கத்தாரில் அமெரிக்காவிடம் தோற்றதை இரானியர்கள் கொண்டாடியது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்காவுடனான ஆட்டத்தில் இரான் அணி தோல்வியடைந்ததை அந்நாட்டில் உள்ள அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளிப்படையாகக் கொண்டாடிய நிலையில், அவர்களில் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
செவ்வாய்கிழமை இரவு பந்தர் அன்சாலி என்ற இடத்தில் காரின் ஹார்னை அடித்ததால் மெஹ்ரான் சமக் என்பவர் சுடப்பட்டதாக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இரானின் மற்ற நகரங்களின் இருந்து வந்த காணொளிகளில் தெருக்களில் மக்கள் ஆரவாரம் செய்வதையும் நடனமாடுவதையும் காண முடிகிறது.
பல இரானியர்கள் கத்தாரில் தங்கள் கால்பந்து அணிக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்துவிட்டனர். வீரர்களை அரசின் பிரதிநிதிதிகள் என்று அவர்கள் கருதினர்.
கடைசி குழு ஆட்டத்தில் அமெரிக்காவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் இரான் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து வீரர்கள் மீது நியாயமற்ற அழுத்தத்தை ஏற்படுத்தியதற்காக அரசு ஆதரவு ஊடகங்கள் குற்றம்சாட்டின.
இரான் வீரர்கள் தங்கள் முதல் ஆட்டத்திற்கு முன் தேசிய கீதத்தை பாடவில்லை. இதில் 2-6 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் இரான் தோல்வியடைந்தது. இது அரசு எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவான ஒரு நடவடிக்கையாகக் கவனிக்கப்பட்டது.
ஆனால் இரான் வீரர்கள் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற வேல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும், அமெரிக்காவிற்கு எதிரான ஆட்டத்திலும் தேசிய கீதத்தை பாடினார்கள்.
இரானிய அதிகாரிகளிடமிருந்து குழு கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியதாக கூறப்பட்டாலும், சில எதிர்ப்பாளர்கள் தங்களை வீரர்கள் ஏமாற்றிவிட்டதாகக் கூறினர்.
பெண்கள் தங்கள் தலைமுடியை மறைக்கும் வகையில் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கடுமையான விதிகளை மீறியதாக தெஹ்ரானில் கைது செய்யப்பட்ட 22 வயது பெண் மஹ்சா அமினி காவலில் இறந்ததைத் தொடர்ந்து 10 வாரங்களுக்கு முன்பு போராட்டங்கள் தொடங்கின.
இந்தப் போராட்டங்களில் 60 குழந்தைகள் உட்பட குறைந்தது 448 பேர் கொல்லப்பட்டதாக நார்வேயை தளமாகக் கொண்ட இரான் மனித உரிமைகள் குழு கூறுகிறது. மேலும் 18,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இரான் கால்பந்து அணியின் தோல்வியைக் கொண்டாடும் வகையில் காஸ்பியன் கடல் நகரமான பந்தர் அன்சாலியில் செவ்வாய்க்கிழமை இரவு காரின் ஹாரன் ஒலித்த 27 வயதான மெஹ்ரான் சமக் என்பவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாக இரான் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
பிபிசி பெர்சியன் சேவைக்கு சமக் அடக்கம் செய்யப்பட்டதைக் காட்டும் வீடியோ கிடைத்தது.
அமைதியான போராட்டக்காரர்களைக் கொன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை இரானிய பாதுகாப்புப் படையினர் மறுத்துள்ளனர்.
உலகக் கோப்பையில் இரான் அணியின் செயல்பாடு எப்படி?
ஃபிபா தர வரிசையில் இரான் அணி 20-ஆவது இடத்தில் இருக்கிறது. முதல் போட்டியில் 5-ஆவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியுடன் மோதி 2-6 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
ஆனால் இரண்டாவது போட்டி இரானுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்தது. அந்தப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸை வீழ்த்தி மூன்று புள்ளிகளைப் பெற்றது.
கடைசிப் போட்டியில் வென்றால் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறலாம் என்ற நிலையில் அமெரிக்காவுடனான போட்டியில் இரான் மோதியது. ஆனால் அமெரிக்க அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
இறுதிவரை அந்தப் போட்டியில் இரானால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இங்கிலாந்து அணியும் அமெரிக்க அணியும் இந்தப் பிரிவில் இருந்து அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றன. இரானஅ போட்டியில் இருந்து வெளியேறியது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












