மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : கொழும்பில் தமிழர்களுடன் வாக்குவாதம் செய்த சிங்கள அமைப்பினர்

முள்ளிவாய்க்கால் போராட்டம்
    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் உயிர் நீத்தவர்களின் நினைவாக தலைநகர் கொழும்பில் அனுசரிக்கப்பட்ட மே 18 நினைவேந்தல் கூட்டத்தில் சிங்கள அமைப்பைச் சேர்ந்த சிலர் புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து, இன்றுடன் 14 வருடங்கள் ஆகிறது.

இதையொட்டி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் பிரதான நிகழ்வு, முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்றது.

தலைநகர் கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முதல் முறையாக கடந்த ஆண்டு காலி முகத்திடலில் நடத்தப்பட்டது.

அப்போது ஆளும் அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடிய 'கோட்டா கோ கம' போராட்டக்காரர்கள் இந்த போராட்டத்தை முதல் முறையாக நடத்தினர்.

முள்ளிவாய்க்கால் போராட்டம்

இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டும் கொழும்பில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையொட்டி, கொழும்பு - பொரள்ளை பொது மயானத்திற்கு முன்பாக ஒன்று கூடிய மூவின மக்கள், யுத்தத்தில் உயிர்நீத்த மக்களை நினைவு கூர்ந்து பொது சுடர் ஏற்றி தமது அஞ்சலியை செலுத்தினர்.

இலங்கை போராட்டம்

பட மூலாதாரம், R SHANAKIYAN

அப்போது அந்த பகுதிக்கு வந்த சிலர், முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்விற்கு தமது எதிர்ப்பை தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

விடுதலைப் புலிகளை நினைவு கூர்வது தமக்கு தேவையில்லை என்ற வாசகங்கள் இடம்பெற்ற காகிதங்களை அவர்கள் தூக்கிப் பிடித்திருந்தனர்.

இதையடுத்து போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த போலீஸார் அங்கு வந்தனர். இருந்தபோதும் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் சில நிமிடங்களுக்கு நீடித்ததால் அங்கு அமைதியற்ற சூழல் நிலவியது.

கொழும்பு போராட்டம்

வாக்குவாதம் முற்றியதால், நிலைமையை சமாளிக்க போலீஸார், கலவரத் தடுப்பு பிரிவினர் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் சம்பவ பகுதிக்கு வந்தனர். இதையடுத்தே அங்கு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை கொழும்பில் உள்ள தமிழர்கள் அனுசரித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

முள்ளிவாய்க்காலில் என்ன நிலைமை?

முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் இன்று காலை வேளையில், யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளினால் சமய நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சைவ ஆகம முறைப்படி, உயிர்நீத்த உறவுகளின் ஆத்ம சாந்தியை வேண்டி, பூஜைகள் நடைபெற்றன.

அதைத்தொடர்ந்து, 10.30 அளவில் பிரதான நிகழ்வு நடைபெற்றது.

முள்ளிவாய்க்கால் பகுதிக்கு வருகைத் தந்த ஆயிரக்கணக்கான மக்கள், தமது உறவுகளை நினைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த தென்னை கன்று மற்றும் விளக்குகளுக்கு அருகாமையில் நின்று தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர்.

இந்நிகழ்வின் ஆரம்பமாக மணி ஓசை எழுப்பப்பட்டது.

முள்ளிவாய்க்கால் கஞ்சி

பின்னர் முள்ளிவாய்க்கால் பொது சுடர் ஏற்றப்பட்டு, உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமது உறவுகளை எண்ணி கண்ணீர் மல்க தமது அஞ்சலியை உறவினர்கள் செலுத்தியிருந்தனர்.

"குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்"

முள்ளிவாய்க்கால் கஞ்சி
படக்குறிப்பு, அருட்தந்தை லியோ ஆம்ஸ்ட்ரோங்

இன்றைய நிகழ்வு தொடர்பில் வடகிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுகட்டமைப்பின் இணைத் தலைவர் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ட்ரோங், பிபிசி தமிழிடம் பேசினார்.

''இது தனியாக நடக்கும் நினைவுக்கூரல் நிகழ்ச்சி அல்ல. எமது மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுக்கும் நிகழ்வாகவும், இந்த அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற குரலாகவும் இந்த நிகழ்வு அமைந்திருக்கின்றது. ஆகவே இந்த மண்ணிலே படுகொலை செய்யப்பட்ட ஒவ்வொரு எமது தமிழ் உறவுகளையும் நாங்கள் நினைவு கூர்கின்றோம்," என்றார்.

உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்திக்காக வேண்டுகின்றோம். அவர்களின் மனங்களில் இருந்த எண்ணங்கள் நிறைவேற வேண்டும் என விரும்பி இந்த இடத்திலே ஒன்று கூடியிருக்கின்றோம். இந்த அநீதிக்கு துணை போனவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது எம்முடைய கோரிக்கைது. எமது மக்களை படுகொலை செய்ய காரணமாக இருந்தவர்கள், நீதிமன்றங்களின் முன் கொண்டு வரப்பட்டு சர்வதேச சட்டங்களின்படி தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்க வேண்டும். ஆகவே இது நினைவேந்தலுடன் நின்று விடும் நிகழ்ச்சி அல்ல. இது எமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஒரு அக ரீதியான ஒரு அறவழி போராட்டமாக இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது" என அருட்தந்தை லியோ ஆம்ஸ்ட்ரோங் தெரிவித்தார்.

அகத்தியர்
படக்குறிப்பு, அகத்தியர் அடிகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் தென் கைலை ஆதினத்தின் தலைவரும், வடகிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுகட்டமைப்பின் இணைத் தலைவருமான அகத்தியர் அடிகள் கருத்து தெரிவித்தார்.

''இந்த நிகழ்வானது தமிழ் மக்களின் பேரவலங்கள், அவர்கள் சந்தித்த மரணங்கள், வடுக்களை நினைவு கூரும் நிகழ்வாகவும், என்றுமே அழியாது எமது அடுத்த சந்ததிக்கு கொடுக்கும் முகமாகவும் நடைபெறுகிறது. எங்களுக்கான விடுதலையை வேண்டி நிற்கின்ற சமூகமாக நாங்கள் நிற்கின்றோம். அந்த விடுதலையை அடையும் வரை இந்த முள்ளிவாய்க்காலின் ஊடாக எங்களுடைய அடிமை தனத்தை நீக்குகின்ற, எங்களுக்கான சுதந்திரத்தை வழிவகுக்கின்ற செயல்களை நாங்கள் எல்லோரும் சேர்ந்து செய்வதற்கான பாதையாக இது அமையும் என்ற நம்பிக்கை இருக்கின்றது." என கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: