கிடைத்த புகார்களில் பெரும்பாலானவை நிதி முதலீடு குறித்தவை. இந்த ஆண்டு 62,687 புகார்கள் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டு ஒரு லட்சத்துக்கும் அதிகமான புகார்கள் கிடைத்தன. 10,000 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த மோசடிகள் சமூக ஊடகங்கள் மூலமே தொடங்குகின்றன.

“ஒரு வாரம் வரை யாரும் முதலீடு செய்ய வைக்க முடியவில்லை என்றால் கால்களில் 'மின்சார ஷாக்' கொடுக்கப்படும். அவர்களை எதிர்த்துப் பேசினாலோ, அவர்கள் விரும்பாதபடி நடந்து கொண்டாலோ கைகளில் விலங்கு பூட்டப்படும், சாப்பிடும் நேரம் உட்பட எப்போதும் அந்த கைவிலங்குடனே இருக்க வேண்டும். அவர்களைப் பூட்டி வைக்க இருண்ட அறைகளும் இருந்தன,” என்கிறார் மியான்மரிலிருந்து மீட்கப்பட்ட கரூரைச் சேர்ந்த மெக்கானிக்கல் பொறியியல் படித்திருக்கும் மணிக்குமார்.

“நான் முன்பு வேலை செய்து வந்த இடத்தில் எனக்குத் தெரிந்த நபர் மூலம் தாய்லாந்தில் வேலைக்காக ஏஜெண்டின் தொடர்பு கிடைத்தது. சென்னையிலிருந்து விமானம் மூலம் ஷார்ஜா சென்று, அங்கிருந்து துபாயில் நடைபெறும் நேர்காணலுக்காக காரில் சென்றோம். டைப்பிங் தெரியுமா என்று மட்டுமே சோதித்துப் பார்த்த நேர்காணலின் போதே ஏதோ சரியாக இல்லை என்று புரிய தொடங்கியது." என்கிறார் அவர்.

"அங்கிருந்து விமானம் மூலம் தாய்லாந்து வந்தடைந்தோம். தரையிறங்கிய பின், அலுவலகத்துக்கு கூட்டிச் செல்வதற்காக காத்திருந்த காரில் ஏறினோம். ஒன்பது மணிநேரப் பயணத்தில் காடுகளைத் தாண்டி வர வேண்டியிருந்தது. கார் எங்கும் திரும்ப முடியாத இடத்துக்கு வந்து நின்றது. அங்கு மெல்லியதாக ஓடிக்கொண்டிருந்த ஆற்றை நிலவொளியில் காண முடிந்தது. சிறு படகில் அந்த ஆற்றைக் கடந்து மீண்டும் காரில் ஏறி ஒரு இடத்துக்கு கூட்டிச் சென்றனர். செல்போன் டவர் கிடைத்த பிறகு, லொகேஷன் ஆன் செய்து பார்த்தால், மியான்மர் என்று காட்டியது,” என்கிறார் ஸ்டீபன்.

'அப்பாவின் இறுதிச் சடங்குக்குக்கூட வர முடியவில்லை'

பெண்களின் பெயர்களில் ஃபேக் ஐடி உருவாக்கி அதிலிருந்து முன்பின் தெரியாத நபர்களுக்குக் குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன.

“அந்த நிறுவனங்களில் இருக்கும் பெண்களின் புகைப்படங்களைக் கொண்டு ஃபேக் ஐடி உருவாக்குவோம். தேவைப்படும் போது அவர்கள் வீடியோ காலில் வாடிக்கையாளருடன் பேசுவார். மற்ற நேரங்களில் நாங்கள் சாட் செய்வோம். நான் ஒரு தொழிலில் முதலீடு செய்துள்ளேன், எனக்கு நல்ல லாபம் கிடைத்தது, நீங்களும் முதலீடு செய்யுங்கள் என்று கூறுவோம். அவர்களின் அந்த நம்பிக்கையைப் பெறுவதற்கு சில காலம் ஆகும். அதைப் பெற்றுத் தருவதுதான் எங்கள் வேலை,” என்கிறார் ஸ்டீபன்.

“ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, அங்கிருந்து புறப்பட்ட போது முதலில் மியான்மர் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தோம். முறையான ஆவணங்கள் இல்லாததால் தாய்லாந்து சிறை, மனிதக் கடத்தலுக்கு ஆளாக்கப்பட்டவருக்கான காப்பகம் என எல்லா இடத்திலும் தங்கி, வீடு வந்து சேர 45 நாட்கள் ஆயின. நான் கிளம்பிய இரண்டு நாட்களில் எனது தந்தை இறந்துவிட்டார். அவரது இறுதி சடங்குக்குக்கூட வர முடியவில்லை,” என்கிறார் மணிக்குமார்.

கடந்த நான்கு மாதங்களில் இதுபோன்ற இடங்களில் இருந்து 360 இந்தியர்கள் மீட்கப்பட்டதாகவும், மேலும் 60 பேர் இந்திய தூதரகக் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இந்தியக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் தெரிவிக்கிறது. சுற்றுலா விசா பெற்று இந்த நாடுகளுக்குச் சென்று நாடு திரும்பாமல் உள்ள பெண்கள் உட்பட அனைவரின் பெயர்களும் இருப்பதாகவும், இவர்கள் பெரும்பாலும் 21 முதல் 30 வயதுக்குள்ளாக இருப்பதாகவும் அரசு தகவல்கள் கூறுகின்றன.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து நடைபெறும் இந்த மோசடிகளைக் கட்டுப்படுத்துவதற்காக உயர்மட்டக் குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த இரு வாரங்களுக்கு முன் அமைத்துள்ளது.

சமீபத்தில் தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு வேலைக்காகச் சென்று ஏமாற்றப்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தெலங்கானா அரசு முயற்சியால் சுமார் 60க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு விசாகப்பட்டினம் வந்தடைந்துள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 30 பேர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

‘தற்போது 25,000 பேர் சிக்கியிருக்கலாம்’

தமிழ்நாட்டில் இருந்து இந்த நாடுகளுக்கு இதேபோன்று வேலைக்காகச் சென்று ஏமாற்றப்பட்டவர்கள் 83 பேரை மீட்டிருப்பதாக அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் தெரிவிக்கிறது. எனவே இந்த நாடுகளுக்கு வேலைக்காக செல்வோர் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் சமீபத்தில் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அயலகத் தமிழர் நல ஆணையர் பி கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “சமீப காலங்களில் பட்டதாரிகளை வேலைக்காகத் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குக் கூட்டிச் சென்று மோசடிச் செயல்களில் ஈடுபடுத்துவது அதிகரித்து வருகிறது. சென்னை, ஐதராபாத், கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து இதுபோன்ற மோசடிகளில் சிக்குபவர்கள் அதிகமாக உள்ளனர். தாய்லாந்து, மியான்மர், கம்போடியா ஆகிய நாடுகளுக்கு இடையே எல்லைகளைக் கடப்பது எளிதாக இருக்கிறது. ஆற்றைக் கடந்தால் தாய்லாந்தில் இருந்து மியான்மருக்குச் சென்றுவிடலாம்,” என்றார்.

பெயர் குறிப்பிட விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் கூறுகையில், “இந்த நாடுகளில் சுமார் 25,000 பேர் சிக்கிக் கொண்டிருப்பதாகக் கணிக்கப்படுகிறது. இதுபோன்ற இடங்களில் சிக்கிக் கொண்டால் அவர்களை மீட்பது கடினம் என்று தூதரக அதிகாரிகள் கூறுகின்றனர். இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடும் ஆறு - ஏழு நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது,” என்றார்.

இந்தியர்கள் இடம்பெயர்ந்து செல்லும் போக்கு மாறி வருவதாகவும் அதற்கு ஏற்றவாறு சட்டத்திருத்தங்கள் வேண்டும் என்று இடம்பெயர்பவர்கள் குறித்த தமிழ்நாட்டின் முதல் ஆய்வை நடத்திய பேராசிரியர் பெர்னார்ட் டி சாமி கூறுகிறார்.

“சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள்தான் தமிழர்கள் அதிகம் இடம் பெயரும் இடமாக இருந்தது. அடுத்ததாக வளைகுடா நாடுகளுக்குச் சென்றனர். சமீப காலங்களில் ஆப்பிரிக்க நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் தமிழர்கள் செல்கின்றனர். இந்தியாவில் 25 முதல் 44 வயது வரம்பில் இருப்பவர்கள் அதிகம். அவர்கள் நல்ல வாழ்க்கையை எதிர்நோக்கிப் பல்வேறு இடங்களுக்குச் செல்கின்றனர். அதனால் பட்டதாரிகளும் இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்வதைப் பார்க்கிறோம். குடியேற்றச் சட்டம் 1983-இல் இயற்றப்பட்டதில் இருந்து தற்போது குடியேறுபவர்களின் எண்ணிக்கையும் ஆபத்துகளும் பன்மடங்கு அதிகமாகியுள்ளன. குடியேறுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்,” என்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)