டெல்லி உயர் கல்வி நிறுவனத்தில் 17 மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தலா? சாமியார் தலைமறைவு

பட மூலாதாரம், ANI/DelhiPolice
டெல்லியின் ஸ்ரீ சாரதா இந்திய மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (SRISIIM) பாலியல் துன்புறுத்தல் வழக்கால் தற்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, அப்போது நிறுவனத்தின் இயக்குநராக இருந்த சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி (பார்த்த சாரதி என்றும் அழைக்கப்படுகிறார்) மீது சில மாணவிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
கர்நாடகாவின் சிருங்கேரி சாரதா பீடத்துடன் தொடர்புடைய இந்த கல்வி நிறுவனம், இச்சம்பவத்திற்குப் பிறகு முக்கிய செய்திகளில் இடம்பெற்றுள்ளது.
சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி மீது குற்றச்சாட்டு எழுந்ததும், சிருங்கேரி பீடம், காவல்துறை மற்றும் தேசிய மகளிர் ஆணையம் (NCW) ஆகியவை இந்த விஷயத்தை கவனத்தில் எடுத்துள்ளன.
டெல்லி காவல்துறையின் தகவல்படி, இதுவரை 32 மாணவிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்களில் 17 மாணவிகள், பாலியல் துன்புறுத்தல், ஆபாச வார்த்தைப் பயன்பாடு, மிரட்டல் மற்றும் பாலியல் அத்துமீறல் போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
மேலும், சுவாமி சைதன்யானந்த சரஸ்வதிக்கு சொந்தமானது என்று நம்பப்படும், போலி தூதரக எண் கொண்ட ஒரு கார் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி வளாகத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

டெல்லியில் உள்ள SRISIM வளாகத்திற்குச் சென்றபோது, அங்கு ஏராளமான தனியார் பாதுகாப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
ஊடகங்கள் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. சில பத்திரிகையாளர்கள் வீடியோ எடுக்க முயன்றபோது, அவர்கள் வாயிலிலேயே தடுக்கப்பட்டனர்.
பின்னர் காவல்துறை அதிகாரிகள் வந்து, வெளியில் இருந்து பதிவு செய்ய மட்டும் அனுமதி அளித்தனர்.
"சைதன்யானந்தா வழக்குக்குப் பிறகு, நிறுவனத்தில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். தற்போது அங்கு பல தனியார் பவுன்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளே நுழையும் ஒவ்வொருவரும் முழுமையாகச் சோதிக்கப்படுகிறார்கள்" என வளாகத்திற்கு அருகிலுள்ள ஒரு கட்டடத்தின் காவலர் ஒருவர் (பெயர் வெளியிட விரும்பாமல்) கூறினார்.
வளாக வாயிலில் சுமார் 12 பவுன்சர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.
வளாகத்திலிருந்து வெளியே வந்த சில மாணவர்களிடம் பேச முயற்சித்தபோது, ஆரம்பத்தில் அவர்கள் பேசவில்லை. .
"சாரதா நிறுவனத்தில் பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாணவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்போது மேலாண்மை முதுகலை டிப்ளமோ படித்து வருகின்றனர்" என ஒரு மாணவரும், ஒரு மாணவியும் கூறினர்.
அவர்கள் அதிக தகவல்களைப் பகிரவில்லை என்றாலும் வளாகத்தில் தற்போது பெரும் பதற்றம் நிலவி வருகிறது என்பதை குறிப்பிட்டனர்.
வழக்கின் பின்னணி என்ன ?

டெல்லி SRISIM நிறுவனம் செப்டம்பர் 24, 2025 அன்று செய்திக்குறிப்பை வெளியிட்டது. இதில், சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் நிறுவனத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
தவறான நடத்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்தவுடன், நிறுவனமும், சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடமும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நீதியை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுத்தன என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களின் படிப்புகள் வழக்கம்போலவே தொடரும் என்றும், மாணவர்களின் பாதுகாப்புக்கே முதன்மையான முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்காக விசாரணைக்கு முழுமையாக உதவுவதாக எஸ்ஆர்ஐஎஸ்ஐஎம் நிறுவனமும், பீடமும் தெரிவித்தன.
சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி தற்போது தலைமறைவாக உள்ளார், அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி யார்?
ஒடிசாவில் பார்த்த சாரதி என்ற பெயரில் பிறந்த சுவாமி சைதன்யானந்தா, தன்னை ஒரு மத குரு என்று அழைத்துக் கொள்கிறார்.
அவர் டெல்லியில் உள்ள ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியன் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
மேலும், அவர் கர்நாடகாவின் சிருங்கேரி சாரதா பீடத்துடன் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது.
போலி நம்பர் பிளேட் வழக்கில் எஃப்ஐஆர்

"ஆகஸ்ட் மாதத்தில் எங்களுக்கு புகார் வந்தது. எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. மாணவிகளிடம் வாக்கு மூலங்களும் பெறப்பட்டு வருகின்றன" என்று தென்மேற்கு டெல்லி காவல் துணை ஆணையர் ஐஸ்வர்யா சிங் பிபிசியிடம் தெரிவித்தார்.
" தற்போது தலைமறைவாக உள்ள சைதன்யானந்த சரஸ்வதி தேடப்பட்டு வருகிறார்" என்றும் அவர் கூறினார்.
"போலி ஐ.நா. தூதரக எண் தகடு கொண்ட வால்வோ கார் அந்த கல்வி நிறுவனத்தின் தரைத்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடி வழக்கில் தனி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது."
இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதாகவும் ஐஸ்வர்யா சிங் கூறினார்.
"போலி நம்பர் பிளேட்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு தனித்தனி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. புகார், பாலியல் துன்புறுத்தலுடன் தொடர்புடையது என்பதால், மேலதிக விவரங்களை பகிர்ந்து கொள்ள முடியாது"
நிறுவனத்தின் பின்னணி

ஏஐசிடீஈயால் (அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில்) அங்கீகரிக்கப்பட்ட சாரதா இன்ஸ்டிடியூட் மேலாண்மை முதுகலை டிப்ளமோ வழங்குகிறது.
நிறுவனத்தின் இணையதளத்தின்படி, இந்த நிறுவனம் சங்கர வித்யா கேந்திராவால் (SKV) நடத்தப்படுகிறது. இது கர்நாடகாவில் அமைந்துள்ள சிருங்கேரி சாரதா பீடத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த பீடம், ஆதி சங்கராச்சாரியார் நிறுவிய நான்கு முக்கிய அத்வைத மடங்களில் ஒன்றாகும்.
தேசிய மகளிர் ஆணையம் என்ன சொன்னது?

பட மூலாதாரம், NCW/X
தேசிய மகளிர் ஆணையம் இந்த விஷயத்தை தானாக முன்வந்து கவனத்தில் எடுத்துக்கொண்டு, மூன்று நாட்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு அதிகாரிகளிடம் கோரியுள்ளது.
"குற்றம் சாட்டப்பட்டவர் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார், ஆபாசமான செய்திகளை அனுப்பினார் மற்றும் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று செய்திகள் குறிப்பிடுகின்றன. தனக்கு உடன்படுமாறு அவர் மாணவிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாக ஆசிரியர்களும் ஊழியர்களும் குற்றம் சாட்டப்படுகிறார்கள்" என்று ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பலர் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் உதவித்தொகை பெறுகிறார்கள் என்றும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
இத்தகைய சூழ்நிலைகளில் வாழும் மாணவர்கள் சுரண்டப்படுவது மிகுந்த கவலைக்குரிய விஷயம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

சுவாமி சைதன்யானந்த சரஸ்வதியை சிருங்கேரி சாரதா பீடம் இடைநீக்கம் செய்துள்ளது, மேலும் தேசிய மகளிர் ஆணையமும் இந்த விஷயத்தில் தலையிட்டுள்ளது.
இதன் விளைவாக, இந்த வழக்கு தொடர்ந்து பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
ஆனால், எவ்வளவு காலமாக துன்புறுத்தல் நடந்து வருகிறது, ஊழியர்களுக்கு இது பற்றித் தெரியுமா?, காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போது குற்றம் சாட்டப்பட்டவர் எப்படித் தப்பினார்? போன்ற பல கேள்விகள் இன்னும் எஞ்சியுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












