COP27: வளரும் நாடுகளுக்கு காலநிலை நிதி கிடைக்குமா? விவாதமாகும் “இழப்பு மற்றும் சேதம்”

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நவீன் சிங் கட்கா
    • பதவி, சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி

எகிப்தில் நடந்துகொண்டிருக்கும் இந்த ஆண்டின் காலநிலை மாநாட்டில் சலசலப்பை ஏற்படுத்தும் இரண்டு பெரிய வார்த்தைகள் "இழப்பு" மற்றும் "சேதம்." அவற்றுக்குரிய அர்த்தம் என்ன? ஏன் அவை விவாதங்களை ஏற்படுத்துகின்றன?

பசுமை இல்ல வாயுக்களை எவ்வாறு குறைப்பது, காலநிலை நெருக்கடியின் தாக்கங்களை எப்படிச் சமாளிப்பது ஆகிய கேள்விகளில் தான் பெரும்பாலும் காலநிலை பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்துகின்றன. இந்த ஆண்டு மாநாட்டில் மூன்றாவதாக இன்னொரு பிரச்னையும் ஆதிக்கம் செலுத்தலாம். காலநிலை மாற்ற சிக்கலை ஏற்படுத்துவதில் பெரும்பான்மையாகப் பங்களிக்கும் அதிக தொழில்மயமான நாடுகள், பாதிப்புகளை நேரடியாக அனுபவிக்கக்கூடிய நாடுகளுக்குப் பணம் செலுத்த வேண்டுமா என்பதுதான் அந்த மூன்றாவது பிரச்னை.

காலநிலை மாற்றத்தின் விளைவாக, வெள்ளம், வறட்சி, சூறாவளி, நிலச்சரிவு, காட்டுத்தீ போன்ற பேரழிவுகள் அனைத்தும் அடிக்கடி நிகழ்வதோடு தீவிரமடைந்தும் வருகின்றன. பாதிக்கப்பட்ட நாடுகள் அவற்றின் விளைவுகளைச் சமாளிக்கப் பல ஆண்டுகளாக நிதியுதவி கேட்டுக் கொண்டிருக்கின்றன.

இதுதான் "இழப்பு மற்றும் சேதம்" என்ற வார்த்தையின் அர்த்தம். இந்தச் சொற்றொடர் வீடுகள், நிலம், வேளாண் நிலங்கள், வணிகங்கள் போன்றவற்றில் ஏற்படும் பொருளாதார இழப்புகள் மற்றும் உயிரிழப்ப்பு, கலாசார தளங்களின் இழப்பு, பல்லுயிர் இழப்பு போன்ற பொருளாதாரமல்லாத இழப்புகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

நவம்பர் 6ஆம் தேதி 27வது காலநிலை மாநாடு (COP27) தொடங்குவதற்கு முன் இரண்டு நாட்களாக நடந்த தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்த விஷயத்தை அதிகாரபூர்வ நிகழ்ச்சி நிரலில் சேர்க்க பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டனர்.

ஏழை நாடுகள் பசுமை இல்ல வாயு வெளியீட்டைக் குறைப்பது, காலநிலை மாற்ற தாக்கங்களைச் சமாளிக்க நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றுக்காக பருவநிலை நிதியுதவியில் பணக்கார நாடுகள் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்கள் கொடுக்க ஒப்புக்கொண்டதோடு கூடுதலாக இந்த நிதியை ஏழை நாடுகள் கேட்கின்றன.

"தீவிரமான புயல்கள், பேரழிவு தரும் வெள்ளம், உருகும் பனிப்பாறைகள் ஆகியவற்றால் ஏற்படும் இழப்புகள் மற்றும் சேதங்களால் மக்கள் அவதிப்படுகின்றனர். வளரும் நாடுகளில் உள்ளவர்களுக்கு ஒரு பேரிடர் நடந்து பிறகு மீண்டும் அடுத்த பேரிடர் தாக்குதல் நடப்பதற்கு முன்பாக மறுகட்டமைப்பு செய்துகொண்டு உரிய நேரத்தில் மீண்டு வருவதற்குச் சரியான ஆதரவு இல்லை.

மோசமான தாக்கங்களின் பாதிப்புகளுக்கு உள்ளாகும் வகையில் முன்வரிசையில் இப்போதுள்ள மக்கள் சமூகங்கள் இந்த நெருக்கடியை ஏற்படுத்துவதில் குறைந்த பங்களிப்பையே செய்துள்ளன," என்கிறார் கிளைமேட் ஆக்ஷன் நெட்வொர்க் இன்டர்நேஷனலில் உலகளாவிய அரசியல் மூலோபாயத்தின் தலைவர் ஹர்ஜீத் சிங்.

இழப்பு மற்றும் சேதத்திற்கான செலவு எவ்வளவு பெரியது?

உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்களின் குழுவான லாஸ் அண்ட் டேமேஜ் கொலாபரேஷன், சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை, மாறிவரும் காலநிலைக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய 55 நாடுகளின் பொருளாதாரங்கள், 2000 முதல் 2020 வரை அரை டிரில்லியன் டாலர்களுக்கு மேல் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பைச் சந்தித்ததாகக் கூறுகிறது. அடுத்த பத்தாண்டுகளில் அது இன்னும் அரை டிரில்லியனாக உயரலாம்.

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வேளாண்கள் மற்றும் கால்நடைகளின் இழப்பு என்பது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்பு மற்றும் சேதத்தின் ஒரு வடிவம்

"மேலும் புவி வெப்பமயமாதலின் ஒவ்வொரு டிகிரியும் அதிக காலநிலை தாக்கங்களைக் குறிக்கிறது. வளரும் நாடுகளில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகள் 2030ஆம் ஆண்டுக்குள் 290 பில்லியன் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது," என்று அந்த அறிக்கையின் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

தொழில்மயமாக்கலுக்கு முந்தைய காலத்தோடு ஒப்பிடும்போது உலகம் ஏற்கெனவே சராசரியாக 1.1 டிகிரி வெப்பநிலை உயர்வைக் கண்டிருந்தது.

ஏழ்மையான மற்றும் குறைந்த தொழில்மயத்தைக் கண்டுள்ள நாடுகள், இதன் விளைவாக ஏற்படும் தீவிர வானிலையின் தாக்கம் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் தாங்கள் மேற்கொள்ளும் எந்த முன்னேற்றத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று கூறுகின்றன. எதிர்கொண்ட இழப்புகளையும் சேதங்களையும் சமாளிக்க கடன் வாங்க வேண்டியிருப்பதால், கடன் சுமையில் சிக்கிவிட்டதாகச் சிலர் கூறுகிறார்கள்.

இழப்பு மற்றும் சேதங்களுக்கான கொடுப்பனவுகள் எவ்வளவு காலமாக விவாதிக்கப்பட்டன?

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, பாரிஸ் ஒப்பந்தம் "காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளுடன் தொடர்புடைய இழப்பு மற்றும் சேதத்தைத் தவிர்ப்பது, குறைப்பது மற்றும் நிவர்த்தி செய்வது," ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அங்கீகரித்தது. ஆனால், இதை எப்படிச் செய்வது என்று முடிவு செய்யப்படவில்லை.

"இழப்பு மற்றும் சேதம் பல ஆண்டுகளாக மிகவும் பிரச்னைக்குரிய தலைப்பாக இருந்தது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையே மிக மிக சூடான விவாதஙகள் நடந்துள்ளன," என்று ஜெர்மனியின் பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் மாநில செயலாளர் ஜோச்சன் ஃப்ளாஸ்பர்த் கூறுகிறார்.

சிவப்புக் கோடு

இழப்பு மற்றும் சேதத்திற்கான நிதி இந்தியாவுக்கு பலனளிக்குமா?

காலநிலை மாநாட்டில் இழப்பு மற்றும் சேதத்திற்கான நிதி வசதியை நிறுவுவதற்கான ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டால், அது வளரும் நாடுகள் தங்களைக் கட்டியெழுப்பும் வேகத்தைக் கூட்டக்கூடும் என்று ஒருபுறம் சொல்லப்படுகிறது. ஆனால், இந்தியாவை பொறுத்தவரை இந்த நிதி உடனடி தாக்கத்தைத் தாங்குவதற்கு உறுதுணையாக இருக்கும் என்றாலும் அதையே முழுவதுமாக நம்பிவிட முடியாது என்கிறார் பொருளாதார நிபுணர் வ.நாகப்பன்.

"இது மிகவும் அவசியமான, சமநிலைப்படுத்தும் செயலாக ஒரு நல்ல விஷயம். இருப்பினும், இதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அவற்றை விரிவான முறையில் தீர்ப்பது மிகவும் கடினமாக இருக்கும். வழக்கம்போல், அமெரிக்கா போன்ற அதிக கரிம வெளியீட்டிற்குப் பொறுப்பாளியான நாடுகள் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகள் ஒப்புக்கொள்ளலாம். ஆனால், கணக்கீடுகள், நியாயத்தன்மை போன்றவை இதன் நீண்டகால செயலாக்கத்தை உருவாக்கும்.

ஆரம்பத்தில் கரிம கிரெடிட் முறையும் இதுபோல் பெரியளவில் சென்றடையவில்லை. ஆனால், இப்போது பரவலாகச் சென்றடைந்து, சில மதிப்பாய்வு தொழில்நுட்பங்களோடு இப்போது அமலில் உள்ளது. இதுவும் அதேபோல் நடக்கலாம். ஆனால், அதற்கு மிக நீண்ட காலம் எடுக்க வாய்ப்புள்ளது.

இந்தியா வெப்ப அலை 2022

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவை பொறுத்தவரை, மிகப்பெரிய கடலோர நிலப்பரப்பு உள்ளது. அது கடல்மட்ட உயர்வு, சுனாமி, வெள்ள பாதிப்புகள் என்று பல்வேறு பேரிடர் அபாயங்களைக் கொண்டுள்ளன. அதுபோக, நிலநடுக்கம், வெள்ளம், வறட்சி போன்ற பேரிடர் அபாயங்களும் இந்திய நிலப்பரப்புகளில் இருக்கின்றன. ஆகவே, கொடுப்பதை விட அதிகமாக இந்தப் பேரிடர்களைச் சமாளிக்க நிதி கிடைக்கவே வாய்ப்புள்ளது.

இந்தியா, தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்துப் பேசி அதற்குரிய நிதியைப் பெற வேண்டும். இருப்பினும், இது தான் நம்மை இழப்புகளில் இருந்து காப்பாற்றும் என்று எதிர்பார்த்துவிட முடியாது. நாம் பேரிடர் இழப்புகளால் ஏற்படும் தாக்கத்தை எதிர்கொள்வதற்கு ஒரு கட்டம் வரை நமக்கு உதவலாம். எவ்வளவு நிதி இதில் சேரப் போகிறது, எந்த அடிப்படையில் மதிப்பீடு செய்யப் போகிறார்கள் என்பது இன்னும் தெளிவாகவில்லை," என்று பிபிசி தமிழுக்காகப் பேசியபோது கூறினார் பொருளாதார நிபுணர் வ.நாகப்பன்.

காலநிலை மாற்றம் காரணமாக இந்தியா, பாகிஸ்தானில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெப்ப அலைகள் 30 மடங்கு அதிகமாக இருந்தது. உரிய தரவுகள் இல்லாமல் உண்மையான சூழலியல் இழப்புகளைக் கணக்கிட முடியாது. இருப்பினும், உயிரிழப்புகள், பெரியளவிலான பயிர் இழப்புகள், அதிகரிக்கும் உணவுப் பாதுகாப்பின்மை போன்றவை, வெப்ப அலை போன்ற பாதிப்புகளின் தீவிரத்தையும் அவற்றின் நேரடி இழப்புகளையும் சேதங்களையும் காட்டுகின்றன. ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், அவற்றைச் சமாளிப்பதில் இந்த நிதி குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கலாம்.

சிவப்புக் கோடு

"பெரியளவில் கரிம வெளியீடு செய்வோருக்கு இதுவொரு சட்டபூர்வ கடமையாக மாறக்கூடும் என்று வளர்ந்த நாடுகளில் கவலைகள் இருந்தன. பெரும்பாலான வளர்ந்த நாடுகளுக்கு இது ஒரு சிவப்புக் கோடாகவே இருந்து வருகிறது."

எகிப்தில் நடக்கும் 27வது காலநிலை மாநாட்டில் பேச்சுவார்த்தை நடத்துபவர்கள், பணக்கார நாடுகள் தாங்கள் என்பதையும் இழப்பு மற்றும் சேதத்திற்கு இழப்பீடு வழங்குவதற்கான எந்தவொரு கடமையும் தங்களுக்கு இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புவதாகக் கூறினர். வளரும் நாடுகள் அதை எதிர்த்தன. ஆனால், இப்போது பொறுப்பு மற்றும் இழப்பீடு விவாதிக்கப்படாது என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அபுதாபியில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மாநாட்டில் இடைக்கால முடிவெடுப்பதற்கும் 2024-க்குள் உறுதியான முடிவை எடுப்பதற்கும் இந்த மாநாட்டில் இழப்பு மற்றும் சேத நிதி குறித்து விவாதிக்கப்படும் என்று ஒப்பந்தம் கூறுகிறது.

"இன்றைய சூழலில் ஒவ்வொரு நாளும் வளரும் நாடு எதிர்கொள்ளும் நெருக்கடிகளைச் சமாளிக்க வழக்கமான, யூகிக்கக்கூடிய, நிலையான நிதியைக் கோரி வருகிறோம். இந்த ஒப்பந்தம் முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. ஆனால், பேச்சுவார்த்தை எப்படி நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்," என்று ஐ.நா காலநிலை கூட்டங்களில் ஆப்பிரிக்கா குழுவுடன் முன்னணி காலநிலை பேச்சுவார்த்தையாளர் ஆல்ஃபா உமர் கலோகா கூறுகிறார்.

கிளைமேட் ஆக்ஷன் நெட்வொர்க்கை சேர்ந்த ஹர்ஜீத் சிங், ஒப்பந்தம் ஒரு சமரசம் என்கிறார். "பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கும் நாடுகளுக்கும் எந்தவித உறுதியான ஆதரவையும் வழங்காமல், வரலாற்றுரீதியாக மாசுபடுத்திக் கொண்டிருப்பவர்களை இழப்பீடு மற்றும் பொறுப்பேற்பதில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்கும், பணக்கார நாடுகள் வளரும் நாடுகளைத் தள்ளும் விதம் உண்மையில் ஒரு நம்பிக்கைத் துரோகம்."

பருவநிலை மாற்றம் தங்களின் வளர்ச்சி விகிதத்தைக் குறைத்துவிட்டதாக ஏழை நாடுகள் கூறுகின்றன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பருவநிலை மாற்றம் தங்களின் வளர்ச்சி விகிதத்தைக் குறைத்துவிட்டதாக ஏழை நாடுகள் கூறுகின்றன

இழப்பு மற்றும் சேதம் பற்றிய முக்கிய கருத்து வேறுபாடுகள் என்னவாக இருக்கும்?

இழப்பு மற்றும் சேதத்திற்கான கொடுப்பனவுகளை எந்த அமைப்பு கையாளும் என்பதை நாடுகள் ஒப்புக்கொள்வது கடினமாக இருக்கலாம்.

காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா மாநாட்டின் மூலம் நிறுவப்பட்ட கருவிகளுக்குள்ளும் அதற்கு வெளியிலும் பொறுப்பேற்கக்கூடிய வழிமுறைகள் இருப்பதாக வளர்ந்த நாடுகள் கூறுகின்றன.

வளரும் நாடுகள், தற்போதுள்ள எந்த நிறுவனமும் அதற்குப் பொருத்தமானவையாக இல்லை என்று கூறுகின்றன.

"சான்றாக, பாகிஸ்தான் சமீபத்திய வெள்ளத்தால் பேரழிவை எதிர்கொண்டபோது, நைஜீரியா பாதிக்கப்பட்டபோது அல்லது சமீபத்தில் கரீபியனை தாக்கிய இயன் சூறாவளியின் போது அந்த அமைப்புகள் எங்கே இருந்தன?" எனக் கேட்கிறார், ஐ.நா காலநிலை கூட்டங்களில் கூட்டுப் பேச்சுவார்த்தை நடத்தும் 39 சிறிய தீவு நாடுகளின் குழுவான அலையன்ஸ் ஆஃப் ஸ்மால் ஐலேண்ட் ஸ்டேட்டஸ் (Aosis) என்ற கூட்டமைப்புக்கான முன்னணி காலநிலை நிதி பேச்சுவார்த்தையாளர் மிகாய் ராபர்ட்சன்.

சிறிய தீவு நாடுகளின் குழுவான அலையன்ஸ் ஆஃப் ஸ்மால் ஐலேண்ட் ஸ்டேட்டஸ் (Aosis) என்ற கூட்டமைப்பு, ஆப்பிரிக்க குழு ஆகிய இரண்டும் ஐ.நா காலநிலை மாற்ற அமைப்புடன் இணைக்கப்பட்ட ஒரு புதிய நிதி வசதிக்கு அழுத்தம் கொடுக்கின்றன. அந்த அமைப்பு, தற்போதுள்ள காலநிலை நிதி நிறுவனங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட வடிவம். இந்தத் தனித்த வசதியின் யோசனை பரவலான ஆதரவைப் பெறாமல் போகலாம் என்கிறார் ஃப்ளாஸ்பர்த்.

இதுவரை நடந்த COP27 மாநாட்டில் ஏதேனும் முன்னேற்றம் உள்ளதா?

கடந்த ஆண்டு 26வது காலநிலை மாநாட்டின்போது, இழப்பு மற்றும் சேதத்திற்கு ஸ்காட்லாந்து ஒரு மில்லியன் டாலர் நிதியுதவி செய்வதாக உறுதியளித்தது. கடந்த மாதம், டென்மார்க் 13 மில்லியன் டாலர் பங்களிப்பதாக அறிவித்தது.

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இழப்பு மற்றும் சேதங்களுக்கான உரிமைகோரல்களுக்கு பணத்தை எவ்வாறு வழங்குவது என்பது ஒரு சர்ச்சைக்குரிய பிரச்னை

கடந்த வாரம், ஐரோப்பிய நாடாளுமன்றம், வளரும் நாடுகளுக்கு நிதியளிப்பதில் கவனம் செலுத்துவதற்கு, இழப்பு மற்றும் சேதங்களை "தவிர்ப்பதற்கு, குறைப்பதற்கு மற்றும் நிவர்த்தி செய்வதற்கு" கடன்களைவிட மானியங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.

மேலும், 55 பாதிக்கப்பட்டக்கூடிய நிலையிலுள்ள நாடுகளின் குழுக்களான ஜி7 மற்றும் வீ20, சமீபத்தில் காலநிலை பேரிடர்களுக்கு எதிராக குளோபல் ஷீல்ட் என்ற முன்முயற்சியைத் தொடங்க ஒப்புக்கொண்டது. இது காப்பீட்டு முறை மூலமாக, ஓரளவுக்கு இழப்பு மற்றும் சேதத்திற்கான நிதியை வழங்கும்.

வி20 குழு, அலையன்ஸ் ஆஃப் ஸ்மால் ஐலேண்ட் ஸ்டேட்டஸ் அளவில் பாதி உறுப்பினர்களைக் கூட கொண்டிருக்கவில்லை என்பதால் இது முறையானதாக இருக்க முடியாது என்று அலையன்ஸ் ஆஃப் ஸ்மால் ஐலேண்ட் ஸ்டேட்டஸ் கூறுகிறது.

"ஜி7, அவர்கள் தேர்ந்தெடுத்த நாடுகளோடு மட்டுமல்ல, நம் அனைவருடனும் பேச வேண்டும்," என்று கூறுகிறார், அலையன்ஸ் ஆஃப் ஸ்மால் ஐலேண்ட் ஸ்டேட்டஸ் குழுவின் முன்னணி காலநிலை நிதி பேச்சுவார்த்தையாளர் மிகாய் ராபர்ட்சன்.

ஏழை நாடுகளால் இன்னும் கூடுதலான காலநிலை நிதியைப் பெற முடியுமா?

காலநிலை நிதியை அளிக்கும் நிதி நிறுவனங்கள் மற்றும் அதைப் பெறும் நாடுகள் இரண்டிலும் கடந்த காலங்களில் சிக்கல்கள் இருந்துள்ளன.

சர்வதேச நிதி நிறுவனங்களின் அதிகாரத்துவம் காரணமாக, நிதி கிடைக்க நீண்ட காலம் எடுக்கும். மேலும் நிதியைப் பெறும் சில நாடுகளில் மோசமான நிர்வாகம், ஊழல் பிரச்னைகள் உள்ளன.

இருப்பினும், இழப்பு மற்றும் சேதத்திற்கான நிதியளிக்கும் திட்டத்தை ஓரங்கட்டுவதற்கு இதை ஒரு நியாயமான காரணமாக ஏழை நாடுகள் ஏற்றுக்கொள்ளாது.

Banner
காணொளிக் குறிப்பு, சென்னையில் கனமழை: இன்னொரு வெள்ளத்தை தலைநகர் தாங்கத் தயாராக உள்ளதா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: