சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைக்கு இந்தியாவால் மாற முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நவீன் சிங் கட்கா
- பதவி, சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி உலக சேவை
அண்மையில் ஐநாவில் சமர்பிக்கப்பட்ட இந்திய அரசின் புதிப்பிக்கப்பட்ட காலநிலை செயல்திட்டத்தில், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான முக்கிய நடவடிக்கையாக சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை தேர்ந்தெடுப்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியா கொண்டுள்ள பொருளாதார லட்சியங்களுடன் பொருந்திப் போகுமா?
ஐநா காலநிலை மாற்ற மாநாட்டில் கையெழுத்திட்ட நாடுகள் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை NDC எனப்படும் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். கார்பன் உமிழ்வைக் குறைக்க, புவி வெப்பமடைதலைத் தடுக்க மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ள எவ்வாறு ஒரு நாடு திட்டமிடுகிறது என்ற தகவல்கள் அதில் இடம்பெற்றிருக்கும்.
இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட NDC-இல் கார்பன் உமிழ்வைக் குறைப்பது மற்றும் மின்சாரம் தயாரிக்க புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் உள்ளடங்கியுள்ளன.
அந்தப் பட்டியலின் முதலிடத்தில் "LiFE - Lifestyle for Environment" எனும் பாரம்பரிய மற்றும் இயற்கைப் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆரோக்கியமான மற்றும் நீடித்த வாழ்க்கை முறை உள்ளது.
இதன் நோக்கம் நமது கிரகத்துடன் ஒத்துப்போகக் கூடிய மற்றும் அதற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வாழ்க்கை முறையை வாழ்வது என்று அரசின் அறிக்கை கூறுகிறது. 2021ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த COP26 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி இதை முதன்முதலில் முன்மொழிந்தார்.
ஆனால் இந்த நோக்கத்திற்கும் நுகர்வு அதிகரிப்பிற்கும் இடையே முரண்பாடு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
"அடிப்படையில் நவீனத்துவம் என்பது நுகர்வு அதிகரிப்பு என்று பொருள்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை என்ற கருத்து நுகர்வுக் கலாசாரத்துடன் பொருந்தவில்லை" என்கிறார் சுற்றுச்சூழல் பொருளாதாரத்திற்கான இந்திய சங்கத்தின் தலைவர் நிலஞ்சன் கோஷ்.
அதிகரிக்கும் நுகர்வு, உயரும் பொருளாதாரம்
தற்போது உலகின் சிறந்த பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உள்ளது. உலகின் பிற பெரிய பொருளாதார சக்திகள் மந்தநிலையை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில், இந்தாண்டின் இந்திய பொருளாதார வளர்ச்சி சுமார் 7 சதவிகிதம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பணவீக்கம் மற்றும் உலகளாவிய மந்தநிலை கவலைக்குரிய விஷயமாக இருந்தாலும், நுகர்வோர் தேவை வலுவாக உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனியார் நுகர்வு 55 சதவிகிதமாக உள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
எனவே சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை என்று அரசு கூறுவதில் முரண்பாடு உள்ளது என்று கோஷ் கூறுகிறார்.
"வேறுவகையான வாழ்க்கை முறையை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது வழக்கமான ஒன்றாக இது இருக்குமா என்பது கேள்வி" என்றும் அவர் கூறுகிறார்.
காலநிலை நெருக்கடிக்கான தீர்வுகள் ‘லைஃப் பிரச்சாரம்’ போல சாதாரண மக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் சுற்றுச்சூழல் பொருளாதார உதவிப் பேராசிரியரான யூஜெனி டுகோவா.
ஆனால், அதன் மூலம் எவ்வளவு உமிழ்வு குறைப்பு ஏற்படும் என்பது குறித்து நாம் அதிக நம்பிக்கை கொண்டிருக்க கூடாது என்று கூறும் யூஜெனி டுகோவா, இது குறுகிய காலத்தில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தினாலும் நீண்ட காலத்திற்கு நிலையானது அல்ல என்று ஆராய்ச்சிகள் கூறுவதாவும் தெரிவித்தார்.
“நடத்தை மாற்றம் அவசியமானது மற்றும் முக்கியமானது, ஆனால் அது கொள்கை வகுப்பாளர்களுக்கு முக்கிய கருவியாக இருக்க முடியாது என்கிறார் யூஜெனி டுகோவா.
"அதற்குப் பதிலாக, எரிசக்தி, போக்குவரத்து மற்றும் விவசாய கட்டமைப்பு மாற்றத்தில் அரசாங்கங்கள் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் அவர் கூறுகிறார்.
ஆற்றல் தேவை அதிகரிப்பு
இந்தியாவில் எரிசக்தி துறை மூலமாகவே அதிகப்படியான கார்பன் உமிழ்வு ஏற்படுகிறது.
சர்வதேச எரிசக்தி நிறுவனம் தனது அக்டோபர் அறிக்கையில், இந்த தசாப்தத்தில் உலகின் மிகப்பெரிய எரிசக்தி தேவையை இந்தியா காணக்கூடும் என்று கூறியுள்ளது. எனினும், தனிநபர் அடிப்படையில் ஆற்றல் பயன்பாடு உலக சராசரியில் பாதிக்கும் குறைவாக உள்ளது.
நுகர்வு தொடர்ந்து அதிகரித்தாலும் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் கொண்டுவருவது சாத்தியம் என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
"இது ஏசி வாங்க வேண்டாம் என்று மக்களைக் கூறுவது அல்ல. நமது அறையின் வெப்பநிலையை 25 செல்சியஸில் வைத்திருக்கும் பழக்கத்தை உருவாக்கலாம். இது நமது ஆற்றல் நுகர்வு குறைவதற்கு வழிவகுக்கும்" என்கிறார் World Resources Institute India அமைப்பின் செயல் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் பாய். இந்த சர்வதேச அரசு சாரா அமைப்பு ‘லைஃப்’ திட்டத்தை பரப்ப இந்திய அரசுடன் இணைந்து செயல்படுகிறது.
மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை படிப்படியாக மாற்றிக்கொள்ள இந்த பிரசாரம் உதவுவதாக மாதவ் பாய் கூறுகிறார்.
"இது 1.5 பில்லியன் இந்தியர்களுக்கு நிலைத்த பொருளாதாரத்தை நோக்கிய நடத்தை மாற்றத்திற்கான தூண்டுதல்" என்றும் அவர் கூறுகிறார்.
மிகப்பெரும் சேதி

பட மூலாதாரம், Getty Images
இந்திய அரசு ‘லைஃப்’ பிரசாரத்தை மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு செய்தியாகவும் நிலைநிறுத்தியுள்ளது.
‘லைஃப்’ திட்டத்தின் செயல்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு, "உலகின் நுகர்வு முறையானது அக்கறையற்றது மற்றும் சுற்றுச்சூழலைக் கருத்தில் கொள்ளாதது" என்று இந்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பூபேந்தர் யாதவ் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதினார்.
‘பயன்படுத்துதல் மற்றும் எறிதல்’ என்ற மனநிலையை 'குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி' என்ற எண்ணத்தின் மூலம் உடனடியாக மாற்ற வேண்டும் என்பதை உலகிற்கு நினைவூட்ட இந்தத் திட்டம் முயற்சிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் இந்தியாவும் கடுமையான சுற்றுச்சூழல் பிரச்னைகளை எதிர்கொள்கிறது.
2019-20ஆம் ஆண்டில் இந்தியா 3.5 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கியதாகவும், அதில் 12 சதவிகிதம் மறுசுழற்சியும் 20 சதவிகிதம் எரிக்கப்பட்டதாகவும் டெல்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் அறிக்கை கூறுகிறது.
மீதமுள்ள 68 சதவிகித பிளாஸ்டிக் கழிவுகள் கணக்கில் வரவில்லை. அதாவது அவை நிலம் மற்றும் நீரில் அல்லது குப்பைகள் கொட்டப்படும் இடங்களில் உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நான்கு நதிகள் கண்காணிப்பு நிலையங்களில் மூன்று நிலையங்களில் அதிகப்படியான நச்சு உலோக கழிவுகளின் அபாயகரமான அளவுகள் பதிவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
வட இந்திய மாநிலங்களில் காற்று மாசுபாடு மிகுந்த கவலைக்குரிய விஷயமாக உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட உலக வங்கி அறிக்கை, மோசமான சுற்றுச்சூழல் ஆரோக்கியம் கொண்ட நாடுகளில் இந்தியாவையும் வரிசைப்படுத்தியது. இந்த அறிக்கையின் வழிமுறையை எதிர்த்த இந்திய அரசு, சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை தொடர்பான தன்னுடைய வரையறைகளை வழங்கியது.
உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தும் போது சுற்றுச்சூழல் சட்டங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் இந்திய அரசு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, இமயமலைப் பகுதிகளில்.
காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடுவதற்கு மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என நினைக்கும் அரசாங்கம் இவை அனைத்தையும் கவனிக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
"மாற்றம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்" என்று கூறும் கோஷ், இதற்கு அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் மக்கள் நடத்தை இணக்கமாக இருக்க வேண்டும் என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













