இந்தியாவில் கிடைத்த புதைபடிவங்கள்: டைனோசர் குட்டிகளை விழுங்கிய சனாஜே பாம்புகளைக் கண்டுபிடிக்க உதவிய தொல்லெச்சம்

பட மூலாதாரம், Alamy
- எழுதியவர், கமலா தியாகராஜன்
- பதவி, ㅤ
மிகப்பெரும் டைனோசர் முட்டைகள் முதல் அறிவியலுக்கே புதிதான வரலாற்றுக்கு முந்தைய வினோதமான உயிரினங்கள் வரை, பல ஆச்சரியமான புதைபடிவங்கள் இந்தியாவில் உள்ளன. ஆனால், அவை வெறுமனே பூமிக்கு அடியில் உள்ளன.
2000ஆம் ஆண்டு நாக்பூரில் உள்ள மத்திய அருங்காட்சியகத்திற்கு நான் சென்றபோது, பழங்கால ஆராய்ச்சியாளர் ஜெஃப்ரி ஏ வில்சன், தான் இதுவரை கண்டிராத ஒரு புதைபடிவத்தினைக் கண்டார். அது, அவருடன் பணியாற்றிய ஒருவரால் 1984ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள தோலி டுங்ரி கிராமத்தில் தோண்டி எடுக்கப்பட்டது.
"ஒரே மாதிரியில் டைனோசர் முட்டையும், குழந்தை டைனோசரின் எலும்பும் கண்டெடுக்கப்படுவது இதுவே முதன்முறை" என்கிறார் அமெரிக்காவின் மிஷிகன் பல்கலைக்கழக புவியியல் அறிவியல் துறையின் துணைப் பேராசிரியர் வில்சன். அவருக்கு ஆச்சரியம் அளிக்கக் கூடிய வகையில் வேறு ஒன்றும் அதில் இருந்தது.
"இந்த மாதிரியில், நான் பரிசோதித்த எலும்புகளில் ஒரு சிறப்பு இணைப்புடன் இரண்டு சிறிய முதுகெலும்புகள் இருந்தன. பொதுவாக இப்படியொரு அமைப்பு பாம்புகளுக்கு மட்டுமே இருந்தது" என்கிறார் வில்சன்.
இதை தவறாக அர்த்தம் கொள்ளவில்லை என்பதை உறுதிசெய்வதற்காக தண்டுவடத்துடன் மற்றவற்றை அவர் ஆராய்ந்தார். அவர் தேடியது கிடைத்ததும், வரலாற்றுக்கு முந்தைய பாம்பின் எச்சமும் இந்த மாதிரியில் இருக்குமோ என வில்சனுக்குள் கேள்வி எழுந்தது.
தேவையான புதைபடிவத்தை நன்கு சுத்தம் செய்யும் வசதி இந்தியாவில் இல்லை. இந்த மாதிரியை அமெரிக்காவிற்கு கொண்டு செல்வதற்கான அனுமதி இந்திய புவியியல் ஆய்வு (GSI) அமைப்பிடம் இருந்து கிடைக்க நான்கு ஆண்டுகள் ஆயின. அனுமதி கிடைத்ததும் வில்சன் அந்த மாதிரியை ஒரு பெட்டியில் அமெரிக்கா கொண்டு சென்றார். அந்த மாதிரியின் மென்மையான மற்றும் நுண்ணிய எலும்புகளைச் சுற்றியிருந்த பாறை படிமங்களை அகற்ற அவருக்கு ஒரு வருட காலம் எடுத்தது.
விரிவடைந்த புதைபடிம ஆய்வு
அடுத்தடுத்த ஆண்டுகளில், விஞ்ஞானிகள், பழங்கால ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பாம்பு நிபுணர்கள் புதைபடிவம் குறித்து ஆராய்ந்தனர்.
2013ஆம் ஆண்டில், வில்சன் இந்திய பழங்கால ஆராய்ச்சியாளர் தனஞ்சய் மொஹபே மற்றும் இந்திய புவியியல் ஆய்வு அமைப்பைச் சேர்ந்த பிறருடன் இணைந்து புதைபடிவத்தை கைப்பற்றிய அந்த நம்பமுடியாத தருணம் குறித்து விவரிக்கும் ஒரு கட்டுரையை எழுதினார். அவர்கள் வரலாற்றுக்கு முந்தைய பாம்பு இருப்பதை உறுதிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், குஞ்சு டைனோசரை சாப்பிடுவது போல் அதன் தாடைகள் அகலமாக திறந்திருந்ததையும் கண்டறிந்தனர்.
குஞ்சு டைனோசர்களை உண்ணும் சனாஜே பாம்புவிற்கு இதன் மூலம்தான் உலக அறிமுகம் கிடைத்தது. வரலாற்றுக்கு முந்தைய பாம்புகள் பெரிய இரையை விழுங்கும் அளவிற்கு தங்கள் தாடைகளைத் திறக்கும் திறன் கொண்டிருக்கவில்லை என்றும், நவீன பாம்புகளிடம் இருக்கும் இந்தப் பண்பு பரிணாம வளர்ச்சியில் உருவானது என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர்.
2013ஆம் ஆண்டு, இதேபோன்ற ஒரு மாதிரி அதே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாதிரியை ஆய்வுசெய்துவரும் இந்தக் குழு, சனாஜே இண்டிகஸின் உடற்கூரியல் எவ்வாறு நவீன பல்லிகளுடன் ஒத்திருக்கிறது என்பதை விளக்கும் ஒரு கட்டுரையை தற்போது தயார் செய்துவருகிறது.
இந்த வகையில், பண்டைய காலத்தின் ரகசியங்களை புதைபடிவங்களால் அவிழ்க்க முடியும். சமீபத்திய ஆண்டுகளில் அற்புதமான கண்டுபிடிப்புகள் இருந்தபோதிலும், இந்தியாவின் புதைபடிவ செல்வத்தைப் பற்றி அறிய போதுமான நிதியும் முறையான ஆய்வுகளும் இல்லை என பழங்கால ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Alamy
"இந்தியாவின் புதைபடிவ பாரம்பரியம் பெரும்பாலும் பயன்படுத்தப்படவில்லை அல்லது மறக்கப்பட்டு விட்டது என்று நான் நினைக்கிறேன்" என்கிறார் யேல் பல்கலைக்கழக முதுகெலும்பு பழங்காலவியல் நிபுணர் அத்வைத் எம் ஜுகார். "டைனோசர்கள் காலத்திற்கு முன்பே இந்தியாவில் ஆரம்பக்கால திமிங்கலங்கள், காண்டாமிருகங்கள், யானைகள் மற்றும் விசித்திரமான கொம்பு ஊர்வன இருந்தன. ஆனால் அவை குறித்து பெரிய அளவில் ஆய்வு செய்யப்படவில்லை" என்றும் அவர் கூறுகிறார்.
இந்தியாவின் பெரும் பகுதிகள் தொழில்முறை பழங்கால ஆராய்ச்சியாளர்களால் முறையாக ஆராயப்படவில்லை என்பதே இதற்கு காரணமாகும்.
பரிணாம புதிர்கள்
இது ஒருபுறம் இருந்தாலும், இந்தியாவில் இருந்து கிடைத்த முக்கிய பழங்கால கண்டுபிடிப்புகள் பழைய கோட்பாடுகளை நீக்குவதற்கும், காலப்போக்கில் வாழ்க்கை எவ்வாறு பரிணமித்துள்ளது என்பது குறித்து அறியவும் விஞ்ஞானிகளுக்கு உதவியுள்ளன.
இந்தக் கண்டுபிடிப்புகள் பலவற்றுக்கு காரணமாக இருந்தவர் அசோக் சாஹ்னி. முன்னணி பழங்கால ஆராய்ச்சியாளராகக் கருதப்படும் இவருடைய குடும்பத்தில், அவரது தாத்தா, தந்தை மற்றும் மாமா அனைவரும் இந்த துறையில் இருந்தவர்கள். பெரும்பாலும் ஆய்வுகள் தொடர்பான பயணங்களுக்கு அசோக் சாஹ்னி தன்னுடைய சொந்த பணத்தையே பயன்படுத்தினார். அவர் கண்டுபிடித்த புதைபடிவங்கள் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் வரலாற்று அருங்காட்சியகத்தில் நிரம்பியுள்ளன.
1982ஆம் ஆண்டு ஜபல்பூரில் கடும் வெப்பத்திற்கு மத்தியில் ஒரு டைனோசர் தளத்தில் புதைபடிவங்களைத் ஒவ்வொரு அங்குல அங்குலமாக நிலத்தில் தேடியதை சாஹ்னி நினைவு கூர்கிறார். அவர் தன்னுடைய ஷூ லேஸை கட்டுவதற்காக குனிந்தபோது, அவருக்கு முன்னால் 16 முதல் 20 செமீ நீளம் கொண்ட நான்கு அல்லது ஐந்து பொருட்கள் கோள வடிவில் இருந்தன.
"அவை காலநிலையால் மோசமாக பாதிக்கப்பட்டு, வட்டமாக, தோராயமாக சம வடிவத்தில் இருந்தன. அதைப் பார்த்ததும் அவை டைனோசர் முட்டைகளாக இருக்குமோ என்று நான் திகைத்துப்போனேன்" என்கிறார் சாஹ்னி.
உண்மையில், அவை கிரெட்டேசியஸ் காலத்தைச் சேர்ந்த பெரிய தாவரவகை டைனோசரான டைட்டானோசொரஸ் இண்டிகஸின் முட்டைகள். இதுதான் இந்தியாவில் முதன்முறையாக டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று டைனோசர்கள் வாழ்ந்த இடங்கள் நாடு முழுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Alamy
20 ஆண்டுகள் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு, சாஹ்னி 30 அடி நீளம் கொண்டதாகக் கருதப்படும் இந்தியாவின் புதிய வகை மாமிச டைனோசரான ராஜசரஸ் நர்மடென்சிஸின் எலும்புகளைக் கண்டறிந்து, கடந்த ஆகஸ்ட் 2003ஆம் ஆண்டு உலகப் புகழ் பெற்றார்.
ஆனால் சாஹ்னியின் சாதாரண மற்றும் அதிகம் அறியப்படாத கண்டுபிடிப்புகள்தான் அறிவியலுக்குப் பயன்படுகின்றன.
கடந்த 2010ஆம் ஆண்டு பிசினில் இருந்து கண்டறியப்பட்ட 54 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் பூச்சியைக் கண்டறிந்த இந்திய, ஜெர்மனிய மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் குழுவின் ஒரு பகுதியாக சாஹ்னி இருந்தார். குஜராத்தில் உள்ள சூரத் நகரின் வடகிழக்கே 30 கிமீதொலைவில் அமைந்துள்ள லிக்னைட் சுரங்கத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இப்பகுதி உலகின் பழமையான இலையுதிர் காடுகளின் தாயகமாக இருந்திருக்கலாம் என்றும் அது சுட்டிக்காட்டியது.
நிலத்தில் வாழும் மான் போன்ற பாலூட்டிகள் திமிங்கலங்களாக பரிணமித்தது மற்றொரு முக்கியமான பரிணாம நிகழ்வாகும். உலகின் அனைத்து திமிங்கலங்களும் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் கடற்படுகையில் தோன்றியதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
"கட்ச் மற்றும் இந்தியாவின் வடக்குப் பகுதிகள் மற்றும் பாகிஸ்தானில் கண்டறியப்பட்ட இந்த ஆரம்பக்கால திமிங்கலங்கள் எப்படி இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அவற்றின் முந்தைய தலைமுறை எப்படி இருந்தது என்பது பற்றி எங்களுக்கு அதிகம் தெரியாது" என்கிறார் ஜுகார்.
கடந்த காலத்தின் இந்தப் பகுதிகளைப் படிப்பது, எதிர்காலத்தை நாம் எவ்வாறு பார்க்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளவும், நாம் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் சேதத்தின் மதிப்பை அளவிடவும் உதவுகிறது என அவர் கூறுகிறார்.
உதாரணமாக, "மம்மத் போன்ற பெரிய பாலூட்டிகளின் அழிவில் மனிதர்கள் முக்கிய பங்கு வகித்ததை பெரும்பாலான பழங்கால ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். விதை பரவல், ஊட்டச்சத்து போக்குவரத்து போன்ற எத்தனை சுற்றுச்சூழல் செயல்பாடுகளை நாம் புரிந்து கொள்ள முடியும், அதன் அழிவோடு அவற்றையும் நாம் இழந்திருக்கலாம்" என்கிறார் ஜுகார்.
மனிதர்கள் இந்த நிலப்பரப்பை மாற்றுவதற்கு முன்பு உயிரினங்கள் எங்கு வாழ்ந்தன என்பதைப் புரிந்து கொள்ள இளம் புதைபடிவ பதிவுகள் உதவும். அந்தத் தகவலை எதிர்கால பாதுகாப்பு அல்லது நில மேலாண்மை திட்டங்களில் இணைக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். "உயிரினங்கள் தங்களுக்கு விருப்பமான சூழல்களுக்குச் செல்ல காலநிலை மாற்றம் காரணமாக உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். எதிர்கால காலநிலை மாற்றத்தின் சூழ்நிலைகளில் அவை எங்கு செல்லக்கூடும் என்பதை கணிக்க, கடந்த காலத்தில் விலங்குகள் மற்றும் தாவரங்கள் எங்கு வாழ்ந்தன என்பது பற்றிய தகவல்களைப் பயன்படுத்தலாம்" என்கிறார் ஜுகார்.
காலனித்துவ காலடித்தடங்கள்
வட அமெரிக்கா போன்ற சில இடங்கள் புதைபடிவங்களுக்காக அதிகம் அறியப்படுகின்றன. அதிகமான டைனோசர் கண்டுபிடிப்புகள் கிடைக்கப்பெற்ற இந்த இடம், அருங்காட்சியக கண்காட்சிகள், இலக்கியப் படைப்புகள், திரைப்படங்கள் மற்றும் இணையம் மூலம் பரவலாக பிரபலமடைந்துள்ளதாக ஜெர்மனியின் ஹெய்டெல்பெர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரும், சமகால இந்தியாவின் வரலாற்றாசிரியருமான அமெலியா போனியா கூறுகிறார்.
மாறாக, உலகின் பிற பகுதிகளில் உள்ள புதைபடிவ பகுதிகள் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தாலும் இதே அளவில் அவை கவனிக்கப்படவில்லை எனக் கூறும் போனியா, இந்தியாவைப் பொறுத்தவரை புறக்கணிப்பிற்கு இரு முக்கிய காரணங்கள் இருப்பதாக உணர்கிறார்.

பட மூலாதாரம், Alamy
அதில் முதலாவதாக, கடந்த கால காலனித்துவ ஆட்சியைக் கூறுகிறார்.
உதாரணமாக, புதுமையான கண்டுபிடிப்புகள் ஐரோப்பா அல்லது வட அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவது பொதுவான நடைமுறையாக இருந்ததால், அங்கு அவை ஆய்வு செய்யப்பட்டு உள்ளூர் மக்களுக்குப் பதிலாக மேற்கத்திய அறிவியலுக்கு பயனளிக்கும். சமீபத்திய ஓர் ஆய்வில், கடந்த 30 ஆண்டுகளில் ஒரு பெரிய தரவுத்தளத்தில் இருந்த 97 சதவிகித புதைபடிவ கண்டுபிடிப்புகள் உயர் அல்லது மேல் நடுத்தர வருமான நாடுகளைச் சேர்ந்தவர்களால் கண்டெடுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இரண்டாவதாக, காலனித்துவத்திற்குப் பிந்தைய அரசு புதைபடிவ பாரம்பரியத்தின் மதிப்பை அங்கீகரிக்கத் தவறியதாக போனியா கூறுகிறார்.
இந்தியா ஆராய்ச்சி நிறுவனத்தின் தாயகம் என்பதை கவனத்தில் எடுத்துக்கொண்டால் இது ஒரு முரண்பாடான வளர்ச்சி என்கிறார் போனியா. மிகவும் தனித்துவமான லக்னோவில் உள்ள பீர்பால் சாஹ்னி இன்ஸ்டிடியூட் ஆஃப் பேலியோ சயின்சஸ் 1946ஆம் ஆண்டு நிறுவப்பட்டபோது உலகில் பாலியோபோடனி ஆய்வுக்காக இருந்த இரண்டு ஆய்வகங்களில் அதுவும் ஒன்றாகும். மற்றொன்று பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தில் இருந்ததாக அவர் கூறுகிறார்.
டைனோசர் என்ற வார்த்தை உருவாவதற்கு முன்பே, ஆரம்பக்கால புதைபடிவங்கள் இங்கிலாந்தில் 1824இல் பதிவு செய்யப்பட்டன என்பதை நாம் அறிவோம். ஆனால், அடுத்த நான்காவது ஆண்டில் இந்தியாவில் டைனோசரின் முதல் எலும்பு கண்டெடுக்கப்பட்டது அதிகம் அறிந்திடாத ஒன்று.
டைனோசருக்கு முந்தைய படிமங்கள்
1828ஆம் ஆண்டு டபிள்யூ எச் ஸ்லீமன் மத்திய இந்திய நகரமான ஜபல்பூரில் 'டைட்டானோசொரஸ் இண்டிகஸ்' என அழைக்கப்படும் முதல் இரண்டு படிமங்களை கண்டுபிடித்தார். கப்பல்களில் ஏற்றப்பட்ட ஆயிரக்கணக்கான புதைபடிவங்களுடன் அவை இங்கிலாந்துக்கு அனுப்பப்படும் வரை பல கைகளை அது கடந்து சென்றது.
"1900 களின் முற்பகுதியில், பிரிட்டிஷ் புவியியலாளர்கள் இந்தியாவில் மேலும் விரிவாக சேகரித்தனர். எனவே நீங்கள் இந்திய டைனோசர்களின் முழுமையான சேகரிப்புகளைப் பார்க்க விரும்பினால், லண்டன் அல்லது நியூயார்க்கிற்குச் செல்ல வேண்டும்" என்கிறார் வில்சன்.

பட மூலாதாரம், Alamy
இவை அனைத்தும், தங்கள் சொந்தநாட்டு டைனோசர்களைப் பற்றி மிகக் குறைவாகவே அறிந்து வளர்ந்த இந்தியக் குழந்தைகளின் தலைமுறை மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வில்சன் முதன்முதலில் இந்தியாவில் வேலை செய்யத் தொடங்கியபோது இந்திய அருங்காட்சியகங்களுக்கு வெளியே பார்வையாளர்களை வரவேற்கும் டைரனோசொரஸ் ரெக்ஸ் மற்றும் ட்ரைசெராடாப்ஸ் மாதிரிகளை அவர் கண்டார். "இவை அங்கு என்ன செய்கிறது என்று நான் எப்போதும் ஆச்சரியப்படுவேன்? அதற்குப் பதிலாக, உங்களிடம் ஒரு ராஜாசரஸ், ஒரு ஜைனோசொரஸ், ஒரு ராஹியோலிசரஸ் இருக்க வேண்டும். இந்திய குழந்தைகள் இந்திய டைனோசர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்" என்று வில்சன் கூறுகிறார்.
பள்ளி பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களில் இந்தத் தகவல் இடம் பெறாதபோது இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது கடினம்.
2018இல் வெளியிடப்பட்ட வைஷாலி ஷெராப்பின் தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் பத்மா அண்ட் எ ப்ளூ டைனோசர் குழந்தைகளைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புனைகதை மற்றும் கற்பனையைப் பயன்படுத்தி, இந்திய டைனோசர்களைப் பற்றிய உண்மையான விவரங்களைக் கொண்டிருந்த அந்தப் புத்தகம், 2019ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் பிரிவில் குழந்தைகளுக்கான சிறந்த புத்தக விருதை வென்றது.
அப்போதிருந்தே, இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களிடம் பேசிவரும் ஷ்ராஃப், பல்வேறு வகையான இந்திய டைனோசர்கள் மற்றும் அது தொடர்பான முக்கிய கண்டுபிடிப்புகளை அவர்களுக்கு அறிமுகம் செய்கிறார்.
"குழந்தைகள் நம் நாட்டின் டைனோசர் புதைபடிவ பாரம்பரியத்தை விரும்ப வேண்டும். டைனோசர் புதைபடிவங்கள் அவர்களின் கொல்லைப்புறங்களிலும் இருக்கும் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என நான் விரும்பினேன்" என்கிறார் ஷ்ராஃப்.
'Desi Stones and Bones' என்பது சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் அனுபமா சந்திரசேகரனால் செய்யப்பட்ட இந்தியாவின் செழுமையான டைனோசர் பாரம்பரியத்தைப் பற்றிய ஒரு சுயாதீன ஆடியோ கதை முயற்சியாகும். எட்டு பாட்காஸ்ட்களின் ஊடாக, அவர் இந்தியாவின் புதைபடிவ பாரம்பரியத்தின் பயணத்தை கண்டறிந்தார்.
மேலும், உள்ளூர் மக்களையும் அதைப் பாதுகாக்க விரும்பும் பழங்கால ஆராய்ச்சியாளர்களையும் அவர் நேர்காணல் செய்தார். "பல ஆண்டுகளாக இந்தியாவின் டைனோசர் பாரம்பரியம் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில், சில உள்ளூர்வாசிகள் அதைப் பாதுகாப்பதில் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது என்னை மிகவும் கவர்ந்தது" என்கிறார் அனுபமா சந்திரசேகரன்.
2018ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளி இயற்பியல் ஆசிரியர் விஷால் வர்மாவை மனவரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்ததை அனுபமா நினைவு கூர்ந்தார். அந்தச் சந்திப்பு அவர் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. வர்மாவின் வீடு முழுவதும் புதைபடிவ அட்டைப்பெட்டிகள் நிறைந்திருந்தன. ஒரு டைனோசரர் தாவர உண்ணியா அல்லது மாமிச உண்ணியா என்பதை அறிய புதைபடிவ டைனோசர் முட்டை ஓட்டில் உள்ள துளைகளை எவ்வாறு அடையாளம் காண வேண்டும் என விஷால் வர்மா அவருக்கு கற்றுக்கொடுத்தார்.
பூர்வீக டைனோசர்களைப் பற்றிய இந்தியாவின் அறிவு சுயவிருப்பத்தினால் மட்டுமே இருப்பதைக் கண்டும், அவை பெரும்பாலும் ஆவணப்படுத்தப்படாமல் இருப்பதைக் கண்டும் அனுபமா ஆச்சரியமடைந்தார்.
தொடரும் சவால்கள்
இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், சமீபத்திய ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள முக்கிய டைனோசர் தளங்களின் அழிவு ஒரு சவாலாக உள்ளது.

பட மூலாதாரம், Alamy
இது இந்தியாவில் மட்டும் இருக்கும் பிரச்னை அல்ல என்கிறார் வில்சன். "அமெரிக்காவிலும் உங்கள் நிலத்தில் ஒரு புதைபடிவத்தைக் கண்டால், அதை வைத்து நீங்கள் விரும்பியதைச் செய்யலாம். டைனோசர் புதைபடிவங்களைப் பாதுகாக்க எந்தச் சட்டமும் இல்லை. அவை கனிமங்களாகக் கருதப்படுகின்றன.
மேலும் அந்த அணுகுமுறையில் நிறைய சவால்கள் உள்ளன. இந்தியாவில், சுரங்கம் மற்றும் பிற வளர்ச்சி நடவடிக்கைகளால் மிகப்பெரும் அளவிலான பழங்காலத் தரவுகள் இழக்கப்படுகின்றன என்கிறார் வில்சன்.
பல இந்திய பழங்கால ஆராய்ச்சியாளர்கள் எலும்புகளை வைக்க போதிய இடம் இல்லாதது உட்பட பல காரணங்களால் சிரமப்படுகின்றனர். முறையான அருங்காட்சியக உள்கட்டமைப்பு இல்லாமல் பெரும்பாலான புதைபடிவங்கள் பல்கலைக்கழக கட்டடங்களின் தூசி நிறைந்த தாழ்வாரங்களில் வைக்கப்படுகதாக சாஹ்னி கூறுகிறார்.
ராஜசரஸ் டைனோசரின் கண்டுபிடிப்பும் அப்படித்தான் இருந்தது எனக் கூறும் அவர், எலும்புகள் அடையாளம் காணப்பட்டு ஒன்றாக இணைக்கப்படுவதற்கு முன்பு 20 ஆண்டுகள் கிடப்பில் இருந்தன என்கிறார்.
ஒழுங்கற்ற நிதி திட்டங்களுக்கும் இதற்கு இடையூறு விளைவிக்கின்றன. "நிதி தேவைப்படும் இரண்டு திட்டங்கள் இருந்தால் ஒன்று நிலத்தடி நீர் , மற்றொன்று பழங்காலவியல். வளரும் நாட்டில் எதுஅவசியம் என்பதை நீங்கள் யூகிக்க முடியும்" என்கிறார் சாஹ்னி.
ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் புதைபடிவ கண்டுபிடிப்புகளுக்கு இடையே ஒரு தொடர்பு இருப்பதாக ஜுகார் கூறுகிறார்.
"பழங்காலவியல் போன்ற ஒரு துறைக்கு நிறைய நிதி, புதைபடிவ தயாரிப்பு ஆய்வகங்கள் மற்றும் சேமிப்பு வசதிகளுடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகங்கள் தேவைப்படுகின்றன. பெரும்பாலும் இவை வளரும் நாடுகளில் இல்லை" என்கிறார் ஜுகார்.
இந்திய புதைபடிவங்கள் பற்றிய ஆய்வுக்கு இடையூறாக இருக்கும் மற்றொரு முக்கிய பிரச்னை, விஞ்ஞானிகளுக்கு இடையே அதிக பிராந்திய ஒத்துழைப்பு தேவைப்படுவது. புதைபடிவ செல்வத்தின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான், மியான்மர், வங்கதேசம் என பிரிக்க முடியாது என்பதால், புதைபடிவவியலில் இந்தியா தனிமையில் இருக்க முடியாது எனக் கூறும் வில்சன்,
இந்த நாடுகள் அனைத்தும் ஒரு புவியியல் அலகு, ஆனால், விஞ்ஞானிகள் சுதந்திரமாக பயணம் செய்வதற்கும், தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் அரசியல் தடையாக இருக்கும், ஆனால் அவ்வாறு செய்வது மேலும் கற்பதற்கான மிக முக்கியமான படி என்கிறார் ஜுகார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













