கர்நாடகா சட்டமன்ற தேர்தல்: 5 படங்கள் மூலம் புரிந்து கொள்ள உதவும் பல வருட தரவுகள்

கர்நாடகா தேர்தல் 2023

பட மூலாதாரம், Getty Images

224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடகா சட்டமன்றத்துக்கு செல்வது யார் என்பதை மே 10ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தல் தீர்மானிக்கவிருக்கிறது.

ஐந்து கோடிக்கும் அதிகமான வாக்காளர்களை கொண்ட தென் மாநிலமான கர்நாடகாவில் தேர்தல் முடிவுகள் மே 13ஆம் தேதி வெளியாகும்.

வாக்காளர்கள்

கர்நாடகா சட்டமன்ற தேர்தல்

கர்நாடகாவின் பாலின வாரியான வாக்காளர்கள் எண்ணிக்கை, மற்ற இந்திய மாநிலங்களை போல கிடையாது. 2018ஆம் ஆண்டு தேர்தல் புள்ளிவிவரங்களின்படி, இங்கு வாக்களிக்க தகுதியான ஆண் (2.58 கோடி) மற்றும் பெண் (2.52 கோடி) வாக்காளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட சமமாக உள்ளது. இருப்பினும், 2000ஆம் ஆண்டு வரை இந்த இரு பாலின வாக்காளர்களும் ஒரே மாதிரியாக வாக்களிக்கவில்லை.

1970கள் மற்றும் 80களில், இந்த மாநிலத்தில் ஆண்களை விட குறைவான பெண்களே வாக்களித்தனர். ஆனால் 2003ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்குப் பிறகு இந்த நிலைமை மாறியது. அதிக அளவிலான பெண் வாக்காளர்கள் இங்கு வாக்குரிமையை செலுத்தினர். இது இரு பாலினத்தவர்கள் இடையிலான வாக்குகள் எண்ணிக்கை இடைவெளியைக் குறைத்தது. மேலும் 2018ஆம் ஆண்டில், ஆண்களும் பெண்களும் கிட்டத்தட்ட சம எண்ணிக்கையிலேயே இங்கு வாக்களித்துள்ளனர்.

பாஜக Vs காங்கிரஸ்

கர்நாடகா

கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி, எப்போதும் ஆதிக்க சக்தியாக இருக்கவில்லை. 1983இல், அக்கட்சியால் 224 இடங்களில் 18 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது, அதே நேரத்தில் காங்கிரஸ் 82 இடங்களில் வெற்றி பெற்றது. ஜனதா கட்சி (ஜேஎன்பி) 95 இடங்களுடன் முதலிடம் பிடித்தது.

1994 ஆம் ஆண்டில், பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸை விஞ்சி மொத்தம் 40 இடங்களைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தபோது இங்குள்ள அரசியல் நிலைமைகள் மாறத் தொடங்கின. தேர்தலில் ஜனதா தளம் 115 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது. மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலின் போது மூன்று கட்சிகள் கடுமையான மோதலில் ஈடுபட்டது அதுவே கடைசி முறையாகும். 1999 தேர்தலுக்குப் பிறகு, கர்நாடகாவுக்கான போட்டி முக்கியமாக காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேதான் காணப்பட்டது.

2004இல், முதன்முறையாக காங்கிரஸை விட (65) அதிக இடங்களை (79) பாஜக வென்றது. 2008இல் மொத்தம் 110 இடங்களை கைப்பற்றி, அடுத்த தேர்தலில் பாஜக தனது இடங்களை மேலும் அதிகரித்தது.

இருப்பினும், 2013இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க வகையில் மீண்டும் 122 இடங்களில் வென்றது. பாஜகவை வெறும் 44 இடங்களுக்கு மட்டுப்படுத்தியது. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் பாஜக 104 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது, அதே நேரத்தில் காங்கிரஸால் 78 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.

புவியியல்

கர்நாடகா

2013 தேர்தலின் போது, கடலோர தொகுதிகளில் பாஜகவால் எந்த இடமும் பெற முடியவில்லை. 2018ஆம் ஆண்டில், தோல்வி அடைந்த தொகுதிகளில் பாஜகவால் வாக்குகள் சதவீதத்தை அதிகரிக்க மட்டுமே முடிந்தது. அது மட்டுமல்லாமல், காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் வென்ற தொகுதிகளில் பெரும்பான்மையை வென்றெடுக்க பாஜகவால் முடிந்தது.

தெற்கு கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் ஆதிக்கம் தொடர்கிறது, அங்கு பெரும்பான்மை பலத்தை வைத்திருந்தாலும் பா.ஜ.க இப்பகுதிகளில் வாக்குப் பங்கீட்டின் அடிப்படையில் சில லாபங்களை பெற்றிருந்தாலும், ஒப்பீட்டளவில் அவை சிறியவைதான்.

தெற்கு கர்நாடகாவில் பாஜக தனது வாக்கு சதவீதத்தை கணிசமாக அதிகரிக்க முடிந்த ஒரே தொகுதியான குண்ட்லுபேட்டில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.

2018 ஆம் ஆண்டில், பாரதிய ஜனதா கட்சி, தனது அதிகபட்ச வாக்குப் பங்கான 36.24% ஐ பெற்றது, இது 2013இல் 19.89% வாக்குகளைப் பெற்றிருந்ததில் இருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆக கருதப்படுகிறது. இருப்பினும் இது காங்கிரஸின் வாக்கு சதவீதத்தை விட குறைவானது.

கர்நாடகா

2018 இல் மாநிலத்தை இழந்த போதிலும், காங்கிரஸ் கட்சியால் தேர்தலில் 38% வாக்குகளைப் பெற முடிந்தது, இது 2008 தேர்தலுக்குப் பிறகு அதன் வாக்குப் பங்கில் நிலையான அதிகரிப்பை காட்டுகிறது. ஆனால், 2004 உடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை சிறியது தான்.

லாபமும் நஷ்டமும்

கர்நாடகாவில் மொத்தம் 244 இடங்கள் உள்ளன. அவற்றில் 36 பட்டியல் இனத்தவர்களுக்கும் (SC) மேலும் 15 பட்டியல் பழங்குடியின (ST) பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டில் நடந்த மாநில தேர்தலில் 16 எஸ்சி இடங்கள், 6 எஸ்டி இடங்கள், 82 பொது இடங்கள் என பாஜக வெற்றி பெற்றது.

கர்நாடகா தேர்தல் 2023

இதற்கு நேர்மாறாக, பொது மற்றும் எஸ்சி ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது, ஆனால் மொத்தமுள்ள 15 இடங்களில் 8 இடங்களைப் பெற்று எஸ்டி தொகுதிகளில் தனது பிடியைத் தக்க வைத்துக் கொண்டது.

2008 ஆம் ஆண்டில், இரண்டு கட்சிகளும் தலா 7 இடங்களைப் பெற்ற போது, ஒப்பிடக்கூடிய எண்ணிக்கையிலான எஸ்டி இடங்களை பாஜக வென்றது. அதே தேர்தலில், அதிக எண்ணிக்கையிலான எஸ்சி இடங்களையும் (22) பாஜக வென்றது.

இந்த மாநிலத்தில் அதிக வாக்குகள் சதவீதத்தை பொது இடங்கள் கொண்டுள்ளன. அதனால், மாநிலத்தை யார் ஆட்சி செய்வார்கள் என்பதை தீர்மானிப்பது, பழங்குடியினருக்கான ஒதுக்கீடு இடங்கள்தான். எந்த கட்சி பழங்குடியின ஒதுக்கீடு இடங்களில் அதிகமாக வெல்கிறதோ அதுவே மாநிலத்தில் வெற்றி பெறக் கூடிய கட்சியாக இருக்கும் என்பது கர்நாடகாவின் கடந்த கால வரலாறு.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: