இந்தி திணிப்பு: நடிகர் சித்தார்த் போட்ட பதிவு - வைரலாகும் சம்பவம் - ஆதரவு கொடுத்த மதுரை எம்.பி

சித்தார்த்

பட மூலாதாரம், ACTOR SIDDHARTH

மதுரை விமானநிலையத்தில் தனது பெற்றோர் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும், பாதுகாப்பு அதிகாரிகள் ஆங்கிலத்தில் பேசச்சொல்லியும் தொடர்ந்து இந்தியிலேயே பேசியதாகவும் நடிகர் சித்தார்த் பகிர்ந்த சமூக ஊடக பதிவு ஒன்று இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. 

கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் தற்போது நடித்துவரும் சித்தார்த், தனது பெற்றோருடன் விமானப்பயணத்திற்காக மதுரை விமானநிலையம் சென்றபோது அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் குறித்து அதில் சாடியுள்ளார். பாதுகாப்பு சோதனையின் போது, எவ்வளவு சொல்லியும் அதிகாரிகள் தன்னிடம் ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதுமட்டுமல்லாமல், அவரது பெற்றோரின் பைகளில் இருந்த நாணயங்களை கூட அவர்கள் வெளியே எடுக்கச் சொன்னதாகவும், வேலையற்றவர்கள் தங்களது அதிகாரத்தைக் காட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

24 மணிநேரம் மட்டுமே இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வாயிலாக சித்தார்த் செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்ட ஒரு பதிவில், "மதுரை விமான நிலையத்தில் சிஆர்பிஎஃப் (அதிகாரிகளால்) 20 நிமிடம் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டோம். அவர்கள் வயதான எனது பெற்றோரின் பைகளில் இருந்த நாணயங்களை வரைக்கும் அகற்றச் செய்தார்கள். மேலும் ஆங்கிலத்தில் பேசச் சொன்ன பிறகும் எங்களிடம் பலமுறை இந்தியில் பேசினர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போது இந்தியாவில் இது இப்படித்தான் நடக்கும் எனக் கூறினர். வேலையற்றவர்கள் தங்களது அதிகாரத்தைக் காட்டுகின்றனர்," எனத் தெரிவித்திருந்தார்.

மதுரை விமான நிலையத்தின் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) கையாளுகிறது. இருப்பினும், சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், சிஆர்பிஎஃப் பிரிவுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

கவனிக்கப்பட்ட சித்தார்த்தின் பழைய இடுகைகள்

இந்நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இவ்விவகாரம் தொடர்பாக தகுந்த விசாரணை மேற்கொள்ள கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், "மதுரை விமானநிலையத்தில் CISF வீரர்கள் ஹிந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக 

திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டுமென மதுரை விமானநிலைய அதிகாரிகளிடம் கோரியுள்ளேன்." எனத் தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

நடிகர் சித்தார்த்தின் இந்த பதிவு சமூக ஊடக பயனர்கள் மத்தியில் கவனம் பெற்றதோடு மொழி பயன்பாடு தொடர்பான விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சித்தார்த்தின் பதிவு இப்படி பேசுபொருளாவது இது முதன்முறை அல்ல. 

சுமார் இருபது ஆண்டுகளாக திரைத்துறையில் நடிகராக இருந்துவரும் சித்தார்த் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பவர். திரைத்துறை சம்பந்தப்பட்ட பதிவுகளைக் கடந்து சமூகம் குறித்தும் அரசியல் குறித்தும் தனது கருத்துகளை பொதுவெளியில் தெரிவிக்கும் ஒருசில நடிகர்களில் சித்தார்த்தும் ஒருவர். இவரது கருத்துக்கள் பலநேரம் நேர்மறையான விவாதங்களோடு ஆதரவுகளைப் பெற்றாலும் எதிர்மறை விமர்சனங்களையும் அவ்வப்போது பெற்று சர்ச்சையாகும். 

பாஜகவினர் மீது புகார் தெரிவித்த சித்தார்த்

குறிப்பாக மத்திய அரசின் பல செயல்பாடுகளை கடந்த காலங்களில் கடுமையாக விமர்சித்து வந்துள்ளார் சித்தார்த். சென்ட்ரல் விஸ்டா திட்டம் தொடங்கி மத்திய அரசின் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் வரை பலவற்றைத் தொடர்ந்து விமர்சித்துள்ளார். 

தேவையில்லாத திட்டத்திற்கு 20,000 கோடி செலவிடப்படுகிறது. தடுப்பூசி போடுவதற்கும் பொதுச் சுகாதாரத்துக்கும் இந்த நிதியைப் பயன்படுத்தலாம் என மத்திய அரசின் கனவுத் திட்டங்களில் ஒன்றான சென்ட்ரல் விஸ்டா திட்டம் குறித்து சித்தார்த் பதிவிட்ட பதிவு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்வினைகளை பெற்றது. அதேபோல மத்திய அரசின் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளையும் தனது சமூக ஊடக பக்கத்தில் விமர்சித்திருக்கிறார் சித்தார்த். 

இதன் விளைவாக பாஜகவைச் சேர்ந்தவர்களால் தான் மிரட்டப்படுவதாகவும் பின்னாட்களில் சித்தார்த் தெரிவித்தார். பாஜகவின் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப பிரிவு அவரது தொலைபேசி எண்ணை ஆன்லைனில் கசியவிட்டதால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொலை மற்றும் வன்கொடுமை மிரட்டல்கள் வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதனையடுத்து அவருக்கு பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு காவல்துறை முன்வந்தது. ஆனால், "இந்தச் சலுகையை நான் பணிவுடன் விட்டுக்கொடுக்க விரும்புகிறேன். ஏனென்றால் இந்தத் தொற்றுநோய் காலத்தில் இந்த அதிகாரிகள் தங்களது நேரத்தை வேறு ஏதேனும் சிறப்பான செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தலாம்" எனப் பாதுகாப்பை நிராகரித்தார். 

ஆனால், இப்படி பாதுகாப்பு கொடுக்க முன்வந்த தமிழ்நாடு காவல்துறையே சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பிய நிகழ்வும் பிற்காலத்தில் நடந்தது. 

நடிகர் சித்தார்த்

பட மூலாதாரம், worldofsiddharth Instagaram

இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் மோதி பஞ்சாப் சென்றிருந்த போது, ஃபெரோஸ்பூரில் போராட்டக்காரர்கள் நடத்திய முற்றுகையால் பிரதமரின் கான்வாய் மேம்பாலத்தில் சிக்கியது. பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி என்பதால் இவ்விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. அப்போது, பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி குறித்து சாய்னா நேவால் பதிவிட்டிருந்த ஒரு ட்வீட்டிற்கு சித்தார்த் பதிலளித்தார். நடிகரின் இந்தப் பதிவு பெண்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாக நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தது. 

இவ்விவகாரம் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வரை சென்றது. இந்த ட்வீட் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த புகார்களின் அடிப்படையில் சித்தார்த் தரப்பு விளக்கத்தைப் பெற அவருக்கு சம்மன் அனுப்பியது காவல்துறை. பின்னர் இதற்காக சித்தார்த் மன்னிப்பு கோரினார்.

இதேபோல பாஜக இளம் தலைவர் தேஜஸ்வி சூர்யாவை பயங்கரவாதி அஜ்மல் கசாப்புடன் அவர் ஒப்பிட்டதும் மிகப்பெரிய சர்ச்சையானது. 

அரசியலைக் கடந்து இந்தி திணிப்புக்கு எதிரான இவரது ட்வீட்களும் இந்தியா முழுதும் அதிகம் கவனிக்கப்பட்டு வந்திருக்கின்றன. புதிய கல்விக் கொள்கை உருவாக்கத்தின் போது, அது இந்திக்கு சாதகமாக இருப்பதாக சில கருத்துக்கள் எழுந்தன. இதனால் இந்தி திணிப்புக்கு எதிரான கருத்துக்கள் மீண்டும் தமிழக அரசியல் களத்தில் ஒலிக்க ஆரம்பித்தன. இதுகுறித்தும் சித்தார்த் அப்போது பேசத் தவறவில்லை. 

நடிகர் சித்தார்த்

பட மூலாதாரம், worldofsiddharth Instagram

இது தொடர்பான அவரது அடுத்தடுத்த ட்வீட்களில், "சகோதரர்களே இந்தியை விட பழமையான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பல மொழிகளை சவுத்வாலா என்று இணைப்பதை முதலில் நீங்கள் நிறுத்துங்கள்! இரண்டாவதாக, நமது மாநிலங்கள் மற்றும் மொழிகளின் பெயர்களைக் கற்று, பெயர்களைச் சரியாக உச்சரிக்க முயற்சியுங்கள்.

யாரும் இந்திக்கு எதிரானவர்கள் இல்லை. பிரச்னை இந்தி திணிப்பில் உள்ளது. அழகான பிராந்திய மொழிகளைக் கற்க இந்தி பேசுபவர்களிடமிருந்து எந்த முயற்சியும் இல்லை. ஆங்கிலம் போன்ற நடுநிலையான, திறமையான இரண்டாம் மொழியை விட இந்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற முட்டாள்தனமான எதிர்பார்ப்பு ஏன்?

தாய்மொழியான தமிழ் மொழி பேசுபவர் இந்தி கற்பதற்கும், அதைப் படித்து அதில் தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்துக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. நான் 5 மொழிகளைப் பேசுகிறேன், 10 மொழிகளைப் புரிந்துகொள்கிறேன். நான் அவற்றைக் கற்க வேண்டிய கட்டாயம் இல்லை, அது அப்படித்தான் இருக்க வேண்டும். இந்தியா என்பது பல மொழிகளின் கலவையாகும். அதனை அப்படியே இருக்க விடுங்கள்," எனப் பதிவிட்டார். இது இந்திய அளவில் பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்தது. 

இதேபோல நவாஸுதீன் சித்திக் நடிப்பில் உருவான தாக்கரே படத்தின் ட்ரைலர் வெளியான போது, அது தென்னிந்தியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை ஏற்படுத்துவதாக விமர்சித்தார். அதேபோல பாலிவுட் நடிகை சைரா வாசிம் மதத்தினை காரணம் காட்டி திரையுலகிலிருந்து விலகுவதாக அறிவித்தபோது, "நமது கலை மற்றும் தொழில் தான் நமது வாழ்க்கை என்று நான் நம்புகிறேன். மதத்தை அதிலிருந்து விலக்கி வைக்கப் போராடுகிறோம். இங்கு மதத்திற்கு இடமில்லை" என்ற சித்தார்த்தின் கருத்து பல தரப்பிலும் நேர்மறையான எதிர்வினைகளைப் பெற்றது. 

இப்படி சமூக ஊடகம் மூலமாகத் தொடர்ந்து தனது அரசியல் மற்றும் சமூகநிலைபாட்டை முன்னிறுத்திவரும் சித்தார்த் இம்முறை தான் சந்தித்த தனிப்பட்ட பிரச்னையை முன்வைத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: