விஜய் VS அஜித்: ஒன்றாக களமிறங்கிய தருணங்களில் வெற்றி யாருக்கு?

விஜய் vs அஜித்
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமும் அஜித் நடிக்கும் துணிவு படமும் பொங்கல் தினத்தை ஒட்டி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியிருப்பதால் இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகமடைந்திருக்கிறார்கள். இதற்கு முன்பாக எத்தனை முறை இந்த மோதல் நடந்திருக்கிறது?

வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்தும் எச். வினோத்தும் இணையும் திரைப்படம் துணிவு. இந்தப் படத்தையும் போனி கபூரே தயாரிக்கும் நிலையில், மஞ்சு வாரியர், ஜான் கொக்கென், யோகிபாபு, மகாநதி சங்கர் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று செய்திகள் தொடர்ந்து வெளியான நிலையில், மதுரையில் இருந்த அஜித் ரசிகர்கள் அப்போதே போஸ்டர்கள் அடித்து ஒட்ட ஆரம்பித்தனர். ட்விட்டரில் #ThunivuPongal2023 என்ற ஹாஷ்டாகையும் ட்ரெண்ட் செய்தனர்.

அதேபோல, இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்கள் தவிர, பிரபு, குஷ்பு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், அஜித் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் இப்போதே ட்விட்டரில் மோதி வருகின்றனர். ஒரு வகையில் மிகுந்த உற்சாகமும் அடைந்திருக்கின்றனர். இந்த மோதல் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடக்கிறது என்பதால்தான் இந்த உற்சாகம்.

இதற்கு முன்பாக 2014ஆம் ஆண்டில்தான் விஜய் நடித்த படமும் அஜித் நடித்த படமும் பொங்கலின்போது ஒரே நேரத்தில் வெளியாகின. விஜய் நடித்த ஜில்லா திரைப்படம் 2014 ஜனவரி 9ஆம் தேதியும் அஜித் நடித்த வீரம் திரைப்படம் ஜனவரி பத்தாம் தேதியும் வெளியானது. இந்த இரு படங்களுமே சுமார் 80 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்ததாக அப்போது பேசப்பட்டது. ஆனால், வீரம் படத்தைவிட ஜில்லா படத்தின் தயாரிப்புச் செலவு அதிகம் என்பதால், வீரம் படத்திற்கே லாபம் அதிகம் என அஜித் ரசிகர்கள் கொண்டாடினர்.

இதற்குப் பிறகு, அஜித் நடித்த படமும் விஜய் நடித்த படமும் ஒரே நேரத்தில் வெளியாகவில்லை.

சமீப காலமாக பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை ஒரே நேரத்தில் நகரில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் வெளியிடும் போக்கு அதிகரித்திருப்பதால், பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது தவிர்க்கப்படுகிறது. மீறி வெளியாகும் பட்சத்தில், பொதுவான ரசிகர்களின் கூட்டம் இரண்டாகப் பிரிவதால், வசூல் குறையும் வாய்ப்பு இருக்கிறது.

விஜய் vs அஜித்

பட மூலாதாரம், Getty Images

ஜில்லா திரைப்படத்திற்கு முன்பாக, பல முறை விஜய் - அஜித் படங்கள் ஒன்றாக வெளியாகியிருக்கின்றன.

அஜித் 1990ல் 'என் வீடு என் கணவர்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ஆனால், விஜய், 1984லேயே வெற்றி, குடும்பன் படங்களின் மூலம் அறிமுகமாகியிருந்தார். இருவரும் ஹீரோவாக ஓராண்டு இடைவெளியில் அறிமுகமாயினர். 1992ல் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் விஜய் நாயகனாக அறிமுகமாக, 1993ல் வெளியான அமராவதி படத்தின் மூலம் அஜித் நாயகனாக அறிமுகமானார்.

அடுத்த சில ஆண்டுகளில் விஜய்யும் அஜித்தும் மெல்லமெல்ல முன்னேறிக்கொண்டிருந்தனர். 1995ஆம் ஆண்டில் வெளியான ராஜாவின் பார்வையிலே படத்தில் விஜய் நாயகனாக நடிக்க, அஜித் கௌரவத் தோற்றத்தில் வந்துபோனார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் இது மட்டும்தான்.

இந்த காலகட்டத்தில், ரஜினியும் கமலும் களத்தில் இருந்தனர். கமல் சதி லீலாவதி, குருதிப்புனல் என்று சென்றுகொண்டிருக்க, ரஜினி பாட்ஷா, முத்து என ரசிகர்களை மகிழ்வித்துக்கொண்டிருந்தார். இந்த காலகட்டத்தில், திரையுலகம் ரஜினி - கமல் என்ற போட்டிக்குள்தான் இயங்கிக் கொண்டிருந்தது.

1996ல் அஜித் நான்கு படங்களிலும் விஜய் ஐந்து படங்களிலும் நடித்தார்கள். இதில் அஜித் நடித்த வான்மதி படமும் விஜய் நடித்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை படமும் பொங்கலுக்கு வெளியாயின. இதுதான், அஜித் - விஜய் திரைப்படங்கள் ஒரே சமயத்தில் ரிலீஸாகிய முதல் தருணம். இரண்டு படங்களுமே வெற்றிபெற்றன.

அடுத்த ஒரு மாதத்திலேயே மீண்டும் விஜய் - அஜித் படங்கள் ஒரே தருணத்தில் வெளியாயின. விஜய் நடித்த பூவே உனக்காக திரைப்படமும் அஜித் நடித்த கல்லூரி வாசல் திரைப்படமும் 1996ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி வெளியாயின. இதில் கல்லூரி வாசல் திரைப்படத்தில், பிரசாந்த் நாயகனாக நடிக்க, அஜித் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பூவே உனக்காக திரைப்படம், விஜய்க்கு ஒரு திருப்பு முனை படமாக அமைய, கல்லூரி வாசல் தோல்வியடைந்தது.

விஜய் vs அஜித்

1997ஆம் வருடத்தில் விஜய்யும் அஜித்தும் மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தனர். ஒவ்வொருவருக்கும் தலா ஐந்து படங்கள் இந்த ஆண்டில் வெளியாயின. பொங்கலை ஒட்டி அஜித்திற்கு நேசம் படமும் விஜய்க்கு காலமெல்லாம் காத்திருப்பேன் படமும் வெளியானது. இரண்டு படங்களுமே சுமாராகத்தான் ஓடின.

அதே ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி அஜித் நடித்த ரெட்டை ஜடை வயது வெளியானது. அதற்கு ஒரு வாரம் கழித்து விஜய் நடித்த காதலுக்கு மரியாதை திரைப்படம் வெளியானது. ரெட்டை ஜடை வயது நன்றாக ஓடினாலும், காதலுக்கு மரியாதை வர்த்தக ரீதியில் சாதனை படைத்தது. முந்தைய ஆண்டுதான் பூவே உனக்காக படத்தில் சாதனை படைத்திருந்த விஜய், மீண்டும் இந்தப் படத்தில் கவனம் கவர்ந்தார்.

1998ல் அஜித் நடித்து நான்கு படங்களும் விஜய் நடித்து மூன்று படங்களும் வெளியாயின. அந்த ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி ரோஜா, கார்த்திக், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்திருந்த உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், விஜய், சுவலட்சுமி, சங்கவி ஆகியோர் நடித்த நிலாவே வா ஆகிய திரைப்படங்கள் ஒரு நாள் இடைவெளியில் வெளியாயின.

விக்ரமன் இயக்கத்தில் வெளியாகியிருந்த உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் அஜித் ஒரு கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களில், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் பெரும் வெற்றிபெற்றது. நிலாவே வா தோல்வியடைந்தது.

1999ஆம் ஆண்டில் அஜித் நடித்து ஆறு படங்களும் விஜய் நடித்து நான்கு படங்களும் வெளியாயின என்றாலும்கூட, இத்தனை படங்களில், இருவரின் படங்களில் எந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகவில்லை.

இருந்தாலும், விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படம் ஜனவரி 29ஆம் தேதி வெளியான நிலையில், அதற்கு ஒரு வாரம் கழித்து பிப்ரவரி 5ஆம் தேதி அஜித் நடித்த உன்னைத் தேடி திரைப்படம் வெளியானது. எழில் இயக்கத்தில் விஜய், சிம்ரன் நடித்திருந்த துள்ளாத மனமும் துள்ளும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. சுந்தர் சி. இயக்கத்தில் அஜித், மாளவிகா நடித்து வெளியான உன்னைத் தேடி, விமர்சன ரீதியாக பாராட்டுதல்களைப் பெற்றதோடு, ஓரளவுக்கு வெற்றிப்படமாகவும் அமைந்தது.

விஜய் vs அஜித்

பட மூலாதாரம், ZEE STUDIO

2000வது ஆண்டில், அஜித் நடித்த உன்னைக் கொடு என்னைத் தருவேன், விஜய் நடித்த குஷி ஆகிய திரைப்படங்கள் கோடை விடுமுறையைக் குறிவைத்து அந்த ஆண்டு மே 19ஆம் தேதி ஒன்றாக வெளியாகின. விஜய், ஜோதிகா நடித்த குஷி படத்தை எஸ்.ஜே. சூர்யா இயக்கியிருந்தார். அஜித், சிம்ரன், நாசர் நடித்த உன்னைக் கொடு என்னைத் தருவேன் படத்தை கவி காளிதாஸ் என்பவர் இயக்கியிருந்தார். உன்னைக் கொடு என்னைத் தருவேன், பெரும் விமர்சனங்களைச் சந்தித்ததோடு, சரியாகவும் ஓடவில்லை. குஷி திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்ததோடு, ஜோதிகாவுக்கு பல விருதுகளையும் பெற்றுத் தந்தது.

2001ஆம் ஆண்டில், அஜித் நடித்த தீனாவும் விஜய் நடித்த ஃப்ரண்ட்ஸ் திரைப்படமும் பொங்கல் பண்டிகையன்று வெளியாகின. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அஜித், லைலா, வைஷ்ணவி உள்ளிட்டோர் நடிக்க தீனா வெளியானது.

விஜய் நடித்த ஃப்ரண்ட்ஸ் படத்தை சித்திக் இயக்கியிருந்தார். அவரோடு சூர்யா, ரமேஷ் கண்ணா, தேவயானி, வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருந்த ஃப்ரண்ட்ஸ், மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. சில இடங்களில் 175 நாட்கள் ஓடியது. அஜித் நடித்த தீனாவும் ஓரளவுக்கு வெற்றிபடமாகத்தான் அமைந்தது. ஏ.ஆர். முருகதாசுக்கு இதுதான் முதல் படம் என்றாலும், வணிக ரீதியில் வெற்றிகரமான இயக்குநராக உருவெடுக்க இந்தப் படம் உதவியது.

2002ஆம் ஆண்டில் தீபாவளிக்கு அஜித், விஜய் படங்கள் மோதிக் கொண்டன. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அஜித், மீனா, கிரண் நடித்த வில்லன் திரைப்படமும் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய், ரீமா சென், ஜெய் ஆகியோர் நடித்த பகவதி திரைப்படமும் வெளியானது. இதில் வில்லன் திரைப்படம் விமர்சன ரீதியில் கவனிக்கப்பட்டதோடு, வர்த்தக ரீதியிலும் வசூல் செய்தது. பகவதி படம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. வர்த்தக ரீதியிலும் சரியாக ஓடவில்லை.

2003ஆம் ஆண்டிலும் தீபாவளியை ஒட்டி அக்டோபர் 24ஆம் தேதியன்று விஜய் நடித்த திருமலை திரைப்படமும் அஜித் நடித்த ஆஞ்சநேயா திரைப்படமும் ஒன்றாக வெளியாயின. என். மகராஜன் இயக்கிய ஆஞ்சநேயாவில் அஜித், மீரா ஜாஸ்மின், ரகுவரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரமணா இயக்கிய திருமலையில் விஜய், ஜோதிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த இரு படங்களில் திருமலை மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஆஞ்சநேயா, கடுமையான விமர்சனங்களைச் சந்தித்ததோடு, வர்த்தக ரீதியாகவும் தோல்வியடைந்தது.

2004, 2005ஆம் ஆண்டுகளில் விஜய், அஜித்தின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகவில்லை. 2006ஆம் ஆண்டு பொங்கலுக்குத்தான் மீண்டும் விஜய் - அஜித் படங்கள் ஒன்றாக மோதின. விஜய் நடித்த ஆதி, அஜித் நடித்த பரமசிவன், சிம்பு நடித்த சரவணா ஆகிய படங்கள் பொங்கலை ஒட்டி ஒன்றாக வெளியாயின. இதில் விஜய்யின் ஆதி திரைப்படம் ஒரு நாள் தள்ளி, ஜனவரி 15ஆம் தேதி வெளியானது.

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருந்த ஆதி படத்தை ரமணா இயக்கியிருந்தார். அஜித், லைலா, ஜெயராம் ஆகியோர் நடித்திருந்த பரமசிவன் படத்தை பி. வாசு இயக்கியிருந்தார். ஆதி, பரமசிவன் ஆகிய இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களைப் பெற்றன. வர்த்தக ரீதியிலும் பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை.

2007ஆம் ஆண்டில் பிரபு தேவா இயக்கத்தில் விஜய் நடித்த போக்கிரி திரைப்படம் பொங்கலை ஒட்டி ஜனவரி 12ஆம் தேதி வெளியானது. மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது இந்தப் படம். 146 திரையரங்குகளில் 50 நாட்களும் 60 திரையரங்குகளில் 100 நாட்களும் இந்தப் படம் ஓடியது. 15 இடங்களில் 175 நாட்கள் ஓடி மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதே நாளில் அஜித் நடித்த ஆழ்வார் திரைப்படமும் வெளியானது. செல்லா என்பவர் இயக்கியிருந்த இந்தப் படத்தில் அசின், கீர்த்தி சாவ்லா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆனால், இந்தப் படம் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது.

இதற்குப் பிறகு அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு விஜய் - அஜித்தின் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாகவில்லை. மீண்டும் 2014ல்தான் ஜில்லா - வீரம் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாயின. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இதுவரை 13 தருணங்களில் விஜய் - அஜித் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாகியிருக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: