ஐபிஎல்லில் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை வாரி வழங்கிய யஷ் தயாள் டெஸ்ட் அணியில் இடம்பெற்றது எப்படி?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், ஹிமான்ஷூ தூபே
- பதவி, பிபிசி செய்தியாளர்
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான 15 நபர்கள் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணியில் பந்து வீச்சாளரான யஷ் தயாளுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
யார் இந்த யஷ் தயாள்?
ஏப்ரல் 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே ஒரு பரபரப்பான போட்டி நடந்தது.
அந்த போட்டியின் போதுதான் யஷ் தயாள் என்ற பெயர் மக்கள் மத்தியில் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த போட்டியின் போது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற கடைசி 6 பந்துகளில் 28 ரன்கள் எடுக்க வேண்டியதாக இருந்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பாக இறுதி ஓவரை வீச யஷ் தயாளுக்கு வாய்ப்பு கிடைத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து ரிங்கு சிங் பேட்ஸ்மேன்னாக களத்தில் இருந்தார்.
இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் எளிதாக வெற்றி பெறும் என்றே தோன்றியது. ஆனால் யஷ் தயாள் வீசிய ஒரு ஓவரில் ரிங்கு சிங் 5 சிக்சர்கள் அடித்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றி பெற செய்தார்.

ரிங்கு சிங்கிற்கு குவிந்த பாராட்டுகளும் யஷ் மீது எழுப்பப்பட்ட கேள்விகளும்
இந்த போட்டி முடிந்த பிறகு, ஒரு புறம் ரிங்கு சிங்கிற்கு பாராட்டுகள் குவிந்தது, ஆனால் மறுபுறம் யஷ் தயாளின் கிரிக்கெட் பயணம் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதற்கு பின் நடந்த போட்டிகளில் யஷ் தயாளுக்கு வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை.
மிதவேக பந்து வீச்சாளரான யஷ் தயாள் ஐபிஎல் போட்டிகளில் சில கசப்பான தருணங்களை சந்தித்தாலும், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ஒரு வலுவான விளையாட்டு வீரராக செயல்பட்டார்.
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் உத்தரபிரதேச அணிக்காக அவர் விளையாடி வந்தார். கடந்த ரஞ்சி கோப்பை தொடரில் 4 ஆட்டங்களில் அவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் 6 ஆட்டங்களில் அவர் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
துலீப் கோப்பை தொடரில் இந்தியா 'பி' அணிக்காக விளையாட யஷ் தயாளுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரின் சிறப்பான ஆட்டத்தால், இந்தியா 'ஏ' அணிக்கு எதிரான போட்டியில் அவரது அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பட மூலாதாரம், ANI
2024-ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் அவருக்கு எவ்வாறு இருந்தது?
2024 -ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாட யஷ் தயாளுக்கு வாய்ப்பு கிடைத்தது.
மே 18, 2024-ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே ஒரு முக்கியமான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருந்தது.
கடைசி 6 பந்துகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. இந்த முறையும் இறுதி ஓவரை வீசும் பொறுப்பு யஷ் தயாளிடம் இருந்தது.
உலகின் சிறந்த மேட்ச் ஃபினிஷராகக் கருதப்படும் மகேந்திர சிங் தோனி களத்தில் பேட்ஸ்மேனாக இருந்தார். யஷ் தயாள் வீசிய முதல் பந்தில் தோனி சிக்ஸர் அடித்தார். ஒரு புறம் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திகைத்தனர். ஆனால் மறுபுறம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரசிகர்களிடையே அமைதி நிலவியது.
ஆனால், அடுத்த பந்திலேயே தோனியின் விக்கெட்டை வீழ்த்தி யஷ் தயாள் ஆட்டத்தில் திருப்பத்தை கொண்டு வந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற கடைசி நான்கு பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்டது, ஆனால் அது நடக்கவில்லை.
அந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தேர்வானது.

பட மூலாதாரம், ANI
'யஷ் தயாளுக்கு கடந்த ஐபிஎல் தொடர் நன்றாக இருந்தது'
கடந்த முறை ஒரே ஓவரில் 28 ரன்கள் எடுக்கும் வாய்ப்பினை வழங்கிய யஷ் தயாள், இந்த முறை ஒரு ஓவரில் 16 ரன்கள் மட்டுமே எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விடவில்லை.
தற்போது இந்தியாவின் டெஸ்ட் அணியில் விளையாட யஷ் தயாளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
"இந்தியாவிற்காக விளையாட ஏராளமான நல்ல விளையாட்டு வீரர்கள் வருவது நன்றாக இருக்கிறது. யஷ் தயாள் ஒரு மிதவேக பந்து வீச்சாளர். கடந்த ஐபிஎல் தொடர் அவருக்கு நன்றாக இருந்தது. இதனால்தான் அவர் இந்த டெஸ்ட் தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். பும்ரா, சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்படும் நேரத்தில் இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாட யஷ் தயாளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியிலே விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் அதுவே பெரிய விஷயமாக இருக்கும்", என்று மூத்த பத்திரிக்கையாளர் அகில் சோனி கூறுகிறார்.
"ஐபிஎல் போன்ற போட்டிகள் வீரர்களுக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது, ஆனால் அப்போட்டிகளில் காயம் ஏற்படும் அபாயமும் உள்ளது", என்றும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், ANI
யஷ் தயாளின் கிரிக்கெட் வாழ்க்கை
இஎஸ்பிஎன் கிரிக்இன்போ (ESPN Cricinfo) தரவுகளின் படி, மிதவேக பந்து வீச்சாளரான யஷ் தயாள், இதுவரை உள்நாட்டு கிரிக்கெட்டின் 'ஏ' பிரிவில் 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் அவர் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதைத் தவிர அவர் 56 டி20 போட்டிகளில் விளையாடி, அதில் 53 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் அவர் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய இரு அணிகளுக்காக மொத்தம் 28 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி அன்று தொடங்க உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான அணி இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் யார் இருக்கிறார்கள்?
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது.
இந்த அணியில், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், கே.எல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, யஷ் தயாள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












